இரண்டு நாள்களுக்கு முன்பு, இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நடைபெற்றுள்ள ஒரு விவாதம், சமூக நீதியையும், ஜனநாயகத்தையும் தலைகுனிய வைத்திருக்கிறது!
மாநிலங்களவையை வழிநடத்திச் செல்லும் அவைத் தலைவரான, இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பேசியுள்ள சில சொற்களும், அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கொடுத்துள்ள பதிலடியும் இந்திய வரலாற்றில் இனி என்றும் பதிந்து கிடக்கும்!
ஒரு விவாதத்தில், முன்னாள் அமைச்சரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயராம் ரமேஷ் குறுக்கிட்டுப் பேசிய போது, அவைத் தலைவர் தன்கர் அதற்குத் தேவையில்லாமல் ஒரு விவாதத்தை எழுப்பி இருக்கிறார்.
ஜெயராம் ரமேஷைப் பார்த்து, "நீங்கள் மிகச் சிறந்த அறிவாளி, மிகுந்த திறன் உடையவர். நீங்கள் அல்லவா இந்த இடத்தில் அமர்ந்திருக்க வேண்டும் " என்று கார்கே அமர்ந்துள்ள இடத்தைத் காட்டிப் பேசி இருக்கிறார். அதாவது நீங்கள்தான் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதற்குத் தகுதியானவர் என்பது போன்று ஒரு குறிப்பு அது!ஒரு கட்சியின் தலைவராக யாரை அமர்த்தலாம் என்பதை அந்தக் கட்சிதான் முடிவு செய்யும். நீண்ட அனுபவமும், சமூக நீதிச் சிந்தனையும் கொண்ட மல்லிகார்ஜுன கார்கே இப்போது மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து வருகிறார். அவரை இழிவு படுத்துவது போல, ஜெயராம் ரமேஷைப் பார்த்து, நீங்கள்தான் அந்த இடத்திற்குத் தகுதி உள்ளவர் என்று அவைத் தலைவர் சொல்வது எந்த விதத்திலும் நாகரிகமாகாது!
அதற்கு உடனடியாக, மல்லிகார்ஜுன கார்கே கொடுத்துள்ள பதிலடி மிகச் சிறப்பானது. அவைத் தலைவர் தன்கரைப் பார்த்து, இது உங்கள் வேலை அன்று. எங்கள் கட்சிக்குத் தலைவரை நீங்கள் முடிவு செய்ய முடியாது. நீங்கள் ஏன் இப்படிப் பேசுகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். அவர் பிறப்பால் பிராமணர், நான் பிறப்பால் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவன். எனவே அந்த வருணாசிரமமும், சனாதனமும் உங்கள் மூளையில் அப்பிக் கிடப்பதைத்தான் இந்தப் பேச்சு காட்டுகிறது என்று கூறி இருக்கிறார்!
இல்லை, இல்லை நான் அந்த எண்ணத்தில் சொல்லவில்லை என்று அவர் சொன்னார், அவர் மூளையில் அந்த அழுக்குதான் அப்பிக் கிடக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிந்து விட்டது!
இந்த தன்கர் சில ஆண்டுகளுக்கு முன்பு, எனக்கு அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலேயே நம்பிக்கை இல்லை என்று சொன்னவர் தான். அதனை இரண்டு நாள்களுக்கு முன்பு, மக்களவையில் பேசிய ஆ.ராசா எம்.பி குறிப்பிட்டுக் காட்டினார். அது இப்போது உண்மை என்று ஆகிவிட்டது!
வருணாசிரமத்திற்கும், சனாசனத்திற்கும் எதிரான திராவிடக் கருத்தியலின் குரல் கார்கேயின் மூலம் நாடாளுமன்றத்தில் ஒலித்திருக்கிறது. அவருக்கு நம் நன்றியும், பாராட்டும்!
- சுப. வீரபாண்டியன்