குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் 21.07.2025 அன்று பதவி விலகியதைத் தொடர்ந்து இந்தப் பதவிக்கு 09.09.2025 அன்று தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

cp radhakrishnan speechஆளும் பா.ஜ.க கூட்டணியின் வேட்பாளராக தற்போதைய மராட்டிய ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்களும், இந்தியா கூட்டணியின் வேட்பாளராக உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி அவர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். பா.ஜ.கவின் வேட்பாளராக சிபி இராதாகிருஷ்ணன் அவர்கள் நிறுத்தப்பட்டுள்ளது திமுகவிற்கு தரப்பட்டுள்ள நெருக்கடியாக பார்க்கப்படுகிறது. தமிழரான சி. பி. இராதாகிருஷ்ணனுக்கு திமுக ஆதரவளிக்கவில்லை என்று பரப்புரை செய்வதன் மூலம் திமுக தமிழர்களுக்கு எதிரான கட்சி என்று நிறுவ பாஜக முயல்கிறது. மேலோட்டமாக இவ்வாறு பார்க்கப்பட்டாலும் இதற்கு பின்னால் பாஜகவின் மிகப்பெரிய சதி திட்டம் ஒன்று இருக்கிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியது. ஆனால் தேர்தலுக்குப் பிந்தைய திராவிட மாடல் அரசின் செயல்பாடுகளின் காரணமாகவும், அப்பகுதியின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மேனாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் தீவிர களப்பணியின் காரணமாகவும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2024 நாடாளுமன்றத் தேர்தல்களில் மேற்கு மாவட்டங்களை தி.மு.க முழுமையாக கைப்பற்றி தனது பலத்தை நிரூபித்துள்ளது. இந்த சூழலில் அங்கே பெரும்பான்மையாக வாழும் சமூகத்தைச் சேர்ந்த சி.பி.ஆர் அவர்களை வேட்பாளராக நிறுத்தி, அவருக்கு தி.மு.க ஆதரவளிக்காத பட்சத்தில் அக்கட்சியை அந்த சமூகத்தினருக்கு எதிரான கட்சி என்று பரப்புவதன் மூலம் எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மேற்கு மாவட்டங்களில் தி.மு.கவை தோற்கடித்து விடலாம் என்று பா.ஜ.க கணக்கு போட்டு சி.பி.ஆர் அவர்களை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. ஒருபோதும் கள அரசியலில் ஈடுபடாத நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் போன்றவர்களுக்கு ஒன்றிய அரசின் அதிகாரமிக்க அமைச்சர் பொறுப்புகளைக் கொடுத்து விட்டு எவ்வித அதிகாரமும் இல்லாத குடியரசு துணைத் தலைவர் பொறுப்புக்கு சி.பி.ஆர் அவர்களை நிறுத்தும் பா.ஜ.கவின் சூழ்ச்சி அம்மக்கள் நன்கு உணர்ந்து இருக்கின்றனர்.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்தது, கீழடி அகழாய்வு அறிக்கையை ஏற்க மறுத்தது, தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறைக்கு அளிக்க வேண்டிய நிதியை விடுவிக்க மறுத்தது, நீட் தேர்வு விலக்கு போன்ற தமிழர்களின் வாழ்வாதார பிரச்சனைகள் எவற்றிலும் தமிழ்நாட்டிற்கு ஆதரவாக குரல் கொடுக்காத சி.பி.ஆர் அவர்களை தமிழர் என்ற காரணத்திற்காக மட்டும் எவ்வாறு ஆதரிக்க முடியும்‌ என்பதே தி.மு.கவின் கேள்வி.

“இது திருவள்ளுவர், பாரதி, பெரியார், கலைஞர் ஆகியோரின் மண். எப்போதும் போராடி வருகிற பாரம்பரியம் நிறைந்த இந்த மண்ணில் நான் இப்போது இருக்கிறேன். போராட்ட குணத்தை இந்த மண் எப்போதும் விடுவதில்லை” என்று தமிழ்நாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும் போது உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி பி.சுதர்சன் ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ்நாடு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கவில்லை” என்று மும்பையில் நடைபெற்ற ஹெட்கேவர் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரையில் சி.பி.ஆர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கண்ட இரண்டு சொற்பொழிவுகளின் மூலம் தமிழ்நாடு குறித்த இரண்டு குடியரசுத் தலைவர் வேட்பாளர்களின் பார்வையை நாம் அறிந்து கொள்ள முடியும். சிலப்பதிகாரம், தொல்காப்பியம் போன்ற சங்க இலக்கியங்களில் தமிழ்நாடு பற்றி விளக்கப்பட்டிருப்பதை மறைத்ததன் மூலம் சி.பி.ஆர் யாருக்கு ஆதரவானவர் என்பதை புரிந்து கொள்ள முடியும். தமிழ்நாட்டின் மேன்மையை உணர்ந்து போற்றும் உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி பி.சுதர்சன் ரெட்டியை தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிப்பது தான் சரியான முடிவாக இருக்க முடியும்.

கோவையில் 1998 ஆம் ஆண்டு மதரீதியான வன்முறையை திட்டமிட்டு கட்டவிழ்த்ததன் காரணமாகவே 1998 மற்றும் 1999 மக்களவைத் தேர்தலில் கோவையில் வெற்றி பெற்றவர் சி.பி.ஆர். அது மட்டுமின்றி சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலைக்கு காவி பயங்கரவாதிகள் விலை வைத்த போது, ஆளுநர் பொறுப்பில் இருந்து கொண்டே அதை ஆதரித்துப் பேசியவர் தான் சி.பி.ஆர். இவ்வாறு மதவாத வெறுப்பு அரசியலின் பிரதிநிதியாகவே சி.பி.ஆர்‌ களத்தில் நிற்கிறார்.

தங்களிடம் சொல்லாமல் ஒரு தீர்மானத்தை விவாதத்திற்கு அனுமதி அளித்து விட்டார் என்பதற்காகவே முந்தைய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அவர்களை மிரட்டி பதவி விலக வைத்ததுடன் தற்போது அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் கூட தெரியாத நிலை நிலவும் இந்த சூழலில், மதச்சார்பற்ற இந்தியா கூட்டணியின் வேட்பாளர் உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி பி.சுதர்சன் ரெட்டி வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும், இந்தியாவின் பன்முகத் தன்மையையும் காப்பாற்ற இயலும்.

- வழக்கறிஞர் இராம.வைரமுத்து

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.