திராவிட இயக்கத் தமிழர் பேரவை திருச்சி மாநகரில் நடத்திய 23-6-2024ஆம் நாள் பொதுக் குழுவில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. இதில் 3 ஆம் தீர்மானம், சுயமரியாதை இயக்க நூற்றாண்டை முன்னிட்டுக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவைகள் மூலம் கருத்துப் பரப்பும் பணியை பேரவை முன்னெடுக்க வேண்டும் என்பதைச் சொல்கிறது. சுயமரியாதைப் பரப்புரை என்றால் என்ன? 5 ஆம் தீர்மானத்தைத் தவிர 1, 2, 4 ஆகிய தீர்மானங்களில் இதற்கான விடை இருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.
சாதி, தீண்டாமை போன்றவை சமூக ஒடுக்குமுறை. 'நீட்' நுழைவுத் தேர்வும் கூட கல்வித் துறையில் நுழைக்கப்பட்டு இருக்கும் தீண்டாமையே! இவை ஒடுக்குமுறையின் ஆதிக்க வடிவம். இவைகளின் மூலவேர் வேதகாலத்தில் இருந்து தொடங்கியது.அப்போதே ஆரியப் பார்பனியத்திற்கு எதிரான சமூகநீதிப் போராட்டத்தை புத்தர் தொடங்கினார், அது இன்றுவரை நீடிக்கிறது. ஆகவே பார்ப்பனியம் சமுக அநீதிக்கான பின்புலமாக இருந்து வருகிறது.
1920 களில் வடநாட்டில் ஆர்.எஸ்.எஸ் என்ற இந்துத்துவா இயக்கம் சித்பவன பார்ப்பனர்களின் தலைமையில் இயங்கி வரும் பாசிச இயக்கம். அதற்குப் பல துணை அமைப்புகளும் இருக்கின்றன.
தென்னாட்டில் டாக்டர் நடேசனாரைச் செயலாளராகக் கொண்ட 'திராவிடர் சங்கம்', 'தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்', 'திராவிடர் கழகம்', திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற வழியில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் தலைமையில் இன்று திராவிடக் கருத்தியலோடு 'திராவிட இயக்கத் தமிழர் பேரவை' என்ற அமைப்பாகக் களத்தில் அணிதிரண்டு இருக்கிறோம்.
தந்தை பெரியாரால் பயிற்றுவிக்கப்பட்டு, பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கருத்தியலில் உரம் ஏற்றப்பட்டது திராவிட இயக்கத் தமிழர் பேரவை.
கடந்த 15 ஆண்டுகளில் திராவிட, சுயமரியாதை, பகுத்தறிவு, சமூக நீதிகளுக்கான பணிகளை மேற்கொண்டோம், அமைப்புப் பணிகளோடு.
ஆர்.எஸ்.எஸ். வன்முறையில், பிற்போக்குக் கருத்தியலில் வலிமை வாய்ந்தது.
அறவழியில் அதை எதிர்க்க நாமும் நம் அமைப்பை பலப்படுத்தவும், விரிவு படுத்தவும் வேண்டும்.
மாவட்டங்களில், ஒன்றியங்களில், நகர்புறங்களில், கிராமங்களில் எல்லாம் பேரவையின் கிளைகள் உருவாக்க வேண்டும். உறுப்பினர்கள் பெறுகவேண்டும்.
வகுப்புகள், கருத்தரங்கங்கள், பொதுக் கூட்டங்கள் என்று மாவட்டம் தோறும் திராவிடச் சமூகநீதிக் கருத்துகளைக் கொண்டு செல்ல வேண்டும்.
எதிரியை எளிதாக எடை போட்டுவிடக் கூடாது என்பதை உணர்த்தி, நம் இயக்கப் பணிக்கு கூடுதல் உத்வேகம் கொடுத்திருக்கிறது திருச்சிப் பொதுக்குழு.
இயக்கப் பணி செய்வோம் – அதை எழுச்சியுடன் செய்வோம்!
- சிற்பி செல்வராஜ்