தேர்தலுக்கு முந்தைய சில நாள்கள் மாநகரப் பேருந்துக் கட்டணங்கள் குறைக்கப்பட்டது தொடர்பாக எழுப்பப்பட்ட சட்ட வாதங்களுக்குப் பிறகு மீண்டும்பழைய கட்டணமே வசூலிக்கப்பட்டது. இப் போது இந்த சட்ட சிக்கல்களுக்கு அப்பால் மக்கள் நல நோக்கில் நாம்சில கருத்துகளை கவனம் கொள்ள வேண்டி யிருக்கிறது. மாநகரப் போக்குவரத்துக் கழகங்கள் விதம் விதமான வண்ணப் பலகைகளை வைத்தும், விதம் விதமான பயண வகைகளை வைத்தும் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் மற்றும் இரு மடங்கிற்கும் மேலான கட்டணம் வசூலித்து வருவதைக் கண்டித்தும், அனைத்துப் பேருந்துகளிலும் சமச்சீரான ஒரே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று கோரியும் மண்மொழி 22வது மே-ஜூன் 2008 இதழில் ஒரு கட்டுரை எழுதி அதன் பிரதி ஒன்றை மாநகரப் போக்குவரத்துக் கழக நிர்வாகத்துக்கும் அனுப்பி வைத்திருந்தோம்.

அப்போது அலுவலகத் துக்கு தொலைபேசி வழி தொடர்பு கொண்டு அதுபற்றிக் கேட்ட தற்கு அதை உரிய அதிகாரிகளுக்கு பரிசீலனைக்கு அனுப்பியுள்ளதாகவும் அதன் பிறகு அதன் மீதான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித் திருந்தனர். ஆனால் அதற்குப் பிறகு ஓராண்டை நெருங்க இருந்த நிலை யிலும் அதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லாத சூழலில் இது குறித்து பொது நல வழக்கு ஒன்று தொடுக்கலாமா என்கிற யோசனையில் அதற்கான வாதங்களையும், கோரிக்கைக்கான நியாயங்களையும் திரட்டிக் கொண் டிருந்தோம். அதன் விவரம் வருமாறு :

1. சாதாரணப் பேருந்து, குறிப் பிட்ட நிறுத்தப் பேருந்து, விரைவுப் பேருந்து, சொகுசுப் பேருந்து, எது வானாலும் எல்லாப் பேருந்துகளுமே மாநகர் நெரிசலுக்கு மத்தியில் ஒரு லிட்டர் டீசலுக்கு கொடுக்கும் தூரம் 4 முதல் 5 கி.மீ தான். அதாவது எரிபொருள் செலவுநோக்கில் எல்லாப் பேருந்துகளும் கொடுக்கும் துhரம் ஒன்றே தான். இப்படி இருக்க கட்ட ணத்தில் மட்டும் வேறுபாடாக வசூலிப் பதில் எந்த நியாயமும் இல்லை.

2. இவ்வாறே பேருந்து ஓட்டுநர் நடத்துநர்களுக்கும் பேருந்துகளின் வகை அடிப்படையிலோ, பயணவகை அடிப்படையிலோ சாதாரண பேருந்து, சொகுசுப் பேருந்து என்கிற அடிப் படையிலோ ஊதிய வேறுபாடு ஏதும் கிடையாது. எல்லோருக்கும் அவரவர் ஊழிய கால அடிப்படையில் ஒரே ஊதியம் தான். இப்படி பேருந்து வேறுபாடு அடிப்படையில் ஊதிய வேறுபாடு எதுவும் இல்லாத நிலையில் பயணக் கட்டணம் மட்டும் வேறு பாடாயும் கூடுதலாகவும் வசூலிப்பது எந்த வகையிலும் நியாயமற்றது.

3. பேருந்து வகைகள், பயண வகைகளுக்கு ஏற்ப இருக்கை எண்ணிக் கைகளில் ஏதும் வேறுபாடு உண்டா, அதாவது ஒட்டு மொத்த வசூலில் ஏதும் வேறுபாடு உண்டா என்றால் அதுவு மில்லை. எல்லாப் பேருந்துகளிலும் இருக்கைகள் 46+2 அல்லது 48+2 மற்றும் நிற்போர் 25 என்கிற அளவுதான். தவிர எல்லாப் பேருந்துகளிலுமே இந்த அளவைத் தாண்டித்தான் கூட்டம் நிரம்பி வழிகிறது என்பதும் திணிந்து நெளிந்து பிதுங்குகிறது என்பதும் அனைவரும் அனுபவிக்கிற ஒன்று. எனவே சொகுசுப் பேருந்துகளில் இருக்கைகள் குறைவாய்இருக்கின்றன, வருவாய் குறைகிறது ஆகவேதான் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறோம் என்றும் சொல்ல முடியாது.

4. சரி, சொகுசுப் பேருந்துகளில் பயணிக்கு கூடுதல் வசதி. ஆகவே அதில் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறோம் என்று வாதிட வாய்ப்புண்டா என்றால் அதுவுமில்லை. சாதாரணப் பேருந்து களில் உள்ள இருக்கை வசதி கூட சொகுசுப் பேருந்துகளில் இல்லை. பல இருக்கைகளில் கால்களைக் கூட சரியாய் நீட்ட முடியாமல் இண்டு இடுக்கில் ஒடுங்கி மடங்கிதான் உட்கார்ந்து செல்ல வேண்டும். அதுவும் இருக்கை கிடைத்தால்தான். கிடைக்கா விட்டால் எல்லாப் பேருந்து களிலும் போல நின்று கொண்டே நெரிசலில் சிக்கி அல்லாட வேண்டியது தான். அதாவது கட்டணம் தான் சொகுசுக் கட்டணமே தவிர, பயணம் இம்சைப் பயணம் தான்.

ஆகவே,சாதாரண கட்டணப் பேருந்துகளுக்கும் கூடுதல் கட்டணப் பேருந்துகளுக்கும் இயக்குதல் செலவுமற்றும் நிர்வாகச் செலவுகளில் எந்த வேறுபாடும் இல்லாது ஒரே அளவாய் இருக்க வெறும் பயண வகைகளை, பேருந்து வகைகளை மட்டும் வைத்து கூடுதல் கட்டணமும், இரு மடங்கிற்கு மேலான கட்டணமும் வசூலிப்பதில் எந்த நியாயமும் இல்லை இதில் நிர்வாகம் எந்தவித தர்க்க பூர்வ நியாயத்தையும் நிறுவ முடியாது.

ஒரே ஒரு வாதத்தை முன் வைக் கலாம், சாதாரணப் பேருந்துகளை விட, சொகுசுப் பேருந்துகளின் வாங்கும் விலை அதிகமாகிறது. ஆகவே கூடுதல் கட்டணம் வசூலித்து இதை ஈடுகட்ட வேண்டியிருக்கிறது என்று சொல்ல லாம். அப்படியானால் ஒரு கேள்வி, ஒரு மக்கள் நல அரசு என்பது மக்களுக்கு நன்மை செய்யும் நோக்கில் சாதாரணப் பேருந்துகளை அதிகம் வாங்கி மக்கள் எளிய கட்டணத்தில் பயணம் செய்ய வாய்ப்பளிக்க வேண்டுமேயல்லாது சொகுசுப் பேருந்துகளை வாங்கி விட்டு விலை அதிகமாயிருக்கிறதே என்று பயணிகளைக் கொள்ளையடிக்கக் கூடாது.

சொகுசுப் பேருந்து என்பது தொலை தூரப் பயணங்களுக்கு என்று முன்பதிவு செய்து அதற்குரிய வசதி களோடு பயணம் செய்வது என்றால் சரி. கொடுக்கும் கூடுதல் கட்டணத்துக்கு ஒரு நியாயம் இருக்கும் ஆனால், மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அவரவர் போய்ச் சேர வேண்டிய இடத்துக்கு எப்படி யாவது போய்ச் சேர்ந்தால் போதும் என்று தவித்துக் கொண்டிருக் கும் நிலையில் இந்தக் குறுகிய தூரத்துக் கெல்லாம் சொகுசுப் பேருந்து தேவை யில்லை. அப்படி யாரும் கேட்கவு மில்லை.

ஒரு வாதத்துக்கு யாரோ ஒரு சிலர் அப்படிக் கேட்பதாகவே வைத்துக் கொள்வதானாலும் ஏதோ ஆசைக்கு ஒன்றிரண்டு மட்டும் விடலாம். ஆனால் இதிலும் கூடுதல் கட்டண அளவுக்கு பயண சொகுசை அனுபவிக்க முடியுமா. என்றால் அதுவும் முடியாது.கட்டணம் தான் சொகுசுக் கட்டணமே தவிர பயணம் இம்சைப் பயணமாகவே இருக்கும் என்பது கண்கூடு. இப்படிப்பட்ட நிலையில் இந்த, வாதங்களை வைத்து ஒரு பொதுநல வழக்கு தொடுக்கலாம் எனக் கருதி யிருந்த தருணத்தில் தான் கடந்த 30-04-09 அன்று காலை வழக்கம் போல பேருந்துப் பயணம் மேற்கொள்ள வந்தவர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி. 10 ரூபாய் நோட்டை நீட்டினால் 7 ரூபாய் 9 ரூபாய் எடுத்துக் கொண்டு மீதி மூன்றோ ஒன்றோ தருகிற நிலை மாறி, 3 ரூபாய் 4 ரூபாய் எடுத்துக் கொண்டு 7 ரூபாய் 6 ரூபாய் திருப்பித் தந்ததுடன் பல இடங்களுக்கு குறைந்த பட்சக் கட்டணமே இரண்டு ரூபாய்தான் என அதை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியைத் திருப்பித் தந்து பயணிகளை அசத்தினார்கள் நடத்துநர்கள். இது தேர்தல் காலத் தள்ளுபடி போல என பயணிகள் மனம் மகிழ்ந் தாலும், இப்போது மட்டும் இந்தக் கட்டணம் அரசுக்கு எப்படி கட்டுப்படி யாகிறது, ஆக இவ்வளவு காலமாய் எங்களைக் கொள்ளையடித்துக் கொண் டுதானே வந்தீர்கள் என்று உள்ளூர பொருமிக் கொண்டதும் நிகழ்ந்தது.

இந்த கட்டணக் குறைப்பை யொட்டி எழுந்த சர்ச்சையில்தான் போக்குவரத்துத்துறை அமைச்சர் இதற்கு ஓர் அற்புத விளக்கம் தந்தார். அவரதுஅறிக்கை நாளேடுகளில் செய்தி யாக வெளிவந்ததுடன் அதையொட்டி தி.மு.க.வே ஒரு விளம்பரமும் தந்திருந்தது. அதாவது நிகழ்ந்தது கட்டணக் குறைப்பு இல்லையாம். “ தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு மக்களின் விருப்பத்திற்கும் கோரிக்கைக்கும் ஏற்ற வகையில் ஒரு சில நேரங்களில் சாதாரணக் கட்டணப் பேருந்துகளின் எண்ணிக்கையைக் குறைத்து அதிகக் கட்டணங்கள் உள்ள பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியும்; அதைப் போலவே சில நேரங்களில் அதிகக் கட்டணங்கள் உள்ள பேருந்து களின் எண்ணிக்கையைக் குறைத்து, குறைந்த கட்டணங்கள் உள்ள பேருந்து களின் எண்ணிக்கையை அதிகப்படுத் தியும் வந்துள்ளோம்... இப்படி அவ்வப் போது பேருந்துகளின் தரம் மாற்றப் படுவது உண்டே தவிர.... கட்டணக் குறைப்பு எதுவும் செய்யப்பட வில்லை என்பது தான் உண்மை.” என்றுஇப்படி முழுப் பூசணிக்காயை நூடுல்சில் மறைக்கிற முயற்சியாக வெளி வந்தது அறிக்கை.

இந்த அறிக்கையில், மக்களின் விருப்பத்திற்கும் கோரிக்கைக்கும் அளவுகோல் என்ன, யாரிடம் எப்போது அவர்கள் கோரிக்கை வைத்தார்கள். அதுவும் அதிகமான கட்டணம் உள்ள பேருந்துகளை அதிகமாக விட வேண் டும் என்று எப்போது கேட்டார்கள். அந்த மக்கள் என்ன காசு பணம் பெருத்துப் போய் கொழுப்பெடுத்து திரிகிறார்களா. அப்படித் திரிந்த மக்கள் 2006இல் கழக ஆட்சி அமைந்ததிலிருந்து எந்தக் கோரிக்கையும் வைக்காமல் இப்போது தேர்தல் அறிவிக்கப் பட்ட பிறகுமட்டும் குறைவான கட்டணம் உள்ள பேருந்துகளை அதிகமாக விடக் கேட்டார்களா, இப்படி மக்கள் மாறி மாறிக் கேட்கும் போதெல்லாம் விடுகிற அளவுக்கு வசதியாக நிர்வாகம் இரு வகைப் பேருந்துகளையும் எப்போதும் கைவசம் கூடுதலாக தயாராக வைத் திருக்கிறதா, 30-04-09 முதல் 03-05-09 முடிய அந்த நான்கு நாட்களும் சொகுசுப் பேருநதுகளிலெல்லாம் கூட சாதாரணக் கட்டணம் வசூலிக்கப் பட்டதே அது எந்த அடிப்படையில் என்பதெல்லாம் கேள்விகளானாலும், இப்போதைக்கு இக்கேள்விகள் எவற்றையும் சர்ச்சைக்குள்ளாக்காமல் அவை எல்லாவற்றையும் ஒருபுறம் , ஒதுக்கி வைத்து, தி.மு.க.வின் போக்கு வரத்துத் துறை அமைச்சரின் வாதத்தை அப்படியே ஏற்று தற்போது அவருக்கும் தமிழக முதல்வருக்கும் ஒரே ஒரு கோரிக்கை மட்டும் வைப்போம்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்களே, முதல்வர் அவர்களே, தேர்தலுக்கு முன்பும் சரி, இப்போதும் சரி குறைவான கட்டணம் உள்ள பேருந்துகளையே மக்கள் அதிகம் கோருகிறார்கள். ஆகவே தேர்தலுக்கு முன் 30-04-09 முதல் 03-05-09 முடிய அந்த நான்கு நாள்களும் நடப்பில் விட்ட பேருந்துகளையே அந்த நான்கு நாள்களும் வசூலித்த கட்டண விகிதங்களையே மக்கள் இப்போதும் கோரு கிறார்கள்.

அப்போதாவது அதைச் செயல் படுத்த தேர்தல் ஆணையம் மற்றும் உங்கள் அரசியல் எதிரிகள் அதற்குத் தடையாக இருந்திருக்கலாம் இப் போது உங்கள் திட்டத்தைத் தடுக்க யாரும் எந்தத் தடையும் இல்லை. எதிர்க்கட்சிகள் குறுக்கே வர நினைத் தாலும் அப்படிச் செய்தால் தாங்கள் மக்கள் நலனுக்கு எதிரானவர்கள் என்பதாக மக்கள் மத்தியில் அம்பலப் பட்டுப் போய்விடுவோம் என அஞ்சி யாரும் குறுக்கே வர மாட்டார்கள். ஆகவே தற்போது தாங்கள் மெத்தத் துணிவோடும் முழு சுதந்திரத்தோடும் இதை நடைமுறைப் படுத்தலாம். மக்கள், குறைவான கட்டணம் உள்ள பேருந்துகளைத் தான் அதிகம் விரும்பு கிறார்கள் என்பதில் உங்களுக்கு ஏதும் சந்தேகம் இருக்குமானால் ஊடகங்கள் வாயிலாக இதுபற்றி ஒரு கருத்துக் கணிப்பு நடத்தி கூட நீங்கள் ஒரு நல்ல முடிவுக்கு வரலாம். செய்வீர்களா... என்று கேட்பதே அறிவுடைமையாய் இருக்கும்.

எனவே, இந்தச் சிக்கலில் தமிழக அரசை நடத்தும் தி.மு.க. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதா, அதற்கு என்ன தண்டனை தேர்தல் வெற்றி செல்லுமா செல்லாதா என்கிற சட்ட வாதங்களை, அது தொடர்பான நீதி மன்றத்தின் தீர்ப்புகளையெல்லாம் விட்டு, மக்களுக்கு நன்மை பயக்கும் மகிழ்ச்சியளிக்கும் அந்த நான்கு நாட் களில் விடப்பட்ட பேருந்துகளையும் அப்போது வசூலித்த அந்த கட்டண விகிதங்களையுமே தமிழக அரசு தற் போதும் நடைமுறைப்படுத்த வேண் டும். அதையே செயலாக்க வேண்டும் எனக் கோர வேண்டும். தேர்தல் குறுக்கிட்டால் தடைப்பட்டுப் போன அந்த அருமையான மக்கள் நலத் திட்டத்தைத் தமிழக அரசு இந்தத் தடையிலாக் காலத்தைப் பயன் படுத்தி விரைந்து நிறைவேற்றி மக்களுக்கு மகிழ்ச்சியூட்ட வேண்டும்.

கமுக்கக் கொள்ளை

சாதாரணமாக 25 காசு, 50 காசு கட்டண உயர்வு என்றாலே கொதித்தெழுந்து அதை எதிர்த்துப் போராடும் மக்கள், இந்த சொகுசுப் பேருந்து இரு மடங்கிற்கு மேலாக அதாவது 4 ரூபாய்க்கு 9 ரூபாய் 5 ரூபாய்க்கு 12 ரூபாய் என கூடுதலாக வசூலிக்கும் கட்டணத்தை எந்தவித எதிர்ப்புமில்லாமல் ஏற்று கேட்கிற காசைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். போக்குவரத்து நிர்வாகம் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன் பல புதிய பேருந்துகளைத் தடத்தில் விட்டது. இதில் “மாநகர்ப் பேருந்து மாசற்ற பேருந்து” என்று எழுதிய பேருந்து வந்தால் சாதாரண கட்டணம். ‘தாழ்தாள சொகுசுப் பேருந்து’ என்று எழுதி வந்தால் இரண்டே கால் மடங்கு கட்டணம். இவற்றுள் இருக்கைகள் சற்றே மாறுபாடாய் இருக்கும் என்பதைத் தவிர வேறு எந்த மாற்றமும் இல்லை. பயணமும் ஒரே பயணம்தான்.

இது அறிமுகப்படுத்தப்பட்ட போதே எதிர்க்கட்சிகள் இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்டிருக்க வேண்டும். கேட்கவில்லை. போக்குவரத்துத் துறையில் உள்ள தொழிற் சங்கங்களாவது மக்கள் மத்தியில் இது சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி இதை எதிர்த்து போராடச் செய்திருக்க வேண்டும். அவர்களும் எதுவும் செய்யவில்லை. இந்த கட்டண உயர்வால் ஓட்டுநர், நடத்துநருக்கு வசூல் விழுக்காட்டுப்படி கூடுதலாகக் கிடைக்கிறது என்பதால் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களிடமிருந்து சந்தா, சிறப்பு நன்கொடை, போனஸ் நன்கொடை வந்தால்போதும் என்று மக்கள் நலனைப் புறக்கணித்து கமுக்கமாய் இருந்து விட்டிருக்கிறார்கள்போல் தெரிகிறது . போனது போகட்டும் என்றால் இப்போது இடையில் வந்த நான்கு நாள் கட்டணக் குறைப்பிற்குப் பிறகும்கூட அவர்கள் வாய்திறக்காமல் இருப்பது தான் வியப்பு.

பெருகி வரும் சொகுசுப் பேருந்து

தாழ்தள சொகுசுப் பேருந்துகளைமுதன் முதலில் அறிமுகப் படுத்திய போது அது எப்போதோ ஒன்று வரும். மக்களும் சுற்றுலா அனுபவம் போல் எப்போதாவதுஅதில் ஏறி மகிழும் உளவியல் சுகமும் இருந்தது. ஆனால், நிலமை இப்போது முற்றாக தலைகீழாக மாறி, வரும் பேருந்துகள் எல்லாம் சொகுசுப் பேருந்துகளாகவே வருகின்றன. சாதாரணப் பேருந்து என்பது எப்போதோ ஒன்றுதான். அதாவது மக்களின் பயணத் தேவையைப் புரிந்து அதை வாய்ப்பாகப் பயன்படுத்தி, எப்படியானாலும் மக்கள் பேருந்தில் பயணித்துத் தானே ஆக வேண்டும் என்று இப்படி அதிகக் கட்டணம் உள்ள சொகுசுப் பேருந்துகளையே அதிகம் விட்டு மக்களைக் கொள்ளையடித்து வருகிறது மாநகரப் போக்குவரத்து நிர்வாகம்.

சிற்றூர்ப்புற, நகரப் பேருந்தானால் சிறு கட்டண உயர்வையும் எதிர்த்து மக்கள் குரல் கொடுப்பார்கள். தம் ஊர்ப் பகுதிகளில் பேருந்தைச் சிறைப்பிடித்தோ சாலை மறியல் செய்தோ கட்டணத்தைக் குறைக்கக் கோருவார்கள். ஆனால் மாநகர்ப் பகுதிகளில் அவரவரும் எப்படியாவது அவரவர் பணி முடிந்தால் போதும் என்று பரபரக்கிற சூழலில், யாரும் எதையும் கண்டு கொள்வதில்லை. இந்தப் போக்கே நிர்வாகத்திற்கு கட்டணத்தை விருப்பம் போல் ஏற்றிக் கொள்ளை யடிக்க வாய்ப்பாக அமைந்து விடுகிறது. இந்த நிலையை மாற்ற மாநகர்ப் போக்குவரத்து பயணிகள் முயற்சிக்க வேண்டும்.

சொகுசு வசூல்

நியாயமாய்ப் போக்குவரத்து நிர்வாகம் புதிய பேருந்துகளை வாங்கும் போது மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கு சாதாரணப் பேருந்துகளையே அதிகம் வாங்கி குறைவான கட்டணத்திலேயே மக்கள் பயணம் செய்ய வழிவகுக்க வேண்டும். அதை விட்டு வாங்குவதெல்லாம் சொகுசுப் பேருந்துகளாக வாங்கி கூடுதல் கட்டணம் விதித்து, மக்களை கொள்ளையடிப்பது என்ன நியாயம் என்று தெரியவில்லை.அதே வேளை இந்த சொகுசுப் பேருந்துவாங்குவதில் அதிகாரிகளுக்கு பேரக்கழிவு    கூடுதலாக கிடைக்கிறது என்பதனாலேயே அவர்கள் இப்படிப்பட்ட சொகுசுப் பேருந்துகளை அதிகம் வாங்குகிறார்கள் என்றும் ஒரு பேச்சு இருக்கிறது.

ஆக சொகுசுப் பேருந்துகளால் அமைச்சர்களுக்கு, அதிகாரிகளுக்கு நல்ல வசூல், தொழிற்சங்களுக்கு சந்தா நன்கொடைகளில் கூடுதல் வசூல். தொழிற்சங்கம் நடத்தும் கட்சிகளுக்கும் வசூல், இப்படி எல்லாருக்கும் இதில் பங்கு இருப்பதனால் தான் எல்லாருமே இதில் கமுக்கமாக இருக்கிறார்கள்போல்தெரிகிறது. எனவே பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான் என்பதால், பொது மக்களே இந்தக் கொள்ளையை எதிர்த்துப் போரட வேண்டும்.

இரவுக் கொள்ளை

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் பேருந்துகளின் வகைக்கேற்ப கட்டணக் கொள்ளை நடப்பது போல இரவுச் சேவை - நைட் சர்வீஸ் - என்கிற பெயரிலும் இரட்டிப்புக் கட்டணம் வசூலிக்கும் கொள்ளை நாள்தோறும் நடைபெற்று வருகிறது. அதற்கு முன் 12 மணிக்கு மேலே போனால் இரவுச் சேவை என்று பேருந்து விட்டார்கள். இப்போதோ பத்து பத்தரை மணி ஆனாலே அதற்குப் பிறகு பணி மனையிலிருந்து எடுக்கும் வண்டிக்கு கருப்புப் பலகை மாட்டி இரவுச்சேவை என்று சொல்லி இரட்டிப்புக் கட்டணம் வாங்குகிறார்கள்

இதுவும் ஒரு வகை கொள்ளைதான். காரணம் தமிழகம் முழுக்க மட்டுமன்றி தமிழகத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கும் இரவு, பகல் என்று பாராமல் எப்போதும் அரசு மற்றும் போக்கு வரத்துக் கழகங்களின் பேருந்துச்சேவை இயங்கி வருகிறது. இவை அனைத்திற்கும் பகல் நேரம் இரவு நேரம் எனப் பாகுபாடு இன்றி எல்லாவற்றிக்கும் எந்த நேரம் பயணம் செய்தாலும் ஒரே கட்டணம் தான். ஆனால் மாநகரங்களில் மட்டும் இந்த வேறுபாடு இரட்டிப்புக் கட்டண வசூல். மற்றப் பேருந்துகளுக்கு முன்வைத்த அதே வாதம் இந்த இரவுச் சேவைப் பேருந்துகளுக்கும் பொருந்தும். ஆகவே இந்த இரவுச் சேவை இரட்டிப்புக் கட்டண நடைமுறையையும் நிர்வாகம் கைவிட்டு எந்த நேரம் பயணம் மேற்கொண்டாலும் சமச்சீரான ஒரே கட்டணம் வசூலிக்கக் கோர வேண்டும்.

 

Pin It