2013 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில், பாமகவின் சார்பில், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீதான 200 பக்க ஊழல் பட்டியலை ஆளுநரிடம் அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணி அளித்திருந்தார். அதனை ஆளுநர் 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலருக்கு அனுப்பி வைத்தார். ஆனால் முந்திய அரசு அதன் மீதான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதனால் பாமகவிற்கும் அக்கட்சித் தொண்டர்களுக்கும் பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது.
அந்த ஏமாற்றத்தைப் போக்கும் வகையில் அந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசின் சார்பில் நேற்று வழக்கறிஞர் சண்முகசுந்தரம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாமக எதிர்க்கட்சி வரிசையில் உள்ளது என்று பார்க்காமல், அதன் கோரிக்கையை இன்றையத் தமிழக அரசு எடுத்துள்ளமை, அரசின் ஜனநாயகப் போக்கினைக் காட்டுவதாக உள்ளது! இந்த நடவடிக்கையைப் பாமக வாழ்த்தி வரவேற்கும் என்று எதிர்பார்க்கலாம்!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் ஜனநாயகத் தன்மையும், இனஉணர்வும், பெருந்தன்மையும் உடையதாக உள்ளது.
பொது மற்றும் மறுவாழ்வுத் துறை ஆய்வுக் கூட்டத்தில் நேற்று கலந்துகொண்ட முதமைச்சர், ஈழ மக்களின் துயர் துடைக்கத் தனி வழிகாட்டுதல் குழு ஒன்று அமைக்கப்படும் என்றும், அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் கூட்டப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
குடிநீர், கழிவறை, தெருவிளக்கு, மின்வசதி ஆகியவவற்றைச் சரியாகப் பராமரிப்பதுடன், அவர்களுக்கான மாதாந்திரக் கொடையை உயர்த்திக் கொடுக்கவும், துணிகள், சமையல் பாத்திரங்கள் வழங்குவதற்கான நிதி ஒதுக்கீட்டை உயர்த்திடவும் கூறியுள்ளார்.
ஈழ மக்களுக்கு இனிய செய்தியாகவும், ஈழத்திற்கு நாங்கள்தான் மொத்தக் குத்தகைதாரர்கள் என்று கூறித் திரிவோருக்குப் பேரிடியாகவும் இச்செய்தி அமைந்துள்ளது!
இவ்வாண்டில், கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் விவசாயிகளுக்கு 11,500 கோடி ரூபாய் கடனாக வழங்குவதெனவும் தமிழ் நாடு அரசு முடிவு செய்துள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள் ஊதியத்தை ரூ.275 லிருந்து ரூ. 300 ஆக உயர்த்திடவும் முடிவு செய்துள்ளது தமிழ்நாடு அரசு!
தமிழே தமிழ்நாட்டில் ஆட்சிமொழி என்பது வெறும் ஏட்டளவில் இல்லாமல், நடைமுறைக்கு அதனைக் கொண்டுவர அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்ற அறிவிப்பும் வந்துள்ளது.
பத்தாண்டு கால இருள் நீங்கித் தமிழ்நாட்டின் பொற்காலம் தொடங்கியுள்ளது!
- சுப. வீரபாண்டியன்