இந்து தமிழ்திசை நாளிதழ் தந்தை பெரியார் குறித்து ஆழமாகவும், விரிவாகவும் அறிந்து கொள்வதற்காகக் கொண்டு வந்துள்ள “என்றும் தமிழர் தலைவர்” நூலினைக் கடந்த 23.12.2023 அன்று, பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் அவர்களும், தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் வெளியிட்டனர். மொத்தம் 864 பக்கங்களுடன் வெளிவந்திருக்கும் இந்நூல் காலத்திற்கேற்ற கருத்துப் பெட்டகம்.

tamil hindu book on periyarதந்தை பெரியார் குறித்த ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் பேட்டியுடன் தொடங்கும் இந்நூல் தமிழ்நாட்டின் பல்வேறு ஆளுமைகள், எழுத்தாளர்கள், இதழாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் வெளிவந்துள்ளது. பெரியார் குறித்த பன்முகப் பார்வை, பல்வேறு தளங்களில் செயல்படுவோரிடம் இருந்து வெளிக்கொணரப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளது, சிறப்புக்குரியது. மூத்த எழுத்தாளர்கள் மட்டுமின்றி இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் பலரின் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.

வ.உ.சி, மறைமலையடிகள், சுத்தானந்த பாரதி ஆகியோரின் பெரியார் குறித்த பார்வையைக் கொண்டு பெரியாரைத் தமிழ்த் தேசியத்தின் அடையாளமாகக் காட்டியிருக்கும் ஏ.எஸ். பன்னீர்செல்வன் கட்டுரை, திராவிடம் – தமிழ்த் தேசியம் இரண்டையும் குறித்த புரிதலைத் தருகிறது. அவ்வாறே ப.திருமாவேலன் கட்டுரையும், தமிழர் உரிமைத் தளத்தில் பெரியாரின் களங்களைத் தெளிவுபடுத்துகிறது.

தமிழ்நாட்டுக்கு வெளியே இயங்கும் ஜோகா சிங், கர்க சட்டர்ஜி, தேவி சட்டர்ஜி ஆகியோரிடம் இருந்து கட்டுரைகள் பெறப்பட்டு தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது நல்ல முயற்சி. அதில் குறிப்பாக, இந்தி பேசாத மாநிலங்கள்மீது கூர்வாளாகத் தொங்கிக் கொண்டிருக்கும் 2026 நாடாளுமன்ற மறுவரைவறை குறித்தும், பெரியாரின் தேவை குறித்தும் உணர்த்தும் கர்க சட்டர்ஜியின் எச்சரிக்கைக் கட்டுரை குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் தேசிய இனங்களின் நலன் குறித்த சிந்தனையைச் சுட்டிக் காட்டுகிறது.

 உண்மையைவிட, பொய்கள் விரைவில் பரப்பப்பட்டு வரும் இன்றைய வாட்ஸ் அப் உலகில், பெரியார் மீதான அவதூறுகளுக்குச் சரியான மறுப்பை வழங்கியிருக்கிறது ச. கோபாலகிருஷ்ணனின் கட்டுரை. பெரியார் திரைப்படம் உருவாக்கப்பட்டபோது இசைஞானி இளையராஜா, நடிகை குஷ்பு தொடர்பாக எழுந்த சர்ச்சைகளைத் தெளிவுபடுத்துகிறது இயக்குநர் ஞான ராஜசேகரனின் பதிவு.

பெரியார் குறித்து பாரதிதாசன், கண்ணதாசன், முடியரசன், வேழவேந்தன், கருணானந்தம் ஆகியோரின் புரட்சிப் பாக்கள் புத்தெழுச்சி ஊட்டுகின்றன. சிறப்பான கவிதைத் தேர்வு. பேராசிரியர் சுப. வீரபாண்டியன், எழுத்தாளர் ஓவியா, வழக்கறிஞர் அருள்மொழி, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சோமு, திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் பிரின்ஸ், ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் ஆகிய திராவிட இயக்கத் தலைமுறைகளைப் பற்றிய விவரங்கள் அருமை. பெரியாருடன் பயணித்த மூத்த பெரியார் பெருந்தொண்டர்களான அரங்கநாயகி, பொத்தனூர் சண்முகம் ஆகியோர் குறித்த பதிவுகள் அரியவை மட்டுமன்று, அனைவரும் அறியவும் வேண்டியது. “பெண் ஏன் அடிமையானாள்?” புத்தகத்தின் சாகசப் பயணத்தை எளிமையான சொற்களில் விவரிக்கிறது நன்செய் பதிப்பாளர் தம்பியின் கட்டுரை. நூலில் ஆங்காங்கே இடம்பெற்றுள்ள ட்ராட்ஸ்கி மருது, ரவி பேலட், சுந்தரம், ஜீவா, கோகுலா ஆகியோரின் ஓவியங்கள் புத்தகத்தின் கவித்துவத்தைக் கூட்டுகின்றன. பெரியார் குறித்த வாசிப்புக் கையேடு பின்னிணைப்பாக நூலில் சேர்க்கப்பட்டுள்ளது இளைய தலைமுறையினருக்குச் சிறந்த வழிகாட்டி.

 இத்தனை சிறப்புகளுடன் “என்றும் தமிழர் தலைவர்” நூலினைக் கொண்டு வந்துள்ள ஆசிரியர் குழுவின் உழைப்பு பாராட்டுவதற்குரியது.

வெற்றிச்செல்வன்

Pin It