கடந்த ஒரே வாரத்தில், இரண்டு ஆணைகள் வெளியிடப்பட்டு, இரண்டுமே திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டன. ஒன்று, ஆளுநர் மாளிகையில் இருந்து நேரடியாக வெளிவந்தது. இன்னொன்று, அவரிடமிருந்து மறைமுகமாக ஏவி விடப்பட்டது!
சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், யாரும் கருப்பு உடையுடன் வரக்கூடாது என்று ஓர் அறிவிக்கை வெளியிடப்பட்டது. அடுத்த நாளே அது திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது. அதேபோல, அல்லது அதைவிட மிகப்பெரிய அளவிலான இன்னொரு அறிவிப்பு 29 ஆம் தேதி இரவு 7 மணிக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜியை அப்பதவியிலிருந்து நீக்கம் செய்வதாக ஆளுநர் அறிவித்தார். ஐந்தே மணி நேரங்களில் அதனைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்!
இப்படி அடாவடியாக அறிவிப்பதும், பிறகு அதனைத் திரும்பப் பெற்றுக் கொள்வதும் வெட்கத்திற்குரிய செயல்கள் இல்லையா என்று நாம் கருதலாம். ஆனால் ஆளுநர் அதற்கெல்லாம் வெட்கப்படவில்லை. வெட்கப்பட்டால் ஆளுநராக இருக்க முடியாதோ, என்னவோ!
தந்தை பெரியார்தான் சொல்வார் - தனக்கு ஒரு ஆபத்து வந்தால், பார்ப்பனர்கள் அதை நாட்டுக்கே வந்த ஆபத்து என்று சொல்வார்கள். அதனை முதலில் எதிர்த்துப் பார்ப்பார்கள். முடியவில்லை என்றால், சுவடு தெரியாமல் விட்டுவிடுவார்கள். பலித்தவரை என்பதுதான் பார்ப்பனியம் என்பார். அது இன்று வரையில் உண்மையாகத்தான் இருக்கிறது!
ஒருவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதும், இன்னொருவரை அமைச்சராக நியமிப்பதும் ஆளுநருக்கு உரிய அதிகாரங்கள் என்றால், பிறகு முதலமைச்சர் எதற்காக? அரசே எதற்காக? எல்லாவற்றையும் ஆளுநர் பார்த்துக் கொள்வார் என்பது அடாவடித்தனமும், அராஜகமும் ஆகும்!
அது மட்டுமல்லாமல், செந்தில் பாலாஜி அமைச்சராக நீடித்தால் சாட்சிகளைக் கலைத்து விடுவார் என்கிறார். செந்தில் பாலாஜியின் மீதான குற்றச்சாட்டு என்ன, குற்றப் பத்திரிகை எப்போது தாக்கல் செய்யப்படும், சாட்சிகளாக யார் நிறுத்தப்பட இருக்கிறார்கள் என்று எதுவும் தெரியாத நிலையில், தமிழ்நாட்டு ஆளுநர் தன்னைத்தானே தலைமை நீதிபதியாகக் கருதிக் கொண்டு இப்படி அறிவித்திருக்கிறார்.
அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு என்றால், புதிய அமைச்சரை நியமிக்கும் அதிகாரமும் அவருக்கு உண்டா? அப்படியானால் இன்று மாலையே வானதி சீனிவாசன்தான் (ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குத் துணையாக) தமிழ்நாட்டின் புதிய நிதி அமைச்சர் என்று அவர் அறிவித்து விட முடியுமா?
அவரைத் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்த ஒன்றிய அரசே இந்தக் கோமாளித்தனத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், அவர் ஆணையை அவரே திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது!
அவமானங்களைச் சுமந்து வாழ்வதற்கு ஆளுநர் கூச்சப்படாமல் இருக்கலாம். ஆனால் அவரை ஆளுநராக ஏற்றுக் கொள்வதற்குத் தமிழ்நாடு கூச்சப்படுகிறது!
எனவே இந்த ஆளுநரை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழகம் போர்க்கோலம் பூண்டு எழவேண்டும்! கட்சி வேறுபாடுகளைக் கடந்து, ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும் ஒன்று திரண்டு, அறப்போராட்டங்களை நடத்தி ஆளுநரை வெளியேற்றியே தீர வேண்டும்!!
- சுப.வீரபாண்டியன்