தமிழ்நாட்டின் சமூக நீதி தத்துவம் வார்த்தெடுத்தப் பெண் அனிதா. ஒரு சுமை தூக்கும் தொழிலாளியின் ஏழை தலித் குடும்பத்தில் வறுமைச் சூழலில் தனக்கும் மருத்துவராகும் ஆற்றல் இருக்கிறது என்ற தன்னம்பிக்கையோடு இரவு பகலாக உழைத்து படித்துப் பெற்ற மதிப்பெண் 1200க்கு 1176.
‘நீட்’ தேர்வு என்பது இல்லாமலிருந்தால் மருத்துவக் கல்லூரியின் கதவுகள் அவருக்கு திறந்திருக்கும். உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிப் பார்த்தார். ஒரு கிராமத்தில் வறுமைச் சூழலில் ஜாதிய ஒடுக்குமுறை வலியோடு படித்தப் பெண்ணின் சாதனையை உச்சநீதிமன்றம் திரும்பிப் பார்க்க மறுத்துவிட்டது.
மருத்துவக் கல்வியின் திறனை உயர்த்துவதற்குத்தான் நீட் தேர்வு என்று வாதிடுவோரை சகித்துக் கொள்ளவே முடியவில்லை. சரியான விடைக்கு மதிப்பெண் என்பதுதான் நாம் பழகியிருக்கும் நேர்மையான கல்வித் திட்டம். ஆனால், தவறான விடைக்கு மதிப்பெண் குறைப்பு; தவறான விடையைத் தேர்ந்தெடுக்கும் மனநிலைக்கு மாணவர்களைக் குழப்பி விடும் சூழ்ச்சித் திறன் மிகுந்த வினாக்கள் என்று அறமேயற்ற ஒரு பயிற்சித் தேர்வு ‘நீட்’.
நாடாளுமன்றத்திலே ‘நீட்’ தேர்வு முறை காங்கிரஸ் ஆட்சியில் சட்டமாக்கப்பட்டபோது அதை ஆதரித்தவர்கள் இப்போது எதிர்க்கலாமா என்ற கேள்வி அர்த்தமற்றது. ‘நீட்’டை விரும்பாத மாநிலங்கள் அதை ஏற்க வேண்டாம் என்று தரப்பட்ட விதிவிலக்குகள் இருந்தன. மருத்துவத் துறைக்கான நாடாளுமன்றக் குழுவும் இதே கருத்தை பரிந்துரைத்ததையும் ஏன் இவர்கள் பார்க்க மறுக்கிறார்கள்?
தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையில் நடுவண் ஆட்சி ஏன் தலையிட வேண்டும்? இந்தியாவுக்கே வழி காட்டக் கூடிய தமிழகத்தின் மருத்துவ சேவைக் கட்டமைப்பையே இந்த ‘நீட்’ தேர்வு முறை குலைத்து விடுகிறது என்பதற்கு இவர்களிடம் என்ன பதில் இருக்கிறது?
பள்ளித் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாமல் அவமானம் தாங்காது ‘தற்கொலை’ செய்து கொள்ளும் செய்திகள் வந்த தமிழகத்தில் மிக உயர்ந்த மதிப்பெண் பெற்ற ஒரு மாணவியை ‘மரணமடையச்’ செய்திருக்கிறது பா.ஜ.க.வின் ‘நீட்’.
69 சதவீத இடஒதுக்கீடு அப்படியே நீடிக்கும்போது ஏன் எதிர்க்க வேண்டும் என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். 69 சதவீத ஒதுக்கீட்டின் ‘சமூக நீதி’ நோக்கம் இதில் புறந்தள்ளப் பட்டிருக்கிறதே! வெளி மாநிலத்துக்காரர்கள் தமிழக வாழ்விடச் சான்றிதழ்களை மோசடியாகப்பெற்று இடங்களைப் பறித்தது குறித்து ஏன் பேச மறுக்கிறார்கள்? தமிழகத்தின் 69 சதவீத இடஒதுக்கீட்டில் ‘கை வைக்கவில்லை’ என்று நியாயம் பேசுகிறவர்கள், மருத்துவ மேல் பட்டப் படிப்பு இடங்களிலே தமிழகத்துக்கான இடங்களில் 50 சதவீத இடங்களை நடுவண் ஆட்சி பறிப்பதை நியாயப்படுத்துவார்களா? உயர் சிறப்புப் பட்டப் பிரிவுக்கான 192 இடங்களையும் அகில இந்தியப் போட்டிக்கு திறந்து விட்டிருக்கிறார்களே! அதற்கு இவர்களிடம் என்ன விளக்கம் இருக்கிறது?
உலகத் தரத்துக்கு கல்வியை உயர்த்துவதற்குத்தான் ‘நீட்’ என்று வாதாடுகிறார்கள். இதே குரலைத் தான்1950ஆம் ஆண்டு ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவம்’ என்ற அன்றைய சமூக நீதிக் கொள்கைக்கு எதிராக வாதாடிய அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரும், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒலித்தார். அரசியல் சட்டத்தை உருவாக்கும் குழுவில் இடம் பெற்றிருந்த அல்லாடி கிருஷ்ணசாமி உயர்நீதிமன்றத்தில் பார்ப்பன உணர்வோடு ஒரு வழக்கறிஞராக வந்து வாதாடிய அவலத்தையும் அன்று சென்னை மாகாணம் பார்த்தது.
“சென்னை இராஜ்ய மக்கள் புதிய சகாப்தத்துக்கு ஏற்பத் தங்களை அமைத்துக் கொள்ளவேண்டுமே தவிர வகுப்புரிமை நீதி போன்ற பிற்போக்கான பிரச்னைகளில் தலையிட்டு வாதிடலாகாது” என்றார் அல்லாடி.
தனக்கு மருத்துவக் கல்லூரியில் ‘வகுப்புரிமை’ கொள்கையால் இடம் கிடைக்காமல் போய்விட்டது என்று அன்று வழக்குத் தொடர்ந்தவர் செண்பகம் துரைராசன் என்ற பார்ப்பனப் பெண். பட்டப் படிப்பை முடித்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு தனது 37ஆவது வயதில் “நீதி” கேட்டு வழக்கு வழக்கு மன்றம் வந்தவர். இன்னும் ஒரு வேடிக்கை - எந்த மருத்துவக் கல்லூரிக்கும் மனுப் போடாமலேயே வழக்குத் தொடுத்திருந்தார் என்ற உண்மை உச்சநீதிமன்றத்தில் அம்பலமான பிறகும் அவருக்கு ஒரு இடத்தை மருத்துவக் கல்லூரியில் ஒதுக்கி வைக்கவேண்டும் என்று அன்றைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதுதான்! அத்தனைத் தடைகளையும் தகர்த்து, தமிழ்நாடு கட்டமைத்த சமூகநீதிக் களத்தில் நிமிர்ந்து நின்றவர்தான் அனிதா!
மதிப்பெண் தான்தகுதிக்கான அளவுகோல் என்று அன்று கூப்பாடு போட்டவர்கள், அதே மதிப்பெண் தகுதியை எங்களாலும் பெற முடியும் என நிரூபித்த அனிதாவுக்கு நீதி வழங்க மறுத்து விட்டார்கள்.
கெஞ்சிப் பெறுவதல்ல நீதி என்ற முடிவுக்கு தமிழகம் வந்தாக வேண்டும். தமிழ்நாட்டுக்குரிய கொள்கை முடிவுகளை எடுக்கும் உரிமை தமிழக அரசுக்கு மட்டுமே உண்டு என்ற தன்னாட்சி உரிமை முழக்கம் உரத்து எழுப்பப்படவேண்டும்.
‘கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்று’ என்ற முழக்கத்தோடு ‘நீட்’ தேர்வை நிறுத்திக் காட்டுவோம். அதுவே அனிதாவின் மரணத்துக்குக் கிடைக்கும் நீதி!