புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும் என்று தேர்தல் கணிப்புகள் சொல்கின்றன.

மகிழ்ச்சிதான்! அப்படித்தான் நடக்கப் போகிறது என்பது முற்றிலும் உண்மை என்பதை நம் முதல்வரின் ஆட்சித்திறனும், மக்களின் மனநிலையும் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. ஆனாலும் தேர்தலுக்கு இருக்கும் கொஞ்ச நாள்களில் களப்பணிகளில் தொய்வு இல்லாமல், கூடுதல் கவனத்துடன் கடுமையாக உழைக்க வேண்டும் தி.மு.கழகக் கூட்டணிக் கட்சியினர்.

காரணம், எதிர்ப்பது மோடியை அல்ல, வலிமையான பாசிச, சர்வாதிகாரத்தை.

பாஜக தலைமையில் மெகா கூட்டணி அமைப்போம் என்று சவடால் பேசினார் அண்ணாமலை.

இன்று மக்களின் வாக்குபலம் இல்லாத ஜி.கே. வாசன், டி.டி.வி. தினகரன், ஓ. பன்னீர்செல்வம், ஏ.சி. சண்முகம், பாரிவேந்தர், ஜான்பாண்டியன் போன்றவர்கள் பா.ஜ.வின் ‘மெகா’ கூட்டணியில் இணைந்திருக்கிறார்கள். இரவு இரண்டு மணிக்கு ஒருவரிடம் சோசியம் கேட்ட சரத்குமார், காலையில் பா.ஜ.கவில் கரைந்தே போய்விட்டார். பா.ம.கவும் இதில் சேரலாம். இதில் ஓரளவு சொல்லக் கூடிய அளவில் பா.ம.க இருந்தாலும் மற்றவை எல்லாம் உதிரிக்கட்சிகள் என்று சொல்வதில் தவறில்லை. இது ஒரு பலமான கூட்டணியா என்று நாம் இருந்துவிடக் கூடாது.

1951ஆம் ஆண்டு ஆர். எஸ். எஸ். அறிவுரையின்படி சியாமா பிரசாத் முகர்ஜியால் தொடங்கப்பட்ட ‘பாரதிய ஜனசங்கம்’, அடுத்த(1952) ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் 3 இடங்களில் மட்டுமே வென்றது. 67 ஆண்டுகளுக்குப் பிறகு(பா.ஜ.க) அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 303.

தண்ணீரில் விழுந்து தத்தளிப்பவன் எதைப் பிடித்தாவது கரையேற முயல்வதுபோல, இன்று ஒரு கூட்டணியை அமைத்து, பார்... பார் பா.ஜ.க தலைமையில் கூட்டணி என்று ஒரு ‘தலைமைத் தோற்றத்தை’ உருவாக்கப் பார்க்கிறார் அண்ணாமலை.

ஆர். எஸ். எஸ். எப்போதும் தொலை நோக்குப் பலனைத்தான் குறிவைக்கும். நாம் எதிரியை பலவீனமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அதிலும் பணபலம், அதிகார பலம் கொண்டது பா.ஜ.க.

 ‘இந்தியா’ கூட்டணி வலிமையாக இருக்கும் நிலையில், SBI இன் தேர்தல் பத்திர ரகசியம், குடியுரிமைத் திருத்தச்சட்டம் நடைமுறை உள்ளிட்டப் பலவகைகளில் ஆளும் ஒன்றிய பா.ஜ.க அரசின் மீதும், குறிப்பாக பிரதமர் மோடியின் மீதும் அதிருப்தியில் இருக்கும் மக்களால் அவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும்.

அப்படியானால் அ.தி.மு.க?..!அதுதான் தலைவர் ஸ்டாலின் அவர்கள் சொல்லி விட்டாரே அது ப.ஜ.கா வின் “கள்ளக் கூட்டணி” என்று.

திரளட்டும் மக்கள் சக்தி! வெல்லட்டும் ‘இந்தியா’ கூட்டணி!

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It