வர்க்கமா ? வர்ணமா ? இந்தச் சர்ச்சை கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கும், திராவிட இயக்கத்துக்கும் இடையில் நீண்ட காலமாக நடந்து வந்தது; இப்போதும் ஓரளவுக்கு நடந்து வருகிறது. வர்க்க வேறுபாடு, வர்ண (சாதி) வேறுபாடு ஆகிய இரண்டுமே ஒழிக்கப்பட வேண்டியவைதான். ஆனால் எதற்கு முதல் முன்னுரிமை தரவேண்டும் என்பது பற்றி இரண்டு இயக்கங்களுக்கும் இடையில் தீவிரமான கருத்து மோதல்கள் நடந்து வந்தன.

“திராவிட இயக்கத்தினர் வர்க்கப் போராட்டத்தைக் குலைப்பவர்கள்; ஆளுகிற பணக்கார வர்க்கத்தை ஆதரிப்பவர்கள் ” என்ற பார்வை மட்டும்தான் கம்யூனிஸ்ட்டுகளிடம் பெரும்பாலும் இருந்தது. அதே போல “கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் சாதி எதிர்ப்புப் போராட்டத்தைக் குலைப்பவர்கள்; பார்ப்பனர்களை ஆதரிப்பவர்கள்” என்ற பார்வை மட்டும் தான் திராவிட இயக்கத்தினரிடம் பெரும்பாலும் இருந்தது. இத்தகைய சூழ்நிலையில்தான் 1986ஆம் ஆண்டு அவரை நான் சந்தித்தேன்.
அவர்?

சின்னக்குத்தூசி என்ற இரா. தியாகராசன். மூத்த பத்திரிகையாளர். திராவிட இயக்கத்தின் தகவல் களஞ்சியம். அடிப்படையில் அவர் ஒரு பெரியாரிஸ்ட். அரசியலில் கலைஞரின் உறுதியான ஆதரவாளர். அனைத்துக்கும் மேலாக மிகச் சிறந்த மனிதர். அவருடனும் நான் திராவிட இயக்கம் பற்றி விவாதிக்க நேர்ந்தது. திராவிட இயக்கத்தின் மீது நான் விமர்சனங்களை வைத்தேன். அதற்கு பதில் அளித்த சின்னக் குத்தூசியாரோ நான் கேள்விப்பட்டிராத, சிந்தித்திராத ஏராளமான விவரங்களையும் விஷ­யங்களையும் கொட்டிக் குவித்தார்.

“ஆஹா! இவரிடம் விவாதிக்க வேண்டுமானால் நாம் இன்னும் நிறைய விவரங்களைத் தெரிந்து கொண்டுதான் விவாதிக்க வேண்டும்” என்று நான் உஷாராகி விட்டேன்! உடனே திராவிட இயக்கம் பற்றி ‘விழுந்து விழுந்து’ படிக்கத் தொடங்கினேன். தொடங்கிய புத்தகங்களே சர்ச்சைக்குரிய புத்தகங்களாக அமைந்து விட்டன!

ஒன்று, மார்க்ஸிஸ்ட் கட்சித் தலைவர் மறைந்த தோழர் பி. ராமமூர்த்தி எழுதிய ‘ஆரிய மாயையா? திராவிட மாயையா? விடுதலைப் போரும் திராவிட இயக்கமும் ’ என்ற புத்தகம். 1983 ம் ஆண்டு வெளியானது.

மற்றொன்று, இந்தப் புத்தகத்திற்குப் பதிலளித்து திராவிடர் கழகத்தின் அன்றைய பொதுச் செயலாளரும், இன்றைய தலைவருமான தோழர் கி. வீரமணி ஆற்றிய விமர்சனச் சொற்பொழிவின் தொகுப்பான ‘ விடுதலைப் போரும் திராவிடர் இயக்கமும் உண்மை வரலாறு ’ என்ற புத்தகம். 1985ம் ஆண்டு வெளியானது.

தோழர் பி. ராமமூர்த்தி தனது புத்தகத்தில் பெரியாரைப் பற்றிக் குறிப்படும்போது “இந்தக் காலகட்டத்தில் தோன்றிய சமூக சீர்திருத்தவாதிகளில் பெரியார் ராமசாமி தலைசிறந்தவர் என்பதில் ஐயமில்லை. குறிப்பாகத் தாழ்த்தப்பட்டவர், தீண்டப்படாதவர் என்று கூறப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் தன்மான உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பி, நிமிர்ந்து நின்று தங்களுடைய சமூக உரிமைகளுக்காகப் போராடச் செய்தவர்களில் சிறந்தவர் என்பதில் ஐயமில்லை. . . ” என்று குறிப்பிட்டு விட்டு, ஒரு சில மென்மையான விமர்சனங்களை முன்வைக்கிறார். மற்றபடி, நீதிக்கட்சி தொடங்கி அ. தி. மு. க வரையிலான திராவிட இயக்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களை வைக்கிறார்.

இந்த விமர்சனங்களுக்குத் தோழர் கி.வீரமணி தனது புத்தகத்தில் பதில் அளிக்கிறார். தோழர் பி. ராமமூர்த்தியின் சில விமர்சனங்களுக்கு வலுவான, திருப்திகரமான மறுப்புகளை தோழர் கி.வீரமணி அளிக்கிறார். சில விமர்சனங்களுக்குத் திருப்திகரமற்ற மறுப்புகளை அளிக்கிறார். மீதியுள்ள சில விமர்சனங்களுக்கு மறுப்புகளை அளிக்கவில்லை.

என்னைப் பொருத்தவரையில் திராவிட இயக்கம் பற்றிப் பெரும்பாலும் எதிர்மறையான கண்ணோட்டம் தான் அப்போது இருந்தது. ஆனால் தோழர் கி. வீரமணியின் இந்தப் புத்தகத்தைப் படித்ததும் நான் மலைத்துப் போனேன்!

“தோழர் பி. ராமமூர்த்தியின் பல விமர்சனங்கள் சரியாகவே இருந்த போதும், அவற்றுக்கு அப்பாற்பட்டு திராவிட இயக்கத்துக்கு இவ்வளவு சிறப்புகள் உள்ளனவா! அதிலும், பெரியார் இவ்வளவு அதிசயிக்கத்தக்க தலைவரா!” என்று வியந்து போனேன். திராவிட இயக்கம் பற்றிய, குறிப்பாக பெரியார் பற்றிய எனது கண்ணோட்டத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது இந்தப் புத்தகம்.

புத்தகத்தின் ஆசிரியர் ‘ஆசிரியர்’! ஆமாம்! தோழர் கி. வீரமணியை ‘ஆசிரியர்’ என்றே திராவிடர் கழகத்தினரும் ஆதரவாளர்களும் அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கிறார்கள். அவர் தனது பத்தாவது வயதிலேயே மேடையேறி பகுத்தறிவுச் சொற்பொழிவு ஆற்றி ‘பத்து வயதுப் பகுத்தறிவுச் சிறுவன்’ என்று பாராட்டப்பட்டவர்.

கடலூரில் 1944 ம் ஆண்டில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில் பெரியார், அண்ணா முன்னிலையில் மேடையில் பேசினார் பத்து வயது வீரமணி. அண்ணா பேசியபோது “இப்போது பேசிய இச்சிறுவன் காதிலே குண்டலம், நெற்றியிலே நீறு, கழுத்திலே ருத்திராட்சம் அணிந்து இப்படிப் பேசியிருந்தால், இவரை இந்தக்கால ஞானப்பால் உண்ட திருஞான சம்பந்தராக ஆக்கியிருப்பார்கள். இவர் பேசியதிலிருந்து இவர் உண்டதெல்லாம் ஞானப்பால் அல்ல; பெரியாரின் பகுத்தறிவுப் பால்தான் என்பது தெரிகிறது” என்று பாராட்டினார். அதைக்கேட்ட பெரியார் பலமாகச் சிரித்தார். மாநாட்டுப் பந்தல் அதிரக் கையொலி! அப்போது தொடங்கிய பகுத்தறிவுப் பிரச்சாரம் 65 ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் தொடர்கிறது. பெரியாரின் விருப்பப்படி, 1968 ம் ஆண்டில், தோழர் வீரமணி விடுதலை நாளிதழின் ஆசிரியராகவும், திராவிடர் கழகத்தின் முழுநேர ஊழியராகவும் ஆனார்.

“இது நமது கழகத்திற்குக் கிடைக்க முடியாத ஒரு பெரும் நல்வாய்ப்பு என்றே கருதி, திரு. வீரமணி அவர்களை மனதார வரவேற்பதோடு, கழகத் தோழர்களுக்கும் இந்த நற்செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன் ” என்று பெரியார் அறிக்கை வெளியிட்டார்.

பெரியார், மணியம்மையார் ஆகியோருக்குப் பிறகு, திராவிடர் கழகத்தின் தலைவராகவும் மற்றும் பல சார்பு அமைப்புகளின், கல்வி நிலையங்களின், பொறுப்பாளராகவும் இருந்து தோழர் வீரமணி பணியாற்றி வருகிறார். இதுவரை 75க்கும் மேற்பட்ட புத்தகங்களைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறார். தனது பொதுவாழ்வில், போராட்ட வாழ்வில் இதுவரை 38 முறை கைதாகி இருக்கிறார். நெருக்கடி நிலை காலத்தில் ‘மிசா ’ கைதியாக ஓராண்டு சிறையில் இருந்தார். முன்பு, தோழர் வீரமணி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்தபோது, கட்டணம் செலுத்த வசதியில்லை. மிகுந்த தயக்கத்துடன் பெரியாரிடம் ‘கடன்’ உதவி கேட்டுக் கடிதம் எழுதினார். பெரியாரோ நன்கொடையாகவே அவருக்குப் பணத்தை அனுப்பி வைத்தார்.

இதுபற்றி தோழர் வீரமணி சமீபத்தில் குறிப்பிட்டுள்ளது வருமாறு:

“அய்யாவுக்கு நான் வாழ்நாள் முழுவதும் அந்தக் கடனை அடைக்கவே என் இறுதி மூச்சு அடங்கும் வரை உழைப்பது என்று உறுதிகொண்ட நிலையில் உழைக்கிறேன். ஆனால், அடைக்கத் தான் முடியவில்லை” அந்தக் ‘கடன் அடைக்கும் தொண்டு’ தொடர்கிறது.

‘விடுதலைப் போரும் திராவிடர் இயக்கமும்: உண்மை வரலாறு’ என்ற இந்தப் புத்தகத்தில் முக்கியமாக நீதிக்கட்சி, பெரியார், அண்ணா பற்றி தோழர் வீரமணி விரிவாக விளக்குகிறார்.

1. நீதிக்கட்சி:

நீதிக்கட்சி 1916 ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அப்போது வெளியிடப்பட்ட அதனுடைய கொள்கை அறிக்கையிலிருந்து விரிவான விவரங்கள் இந்தப் புத்தகத்தில் அளிக்கப்படுகின்றன. அன்றைக்கு இருந்த நிலைமையைப் படித்துப் பார்த்தால் ‘பகீர்’ என்கிறது. அன்றைய சென்னை மாகாணத்தின் மக்கள் தொகையில் 100க்கு 3 பங்கு என்ற அளவில் இருந்த பிராமணர்கள், அரசாங்க அலுவல்களிலும், நீதித்துறையிலும், பொது நிறுவனங்களிலும், கல்வி நிலையங்களிலும் ஏறத்தாழ 100க்கு 80 பங்கு என்ற அளவில் பதவிகளையும், இடங்களையும் கைப்பற்றி இருந்தார்கள் என்பதற்கான புள்ளி விவரங்களைப் பார்க்கும் போது திகைப்பாக இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியிலும் கூட அனைத்திந்திய காங்கிரஸ் குழுவுக்குச் சென்னை மாகாண உறுப்பினர்களாக 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அனுப்பப்பட்டார்கள். அவர்களில் ஒருவரைத் தவிர ஏனையோர் அனைவரும் பிராமணர்களே! எனவே பிராமணர் அல்லாதாரும் முன்னேற வேண்டும்; அதற்காக உரிய இடஒதுக்கீடும், வாய்ப்பு வசதிகளும் அளிக்கப்படவேண்டும் என்று நீதிக்கட்சியின் அறிக்கை கூறியது. இதற்கேற்பவே நீதிக்கட்சியின் செயல்பாடுகளும் அமைந்தன.

நீதிக்கட்சி 1916ல் தொடங்கப்பட்டு 1920ல் ஆட்சிக்கு வந்தது. அடுத்த ஆண்டே 1921ல் பெண்களுக்கும் வாக்குரிமை அளித்துச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. அதே ஆண்டில் அரசாங்கப் பதவிகளில் பிராமணர் அல்லாதாருக்கு இட ஒதுக்கீடு அளித்து ஆணை பிறப்பித்தது. பின்னர் கோவில் சொத்துகள் கொள்ளை போவதைத் தடுக்கவும், சிறு குழுவினரின் ஆதிக்கத்தை அகற்றவும், இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியது. கல்வித் துறையிலும் பிராமணர் அல்லாதார் பயன்பெற ஆணைகளைப் பிறப்பித்தது. தொழில், தொழிலாளர் மேம்பாட்டுக்காகவும் நடவடிக்கைகளை எடுத்தது.

2. பெரியார்:

அநேகமாகப் பெரியாரின் அனைத்துப் பரிமாணங்களையுமே இந்தப் புத்தகத்தில் தோழர் வீரமணி அளித்து விடுகிறார். வரலாற்று விவரங்களைக் கொட்டிக் குவிக்கிறார். பிராமணர் அல்லாதார் சுய மரியாதை பெறவும், வகுப்புரிமை பெறவும், சமூகம், அரசியல், பண்பாடு என்று அனைத்துத் துறைகளிலும் பெரியார் நடத்திய நீண்ட நெடிய போராட்டங்களை, பிரச்சாரங்களை, செய்த தியாகங்களை அடுக்கடுக்காக அளிக்கிறார். “பெரியார் தனது பொதுவாழ்வில் 21 முறை சிறை சென்று, சிறைப் பறவையாகவே வாழ்ந்து காட்டிய வீரச் சிங்கம்” என்று விவரிக்கிறார்.

3. அண்ணா :

பெரியாரின் துணைவராக அண்ணா ஆற்றிய பணிகள், செய்த பிரச்சாரங்கள், எழுதிய நூல்கள் பற்றி விரிவான மேற்கோள்களுடன் தோழர் வீரமணி விளக்குகிறார். அண்ணா முதலமைச்சரான பிறகு, சுயமரியாதைத் திருமணச் சட்ட மசோதாவைத் தயாரித்து, பெரியாரின் கருத்தைக் கேட்டு அனுப்பியதையும், அதில் பெரியார் செய்த சிறப்பான திருத்தத்தைப் பற்றியும் சுவைபட விவரிக்கிறார். இப்போது இந்தப் புத்தகத்தில் தோழர் வீரமணி தெரிவிக்கும் ஒரு சுவையான சம்பவத்தின் சுருக்கத்தைப் பார்ப்போம்.

சர். ஏ. டி. பன்னீர்ச் செல்வமும், தமிழவேள் உமாமகேசுவரனும் காந்தியைச் சந்தித்தார்கள். காந்தியாரிடம் அவர்கள் பேசியபோது, “தமிழகத்தில் பிராமணர் பிராமணர் அல்லாதார் பிரச்சினை தீவிரமாகிக் கொண்டு இருக்கிறது. அதை நீங்கள் தலையிட்டுத் தீர்த்து வைத்தால் என்ன?” என்று கேட்டார்கள்.

அதற்குக் காந்தியார் சொன்னார், “இதை என்னிடத்தில் நீண்ட காலத்திற்கு முன்னாலேயே ஸ்ரீமான் ஈ. வெ. ராமசாமி நாயக்கர் (பெரியார்) வந்து சொன்னார். ஆனால் நான் மறுபடியும் கேட்டபொழுது, வரதராஜுலு நாயுடு போன்றவர்கள் ‘நீங்கள் தலையிட வேண்டாம். அது தானாகவே மறைந்து போய்விடும்’ என்று சொல்லிவிட்டார்கள்” என்றார். மேலும் “இப்பொழுது முன்போல பிராமணர் - பிராமணர் அல்லாதார் என்பது ஒரு பிரச்சினையாக இல்லை” என்றார் காந்தியார்.

உடனே பன்னீர்செல்வம் “அப்படியா? நீங்கள் எதை ஆதாரமாக வைத்து இந்த முடிவுக்கு வந்தீர்கள்?” என்று கேட்டார். இதற்குக் காந்தியார் அளித்த பதில், பெரியாரின் சுயமரியாதை இயக்கம், காந்தி போன்றவர்களுக்கே சமூகத்தில் எப்படிப்பட்ட அந்தஸ்த்தையும், மரியாதையையும் தேடித்தந்தது என்பதை விளக்குவதாக இருந்தது.

காந்தியார் சொன்னார் “பார்ப்பனர் இப்பொழுது மாறிவிட்டார்கள். முன்பு போல் இல்லை. முன்பெல்லாம் நான் மயிலாப்பூரில் சீனிவாச அய்யங்கார் வீட்டில் வந்து தங்கினால், என்னைத் திண்ணையில்தான் உட்கார வைப்பது வழக்கம். ஆனால் இப்பொழுது நானும் என் மனைவி கஸ்தூரியும் அவர்கள் வீட்டுச் சமையலறை வரையில் போகிறோம்”

இது 1927க்குப் பிறகு நடந்த ஒரு நிகழ்ச்சியாகும். இது தந்தை பெரியார் அவர்கள் 1925ம் ஆண்டு துவங்கிய சுயமரியாதை இயக்கத்தின் தாக்கம்தானே! எனவே, தாழ்த்தப்பட்ட சகோதரர்களை வைக்கம் தெருக்களிலே நடமாட உரிமை பெற்றவர்களாக மாற்றியது மட்டுமல்ல பெரியாரின் தொண்டு! மகாத்மா காந்தியையும், சீனிவாச அய்யங்கார் வீட்டுக்குள் அழைத்துச் சென்ற மாபெரும் தொண்டு பெரியாரின் தொண்டு, தத்துவம்! அடுத்து நாம் பார்க்கப் போவது, இந்து சமூகத்தின் அனைத்து ஒடுக்குமுறை அம்சங்களுக்கும் எதிரான கலகத்தின் சின்னமாக விளங்கிய சிங்கத்தின் புத்தகம் பற்றி.

(இன்னும் படிக்கலாம்)

- இரா.ஜவஹர்