இந்த வாரம் சென்னையில் நடந்த சட்டசபைக் கூட்டத்தில் மந்திரி கனம் முத்தய்யா முதலியார் அவர்கள் தமது இலாக்காவில் உள்ள உத்தியோகங்களில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஏற்படுத்தியது பற்றி அவரைக் கண்டிப்பதற்காக சட்டசபையை ஒத்தி வைக்க வேண்டும் என்று ஒரு அவசரப் பிரேரேபனை பார்ப்பனர்களால் திரு. சாமி வெங்கிடாசலத்தைப் பிடித்து சுயராஜ்யக் கட்சி தலைவர் என்கிற முறையில் கொண்டு வரப்பட்டது.

periyar with kid 720காங்கிரஸ் கக்ஷி என்றும், சுயராஜ்யக் கக்ஷி என்றும், தேசீயக் கக்ஷி என்றும், அவைகளுக்கு சட்டசபையில் ஒத்துழையாமை செய்வதும், முட்டுக்கட்டை போடுவதுதான் கொள்கைகள் என்றும் சொல்லி பார்ப்பனரல்லாதாரிலேயே சில கூலிகளை விட்டு பிரசாரம் செய்யச் செய்து பாமர மக்களை ஏமாற்றி சட்டசபைக்குப் போய் உட்கார்ந்து கொண்டு, பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கே விரோதமாய் பல கெடுதிகள் செய்து வந்திருப்பதுடன் இப்போது தைரியமாய் வெளியில் வந்து உத்தியோகப் பிச்சை கேட்கவும், பார்ப்பனரல்லாத சமூகத்தாருக்கு அளிக்கப்படும் சம சந்தர்ப்பத்தை ஒழித்து தங்கள் ஆதிக்கத்தையே எப்போதும் நிலைநிறுத்திக் கொள்வதற்குமே இது உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த பார்ப்பனர்கள் காங்கிரசுக்குள் சுயராஜ்யக் கக்ஷி என்பதாக ஒரு சூழ்ச்சிக் கக்ஷியை எப்போது ஆரம்பித்தார்களோ அன்று முதலே சுயராஜ்யக் கக்ஷி பார்ப்பனக் கக்ஷி என்றும், அது சமயம் அதை ஆதரித்து பார்ப்பனர்களின் காலை நக்கிக் கொண்டு அவர்கள் பின் திரிந்து கொண்டிருந்த பார்ப்பனரல்லாதார்கள் எல்லாம் வயிற்றுச் சோற்று பிரசாரகர்களும் பார்ப்பனக் கூலிகளும் பார்ப்பனரல்லாத சமூகத்தைக் காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்க வேண்டிய நிலையில் இருக்கும் இழிமக்கள் என்றும் ஒவ்வொரு நாளும் ஓயாமல் சொல்லி வந்தோம். அந்த சமயம் அநேக பார்ப்பனக் கூலிகள் நம்மை சர்க்கார் தரகரென்றும் தேசீய விரோதிகள் என்றுங்கூட தூற்றி வந்தததுடன் நில்லாமல் சுயராஜ்யக் கக்ஷி ஒன்றுதான் சர்க்காரரோடு யுத்தம் செய்யும் கக்ஷி என்றும், சுயராஜ்யக் கட்சிகாரர் சொந்தத்தில் எவ்வளவு அயோக்கியர்களாக இருந்தாலும் அவர்களுக்குத்தான் ஓட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் பார்ப்பனர்களிடம் கூலி வாங்கிக் கொண்டு எழுதியும் பேசியும் பிரசாரம் செய்தார்கள்.

ஆனால் நாம் சொல்லி வந்தது அப்பொழுதே அநேகருக்கு சரியென்றுபட்டிருந்தாலும் இப்போது ³ கூலிகளும் ஒப்புக்கொள்ளத்தக்க மாதிரியில் அது வெளியாகிக் கொண்டு வருவதும், அக்கூலிகள் அது விஷயத்தைப் பொருத்தமட்டிலும் திருடனைத் தேள் கொட்டியதுபோல் வாய் மூடிக் கொண்டிருப்பதும் வெட்ட வெளிச்சமாய் விட்டது. மந்திரி கனம் முத்தய்யா முதலியார் அவர்கள், தமது ஆதிக்கத்தில் உள்ள பத்திரப் பதிவு இலாக்காவில் உள்ள உத்தியோகங்களில் ஒவ்வொரு பன்னிரண்டு உத்தியோகத்திற்கும் பார்ப்பனரல்லாதார்களுக்கு பத்தும், பார்ப்பனர்களுக்கு இரண்டும் என்பதாக பிரித்து பார்ப்பனரல்லாதாரிலும் உள்ள முக்கிய பிரிவுகளான மகமதியர்களுக்கு 2ம், கிறிஸ்தவர்கள், ஐரோப்பியர், ஆங்கிலோ இந்தியர் ஆகியவர்களுக்கு 2ம், ஆதி திராவிடர்களுக்கு 1ம் இவர்கள் நீங்கிய பார்ப்பனரல்லாத இந்துக்கள் என்பவர்களுக்கு 5ம் என்பதாக கணக்கு பிரித்து அந்தப்படி உத்திரவும் போட்டுவிட்டார். எனவே இந்தக் கொள்கையையும் அவருடைய தைரியத்தையும் நாம் பாராட்டியதுடன் பிரிவினை செய்த விகிதாச்சாரத்தைப் பற்றி நமக்குள்ள அதிருப்தியையும் முன்னமே குறிப்பிட்டிருக்கின்றோம்.ஏனெனில் மகமதியர்களுடைய எண்ணிக்கைக்காவது கிறிஸ்தவர்களுடைய எண்ணிக்கைக்காவது பார்ப்பனர்களுடைய எண்ணிக்கைக்காவது ஆதிதிராவிடர்களின் எண்ணிக்கை குறைந்து எண்ணிக்கையுடையதல்ல.

பார்ப்பனர்களையும் கிறிஸ்தவர்களையும் பார்க்கிலும் சற்றேறக்குறைய ஆதிதிராவிடர்கள் 5 மடங்கு அதிகமானவர்கள் என்று சொல்லலாம். எனவே இந்த திட்டம் ஆதி திராவிடர்கள் விஷயத்தில் நியாயம் செய்யப் பட்டதாகாதானாலும் திட்டம் ஏற்படுத்த முனைந்ததைப் பற்றியும் இதை ஒரு வழிகாட்டிக் கொள்கையாக உபயோகித்துக் கொள்ளவாவது சந்தர்ப்பம் கிடைத்ததென்பதைப் பொருத்த வரையிலும் நாம் வரவேற்றதுடன் கனம் முதலியார் அவர்களையும் நெஞ்சாரப் பாராட்டி வாழ்த்தினோம்.

காங்கிரசுக் கட்சியாரும் சுயராஜ்ய கட்சியாருமாகிய யோக்கியவர்கள் இப்போது இதை எதிர்க்க வேண்டிய அவசியமென்ன என்பதே நமது கேள்வி.

“உத்தியோகத்தை இந்தியமயமாக்க வேண்டும்” என்பதுதான் காங்கிரசின் முக்கிய கொள்கையாயும் லக்ஷியமாயும் இருந்து வந்திருக்கின்றது. அந்தப்படி பல உத்தியோகங்கள் இந்திய மயமாக்கப்பட்டதுடன் பல சிறு உத்தியோகங்கள் அளிக்கும் அதிகாரமும் இந்திய மயமாக்கப்பட்டிருக்கின்றது.

இதன் பயனாய் ஏற்படும் உத்தியோகங்களை இந்தியர்கள் என்பவர்கள் எல்லோரும் அடையும்படி செய்யத்தக்க ஒரு திட்டம் போட்டால் இதில் ஏன் ஒரு கூட்டத்தாருக்கு அதிலும் காங்கிரஸ்காரர்கள் என்பவர்களுக்கு அதிலும் சுயராஜ்யக் கட்சிக்காரர்கள் என்னும் சட்டசபையில் முட்டுக்கட்டை போடப் போனவர்களுக்கு இத்தனை ஆத்திரம் உண்டாக வேண்டும்? தேசீய பத்திரிகைகள் என்று சொல்லும் ‘இந்து’, 'சுதேசிமித்திரன்' முதலிய பத்திரிகைகளும் அவைகளின் வாலைப் பிடித்துக் கொண்டு வயிறு வளர்க்கும் குட்டிப் பத்திரிகைகளும் ஏன் இந்தப்படி ஊளையிட வேண்டும்? என்பதை வாசகர்களையே யோசித்துப் பார்க்க விரும்புகின்றோம்.

இந்தப் பார்ப்பனர்களும் அவர்கள் கூலிகளும் இந்த மாதிரியான காரியங்களுக்கு முக்கியமாய்ச் சொல்லும் ஆnக்ஷபங்கள் என்னவென்று பார்ப்போமானால், “எல்லா வகுப்பாருக்கும் உத்தியோகங்களில் பங்கு இருக்கும்படி செய்துவிட்டால் நிர்வாகத்தில் ஊழல்கள் ஏற்பட்டு விடும்” என்கின்ற ஒரே பல்லவிதான் பாடப்பட்டு வருகிறது. இதையேதான் கோவை திரு. சி.வி. வெட்கிட்டரமணய்யங்கார் சட்டசபை வாதத்தில் சொல்லி இருக்கின்றார். இதைப் பொது ஜனங்கள் சற்று கவனிக்க வேண்டுமென விரும்புகின்றோம்.

ஒவ்வொரு வகுப்பாருக்கும் உத்தியோகத்தில் பங்கு இருக்க வேண்டுமென்று சொல்லுவதற்கும் நிர்வாக ஊழலுக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது?

இப்பொழுது கனம் முத்தையா முதலியார் அவர்களால் பிரித்துக் காட்டப்பட்ட எந்த ஒரு வகுப்பாரையாவது சுட்டிக் காட்டி பெரிதும் நிர்வாகத் திறமையற்றவர்கள் என்று யாராவது மெய்ப்பிக்க முடியுமா? என்று கேட்கின்றோம். மந்திரி கனம் முதலியாரவர்கள் பிரித்திருப்பதும், இதுவரை அரசியலில் பிரிக்கப்பட்டு வந்திருப்பதுமான வகுப்புகள் அதாவது, பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார், பார்ப்பனரல்லாதார்களில் மகமதியர், கிறிஸ்துவர், இந்துக்கள், கிறிஸ்தவர்களில் ஐரோப்பியர், ஆங்கிலோ இந்தியர், தீண்டிக் கொள்ளக்கூடியவர்கள் என்று கருதும்படியானவர்கள், தீண்டாதவர்கள் என்று சொல்லப்படும் தாழ்த்தப்பட்ட வகுப்பார்கள் என இந்தப்படி வெகுகாலமாகவே பிரிவினையாக்கப்பட்டிருக்கும் வகுப்புகளில் எந்த வகுப்பாரை இந்த சுயராஜ்ய கட்சிக்காரர்களான திரு. சி.வி. வெங்கிட்டரமண அய்யங்கார் போன்ற பார்ப்பனர்கள் குறிப்பிடுகின்றார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை.

திரு. அய்யங்கார் குறிப்பிடும் நிர்வாகத் திறமை என்ன என்பதும், இங்கு நமக்கு விளங்கவில்லை. அதை சிறிதாவது குறிப்பிட்டிருப்பார்களா னால் நிர்வாகத் திறமையைப் பற்றிப் பேசியதானது யோக்கியப் பொறுப்பானதாய் இருந்திருக்கும். அல்லது இதுவரை உத்தியோகம் பார்க்க நேரிட்ட வகுப்புகளில் எந்த ஒரு குறிப்பிட்ட வகுப்பாரிலாவது திறமைக் குறைவை கண்டுபிடித்து சுட்டிக்காட்டி இருந்தாலாவது அது யோக்கியப் பொறுப்புள்ளதாய் இருந்திருக்கும். அப்படிக்கில்லாமல் வெறும் கூப்பாடு போடுவதானது வெறும் அயோக்கியத்தனமா அல்லவா என்பதை யோசித்துப் பாருங்கள்.

ஒரு உத்தியோகத்திற்கு வேண்டிய திறமை என்ன என்பதை அந்த உத்தியோகத்தின் விளம்பரத்தின் கீழேயே குறிப்பிட்டிருக்குமே யொழிய வேறில்லை. அதில் யாருக்காவது ஆnக்ஷபனை இருந்தால் திறமை இன்னதென்று குறிப்பிடும் போது மாத்திரம் அதைப் பற்றி பேசி திறமையை தீர்மானித்துக் கொள்ளலாமே யல்லாமல் அத்திறமையை வகுப்பில் கொண்டு வந்து புகுத்துவதில் எவ்வளவு அயோக்கியத்தனமும் கெட்ட எண்ணமும் இந்தக் கூட்டத்தாருக்கு இருக்கின்றது என்பதை வாசகர்களாகவே தெரிந்து கொள்ள விட்டு விடுகின்றோம்.

தவிரவும், முதலாவதாக ஒரு உத்தியோகத்திற்கு அவசியமாக வேண்டியிருக்கும் கல்வியின் யோக்கியதாபக்ஷமோ அல்லது நிர்வாகத் திறமையோ இன்னது என்று தீர்மானித்து விட்டால் உத்தியோகத்திற்கு தெரிந்தெடுக்கும்போது அந்த இரண்டும் இருக்கின்றதா இல்லையா என்று பார்த்துக் கொள்வதைப்பற்றி நமக்கு ஆnக்ஷபனை இல்லை. ஆனால், அந்த உத்தியோகத்திற்கு வேண்டிய யோக்கியதையைவிட மற்றொருவன் அதிக யோக்கியதாபட்சம் பெற்றிருப்பதாய் சொல்ல வந்தால் அதை உத்தியோகம் கொடுப்பவர்கள் கவனிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூட நாம் சொல்லுவோம். ஏனெனில் கலாசாலைக் கல்வியே யோக்கியதாபட்சத்திற்கு போதுமானது என்பதானால் அது திறமையைக் கவனிப்பதாகாததாய்ப் போய்விடும். ஏனெனில் இப்போது கருதப்படும் கலாசாலை யோக்கியதாம்சம் என்பது சில கிராமபோன் பிளேட்டுகளுக்கு கூட கிடைத்துவிடும். அதாவது ஏதாவது ஒன்றை நெட்டுரு போட்டு பாடம் பண்ணி ஒப்புவித்து விட்டவரே யோக்கியதாம்சம் பெற்றவர் என்றால், யோக்கியதாம்சத்தின் கேவலத்திற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை.

சர்வகலாசாலை பரீக்ஷைகளால் “இவன் பரீக்ஷையில் தேறி விட்டான்” என்று கால் கெஜ கடிதத்துண்டு வாங்கிவிட்டால் அது நிர்வாகத் திறமைக்குகூட போதுமானதென்று சொல்ல வருவார்களானால் உடனே அந்த கலாசாலைகளை ஒழித்து விட வேண்டும் அல்லது அக்கலாசாலைகளில் பிள்ளைகளைச் சேர்க்கும் போதே நிர்வாகத் திறமையை சோதித்து விட வேண்டும் அல்லது சேர்க்கும் போதே வகுப்புவாரி பிரதிநிதித்துவப்படி சேர்த்து யோக்கியதை உண்டாக்கி வைக்க வேண்டும்.

நாம் ஏன் இப்படிச் சொல்லுகின்றோம் என்றால் கலாசாலைகள் உத்தியோக யோக்கியதைக்காக படிப்பிக்கின்ற ஸ்தாபனம் என்று இதனால் தெரிகின்றபடியால் தானேயொழிய வேறில்லை. அன்றியும் நிர்வாகத் திறமைக்கு வகுப்புகளைக் கவனிக்கக்கூடாது என்று யாராவது சொல்ல வருவார்களானால் நிர்வாகத் திறமைக்கு நெட்டுருவைக் கண்டிப்பாக கவனிக்கக் கூடாது என்று சொல்லுவோம்.

கனம் முத்தையா முதலியாரை மற்ற மந்திரிகளும் நிர்வாக சபை மெம்பர்களும் இன்னும் பின்பற்றாமல் இருப்பதைப் போன்ற பொறுப்பற்ற தன்மை அவர்களுக்கு வேறில்லை என்றே சொல்லுவோம். அது மாத்திரமல்லாமல் சட்டசபையில் மேற்கண்ட ஒத்திப் போடும் தீர்மானம் வந்த காலத்தில் சட்டசபை மெம்பர்கள் அதை சீக்கிரம் முடித்து ஓட்டுக்கு விட்டுத் தோற்கடிக்காமல் சட்டசபையில் வெறும் பேச்சிலேயே இருந்து விட்டதானது மெம்பர்களுடைய பொறுப்பற்ற தன்மையையும் காட்டுகின்றது. என்றாலும், இனி அடுத்துக் கூடும் சட்டசபைக் கூட்டத்திலாவது சட்டசபை மெம்பர்கள் இம்மாதிரிப் பொறுப்பற்ற தன்மையாய் இராமல் உத்தியோகத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ ஏற்பாடு செய்ததற்காக கனம் முத்தையா முதலியார் அவர்களைப் பாராட்டும் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றுவதுடன் அந்தப்படி செய்யாத மந்திரிகள் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானமும் நிர்வாக சபை மெம்பர்கள் மீது கண்டனத் தீர்மானமும் கொண்டு வந்து நிறைவேற்றி வைக்க வேண்டுமாய் விரும்புகின்றோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 02.12.1928)

Pin It