ஐயன் திருவள்ளுவருக்குக் குமரி முனையில் 133 அடிகளில் கற்சிலையை தி.பி. 2030 சிலை 17 (கிபி 2000 சனவரி 1) ஆம் நாள் நிறுவியதன் வழி தமிழ்நாட்டிற்குப் பெருமையைத் தேடித் தந்தார்.. அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.
அச்சிலையை நிறுவுவதற்கு எண்ணற்ற பாடுகள் பட வேண்டி இருந்தது என்பது தனி செய்தியானாலும் அதைத் தமிழ்நாட்டு அரசை நிறுவ விடாமல் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதற்கு ஆர்எஸ்எஸ் என்ன தகிடுதத்தங்கள் செய்தன என்பதை அறிந்தாக வேண்டும்..
ஆனால், தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் சிலையை நிறுவிய சில ஆண்டுகளுக்குப் பின்பு அது பொருட்படுத்தப்படாத நிலையில் கிடக்கிறது, அது நிறுவப்பட்டிருக்கும் பாறைக்குச் செல்ல இன்றும் வழி மறுக்கப்பட்டு வருகிறது. பூம்புகார் படகு போக்குவரத்துக் கழகம் பொறுப்பெடுத்து இருந்தாலும் அதையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிற நிலையில் ஆர் எஸ் எஸ் இன் பொறுப்பில் இயங்கும் விவேகானந்தர் கேந்திரம் திருவள்ளுவர் சிலைக்குப் படகு போய் வருவதைத் தடை செய்திருக்கிறது.கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலான இத்தகைய திமிர் பிடித்த ஆர்எஸ்எஸ்-இன் செயல்களைக் கண்டு தமிழ் ஆர்வலர்களும் அறிஞர்களும் வெகுமக்களும் பெருமளவில் மன வருந்தவே செய்கின்றனர்.
திருவள்ளுவர் சிலையின் முதன்மையைக் குறைப்பதற்காக எண்ணற்ற சூழ்ச்சிகள் நடந்து வருகின்றன. தமிழ்நாட்டின் தேசிய அடையாளமாகக் குமரி முனையில் நிறுவப்பட்டிருக்கும் ஐயன் திருவள்ளுவரின் சிலை தமிழ்நாட்டின் முதன்மை மதிப்புக்குரியதாக அமைக்கப்பட வேண்டும் என ஆர்வலர்கள் அனைவரும் கருதுகிறோம்.
இதற்கிடையில், விவேகானந்தர் மண்டபம் உள்ள பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டிருக்கிற பாறை வரை 97 மாத்திரி(மீட்டர்) தொலைவுக்கு 4 மாத்திரி (மீட்டர்) அகலத்திற்கு 37 கோடி உருபாய் செலவில் ஓராண்டிற்குள் ஒரு கண்ணாடி பாலத்தை அமைப்பதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. அதற்காக அடிக்கல்லும் நாட்டியிருக்கிறது. அவ்வாறு செய்தது மிகவும் கேடானது மட்டுமின்றி.. திருவள்ளுவர் சிலையையே ஆர் எஸ் எஸ் நிறுவனமான விவேகானந்தர் கேந்திரத்திடம் தாரை வார்க்கிற செயல்பாடாகவே அமைந்திடும்.
திருவள்ளுவர் சிலைக்குப் போக வேண்டும் என்றால் விவேகானந்தர் மண்டபத்திற்குப் போய் விட்டுத்தான் வர வேண்டும் என்கிற கட்டாயத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. அப்படியான நிலையில் பெரும்பான்மையானவர்கள் திருவள்ளுவர் சிலைக்குப் போவதையே தவிர்க்கும் சூழல் ஏற்படும் என்பதோடு மட்டுமன்றி, ஏதோ விவேகானந்தர்தான் முதன்மையானவர் போல அடையாளப்படுத்தித் திருவள்ளுவரைத் தாழ்த்துகிற நிலையே உருவாக்கப்படுகிறது..
எனவே, பத்தோடு பதினொன்றாக திருவள்ளுவர் சிலையைப் போகிற போக்கில் பார்க்கிறபடியான நிலையை விடுத்துத் தனியே ஐயன் திருவள்ளுவர் சிலைக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் குமரிக் கடற்கரைப் பகுதியில் இருந்து திருவள்ளுவர் சிலைக்குப் போவதற்குத் தனியே ஒரு பாலம் அமைத்திட வேண்டுமென்று அனைவரும் வலியுறுத்துகிறோம்.
கடற்கரையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு அமைக்கப்படுகிற பாலத்தை உலகின் சிறப்புக்குரிய பாலமாக அமைத்து விட்டால் இன்னும் மிக சிறப்பான ஈர்ப்பைத் திருவள்ளுவர் சிலைக்கு தர இயலும்.
அப்பாலத்தில் நடந்து செல்வதே சுற்றுலாத் தன்மைக்கும் சிறப்புத் தரும் வகையில் சிறப்பானதொரு பாலத்தை அமைப்பதுடன்.. கட்டணம் கூடத் தமிழ்நாடு அரசே பெற்றுக் கொள்ளுகிறபடி அமைக்கலாம்..
தமிழ்நாட்டிற்கு வெளியே இருந்து வருகிற அனைவருக்கும் திருக்குறளைப் பற்றியும் திருவள்ளுவரைப் பற்றியும் தமிழ் மொழியின் சிறப்புகள் பற்றியும் எடுத்து இயம்புகிற வகையில் திருவள்ளுவர் சிலைக்கு அடியில் உள்ள மண்டபத்தில் காட்சிப் பொருளாகவும் கையேடுகளாகவும் விற்பனை அடிப்படையில் ஏற்பாடுகளை அமைத்தாக வேண்டும்.
தமிழ் மொழி தமிழ் இனத்தின் மீது அக்கறையற்ற பிறர் எவரும் செய்ய முனையாத மேற்படிச் செயல்திட்டத்தைத் தமிழ்நாடு அரசு உடனே செய்திட வேண்டும். திருவள்ளுவரின் தமிழியச் சிறப்புகளை ஆர் எஸ் எஸ் கவர்ந்து கொண்டு களவாடுவதற்கு வழி அமைத்திடாத வகையில் விரைந்து செயல்பட வேண்டும் என்று தமிழ் அறிஞர்கள் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் முறையீடு செய்கிறோம்.
திருக்குறள் பேரவையின் ஒருங்கிணைப்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு கடந்த மே 9 ஆம் நாள் கூடிடப் பெருந்திரள் முறையீட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழறிஞர்கள், திருக்குறள் ஆர்வளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளுவர் மன்றங்கள், பெரியாரியச் செயல்பாட்டாளர்கள், திருக்குறள் இயக்கத்தினர், தமிழிய உணர்வாளர்கள் சார்பான கூட்டறிக்கை:
- கலைஞரின் நீண்டநாள் கனவான கன்னியாகுமரி ஐயன் திருவள்ளுவர் சிலையின் சிறப்பைக் குறைக்கும் வகையில் ஆர் எஸ் எஸ் ( சார்பு ) இயக்கமான விவேகானந்தர் கேந்திராவுக்கு முதன்மை இடம் தந்து திராவிட மாடல் அரசு செயல்படக் கூடாது!
- கன்னியாகுமரி ஐயன் திருவள்ளுவர் சிலைக்குக் கடற்கரையிலிருந்து தனியே பாலம் அமைத்திட வேண்டும்
- விவேகானந்தர் மண்டபப் பாறைக்கும் திருவள்ளுவர் சிலையுள்ள பாறைக்கும் இடையிலான பாலம் அமைப்பதைத் தமிழ்நாடு அரசு தவிர்க்க வேண்டும்!
மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்களுக்குத் திருக்குறள் நெறியர்கள் அனைவரும் இணைந்து இந்தக் கூட்டறிக்கையை அனுப்பப் பெற்றது.
- பொழிலன்