கீற்றில் தேட...

புதுடெல்லியில் பத்திரிகையாளர் சந்திப்பின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்கள் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

Sitaram Yechuryஅதிர்ச்சி அளிக்கும் இத்தயை செயல் கட்சியின் தேசிய தலைமை அலுவலகத்திற்குள்ளேயே நடந்துள்ளது. அதிலும் இத்தகைய தாக்குதல் நாடறிந்த தலைவர் மீதே என்றால் சாதாரண மனிதனுக்கு என்ன பாதுகாப்பு என்ற கேள்வி எழுகிறது.

பிஜேபி மத்தியில் அதிகாரத்திற்கு வந்தவுடன் அதிலும் உ.பி.யில் அதிகாரத்திற்கு வந்தவுடன், அவர்கள் பேச்சில், அரசியல் அணுகுமுறையில் உடல் மொழியில் என அனைத்திலும் வன்முறை பிம்பம் தெரிகிறது தங்கள் மீதான விமர்சனங்களை உரையாடல் ரீதியான எதிர்மறைகளைக் கூட அவர்கள் ஏற்பதில்லை. சகிப்பின்மையின் உச்சத்திற்கேற்ப சென்று படுகொலையிலும் ஈடுபடுகிறார்கள்.

தபோல்கர், பன்சாரே, கல்புர்க்கி போன்ற அறிஞர்கள் இந்து அடிப்படை வாத கருத்தியிலாளர்களால் கொல்லப்பட்டார்கள் மாட்டு இறைச்சியை அரசியலாக்கி, உணாவில், தாத்திரியில் பெரும் பதற்றங்களை இவர்கள்தான் தோற்றுவித்தார்கள்.

மொழிவழித் தேசிய இனங்களின் அரைக் கூட்டிசைவு நாடு தான் இந்தியா! முழுக் கூட்டிசைவு நோக்கி நாடு பயணிக்க வேண்டும். அரசியல் சாசன இலக்கும் இதுதான். இந்தியைத் திணிப்பதன் மூலம் இந்துமதக் கருத்தியலைத் திணிப்பதன் மூலம் ஒரே சட்டம் ஒரே நாடு என்ற கோஷத்தின் மூலம் இறுகிய கூட்டிசவை, ஒற்றுமையைச் சீர்குலைக்கிறது.

மாநிலங்களின் அதிகாரங்களுக்குள் அப்பட்டமாக பிஜேபி மத்திய அரசு தலையிடுகிறது.

தேசியதிட்டக்கமிஷன், ஐந்தாண்டு திட்டமிடும் முறை போன்ற ஜனநாயக நிறுவனங்கள் கணக்கிடப்பட்டு அதன் அதிகாரங்களை அதிபர்போல் பிரதமர் குவித்துக் கொள்கிறார்.

புகழ்வாய்ந்த அயலுறவுக் கொள்கை கைவிடப்படுகிறது  நாடாளுமன்ற விவாத முறைகள் தவிர்க்கப்படுகின்றன. குரல் வாக்கெடுப்பில், கைகளை உயர்த்தி எண்ணுவது போன்ற முறையில் மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன.

மொத்தத்தில் ஜனநாயகம், பன்முகம், மதச்சார்பின்மை, பொதுத்துறை என யாவும் போராட்டத்தால் சூழப்பட்டுள்ளன.

இதனை முறியடிக்க குறைந்த பட்சம் ஒத்த கருத்துடையோர்  ஒரு பொதுமேடையை உருவாக்க வேண்டும் பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ், நேரு கருத்தியலாளர்கள் ஒன்றிணைவது அவசியம்.  அதனைத் தான் தோழர் யெச்சூரி மீதான தாக்குதல் காட்டுகிறது.

- மு.வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி