‘வீழ்வது இழிவன்று, வீழ்ந்தே கிடப்பதுதான் இழிவானது’ என்னும் தொடரை நினைவுபடுத்திக் கொண்டு, மீண்டும் மூன்றாவது முறையாக எழுந்துள்ளது கருஞ்சட்டைத் தமிழர்.
இதழ் இரண்டு முறை இடைநின்றதற்கு என்ன காரணம் என்று பலரும் கேட்டனர். ஒரே காரணம்தான், பொருளாதாரப் பின்னடைவு மட்டுமே அது என்பதை உற்ற நண்பர்கள் அறிவார்கள்.
ஆண்டுக் கட்டணங்கள் செலுத்தியிருந்த போதும், இதழ் தொடர்ந்து வரவில்லையே என்று சினம் கொள்ளாமல், எங்கள் நிலை புரிந்து பொறுத்துக் கொண்ட அனைவரிடமும் எங்களின் மன்னிப்பைக் கோருகின்றோம். உங்களின் பெருந்தன்மைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
எங்கள் பேரவையின் சார்பில் அண்மையில் வெளியாகியுள்ள, திராவிட இயக்க நூற்றாண்டுச் சிறப்பு மலர் விளம்பரதாரர்கள் மூலமே, கருஞ்சட்டைத் தமிழரை மறுபடியும் மீட்டெடுத்துள்ளோம். மலர் வெளியீட்டு விழா மேடையில், ஒவ்வொரு மலருக்கும் ரூ.1000/- பெற்றுத் தந்த, அன்புத் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும், மேனாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களும் செய்த பேருதவிகளாலும், இதழ் மீண்டும் வந்துள்ளது. அனைவருக்கும் நன்றியுடையோம்!
மீண்டும் இதுபோன்ற விபத்து நேர்ந்துவிடக்கூடாது என்னும் கவனத்தோடு, இதழுக்கான பத்தாண்டு உறுப்பினர் கட்டணங்களை(ரூ.1000)ப் பெறுகின்ற பணியைத் தொடங்கி உள்ளோம்.
கருத்துப் பரப்புரை என்பது எளிய பணிதான்,எனினும் எந்த ஒன்றுக்கும் பொருளாதாரப் பின்புலம் என்பது மிகத் தேவையான ஒன்றாக உள்ளது. அதனை நினைவில் கொண்டு, நிலையான இருப்புத் தொகை ஒன்றினை உருவாக்கும் சிந்தனையோடும் உள்ளோம்.
ஒவ்வொரு இயக்க இதழும், அவ்வவற்றிற்குரிய ஒரு வட்டத்தில் தன்னாலியன்ற சிறு பங்களிப்பையேனும் செய்து கொண்டே இருக்கும். அவ்வகையில், சமூக நீதியை மையமாகக் கொண்ட, திராவிட இயக்கக் கருத்தியல்களைச் சிறிய அளவிலேனும் பரப்பிக் கொண்டே இருப்பதற்கு, இவ்விதழ் உறுதியாகப் பயன்படும்.
திராவிடத்திற்கு எதிரான, மறைமுகப் பார்ப்பன ஆதரவுச் சக்திகள், தொடர்ந்து தம் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், ஆரியத்திற்கு எதிர்ச் சொல்லாகவே நடைமுறையில் உணரப்பட்டிருக்கும் திராவிடம் என்னும் கருத்துருவை முனைப்போடும், முழு உறுதியோடும் கொண்டு செல்லும் பணியைக் கருஞ்சட்டைத் தமிழர் தொடர்ந்து செய்யும்.
ஆரியத்தால் அமிழ்த்தப்பட்டு, திராவிடத்தால் எழுந்து நிற்கும் தமிழினம், மானமும் அறிவும் மிக்க இனமாய் என்றென்றும் திகழ்ந்திட, தன்னாலியன்ற பணியைத் தமிழர் இதழ் தடையின்றிச் செய்துவரும்!
- கருஞ்சட்டைத் தமிழர்
--------------------------------------------------------------------------------------------------------------------
வேதனை தருகிறது
ஈழப் போராட்டச் செய்திகளைத் தொடக்க காலத்திலே தமிழ் நாட்டுக்குக் கொண்டு வந்தவர். இறுதிவரையில் ஈழ ஆதரவில் விலகாமல் நின்றவர். மதிப்பிற்குரிய இரா. ஜனார்த்தனம் அவர்களின் மறைவு நம்மை ஆழ்ந்த வேதனையில் ஆழ்த்துகிறது.