பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு இலவச உணவுத் திட்டத்தை இந்தியாவிற்கே முதல் முதலாக முன்மொழிந்தார் ராவ் சாகிப் எல்.சி.குருசாமி. அதை முதல் முறையாக சென்னை மாநகராட்சி அளவில் நடைமுறைப் படுத்தினார் சர்.பிட்டி.தியாகராயர். 

பின்வந்த காலங்களில் பெருந்தலைவர் காமராஜர், அறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா  ஆகிய முன்னாள் தமிழக முதல்வர்கள் இந்த உணவுத் திட்டத்தை சத்துணவுத் திட்டமாகப் படிப்படியாக மாற்றினார்கள். இதில் எந்த வேறுபாடோ, சாதியோ, மதமோ இல்லை. 

குறிப்பாகச் சொன்னால் ‘மனுவாதம்’ என்ற சாதிய, மத வேறுபாடுகளுக்கு இடமில்லை என்றே சொல்ல வேண்டும். இந்தத் திட்டமும், திட்டத்தைச் செயல்படுத்திய முறையும் மாணவர்களுக்குப் பெரிதும் பயன்பட்டன. 

இந்தத் திட்டத்தால் சத்துணவுப் பணியாளர்களாக   ஒடுக்கப்பட்ட, மிக மிகப் பின்தங்கியவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்தன. 

ஆனால், இப்பொழுது நிலைமை தலைகீழாக மாறி வருகிறது. சென்னை மாநகராட்சியில் உள்ள 24 பள்ளிகளில், 5,785 மாணவர்களுக்கு மட்டும் காலைச் சிற்றுண்டி கொடுக்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியிருக்கிறது. 

இந்தத் திட்டத்தை ‘இஸ்கான்’ என்ற நிறுவனத்திடம் தமிழக அரசு ஒப்படைத்திருக்கிறது. 

‘அரே கிருஷ்ணா’ என்ற இயக்கத்தை தொடங்கிய அமைப்புதான்,  1966-ஆம் ஆண்டு இந்த  ‘இஸ்கான்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கியது.

சென்னையில் மையப் பகுதியில் அமைந்துள்ள கிரீம்ஸ் சாலையில் 20,000 சதுர அடியும், பெரம்பூர் பேரக்ஸ் பகுதியில் 35,000 சதுர அடியும் கொண்ட நிலங்களை இஸ்கான் அமைப்புக்குத் தமிழக அரசு தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறது. 

இந்த இரு இடங்களில் உள்ள நிலங்களின் இன்றைய மதிப்பு ஏறத்தாழ 500 கோடிக்கும் மேல் என்கிறார்கள் வல்லுநர்கள். 

இதுபோதாதென்று தமிழக ஆளுநர் பன்வார்லால் புரோகித் ரூ.5 கோடியை இலவச நிதியாக அள்ளிக் கொடுத்திருக்கிறார். எல்லாம் அரசுப் பணம், மக்களின் பணம். 

லட்சக்கணக்கான சத்துணவுப் பணியாளர்களின் உழைப்பில் நடைபெற்று வந்த இச்சத்துணவுத் திட்டம், யாருக்கும் தெரியாமல், எந்த ஒப்பந்ததாரர்களுக்கும் அறிவிக்காமல் தனி உடமையான ‘இஸ்கான்’ என்ற தனியாரிடம் ஒப்படைக்க வேண்டிய காரணம் என்ன?

இந்த ‘இஸ்கான்’ இந்து மத ‘மனுவாத’த்தை முழுமையாகக் கடைப்பிடிக்கும் நிறுவனம். ‘வெள்ளைப்பூண்டு - வெங்காயம்’ போன்ற மருத்துவ குணப் பொருள்களை உணவில் சேர்க்க மாட்டார்கள். காரணம் அது தாழ்த்தப்பட்டவர்களுக்குரிய உணவு வகை என்கிறது வேத மனுவாதம். 

ஆர்.எஸ்.எஸ் - பாஜக இந்துத்துவ அரசின் சனாதனக் கொள்கையை, மத்திய அரசின் அடிமையான தமிழக அரசு ‘இஸ்கான்’ மூலம் முன்னிலைப்படுத்தியது கண்டனத்திற்குரியது.   

Pin It