நூலாசிரியர்: தோழர் ஓவியா

oviya 450நூலாசிரியர் ஓவியா அவர்களை பெரியாரிலைப் பின்பற்றும் தோழர்கள் அனைவரும் நன்கு அறிவார்கள் என்றாலும், இந்நூலில் மிக அருமையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். அவரது தாத்தா காலத்திலிருந்து பெரியாரியலை வாழ்வியலாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர், ஆதலால் தற்போது அவரது பேரன், பேத்தி வரை தொடர்ந்து பெரியாரியலைக் கற்பித்து வருகிறார்.

அவரது கல்வி குறித்து நினைக்கும்போது என் நினைவுக்கு வருவது இந்தக்காட்சிதான். அவர் அப்போது சென்னையில் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று கொண்டிருந்தார். அப்போது தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவிற்காகப் மிகப்பெரிய பேரணி நடைபெறுகிறது. அப்பேரணியில் அவர் மட்டுமல்ல, அவருடன் பயின்ற தோழிகளையும் கலந்து கொள்ளச் செய்தார். அப்பேரணியில் என் குடும்பத்தாருடன் கலந்துகொண்ட என்னால், அக்காட்சியை இன்னும் மறக்க முடியவில்லை. அது என்னவென்றால், பேரணியில் கலந்துகொண்ட எங்களைப் பார்ப்பதற்கு வசதியாக கோஷமிட்டுக் கொண்டே பின்நோக்கி நடந்து வந்தார் பேரணி முடியும் வரை.

13 வயதில் திராவிடர் கழகப் பேச்சாளராக மதுரையில் இருந்த போதிகுத்து அவரது குடும்பத்துடன் எனக்கு நட்பு இருந்து வருகிறது. அது மட்டுமல்ல, அவர் தமிழினப் பெண்கள் விடுதலை இயக்கம் தொடங்கியதிலிருந்து, அந்த இயக்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளிலும் ஓவியாவுடன் தொடர்ந்து பணியாற்றியிருக்கிறேன்.

அந்த இயக்கத்தின் தொடர் போராட்டத்தால் இந்தியாவிலேயே முதன்முதலாக வசந்தகுமாரி என்ற பெண் பேருந்து ஓட்டுநராக நேசமணி போக்குவரத்துக் கழகத்தில் நியமிக்கப்பட்டார். அதற்காக, மதுரை பாண்டியன் போக்குவரத்துக் கழகத்தின் தலைமை அலுவலகத்தின் முன்பாக போராட்டம் நடத்தியது. இந்து அறநிலையத்துறையில் பெண்களுக்கும் பதவி உயர்வு கொடுக்க வேண்டும் என்பதற்காக போராட்டம் நடத்தியது ஆகியவை எல்லாம் ஓவியாவுடனான மறக்க முடியாத நிகழ்வுகள். அந்த இயக்கத்திற்காக “புதிய குரல்” என்ற சிற்றிதழையும் நடத்தி வந்தார். தற்போது புதிய குரல் என்ற பெயரிலேயே சாதி ஒழிப்பையும் பாலின சமத்துவத்தையும் இலக்காகக் கொண்ட பண்பாட்டு அமைப்பை நடத்தி வருகிறார். 

பெரியாரின் பெண்ணியம்

“தமிழ் இந்து“ நாளிதழின் ஞாயிறு இணைப்பாக வரும் “பெண் இன்று“ என்ற இணைப்பில் 30 வாரங்களாகத் தொடர்ந்து ஓவியா அவர்கள் பெண்ணுரிமை குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பை நூலாகக் கொண்டுவர விரும்புவதாக பெரியாரியல் சிந்தனையாளர் தோழர்.பிரபாகரன் அழகர்சாமி தெரிவித்ததற்கிணங்க, அவரது “நிகர்மொழி பதிப்பகத்தின்” மூலம் இந்நூல் வெளிக் கொணரப்பட்டுள்ளது.

31 தலைப்புகளின் கீழ் பெண்ணுரிமை பற்றி பெரியாரிய நோக்கில் எழுதப்பட்டுள்ளது இந்நூல்.பெண்ணுரிமை குறித்து நிறையப்பேர் பேசியிருக்கலாம், எழுதியிருக்கலாம். ஆனால், பெரியார் பேசிய பெண் விடுதலை என்பது, அவளது குடும்பத்துக்கு அல்லது நாட்டுக்கு பயன் விளைவிப்பது அல்ல. மாறாக ஒவ்வொரு பெண்ணும், தனி மனுஷியாகத் தன் வாழ்க்கையைச் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதே பெரியாரின் பெண்விடுதலைச் சிந்தனை. எனவே பெரியாரிய நோக்கில் எழுதப்பட்டுள்ள பெண்விடுதலை குறித்த நூலாக இது அமைந்துள்ளது.

ஆண்களுடன் ஓர் உரையாடல்

பெண்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே எவ்வாறெல்லாம் வன்முறைக்கு ஆட்படுகிறார்கள் என்பதையும் அதற்கு இந்தச் சமுதாயமே காரணமாக உள்ளது என்பதையும், சமுதாய மாற்றம் ஏற்படாமல் இங்கு ஆணுக்கும் விடுதலையில்லை, பெண்ணுக்கும் விடுதலையில்லை என்பதை மிகத் தெளிவாக இந்நூலில் எடுத்துக்காட்டியுள்ளார் ஓவியா. மேலும் “பெண் ஆண் சமத்துவம் என்ற அடிப்படை பிரச்சினை குறித்தும் அதன் சிக்கல்கள், தீர்வுகள் பற்றியும் ஓர் உரையாடல் நிகழ்த்துவதே இந்நூலின் நோக்கம் என்றும் குறிப்பிடுகிறார்.

நம்முடைய சமுதாய அமைப்பில், ஓர் ஆண், பெண்ணைப் பாதுகாக்க வேண்டியவனாக இருக்கிறான்; எனவே ஓர் ஆண் எப்படி இருக்க வேண்டும், பெண் எப்படி இருக்க வேண்டும் என்ற படிமானங்கள் நமது மனங்களில் இருக்கிறது என்பது அவரது கருத்து.பெண்ணின் பிறப்பு என்பது அந்தப் பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய ஒரு சம்பவமாக ஏன் தொடர்கிறது என்ற கேள்வியை ஒவ்வொருவரும் கேட்டுப் பார்க்கவேண்டும் என்கிறார் அவர். ஆனால், ஒரு குடும்பம் வறுமை வயப்படுகிறது என்றால் அதன் முழு சுமைதாங்கியாக நிற்பவர்கள் பெண்கள்தான் என்று கூறகிறார்.

உடையும் நகையும்

“நகைகளை வைத்தே ஒரு பெண் தன்னைத்தானே மதிப்பிடுகிறாள். கவரிங் நகையாவது போடாமல் இந்த சமுதாயத்தில் ஒரு பெண் நடமாடமுடியாது என்று நினைக்கும் நிலைக்குத் தாழ்த்தப்பட்டிருக்கிறாள்”  என்று குறிப்பிடுகிறார். இதெல்லாமே சமுதாயம் பெண்ணின் மீது நிகழ்த்தும் வன்முறைதான். மேலும், “ஆண்களின் சமுதாயச் செல்வாக்கைப் பறைசாற்றும் அலங்கார ஊர்திகளாக வாழ்வது அவமானம் என்பதைப் பெண்களுக்கு உணர்த்தாமல் பெண் விடுதலையும், மானுட விடுதலையும் சாத்தியமேயில்லை” என்று தனது கருத்தை ஆணித்தரமாகத் தெரிவிக்கிறார்.

திணிக்கப்படும் கனவுகள்

பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களின் வளர்ப்பு முறையே அவளை ஓர் ஆணுக்கான பொருளாகத் தயாரிப்பதாகவே தொடர்கிறது. அது மட்டுமல்ல, ஐந்து வயதில் ஓட எத்தனிக்கும், மரத்திலேற எத்தனிக்கும் பெண் குழந்தைகளை ஓர் அதட்டல் தடுத்து நிறுத்துகிறது. கை,கால்களை உடைத்துக் கொண்டால், உன்னைக்கட்டிக்கொள்ள ஓர் ஆண்மகன் வராவிட்டால் உன் கதி என்ன? என்ற கேள்வி அவள் மனதை நிரந்தர ஊனமாக்குகிறது என்கிறார் தோழர் ஓவியா.

இவ்வாறு குழந்தைப் பருவத்திலிருந்தே, பெண்கள் பிறந்து வளர்வதே திருமணம் செய்து சிறப்பாக வாழ்வதற்கு மட்டும்தான் என்ற கோட்பாட்டை அவர்களது மூளையில் திணிக்கிறது இந்தச் சமுதாயம். ஒரு வகையில் பார்த்தால், அதனால்தான் பெண்களுக்கு தற்போது, குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கவாவது தெரியவேண்டாமா? என்ற கேள்வியுடன் குறைந்த பட்சமாக கல்லூரிக் கல்வி வரை படிப்பதற்கு அனுமதி கிடைத்து வருகிறது.

மூளைக்கு விலங்கு

“தான் என்னவாக வரவேண்டும் என்கின்ற கேள்வி ஆணுக்கு உறுத்துவதுபோல் பெண்ணுக்கு உறுத்துவதில்லை. அந்தக் கேள்விக்கான பதில் அவள் மூளைக்குள் ஏற்கனவே திணிக்கப்பட்டு விடுகிறது. வீட்டு வேலைகள் பெண்ணின் மூளைக்குப் போடப்படும் முதல் விலங்கு” என்று கூறுகிறார் ஓவியா. அது மிகச்சரியான கருத்துதான். ஏனென்றால், திருமணத்திற்குப் பின் வீட்டைப் பராமரிப்பதையும், குழந்தையைப் பராமரிப்பதையும் தவிர, வேறு சிந்தனையே இருப்பதில்லை. பி.இ., படித்த எம்.இ., படித்த பெண்களுக்குக்கூட மூளையில் படிந்துள்ள இந்தச் சிந்தனை என்னும் விலங்கை ஒடிப்பது மிகவும் சிரமமான காரியம்தான்.

பெண் பருவமடைதல்

ஓர் ஆண் பருவமடைந்து முதன் முதலாக விந்து வெளிப்படுவது சமுதாயத்தில் கொண்டாடப் பட வேண்டிய பெரிய நிகழ்வு அல்ல. ஆனால் அதே நேரத்தில் ஒரு பெண் பருவமடைவது பெரிதாகக் கொண்டாடப்படுகிறது. அந்தக் கொண்டாட்டம், ஓர் ஆணை திருப்திப்படுத்துவது மட்டுமே அவள் பிறப்பின் நோக்கமென்பதைப் பெண்ணுக்கு நினைவுபடுத்துவதாகவே அமைக்கப்பட்டிருக்கிறது.

அது மட்டுமல்ல, சுதந்திரமாக சுற்றித் திரிந்த அவள் பருவமடைந்ததும் காவல் காக்கப்படுகிற ஒரு பொருளாக்கப்பட்டு விடுகிறாள் என்று குறிப்பிடுகிறார் நூலாசிரியர் ஓவியா. “பருவமடைதல் என்னும் நிகழ்ச்சி மூலமாகப் பெண்ணின் மனதுக்கும் கண்களுக்கும் ஒரு கலாச்சாரத் திரையைப் போடுகிறது இந்தச் சமுதாயம்”. அதுமட்டுமல்ல, “இனப்பெருக்கம் செய்வதற்கான ஓர் அம்சமே இங்கு பெண்ணின் முழு வாழ்க்கையாக்கப்பட்டிருக்கிறது. இனப்பெருக்கம் செய்வது மட்டுமே மனிதர்களின் வாழ்க்கையா?”  என்று வருத்தத்துடன் கேட்கிறார்.

பெண்ணுக்கு நிகழ்த்தப்படும் பூப்புனித நீராட்டுவிழா நிகழ்ச்சி, தன்னைத்தானே பாலியல் பண்டமாக அப்பெண்ணை உணர வைப்பதில்தான் முக்கியத்துவம் பெறுகிறது என்றும், தனக்கு வாழ்க்கைத்துணையாக வரப்போகும் ஓர் ஆணின் வரவே தனக்கு புதிய வாழ்க்கை தரப்போகிறது என்கின்ற அடிமைத்தனமான சிந்தனைக்கு அவள் ஆட்படுவதும் இந்த நிகழ்ச்சியிலிருந்துதான் தொடங்குகிறது என்று தனது கருத்தைப் பதிவு செய்கிறார்.

பாலியல் கல்வியின் தேவை

“கற்கும் பருவத்தில் ஒரு பையனுக்கு அளிக்கப்படும் சுதந்திரத்தின் அளவும் பெண்களுக்கு அளிக்கப்படும் சுதந்திரத்தின் அளவும் மலையளவு வேறுபாட்டுட னேயே இருக்கின்றன” என்று குறிப்பிடும் அவர், அதற்கான காரணத்தையும் தெரிவிக்கிறார். “வளரிளம் பருவத்தில் பெண்கள் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சனை எதிர்பாலின ஈர்ப்பு. ஆனால் இந்தப் பருவத்தில்தான் கற்பு என்னும் மிகப் பெரிய வாழ்நாள் சுமையை அவள்மீது ஏற்றி வைக்கிறது இந்தச் சமுதாயம்”

எனவே, இயல்பாக ஏற்படும் பாலியல் உணர்வுத் தூண்டல்களையும் ஒழுக்கம் சார்ந்த பிரச்சனையாகக் கருதி துன்பப்படுகிறார்கள் இவர்கள் என்று கூறிவிட்டு, “பருவமடைதல் என்னும் நிகழ்வுக்கு பிந்திய வாழ்க்கையில் பையன்களையும் சிறுமிகளையும் வழிப்படுத்துகின்ற அறிவியல் சார்ந்த கல்வியும், அதற்கான முறையான நிறுவனங்களும் இன்று அத்தியாவசியத் தேவை” என்று பாலியல் கல்வியின் தேவையை வலியுறுத்துகிறார்.

பின் தொடர்ந்தால் காதல் வருமா?

ஒரு பெண்ணைக் கவர்வதற்காக நம் இளைஞர்கள் செய்யும் அனைத்து தவறான செயல்களும் நமது திரைப்படங்களில் கதாநாயகர்கள் செய்கிறவைதான் என்று கூறும் அவர் “விருப்பமில்லாத ஒரு பெண்ணை பின் தொடர்வது சட்டப்படிக் குற்றம் என்று நம்மில் எத்தனைபேர்.நமது வீட்டுப் பையன்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறோம்?” என்று கேட்கிறார்.

கட்டமைக்கப்படும் வன்மம்

பெண்களுக்கு இல்லையா இராப்பொழுது? எனும் அத்தியாயத்தில் கீழ்க்கண்டவாறு தனது ஆதங்கத்தைப் பதிவு செய்கிறார் ஓவியா. “வெளி உலகத்தில் ஒவ்வொரு இடத்திலும் ஒரு பெண் என்பதற்காகவே அவளுக்குத் தனித்த துன்பங்கள் காத்திருக்கின்றன” அதுவும் “ஒரு பெண்ணின் மீது அவள் உடல் மீதுள்ள ஆசையில் அல்ல; அவள் மீது ஏற்படும் கோபத்தினாலும் வெறுப்பினாலும் கூட ஓர் ஆண் அவளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த நினைக்கிறான்” இவையெல்லாம் பெண்ணின் மீது கட்டமைக்கப்படும் வன்மம்தானே!

அது மட்டுமல்ல “பையன்களுக்குள்ள முக்கியமான பிரச்சனை ஒரு பெண்ணின் மறுப்பில் தனது ஆண்மை இழிவுபடுத்தப்படுவதாகக் கருதிக் கொள்வதுதான்” என்று குறிப்பிடும் அவர் “உண்மையில் அவர்களுக்கு நாம் உணர்த்த வேண்டியது ஆண்மை என்கின்ற பதமே ஒரு போலி மயக்கம் என்பதைத்தான்” என்று கூறியதோடு, அதனால்தான் பெரியார், ஆண்மை என்கின்ற பதம் பெண்களால் அழிக்கப்பட்டலொழிய பெண்களுக்கு விடுதலை இல்லை”என்று கூறினார் என்பதையும் தெரிவிக்கிறார்.

கணக்கில் வராத உழைப்பு

“ஒரு குடும்பம் பெண்ணின் உழைப்பின் மூலம் கிடைக்கும் வருவாயை இரண்டாம் தரமானதாகவே பார்க்கிறது. நிலையான வருவாய் தரக்கூடிய ஒரு வேலை என்பது ஆணின் திருமணத்திற்கு முன் நிபந்தனையாக இருக்கும் அதே நேரத்தில்,பெண் வேலைக்குப் போகலாமா? கூடாதா? என்பதைத் தீர்மானிப்பதே அவளின் திருமணமாக இருக்கிறது” இது எவ்வளவு பெரிய பாலின பாரபட்சம் என்று கேட்கிறார் ஓவியா.

வேலைக்குச் செல்லும் பெண்கள் எண்ணிக்கை நகரத்தோடு ஒப்பிடும்போது கிராமத்தில்தான் அதிகம். ஆனால், பொதுப் புத்தியில் நகரத்தில்தான் பெண்கள் வேலைக்குப் போவதாகப் பதிந்து போயுள்ளது. அதுமட்டுமல்ல, பெண் வேலைக்குச் செல்வது அந்த வீட்டு ஆணின் இயலாமையாகவோ, அவமானமாகவோ பார்க்கப்படுகிறது. இவ்வாறு பெண்களின் உழைப்பு கணக்கில் வராத உழைப்பாகவே இருக்கிறது என்கிறார்.

திருமணம் என்னும் சடங்கு

பெண்ணுக்கு மட்டுமல்ல,ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடன் ஆணுக்குமே இங்கு திருமணம் நிர்ப்பந்தம் தான் என்று குறிப்பிடும் அவர், வயதுவந்த ஓர் ஆண் அல்லது பெண்ணின் இணையரை அவர்களின் பெற்றோர்தான் தீர்மானிக்கிறார்கள் என்பது வெளிநாட்டவர் பலருக்கும் வியப்பளிக்கக்கூடிய செய்தி என்கிறார். இதற்கு “ஒரே சாதிக்குள் திருமணம் என்கிற நடைமுறை 90 விழுக்காடு மக்களால் பின்பற்றப்படுவதுதான் காரணம்” என்கிறார்.

திருமணம் என்பது, வயது வந்த பெண் மற்றும் ஆண் இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு, மகிழ்ச்சியோடு இங்கு நடைபெறுவது இல்லை. மாறாக அது ஒரு நிர்பந்தமாகவும் சடங்காகவுமே நடைபெறுகிறது. இதற்கு நம் ஒவ்வொருவரையும் பிடித்திருக்கும் சாதி என்னும் மனநோயே காரணம் என்கிறார் ஓவியா.

மாறாத சடங்குகள்

மாறாத சடங்குகளில் ஒன்றாக பெண் பார்க்கும் சடங்கும் சமுதாயத்தில் நடக்கிறது. தற்போது உயர்கல்வி கற்ற பெண்கள் கூட இதனை இழிவாகக் கருதாமல் மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள்.இதனை ஓவியா அவர்களும் “பெண் பார்க்கும் சடங்கு பெண்ணின் அடிப்படை தன்மானத்தைக் கேள்வி கேட்கும் நிகழ்வு என்கின்ற புரிதல் படித்த பெண்களுக்கு முழுமையாக வந்திருக்கிறதா என்பது பதில் சொல்ல முடியாத கேள்விதான்” என்று குறிப்பிடுகிறார்.

அதேபோல், திருமணங்களில் பெண்ணுக்குத் தாலிகட்டும் நிகழ்வை “ஒரு மருத்துவரான பெண்ணை, உளவியல் நிபுணரை, பொறியியல் வல்லுநரை, காவல்துறை அதிகாரியை, நீதிபதியான பெண்ணை இந்தச் சமுதாயத்தில் இன்றுவரை ஆண்கள் வெட்ட வெளிச்சமாக ஒரு பண்டமாக நடத்தி, உடைமை கொண்டு சாசனம் எழுதிக் கொள்கிறார்கள். இது கட்டுகிறவருக்கும், கட்டிக் கொள்கிறவருக்கும் உறுத்தவில்லை” என்று வருந்துகிறார் ஓவியா.

குறையாத வேலைச்சுமை

பெண்களின் குறையாத வேலைச் சுமையைக் கருத்தில் கொண்டே தந்தை பெரியார் அவர்கள், “வீட்டுக்கொரு அடுப்படி என்பதை ஒழிக்க வேண்டும்” என்கிற தீர்வை முன்வைத்தார். இதைக் குறிப்பிடும் ஓவியா, “சிந்திக்க சிந்திக்க  இதைவிட்டால் வேறு ஒரு தீர்வு இல்லை என்று நம்மை முடிவெடுக்க வைக்கும் வார்த்தைகள்” என்கிறார். அதுமட்டுமல்ல, “ஒரு சமுதாயத்தில் ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் எத்தனை தேவைப்படுகிறார்களோ அந்த அளவு சமையல்காரர்கள் இருந்தால் போதாதா? எதற்காக ஐம்பது சதவீத மக்கள் (பெண்கள்) சமையல் காரர்களாக இங்கு இருக்க வேண்டும்?என்ரு கேட்கிறார்.

பெண்களும் பொது வெளியும்

“கல்வி,வேலைவாய்ப்பு பெண்ணை பொது வெளிக்குக் கொண்டு வந்திருக்கிறதே தவிர, அவர்கள் இன்றும் பொதுவெளியைக் கைப்பற்றவில்லை. பொதுவெளியில் அவர்கள் நிறுத்திவைக்கப் பட்டிருக்கிறார்கள். இதைப் பெண் விடுதலையின் சோகம் என்பதா? சவால் என்பதா? சோகம் என்று கொள்ளும் பெண்கள் முடங்கிப் போவார்கள். சவால் என்று எடுத்துக் கொள்ளும் பெண்கள் சாதிப்பார்கள்” என்று பொதுவெளியில் பெண்களின் தற்போதைய நிலை பற்றி அருமையாக எடுத்துரைக்கிறார்.

இந்நூலின் அணிந்துரையில், “இந்நூலை முழுமையாகப் படித்து முடித்தபோது, பல செய்திகளைப் புதிதாய் அறிந்து கொண்ட மாணவனைப் போல மகிழ்ச்சியும் ஊக்கமும் பெற்றேன்” என்று பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் குறிப்பிட்டுள்ளது மிகச் சரியான கருத்து. இன்றைய இளைய சமுதாயத்தினர் அனைவருக்கும் பாலின சமத்துவத்தைப் போதிக்கும் நூலாக இந்நூல் விளங்குகிறது என்றால் அது மிகையல்ல.

நூல் கிடைக்குமிடம்: நிகர்மொழி பதிப்பகம்,

இணையம் வழியாகப் பெற: www.periyarbooks.in செல்: 84284 55455

Pin It