என்னதான் இருந்தாலும் சும்மா சொல்லக்கூடாது நம்முடைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை.

ஆளுநர் என்றால் நோகாமல் ஆளுநர் மாளிகையில் இருந்துக்கொண்டு ஓய்வு எடுப்பதும், எப்போதாவது ஏதாவது கையெழுத்து போடுவது மட்டுமன்று என்பதை உணர்ந்து செயல்படுவர் தமிழக ஆளுநர்.

மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிடுவதாக யார் என்ன சொன்னாலும் சரி, எதிர்கட்சிகள் எப்படி கூப்பாடு போட்டாலும் சரி அதைபற்றி எல்லாம் கவலைப் படத் தேவையில்லை என்று செயலில் காட்டிக் கொண்டிருப்பவர் அவர்.

மாநில ஆட்சியில் அதிகார வரம்பிற்கு மேலாகத் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்த அவர் முதலில் முயன்றார் என்பது உண்மைதான்.

தளபதி ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. நடத்திய கருப்புக் கொடிப் போராட்டம் உட்பட பிற போராட்டங்களினால், ‘பெருந்தன்மையோடு’ கொஞ்சம் பின் வாங்கிவிட்டார் அவர்.

அதனால் என்ன?

மாநில அரசு செயல்பாட்டில் எப்படியாவது தலையிட வேண்டும் என்பது அவருக்கு அவரின் மேலிடம் கொடுத்த ‘அஜெண்டா’ அல்லவா.

அதனால்தான் தெருக்களைக் கூட்டிச் சுத்தம் செய்யும் வேலையை ‘அசராமல்’ செய்துக் கொண்டிருக்கிறார் நம் ஆளுநர்.

அண்மையில் திண்டுகல்லுக்குச் சென்ற ஆளுநர் அங்கேயும் இதே பணியைச் செய்திருக்கிறார்.

குப்பையே இல்லாத சுத்தமான சாலையில், எங்கிருந்தோ கொண்டுவரப்பட்ட ‘சுத்தமான’ குப்பைகளைக் கொட்டி, அதையும் நம் ஆளுநர் வரும்வரையும் கால நேரம் பார்க்காமல் காவல் காத்திருக்கிறார்கள் சிலர்.

ஆளுநர் வந்தவுடன் வழக்கம் போல ஒரு நீண்ட பெருக்குமாரை கையில் எடுத்துக்கொண்டு அந்தக் குப்பைகளைக் கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்துவிட்டார்.

என்னே பணி! வேறு எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு பணியை, அந்தந்த மாநில ஆளுநர்கள் செய்கிறார்களா என்பது நமக்குத் தெரியாது. நம் ஆளுநர் அதைச் செய்கிறார்.

சரி! சுத்தம் செய்வது என்றால் ‘கொட்டி வைக்கும்’ குப்பையைக் கூட்டுவது மட்டும்தானா?

இந்தியாவில் நாட்டைச் சுத்தப்படுத்தும் வேலையில் கோடிக்கணக்கான மக்கள் மலம் அள்ளிக்கொண்டிருக்கிறார்கள். இதில் லட்சக் கணக்கானோர் தமிழகத்தில் அடங்குவர்.

இந்த வேலையைச் செய்பவர்கள் கடவுளின் குழந்தைகள் என்று ஒரு முறை காந்தி சொன்னார்.

இப்பொழுது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் இதனைக் கொஞ்சம் கவனத்தில் எடுக்கலாமே.

குப்பையைக் கூட்டுவது மட்டுமல்லாமல், மலம் அள்ளி அகற்றும் அந்த மாபெரும் பணியைச் செய்து மனித சமூதாயத்திற்குத் துணையாகவும், வழிகாட்டியாகவும் ஆளுநர் இருப்பாரா?

இவை இரண்டையும் ஆளுநர் செய்தால் அவரே தமிழ்நாட்டின் நிரந்தர ஆளுநர்.

Pin It