திராவிட இயக்கத் தமிழர் பேரவை, 2007 ஜனவரி 22ஆம் நாள், சென்னை கலைவாணர் அரங்கத்தில் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு, பேரவையின் அன்றைய பொதுச்செயலாளரும், இன்றைய தலைவருமான பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களின் தலைமையில் பேரவையில் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறோம்.
நம்இனமானத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் சமூகநீதி, சுயமரியாதைக் கொள்கைகளைத் தடுமாறாமல் ஏந்திக் கொண்டு, பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் வழியில் பத்தொன்பது ஆண்டுகளை நிறைவு செய்துகொண்டு, இயங்கிக் கொண்டு இருக்கிறோம்.
(இளந்தலைவர் உதயநிதி கைதுக்காக பொதுச் செயலாளர் சிற்பி கைது)
இந்த பத்தொன்பது ஆண்டுகளில் மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள், பரப்புரைகள், போராட்டங்கள், கருத்தரங்கங்கள், பயிற்சி வகுப்புகள் என இடைவிடாமல் நாம் இயங்கிக் கொண்டிருந்தோம் என்றாலும், இடையிடையயே சிறுசிறு தொய்வுகளும் இருக்கத்தான் செய்தது, ஆனால் நாம் துவண்டு விடவில்லை.
நம் பேரவைத் தலைவர் எழுதிய 'இதுதான் ராமராஜ்ஜியம்' என்ற நூலைக் 'கருஞ்சட்டைப் பதிப்பகம்' வெளியிட்டதை நாம் அறிவோம். அந்நூலில் அவர் அடையாளம் காட்டிய ராமராஜ்யத்தை, இந்திய ஒன்றியத்தில் நிறுவ ஆர்எஸ்எஸ் 100 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டு, அதற்கான வேலைகளைச் செய்து வருகிறது. பல்வேறு கட்சிகளை ஊடுறுவியும், பிளந்தும், விலை கொடுத்து வாங்கியும் நாடாளுமன்றத்தில் தன்பலத்தைப் பெருக்கிக் கொண்டு இருக்கிறது பாஜக. அதேவேளையில் பாசிச, சர்வாதிகார வெறி அதன் பார்வையில் இருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.
டில்லிதான் அப்படி என்றாலும், தமிழ்நாடும் இன்று யார் ஆட்சியில் இருக்கிறது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. சட்டப்படி நடிகர் ஜோசப் விஜய்தான் முதல்வர். ஆனால் அவர் சட்டமன்றத்திலும் மனந்திறந்து பேசமாட்டார், செய்தியாளர்களிடமும் பேசமாட்டார், அரசின் திட்டங்கள் என்ன? எப்படி நடைமுறைப் படுத்தப்பட இருக்கிறது என்று எதைப்பற்றியும் பேசாமல், ஒரு திரைமறைவில் இருக்கிறார் முதல்வர் என்பதே ஆபத்திற்கான அறிகுறியாகத் தெரிகிறது.
சொல்லப் போனால் பாஜகவின் ஆசைகள் நிறைவேறுகின்றன. தமிழ்நாட்டின் உரிமைகள் பறி போகின்றன. எதிர்கட்சித் தலைவர் உதயநிதி அவர்கள் பேசாத ஒன்றைப் பேசியதாகச் சொல்லி ஆபாசத்தை அரங்கேற்றி கைது செய்யும் அளவுக்கு ஒரு சர்வாதிகாரம் தமிழ்நாட்டிலும் தலைதூக்கத் தொடங்கி உள்ளது.
தோழர்களே! சர்வாதிகாரம் நிலைபெற்றதாக வரலாறு இல்லை. மக்கள் சக்தி தோற்றதாகவும் வரலாறு இல்லை. நாம் நெருக்கடியான காலத்தில் இருக்கிறோம்.
திராவிட இயக்கம் தியாகத்தால் வளர்ந்த இயக்கம். திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் வழியும் அதுவாகத்தான் இருக்க வேண்டும்.
பேரவையின் துணைப் பொதுச்செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்களுடன் பேசுங்கள். மாவட்டச் செயலாளர்கள்தான் ஓர் இயக்கத்தின் வலிமையான தூண்கள். இன்றைய சமூக/அரசியல் சூழ்நிலையில் பேரவையின் செயல்பாடுகள் வேகமெடுக்க வேண்டும், வலிமை பெற வேண்டும்.
மாவட்டம் தோறும் ஒன்றிணைவோம்! திட்டமிடு வோம்! செயல்படுவோம்! கலந்துபேசுவோம்! தலைவர் சுபவீ அவர்களுடன் இணைந்து பணியாற்றுவோம்!
- சிற்பி செல்வராசு,பொதுச்செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை