கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

கலைஞர் தன்னுடைய இளமைக் காலத்தில் தந்தை பெரியாரின் ‘குடிஅரசு’ இதழில் பணிபுரிந்தவர். பெரியாரின் கொள்கைப் பட்டறையில் குறுவாளாய்ப் பட்டை தீட்டப்பட்டவர். பெரியாரின் பாடங்கள் அவருக்கு வாழ்நாள் முழுவதும் துணை நின்றன. பெரியாரின் கொள்கைகளைச் சட்டமாக்கிச் செயல்படுத்தும் முயற்சியை அண்ணா புள்ளி வைத்துத் தொடங்கினார். கலைஞரோ புள்ளியை வைத்துக் கொண்டு புரட்சிக் கோலம் போட்டார்.

“குடிஅரசு அலுவலகக் குருகுலத்தில்

கொள்கைவழிப் பாடங்கள் பயின்றகாலை – நான்

தமிழரசுத் தலைவனாக வருவேன் என்றும் எனைவளர்த்த

தந்தைக்கு அரசுமரியாதையுடன் இறுதிவணக்கம் செய்வேன் என்றும்

எண்ணியும் பார்த்ததில்லை”

என்று தமது இளமைக் காலத்தை, பெரியார் இறந்தபோது பதிவு செய்தவர் கலைஞர்.periyar and karunanidhi 492பெரியார் அமைத்த கருஞ்சட்டைப் படையின் முதல் உறுப்பினராகத் தன்னுடைய பெயரைப் பதிவு செய்து கொண்டவர் அல்லவா கலைஞர் ! பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றுவதில் உறுதியுடன் இருக்க வேண்டும் என்ற கலைஞர், பெரியார் சொன்ன கருத்துகளை நாம் உளப்பூர்வமாக ஏற்றுக் கொண்டது உண்மையானால், அவைகளை நாம் செயலிலே காட்டியே ஆக வேண்டும்; நாம் ஏற்றுக் கொண்ட கருத்துக்களுக்காவது நாம் மனசாட்சிப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பேசுகிறார். பேசியது தோழர் ஆனைமுத்து அவர்களின் ஈ. வெ. ரா. பெரியார் சிந்தனைகள் நூல் வெளியீட்டு விழாவில்.

அது மட்டும் அன்று; கொண்ட கொள்கையில் உறுதி இல்லாமல், குடும்பம், உறவினர் என்று காரணம் கூறித் தப்பித்துக் கொள்பவர்களைக் கடுமையாகச் சாடுகிறார், கலைஞர்.

“பெரியார் அவர்களுடைய கருத்துகளை ஏற்றுக் கொண்டிருக்கிற இளைஞர்கள், வீட்டிலே இருக்கிறவர்கள் ஒத்துழையாமையின் காரணமாக, நான் என்ன செய்வது? சுயமரியாதைத் திருமணம் செய்து கொள்ளத்தான் ஆசை. கொஞ்சம் வீட்டில் இருப்பவர்களுக்காக நேரம் பார்த்து நடத்த வேண்டியிருக்கிறது, பஞ்சாங்கம் பார்த்து நடத்த வேண்டியிருக்கிறது என்று வீட்டிலே இருப்பவர்களைச் சாக்குச் சொல்லி, இன்றைக்குப் பெரியாருடைய கருத்துகளை மனதிலே பதிய வைத்துக் கொண்டிருக்கிற இளைஞர்கள்கூட தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள். இது பெரியாருக்குச் செய்யப்பட்ட துரோகம் என்பதை மாத்திரம் நான் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்” என்கிறார் கலைஞர்.

கலைஞரைப் பின்பற்றுபவர்கள் அவருடைய அறிவுரைக்குச் செவிமடுத்துச் செயலாற்ற வேண்டும். கலைஞரின் உடன்பிறப்புகள் அவருடைய அறிவுரையைப் புறந்தள்ளுவது என்பது, பெரியாருக்கு மட்டுமன்று, கலைஞருக்கும் செய்யும் துரோகமாகும்.

வெற்றிச்செல்வன்