திராவிடத் தமிழர் கட்சித் தலைவர் வெண்மணி
மா.உதயகுமார்:1. அதிமுகவிற்கு எதிரான அலை, மக்களிடம் பெரிதாக இல்லை என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. இதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது?
வெண்மணி: தொடர்ந்து ஏழு ஆண்டுகள் மத்திய அரசிற்கு எதிரான அலையை, சமூகநீதி சார்ந்த இயக்கங்கள் உருவாக்கியிருக்கின்றன. அதேபோல மத்திய அரசின் தமிழர் விரோத, சமூகநீதிக்கு எதிரானத் திட்டங்களைத் தங்குதடையின்றிச் செயல்படுத்திட மாநில அரசு வழி வகுக்கிறது என்பதைச் சரியாக நாம் மக்கள் மத்தியில் கொண்டு செல்லவில்லை என்று கருதுகிறேன்.
மத்திய அரசை எதிர்த்த அளவிற்கு நாம் மாநில அரசை எதிர்க்க வில்லை. இது வெளிப்பார்வைக்கு மாநில அரசு எதிர்ப்பு நிலை இல்லை என்பது போலத் தோன்றும். இது அடிப்படையில் தவறான ஒன்றாகும். பாஜக கூட ஏழு ஆண்டுகளாகத்தான் ஆட்சியில் இருக்கிறது. ஆனால் அதிமுக 10 ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஆட்சியில் இருக்கிறது.
இந்த 10 ஆண்டுகளில் அதிமுகவினரின் செயல்பாடுகள், கோமாளித்தனமானப் பேச்சுகள், தரமற்ற செயல்கள், பணம் கொடுத்து மக்களைச் சரிசய்து விடலாம் என்கிற இழிவான எண்ணம் இவற்றையெல்லாம் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மத்திய அரசின் மீதான அதே அளவு எதிர்ப்பு மாநில அரசின் மீதும் இருக்கிறது.
இன்னும் சொல்லப்போனால் மாநில அரசு என ஒன்று இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. மத்தியிலும் பா.ஜ.க, மாநிலத்திலும் பா.ஜ.க ஆட்சியாகத்தான் இருக்கிறது. எந்த வேறுபாடும் இல்லை.
புதிய கல்விக் கொள்கை சட்டமாக இன்னும் வராத சூழலில், அதன் சாராம்சங்களை செங்கோட்டையன் இங்கு நடைமுறைப் படுத்துகிறார். எனவே பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
அதிமுகவின் தேர்தல் பிரச்சாரங்களில் மக்கள் அவர்கள் பேச்சைக் கேட்காமல் கலைந்து செல்வதைப் பார்க்கிறோம். இடஒதுக்கீட்டுப் பிரச்சனையில் வன்னியர் சமூகமும் கள்ளர் சமூகமும் அதிமுகவின் மேல் அதிருப்தியில் இருக்கின்றனர்.
அதேபோல் டிஎன்பிஎஸ்சி மூலம் வட மாநிலத்தைச் சார்ந்தவர்கள் விண்ணப்பித்து இங்கு பணிபுரியலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்துப் போடுகிறார். இதனையெல்லாம், படித்துவிட்டு வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இவர்களை மனிதப் புனிதர்கள் போல் சித்தரிப்பதற்காக இது போன்ற சொல்லாடல்கள் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன. ஆகவே மத்திய அரசின் மீது இருப்பதை விட அதிகமான எதிர்ப்புணர்வு இபிஎஸ்-ஓபிஎஸ் மீதும் இருப்பதாகவே நான் பார்க்கிறேன்.
மா.உதயகுமார்: 2. மக்களிடம் நாம் இன்னும் அதிகமாகக் கொண்டு செல்ல வேண்டிய அல்லது விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய செய்திகளாக எவற்றைக் கருதுகிறீர்கள்?
வெண்மணி: மக்களிடம் ஒரு அவநம்பிக்கை இருப்பதைப் பார்க்க முடிகிறது. கடந்த காலங்களில் திமுக மீது திட்டமிட்டுப் பரப்பப்பட்டப் பொய் பிரச்சாரங்கள் சென்று சேர்ந்த அளவிற்கு, திமுகவின் சாதனைகள் சென்று சேரவில்லை. திமுகழகத்தின் முன்மாதிரியானத் திட்டங்களைக் கொண்டு சேர்ப்பதில் பின்னடைவு ஏற்பட்டு விட்டது.
நம்மைப் போன்ற திராவிட இயக்கங்கள் கலைஞர் ஆட்சியின் சாதனைகளைப் பட்டியலிடுகிறோம். திமுகவின் ஒரு சிலத் தலைவர்கள்தான் இதை மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள். தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கிற அனைத்துத் திட்டங்களையும் கொண்டு வந்தது திமுகவாக இருக்கிறது. செய்தவர் கலைஞராக இருக்கிறார். இந்தச் செய்திகளை எல்லாம் நாம் பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
அதேபோல் மதவெறி சாதிவெறி இந்த இரண்டும் அதிகாரத்தோடு கைகோர்த்து வருகின்றன. மற்ற எல்லாத் தேர்தல்களை விடவும் 2021 தேர்தலை மிகவும் ஆபத்தானத் தேர்தலாகப் பார்க்கவேண்டியிருக்கிறது.
இது சமூக நீதிக்கும் மனு(அ)நீதிக்கும் இடையிலான போர், ஆரிய திராவிடப் போர் என்பதையெல்லாம் நாம் மக்களிடம் தோலுரித்துக் காட்ட வேண்டும். அதேபோல் திமுகழகம் வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கை என்பதும் பலமானது. அதுவும் மக்களிடம் பரவலாகக் கொண்டு செல்லப்பட வேண்டும்.
மா.உதயகுமார்: 3. ஐஐடி ஐஐஎம் போன்ற நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீடு இல்லாமல் இருப்பது பற்றிய தரவுகள் அண்மையில் வெளியாகின. இது பற்றியத் தங்களுடையக் கருத்து.
வெண்மணி: இந்தியச் சமூகம் என்பது சாதியச் சமூகம். அதிலும் குறிப்பாகப் பார்ப்பன சமூகத்தினர் உயர் நிலையில் இருக்கக்கூடிய சமூகமாகத்தான் இந்தச் சமூகம் இருக்கிறது. புரட்சியாளர் அம்பேத்கர், "பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரிக்கும் சமூக வரலாறு கொண்டதுதான் இந்தியா" என்று சொல்லுவார்.
அந்த அடிப்படையில் பார்த்தால் பார்ப்பன மேலாண்மையை உயர்த்திப் பிடிக்கிற ஒரு சமூகமாகத் தான் இந்தியச் சமூகமும் இந்திய அரசும் இருக்கின்றன. ஆகவேதான் இன்று வரை மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
மண்டல் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 30 ஆண்டுகள் ஆகியும் 12.5% தான் இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது.
அதேபோல் பட்டியல் மற்றும் பழங்குடி சமூக மக்களுக்கு 22.5% வழங்கப்பட்டிருக்க வேண்டும். 60 ஆண்டுகள் ஆகியும் அதில் 8% தான் வழங்கப்பட்டிருக்கிறது. இவை சமூக நீதித்துறை வெளியிட்டுள்ள தகவல்களாகும். ஆக 12 + 8, மொத்தம் 20 சதவீதம் போக 80 சதவிகிதத்தைப் பார்ப்பனர்கள் மட்டுமே அனுபவித்திருக்கிறார்கள்.
சமூகநீதி என்றால் என்னவென்று தெரியாதவர்கள் இந்தியா முழுவதும் மக்களவை உறுப்பினர்களாகச் சென்றதே இந்நிலைக்குக் காரணம். சமூகநீதி பற்றிப் பேசுபவர்களாக திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்களும் அம்பேத்கரின் கருத்துகளை உள் வாங்கியவர்களாகவும் மட்டுமே இருக்கிறார்கள்.
இவர்கள் பேசுவது மட்டுமே ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான வழிகாட்டியாக இருக்கிறது. இந்தியா என்பது பார்ப்பனர்கள் உயர்வுக்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு என்பதை உறுதிப்படுத்தும் வகையில் 2021இல் வெளியான ஒரு உதாரணம்தான் இந்த ஐஐடி ஐஐஎம் நிறுவனங்களில் இடஒதுக்கீடு பற்றிய செய்தியாகும்.
ஆகையால் பெரியார் அம்பேத்கரின் கொள்கைகளை உள்வாங்கியவர்களை, சமூகநீதிக்காகக் குரல் கொடுப்பவர்களைச் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்து அனுப்புவதுதான் இதற்கானத் தீர்வாக இருக்கும்.
மா.உதயகுமார்: 4. சமூகநீதியை நிலைநாட்டப் பாடுபடுவோர் தூக்கிப்பிடிக்கும் கட்சியாகத் திமுகழகம் இருப்பதற்கானக் காரணம்?
வெண்மணி: சமூகத்தில் நலிந்து போயிருக்கும் அனைத்துப் பிரிவினரையும் முன்னேற்றும் ஆட்சியாக திமுகவின் ஆட்சிதான் இருந்திருக்கிறது. இன்றும் திமுகதான் இருக்கிறது. கலைஞருடைய தொலைநோக்குப் பார்வை வேறு யாருக்கும் இருந்ததாகத் தெரியவில்லை.
பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள், ஏழை மாணவர்கள், தமிழ்வழியில் கல்வி பயின்றவர்கள், பெண்கள் எனப் பல்வேறு தரப்பினருக்கும் முன்னுரிமைகளைக் கொடுத்து அவர்களுக்குக் கல்வி சென்று சேர அவருடைய ஆட்சியில் பாடுபட்டிருக்கிறார்.
அனைத்துச் சமூகங்களிலும் கலைஞர் ஆட்சியால் பயன்பெற்ற முதல் தலைமுறைப் பட்டதாரிகள் பல இலட்சம் பேர் இருக்கிறார்கள். இதுபோன்ற சமூகநீதித் திட்டங்களைத் திமுகதான் கொண்டு வரமுடியும். கல்வி - வேலைவாய்ப்பு - அரசியல் உரிமைகள் ஆகிய சமூகத்தின் மூன்று அடிப்படைக் கூறுகளையும் அனைத்துத் தரப்பு சமூகத்தினருக்கும் கொண்டு சேர்த்தது திமுகதான்.
எனவே சமூகநீதியை உயர்த்திப்பிடிக்கிற சமூக ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்கிற அனைவரும் தூக்கிப்பிடிக்கும் கட்சியாக, திமுகழகம் இருக்கிறதுச்
- வெண்மணி