கேள்வி: குடியுரிமைத் திருத்தச் சட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன? சற்று விளக்குங்கள்!

பதில்: குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதில் இருந்தே பல எதிர்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றன. அச்சட்டத்தின் வரைவைக்கூட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கொடுக்காமல் இரு அவைகளிலும் உடனடியாக நிறைவேற்றப்பட்டுக் குடியரசுத் தலைவராலும் உடனே ஒப்புதல் வழங்கப்பட்டது

kolathoor mani 329உறுப்பினர்கள் அச்சட்டத்தைப் பற்றிச் சிந்திக்கக் கூட நேரம் தராமல் அது நிறைவேற்றப்பட்டது. அச்சட்டத்திற்காக வாக்களித்த பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் பின்னர் அதனை எதிர்த்தன என்பதில் இருந்தே அச்சட்டம் எவ்வளவு அவசரமாக நிறைவேற்றப் பட்டது என்பதைக் காட்டுகிறது.

இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளும், அண்டை நாடுகளா, எல்லை நாடுகளா என்ற குழப்பம் உள்ளது. ஆஃப்கானிஸ்தான் நமது எல்லை நாடு இல்லை. பாகிஸ்தான், வங்கதேசம் ஆகியவை நமது எல்லை நாடுகள். அண்டை நாடு என்றால் இலங்கை உள்ளது. பூட்டான் நமது எல்லை நாடு. ஆனால் இலங்கை, பூட்டான் ஆகியவை இச்சட்டத்தில் கொண்டு வரப்படவில்லை. பாகிஸ்தானில் அஹமதியா முஸ்லிம்களும், மியான்மரில் பவுத்தத்தால் பாதிக்கப்பட்ட ரோஹிங்யா முஸ்லிம்களும் இச்சட்டத்தில் சேர்க்கப்படவில்லை.

இந்தியாவின் அரசியலமைப்புப் பிரிவு 14-இன்படி எந்த ஒரு மனிதருக்கும் சமத்துவம் மறுக்கப்படக் கூடாது. இது குடிமகளாக / குடிமகனாக இருப்பவர்களுக்கு மட்டுமன்று, எல்லாருக்கும் பொருந்தும். ஆனால், நாடு, மதம் ஆகியவற்றை முன்வைத்து இச்சட்டம் பாகுபாடு செய்கிறது. எனவே இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கே முரணானது.

சாவர்க்கரின் கூற்றுப்படி, இந்தியாவில் இந்துக்கள் தேசம், முஸ்லிம்கள் தேசம் என்று இரண்டு தேசங்கள் உள்ளதாகச் சொல்கிறார். கோல்வால்கரோ இந்துக்கள் அல்லாதவர்கள்

இந்துக் கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவருடைய We or Our Nationhood defined என்னும் நூலில் கூறுகிறார். இவர்களுடைய முன்னோர்களின் கருத்துகளைப் பிரதிபலிப்பதாகத்தான் இவர்கள் இப்போது சட்டம் கொண்டு வந்துள்ளார்கள். அதே நேரம் கொடுமைக்கு ஆளான இலங்கைத் தமிழர்கள் சிறுபான்மையினர்தான். அவர்களுக்கு இச்சட்டம் தீர்வு எதையும் முன்வைக்கவில்லை. எனவே இதில் இவர்களது தமிழர் மற்றும் இஸ்லாமியர் மீதான் வெறுப்புதான் வெளிப்படுகிறது.

இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி கோரப்படும் சான்றுகளிலும் ஏராளமான சிக்கல்கள் உள்ளன. இதன்படி இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களும் தாங்கள் இந்தியர்தான் என்று நிரூபிக்க, சான்றுகளைக் காட்ட வேண்டி இருக்கும். இதன்மூலம் பா.ஜ.க.விற்கு சாதகமாக இல்லாதவர்கள் யாரையும் அவர்களால் பாதிப்பிற்கு உள்ளாக்க முடியும்.

வாஜ்பாய் காலத்திலேயே இதற்கான முயற்சிகள் தொடங்கி விட்டன. அவர்தான் detection, deletion, deportation என்ற மூன்று சொற்களைக் குறிப்பிட்டார். அவர்களைக் கண்டுபிடித்து, நீக்கம் செய்து, வெளியேற்று என்பதுதான் இதன் பொருள்.

அவர்களது நீண்ட கால அஜெண்டா இது. அவர்களது நோக்கம் மதவெறி மட்டும்தான். வேறு எதுவும் இல்லை.

- கொளத்தூர் மணி, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர்

நேர்காணல் எடுத்தவர்: வெற்றிச்செல்வன்

Pin It