சில நாள்களுக்கு முன்பு, சென்னையில் நடைபெற்ற, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய, திமுக தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகிய நம் தளபதியவர்கள் குறிப்பிட்டுள்ள ஒரு செய்தி மிகப்பெரிய வரலாற்றுச் சிறப்புடையது!

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் யார், யார் வெற்றி பெற வேண்டும் என்பதைவிட, யார் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்து விடக்கூடாது என்பது முக்கியமானது என்று கூறியிருக்கிறார்.

இது எதிர்மறைச் சிந்தனை இல்லையா என்று தோன்றும். எதிர்மறைச் சிந்தனைதான். ஆனால் சில நேரங்களில், வரலாற்றில் இப்படிப்பட்ட சிந்தனைகள் தேவைப்பட்டு இருக்கின்றன!mk stalin and nithiskumarபொது எதிரியை வீழ்த்துவதற்கு, கருத்து வேறுபாடுகள் உள்ள கட்சிகள் கூட ஒருங்கிணைந்து நின்று, களத்தைச் சந்திப்பது இயல்பானதும், தேவையானதுமாகும்! இன்றைய உடனடித் தேவை, ஒரு தீய சக்தியை ஆட்சியில் இருந்து அகற்றுவதுதான் என்பதை உணர்ந்து நம் தலைவர் பேசியிருக்கிறார்!

இது எப்படிக் கலைஞரின் கனவாகும் என்ற ஐயமும் எழலாம். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா வழியில் நின்று தலைவர் கலைஞர் அவர்கள், தமிழ்நாட்டில் உருவாக்கியுள்ள சமத்துவ, சமூக நீதிச் சிந்தனைகள் நிலைபெற வேண்டும் என்பது அவருடைய கனவாகத்தானே இருக்க முடியும்! அவை தொடர்ந்து நிலைத்திட வேண்டுமானால், அவற்றைக் குலைக்கிற, அழிக்கத் துடிக்கிற ஒரு கட்சி ஒன்றிய அரசில் ஆட்சியில் இருக்கக் கூடாது என்பதுதானே சரியானது!

இன்றைக்கும் தமிழ்நாட்டில் நடப்பதைப் போல், சுயமரியாதை, சாதி மறுப்புத் திருமணங்கள் வடநாட்டில் வெளிப்படையாகப் பொதுவான அரங்குகளில், அவ்வளவு எளிதாக நடந்து விட முடியாது! தமிழ்நாட்டில் இருப்பது போல் கடவுள், மதம் தொடர்பான வெளிப்படையான விவாதங்கள் வடநாட்டில் நடக்க வாய்ப்பில்லை. இவை ரியல் திராவிட இயக்கம் தமிழ்நாட்டில் ஏற்படுத்திய மாற்றங்கள்!

இப்போதும் கூட 14, 17 வயதுப் பெண்களுக்குத் திருமணம் ஆவதும், அவர்கள் கருவுற்று இருப்பதும் மனுநீதி ஏற்றுக்கொண்டு உள்ள ஒன்றுதான் என்று குஜராத் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது! மனுநீதியே இன்றைக்கும் ஆரியப் பார்ப்பனச் சட்டமாக அங்கு உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் சமூக நீதிக்குத்தான் என்றும் தலைமையிடம் என்பதை நாம் அறிவோம்!

மனுநீதியைத் தங்களின் சட்டமாக வைத்திருக்கும் ஆர்எஸ்எஸ் ஆட்சி, மறுபடியும் ஏற்பட்டு விடாமல் தடுப்பதுதான் கலைஞரின் நினைவை நாம் போற்றுவதாகும் என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார். அதனை நெஞ்சில் கொண்டு, இன்றிலிருந்தே பணியாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் நம் அனைவருக்கும் இருக்கிறது!

அதற்கு ஏற்ற சூழலும் இந்திய அளவில் இன்று கனிந்து வருகிறது! பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அவர்கள் வரும் 23ஆம் தேதி பாட்னாவில் கூட்டி இருக்கும் அனைத்துக் கட்சிகளின் கூட்டம் இந்த வெற்றிக்கு வழி வகுக்கக் கூடியது! மேற்கு வங்கத்தில் எதிரும் புதிருமாக பிரிந்து நின்ற காங்கிரஸ், திருணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளையும், கேரளாவில் போட்டியிடும் காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் கட்சிகளையும் ஒரே அரங்கிற்குள் அவர் கூட்டி வருகிறார்! திமுக, ஆம் ஆத்மி போன்ற வலிமையான கட்சிகளும் அன்று பங்கேற்கின்றன. அந்தக் கூட்டம், ஒரு நம்பிக்கைக் கீற்றை நாட்டுக்குத் தந்திருக்கிறது!

இந்தியா முழுவதும் தாங்களே வலிமையாக இருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை பிஜேபி ஏற்படுத்த முயன்றாலும் உண்மை அப்படி இல்லை! ஏற்கனவே தென்னிந்தியா முழுவதும் அவர்கள் துடைத்து எறியப்பட்டு இருக்கிறார்கள்! வடஇந்தியாவிலும் கூட, பஞ்சாப், ராஜஸ்தான், தில்லி, பீகார் முதலிய மாநிலங்களில் அவர்களின் ஆட்சி இல்லை. மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில், ஆட்சியை அவர்கள் குறுக்கு வழியில் தான் பெற்றிருக்கிறார்கள். எனவே உத்தர பிரதேசம்,குஜராத் தவிர அவர்கள் வலிமையாக அமர்ந்திருக்கும் பெரிய மாநிலங்கள் வேறு எதுவும் இல்லை!

அனைவரும் ஒன்று கூடி உழைத்தால், கைக்கெட்டும் தொலைவில்தான் வெற்றி இருக்கிறது! நம்பிக்கையோடு இருப்போம், கலைஞரின் கனவைக் காலம் நிறைவேற்றும்!

- சுப.வீரபாண்டியன்

Pin It