சில நாட்களுக்கு முன்னால் திமுகவில் துணைப் பொதுச் செயலாளராக இருந்த வி.பி.துரைசாமி, அந்தக் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். திமுகவில் சாதிப் பாகுபாடு அதிகம் பார்க்கிறார்கள் என்றும், அங்கு சாதிக்கு ஒரு நீதி என்றும் கூறிய துரைசாமி, பாஜகவில் இணைந்திருப்பதன் மூலம் சாதியைப் பற்றிய தனது கண்ணோட்டத்தை அவரே அம்பலப்படுத்திக் கொண்டிருக்கின்றார்.
சிலருக்கு சாதி பிழைப்பு நடத்தவும், பொறுக்கித் தின்னவும் ஒரு வழி. ஆனால் சிலருக்கோ சாதி என்பது அவமானம். யாரின் பகுத்தறிவு, யாரின் தன்மானம் சாதியை ஓர் இழிவாகக் கருதுகின்றதோ, அவர்கள்தான் சாதியையும், அதைக் கட்டிக் காப்பாற்றும் பார்ப்பனியத்தையும் வேரறுக்கப் புறப்படுகின்றார்கள். சாதியை வைத்து பிழைப்பு நடத்தும் அயோக்கியர்களோ, பார்ப்பனியத்தின் பாதாரவிந்தங்களை நக்கிப் பிழைப்பவர்களாக தம்மை தகவமைத்துக் கொள்கின்றார்கள். அது போன்றவர்கள் ஒருபோதும் தங்களின் அம்மணத்தைப் பார்த்து ஊரார் காறித் துப்புவது பற்றி கவலைப்படுவதில்லை. தன்மானம், சுயமரியாதை என்பதை எல்லாம் உதிர்த்து விட்டு இழி பிறவிகளாய் வாழக் கற்றுக் கொண்ட அது போன்ற நபர்கள் எச்சிலில் கூட எதிர்நீச்சல் போட்டு அரசியல் செய்ய கற்றுக் கொண்டவர்கள். அவர்களிடம் சென்று மானத்தோடு வாழ்வது எப்படி என்று வகுப்பெடுப்பது விபச்சாரம் செய்பவர்களிடம் சென்று யோக்கியத் தன்மையைப் பற்றி வகுப்பெடுப்பதற்கு ஒப்பாகும்.
திமுகவிலோ, இல்லை அதிமுகவிலோ சாதி பார்க்கப் படுகின்றது என்பது ஒன்றும் புதிய செய்தியோ, இல்லை அதிர்ச்சி அளிக்கும் செய்தியோ அல்ல. சமூகமே சாதி வெறி பிடித்து அலையும் போது, அந்தச் சாதிவெறி பிடித்தவர்களின் ஓட்டுக்களை அடிப்படையாக வைத்து இயங்கும் கட்சி மட்டும் எப்படி சாதி பார்க்காமல் இயங்க முடியும்? எந்தத் தொகுதியில் எந்தச் சாதி மக்களின் ஓட்டுவங்கி அதிகமாக இருக்கின்றதோ, அந்தச் சாதிக்காரர்களை நிறுத்தினால்தானே ஓட்டு வாங்க முடியும்?. தனித்தொகுதியில் கூட தலித்துகளுக்கு ஓட்டு போடுபவர்கள் அனைவரும் தலித் விடுதலையை ஏற்றுக் கொண்டா ஓட்டு போடுகின்றார்கள்? ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. சாதிய சமூகத்தில் தேர்தல் கணக்கு என்பது சாதியை அடிப்படையாக வைத்தே கணக்கிடப்படும்.
ஏன் தேர்தல் அரசியலில் பங்கெடுக்கும் கட்சிகள் சாதி ஒழிப்பைப் பற்றி தீவிரமாகப் பேசுவதில்லை என்பதற்கும், சமூகத்தில் எங்கு சாதிய மோதல், படுகொலைகள் நடந்தாலும் அதைப் பாராமுகமாக ஏன் கடந்து செல்கின்றன என்பதற்குமான காரணம் சாதி ஓட்டுவங்கி மட்டுமே. ஆனால் அப்படி தேர்தல் அரசியலில் பங்கெடுத்தாலும், இன்று சாதிவெறிக்கு முகம் கொடுத்து அதற்கு எதிராகப் போராடும் கட்சிகளாக கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே இருக்கின்றன. சாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான போராட்டமாகட்டும், தீண்டாமைக் கொடுமைக்கு எதிரான போராட்டமாகட்டும் அவை முன்னணியில் நிற்கின்றன. திமுக, அதிமுக போன்ற கார்ப்ரேட் கட்சிகளுக்கும் சாமானிய மக்களின் குரலாக ஒலிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் அதுதான் வித்தியாசம்.
திமுகவில் சாதியப் பாகுபாடு பார்க்கப் படுகின்றது என்று சொல்லும் துரைசாமி, உண்மையில் மானமுள்ள மனிதராக இருந்திருந்தால், சாதியை ஒழிக்காமல் விட மாட்டேன் என்று சவால் விட்டுவிட்டு கம்யூனிஸ்ட் கட்சியிலோ, இல்லை மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கங்களிலோ தன்னை இணைத்துக் கொண்டு, தன்னை சாதிக்கு எதிரான நபராக பிரகடனப்படுத்தி இருப்பார். ஆனால் சாதியப் பாகுபாடு பார்க்கப் படுகின்றது என்று சொல்லிவிட்டு, பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டதோடு பாஜக ஏதோ தலித்துகளின் நலனுக்காக உழைக்கும் கட்சி என்று சொல்வது துரைசாமி எவ்வளவு மட்டமான பேர்வழி என்பதையும், உலக மகா பொய்யர் என்பதையும்தான் காட்டுகின்றது.
தமிழ்நாட்டிலேயே மாநில எஸ்.சி. அணி, மாநில எஸ்.டி. அணி என்று தலித்துகளை மட்டும் தனி அணியாகப் பிரித்து கட்சிக்குள்ளேயே சேரிகளை வைத்திருக்கும் கட்சி பிஜேபிதான். தலித்துகள் கட்சியில் தனியாகத் தெரிய வேண்டும் என்பதற்கான ஏற்பாடு அல்லாமல் வேறு எதற்காக தலித்துக்களுக்கு என்று தனி அணிகளை உருவாக்கி வைத்திருக்கின்றார்கள்? ஆனால் துரைசாமி போன்றவர்களுக்குக் கட்சியில் ஏதோ சில அதிகாரமற்ற பதவிகள் கொடுக்கப்படுவதே, அவரது மொழியில் சொன்னால், பிராமணாள் கட்சியில் இது போன்ற அதிகாரமற்ற பதவிகள் கொடுக்கப்படுவதே பெரிதாகும். துரைசாமி போன்று பதவிக்காகவும், பணத்துக்காகவும், அதிகாரத்துக்காகவும் சாதியை ஒரு கேடயமாகப் பயன்படுத்தும் நபர்கள் இப்படித்தான் தாங்கள் மலத்தில் நின்று கொண்டு பேசுகின்றோம் என்ற உணர்வே இல்லாமல் பேசுவார்கள்.
ஆனால் பாஜகவின் தலித் பாசம் என்பது துரைசாமி கட்சி தாவுவதற்காக சொன்ன ரகசியத்தைவிட ரகசியமானதல்ல.
பாஜகவை தலித் மக்களிடையே பிரபலப்படுத்தும் வகையில், தலித் மக்களுடன் கலந்துரையாடல் நிகழ்வுகளை, அது கர்நாடகாவில் மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக, எடியூரப்பா உள்ளிட்டோர் தினசரி காலையில் தலித் மக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று, அவர்களோடு கலந்துரையாடி விட்டு, அங்கே உணவு சாப்பிடுவதாக சபதம் எடுத்திருந்தார்கள். அதன்படி சித்ரதுர்கா மாவட்டத்தின் கெலாகோட் பகுதியில் உள்ள வெங்கடேஷ் என்ற தலித் வீட்டுக்குச் சென்ற எடியூரப்பா உள்ளிட்டோர் அந்த தலித் வீட்டில் சமைத்த உணவை உண்ண மறுத்து விட்டனர். மாறாக, ஓட்டலில் இருந்து உணவை வாங்கி வந்து, எடியூரப்பா உள்ளிட்ட பாஜகவினர் அனைவரும் சாப்பிட்டார்கள். இப்படி வேண்டுமென்றே தலித்துகளை இழிவுபடுத்திய அவருக்கு எதிராக மண்டியா காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. இங்கு மட்டுமல்ல, கர்நாடகாவில் உள்ள துமாகுரு மாவட்டம் குப்பி பகுதியில் உள்ள ஒரு தலித் வீட்டிற்குச் சென்ற போதும் இதே போல தனது 'தலித் பாசத்தை'க் காட்டினார் எடியூரப்பா.
எடியூரப்பா மட்டுமல்ல தற்போது உ.பி முதல்வராக இருக்கும் தாக்கூர் சாதியைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத்தை அந்த மாநிலத்தில் வாழும் முஷார் இன மக்களை சந்திக்கச் செல்லும் முன், அந்த மக்கள் அனைவரும் சோப்பு, ஷாம்பு போட்டு குளித்துவிட்டு வர வேண்டும் என்று சொல்லி அவரது பரிவாரங்கள் கட்டாயப் படுத்தினார்கள்.
ஆனால் துரைசாமியின் கண்களுக்கோ பாஜக இன்று தலித்துகள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் கட்சியாகத் தெரிகின்றது. தங்களைப் போன்றவர்களுக்கு பாஜகவில் வழங்கப்படும் அதிகாரமற்ற பதவிகள் கூட மற்ற கட்சிகளால் வழங்கப்படுவதில்லை என்று குற்றம் வேறு சாட்டுகின்றார். ஆனால் உண்மை என்னவென்றால், திமுகவில் நீங்கள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராட வேண்டும், சாதியக் கட்டமைப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும், பார்ப்பனியத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும், அப்படி இருந்தால் மட்டுமே பதவிகள் வழங்கப்படும் என்று சொல்லும் நிலை இல்லை. ஆனால் பாஜகவில் நீங்கள் இதை எல்லாம் செய்ய வேண்டும். உங்கள் மீது சாதி ரீதியான பாகுபாடு அப்பட்டமாக சமூகத்தில் கடைபிடிக்கப்பட்டாலும், நீங்கள் சாதியை ஆதரித்துப் பேச வேண்டும். உங்கள் சமூக மக்கள் இட ஒதுக்கீடு இன்னமும் பெற முடியாமலும், சேரிகளை விட்டு இன்னும் வெளியே போக முடியாமல் துன்பப்பட்டாலும் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேச வேண்டும். பார்ப்பனப் புராணங்கள் உங்களை சண்டாளன், பஞ்சமன் என இழிவு செய்தாலும் பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள் என்றும், பார்ப்பனப் புராணங்கள் மிகவும் மேன்மையானவை என்றும் முரட்டு முட்டு கொடுக்க வேண்டும். அப்போதுதான் அந்த அதிகாரமற்ற பதவிகூட உங்களுக்குக் கிடைக்கும். அதற்கு சிறந்த உதாரணம் ராம்நாத் கோவிந்த்.
ராம்நாத் கோவிந்த் கடந்த 20 ஆண்டுகளில் பல முறை தலித்துகளுக்கான இட ஒதுக்கீட்டிற்கு எதிராகவும், முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும் ஆர்.எஸ்.எஸ்-ன் குரலையே வெளிப்படுத்தினார் என்பதால்தான் அவருக்கு குடியரசுத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது.
அரசு வேலைகளுக்கான இட ஒதுக்கீட்டில், இசுலாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தலித்துக்களுக்கும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கான இட ஒதுக்கீட்டில் இடம் வழங்க வேண்டும் என கடந்த 2009-ம் ஆண்டு ரங்கநாத் மிஸ்ரா கமிசன் பரிந்துரை செய்தபோது, அப்போது பாஜகவின் தேசியப் பேச்சாளராக இருந்த ராம்நாத் கோவிந்து, இசுலாமிய, கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த தலித்துகளை தாழ்த்தப்பட்ட சாதியினரில் சேர்ப்பது அரசியல் சாசன சட்டத்திற்கு விரோதமானது என்றும், இசுலாமிய, கிறிஸ்தவ தலித்துகளை தாழ்த்தப்பட்ட சாதியினராக அங்கீகரிப்பது பல தலித்துகள் மதம் மாறுவதற்கு உதவும் என்றும், அந்த வகையில் இந்திய சமூகத்தின் வடிவமைப்பையே அது அழித்துவிடும் என்றும் கூறினார்.
கடந்த 2005ம் ஆண்டு அமெரிக்க தூதரகங்களுக்கிடையில் நடந்த தகவல் தொடர்பு ஆவணங்களில் ஓர் ஆவணம் தான் "இந்திய தலித்துகளின் சமூக, பொருளாதார நிலை இன்னமும் இருளிலேயே உள்ளது" என்ற ஆவணம். இதில் ராம்நாத் கோவிந்திடம் இந்தியாவில் தலித்துகளின் நிலைமைகள் குறித்து கேட்கப்பட்ட போது, இந்தியாவில் தலித்துகளுக்கு எதிரான தீண்டாமை வெகுவாகக் குறைந்துள்ளது என்றும், வீடு கொடுப்பதில் மட்டும் தான் தீண்டாமை வெளிப்படையாக இருப்பதாகவும், பணியில் சேருவது போன்றவற்றில் சாதிய பாரபட்சம் முந்தைய பத்தாண்டுகளில் குறைந்திருப்பதாகவும் கூறினார். மேலும் இந்திய தலித்துகள் இட ஒதுக்கீடு மூலம் பெரும்பான்மையாக பலன் பெற்று வருவதாகவும், சாதிய வேற்றுமையைப் போக்க ஆரம்பக் கல்வியில் இருந்து பயிற்றுவித்தால் எல்லாம் சரியாகி விடும் என்றும் தெரிவித்தார்.
இந்தியாவின் சாதி அமைப்பை பற்றிக் கூறும் போது, ஐரோப்பாவில் தொழிற்கழகங்கள் உருவானதைப் போல இந்தியாவில் இன்னார் இன்ன தொழிலைச் செய்து கொள்ளலாம் என உருவாக்கப்பட்ட அமைப்பு தான் சாதியக் கட்டமைப்பு என்றும், அவரவர் தங்களது தொழிலைப் பாதுகாத்துக் கொள்ள சாதியக் கட்டமைப்பைப் பாதுகாக்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறார். இதையெல்லாம் சொல்லி விட்டு, கடைசியில் சாதியத்தை இந்தியாவை விட்டு ஒழிக்க முடியாதா என்ற கேள்விக்கு, “இந்து மதம் சாதியை ஏற்றுக் கொண்டு அனுமதிப்பதால், இந்தியாவில் சாதியை அவ்வளவு எளிதாக ஒழித்து விட முடியாது, அது மறைய குறைந்தது 100 ஆண்டுகள் ஆகலாம்" என்றும் சொல்கின்றார்.
இப்படி தன்னை ஒரு முழு சங்கியாகவே அவர் மாற்றிக் கொண்டிருந்தாலும் ஆதிக்க சாதி வெறியர்கள் தங்களில் ஒருவராக அவரை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தியக் குடியரசுத் தலைவராக அவர் பதவியேற்ற பிறகு, முதன்முறையாக ஒடிசாவில் உள்ள பூரி ஜகந்நாதர் கோயிலுக்கு 2018 ஆம் ஆண்டு மார்ச் 18-ம் தேதி அவரின் மனைவி சுவீதாவுடன் சென்றார். ஆனால் அவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், அங்கே இருக்கும் ரத்னசிங்காசனம் சிலை இருக்கும் இடத்திற்குச் செல்ல விடாமல் அவரையும் அவரது மனைவியையும் 3 பாதுகாவலர்கள் தடுத்துள்ளனர். அது மட்டுமட்டுமல்லாமல் நாட்டின் முதல் குடிமகளான சுவீதாவை பாதுகாவலர் ஒருவர் தள்ளியும் விட்டார்.
ராம்நாத் கோவிந்துக்கும், அவரது மனைவிக்கும் நடந்த அவமரியாதை குறித்து மார்ச் 19-ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகை, பூரி மாவட்ட நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியது. ஆனால் புகார் கடிதம் வந்து 3 மாதங்களுக்குப் பிறகே இந்த விவகாரம் தொடர்பாக பூரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அகர்வால் விசாரணையைத் தொடங்கினார். இதுதான் பாஜகவில் சாதிய வருணாசிரம தர்மத்தை ஏற்றுக் கொண்டு பார்ப்பனியத்துக்கு கூழைக் கும்பிடு போட்டு அதிகாரமற்ற பதவியை வாங்கத் துடிக்கும் சங்கிகளின் நிலை.
உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால், கமலாலயத்துக்குச் சென்று பாருங்கள். அங்கே கூழைக் கும்பிடு போட்டுக் கொண்டு இருப்பது எஸ்.சி. அணியைச் சேர்ந்த முருகனா, இல்லை பிஜேபியின் அக்கிரகார அணியா என்று தெரியும். சுயமரியாதையும், தன்மானமும் உள்ள ஒருவன் அதற்கு குந்தகம் ஏற்படும் போது கொதித்தெழுந்து போராட முன்வருவான். ஆனால் பொறுக்கித் தின்பதற்காக சாதிய இழிவை ஏற்றுக் கொண்டு, அதை வைத்து பதவி வாழ்க்கையைத் தேடும் பிறவிகள் ஒருபோதும் தங்களை மாற்றிக் கொள்வதில்லை. 'தலித்துகளின் உற்ற நண்பனான' பாஜகவில் தன்னை இன்று கரைத்துக் கொண்ட துரைசாமி மட்டும் இதில் விதிவிலக்கா என்ன?
- செ.கார்கி