மனித சமூகத்தைச் சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் பிளவு படுத்துகிற பாசிச மதவாத ஒன்றிய அரசின் ஆட்சியில் இருக்கக் கூடிய இந்தச் சூழலில், தந்தை பெரியாரின் வழி நின்று சமத்துவம் மற்றும் சமூக நீதிக்காக போராடுகின்ற அமைப்புகளெல்லாம், ஒருங்கிணைந்து செயல்படவேண்டிய காலகட்டத்தில் தமிழ்ச் சமூகம் உள்ளது.
சமூக நீதிக்கான தவறான விளக்கங்களை சீமான், மணியரசன் போன்றோர் இன்றைய இளைஞர்களிடம் புகுத்திக்கொண்டிருக்கிறார்கள். தமிழர் தலை நிமிரக் காரணமான தந்தை பெரியாரையே தமிழர் இல்லை என்று அவதூறுகளைச் சீமான் பரப்புகிறார். தமிழர்களின் சிந்தனையை மடைமாற்ற ‘தமிழ் இந்து’ போன்ற ‘அரிய’ தத்துவக் குழப்பங்களை மணியரசன் ஏற்படுத்துகிறார். சங்கிகளாகவே மாறிய இவர்கள் எடுக்கும் பரப்புரைகளை எச்.ராஜா போன்றவர்கள் வழிமொழிகிறார்கள்.
இந்தச் சூழலில், தந்தை பெரியாரையும் புரட்சியாளர் அம்பேத்கரையும் நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டியக் கட்டாயம் உருவாகி உள்ளது.
திராவிட இயக்கத் தமிழர் பேரவை கடந்த காலத்தில் அறிவுத்தளத்தில் பல்வேறு கருத்துருவாக்கங்களைச் செய்துள்ளது. பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களுடைய தலைமையில் சமூகத் தளத்தில் சமரசமின்றித் தொடர்ந்து போராடிக்கொண்டும், செயல்பட்டுக்கொண்டும் இருக்கிறது. தமிழ்நாடு திராவிடர் கழகம் துடிப்புமிக்க இளைஞர் படையோடு திராவிடக் கோட்பாடுகளை முன்னிறுத்தி கா.சு.நாகராசன் அவர்களுடைய தலைமையில் மேற்கு மண்டலத்தில் இயங்கி வருகிறது. இந்த இரு அமைப்புகளும் இணைவது என்பது உள்ளபடியே ஒரு பெரும் மகிழ்ச்சிக்குரிய செய்தி.
சமூக நீதிக்கு எதிராக சங் பரிவார அமைப்புகள் பல்வேறு தளங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இட ஒதுக்கீட்டைப் பற்றிய புரிதல் பிற்படுத்தப்பட்ட இளைஞர்களிடையே இல்லை. ஒன்றிய அரசு இதுவரை 8% பட்டியலின ஒதுக்கீட்டையும் 12% பிற்படுத்தப்பட்ட ஒதுக்கீட்டையுமே நிறைவேற்றி உள்ளது. இன்னும் 80% வேலை வாய்ப்புகள், உயர்கல்வி, அதிகாரப் பகிர்வு பார்ப்பனியர் வசமே உள்ளன. இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியத் தேவை உள்ளது.
பெரும் மூளை பலமும் மனித பலமும் உள்ள அமைப்பே இவற்றைச் செய்து முடிக்க முடியும். இது காலத்தின் தேவை. இந்த இணைப்பு ஒரு முன்னோட்டமே. இன்னும் பல பெரியாரிய அம்பேத்கரிய அமைப்புகள் தயக்கமின்றி இணைய வேண்டும். இம்மண்ணில் சமூக நீதியும் சமத்துவமும் தழைக்கச் செய்யவேண்டும்.
அதனால், திராவிட இயக்கத் தமிழர் பேரவையில், தமிழ்நாடு திராவிடர் கழகம் இணைவதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.
- வெண்மணி, தலைவர், திராவிடத் தமிழர் கட்சி