நாம் மொழியால் தமிழர்கள், இனத்தால் திராவிடர்கள். ஆனால் பிரிந்து கிடக்கின்றோம். அதைத்தான் பார்ப்பனியம் எதிர்பார்க்கிறது. சாதியால், மதத்தால் பிரித்து ஆளநினைப்பது அதன் வஞ்சகம். இப்பொழுது காலம் மாறிக்கொண்டு இருக்கிறது.
திராவிடர்களிடம் திராவிட உணர்வு இருக்கிறது. இருந்தாலும் மாற்று முகாம்களில் இருந்து வெளியே வரும் தோழர்களைத் தடுமாற விடாமல் கரம் நீட்டி வரவேற்கிறது “திராவிட நட்புக் கழகம்”.
தந்தை பெரியாரின் சமூக நீதிதான், நட்புக் கழகத்தின் கொள்கை. திராவிடத் தோழர்கள் பூட்டிய அறைக்குள் பேசிக் கொண்டு இருப்பவர்களன்று, செயல்படுபவர்கள்.
திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் வழியில், கார்ல் மார்க்ஸ் சொல்வதைப் போல ஒரு ‘பூதமாக ‘ எழுந்து வருகிறது திராவிட நட்புக் கழகம்.
பொதுச் செயலாளரின் தேர்ந்த வழிகாட்டல், பொள்ளாச்சி மா. உமாபதி, சிற்பி செல்வராஜ், ஆ. சிங்கராயர், காசு. நாகராசன் உள்ளிட்டவர்களால் வளர்ச்சி பெற்றுக் கொண்டு இருக்கிறது, நட்புக் கழகம்.
இளைஞர்களைக் கொள்கையால் ஈர்த்து, மக்களிடையே பெரியாரிய மக்கள் இயக்கமாக நாளை உருவாகும் ஆற்றலுக்கு உரியது திராவிட நட்புக் கழகம்.
கடவுள் இருக்கிறதா இல்லையா என்பதல்ல கேள்வி.
சாதி ஒழிய வேண்டும், பெண் விடுதலை வேண்டும், அனைவருக்கும் கல்வி வேண்டும், சமூகநீதி வேண்டும், இதுதான் தந்தை பெரியாரின் பார்வை.
இன்று நாடு ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க கைகளில் சிக்கிக் கொண்டு இருக்கிறது. சமூக நீதிக்கு அச்சுறுத்தல் இருக்கிறது.
பாசிசத்தை, சர்வாதிகாரத்தை பெரியாரிய, முற்போக்காளர்கள் ஏற்க மாட்டார்கள், என்றும் எதிர்ப்பார்கள்.
அதற்கான மக்கள் சக்தி, மக்களிடம் இருந்து உருவாக வேண்டும். அப்படியொரு நிலையைத் திராவிட இயக்கத் தமிழர் பேரவையும், திராவிட நட்புக் கழகமும் நாளை உருவாக்கும்.
ஆம்! இவை இரட்டைக் குழல் துப்பாக்கி.