மாநாடு தொடங்குவதற்கு வெகு நேரத்திற்கு முன்பே, கட்சியின் தொண்டர்கள் சாரை சாரையாக மாநாட்டுத் திடல் நோக்கி வந்தார்கள். அதே வேகத்தில் கட்சியின் தலைவர் பேசத் தொடங்கும் முன்பே, சாரை சாரையாகத் தொண்டர்கள் வெளியேறினார்கள்.
இதுதான் மதுரையில் நடைபெற்ற த.வெ.க மாநாட்டின் கதைச் சுருக்கம்!
கட்சியின் தலைவர் விஜய், கொஞ்சம் முன்னேறி இருக்கிறார்! பாசிசம் - பாயாசம் என்னும் அடுக்குத் தொடரிலிருந்து பாசிசம் - பாய்சன் என்னும் இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை, அங்கிள், அங்கிள் என்று கூட்டம் முழுவதும் குறிப்பிட்டார்! (ஒரு கட்சியின் தலைவர், தங்கள் கட்சியின் அரசியல் மாநாட்டில் பேசும் போது பின்பற்ற வேண்டிய நாகரிகம் இதுதான் போலிருக்கிறது) ஆனால் மோடியைப் பற்றிக் குறிப்பிடும்போது மட்டும், மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என்றும், மோடிஜி என்றும் அழைத்தார்!
அரசியலிலும், திரையுலகிலும் தனக்குப் பிடித்தவர் எம்ஜிஆர் என்றார் ! அண்ணன் கேப்டன் விஜயகாந்த் என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டார்! ( ஏதேனும் பேசி, அந்த வாக்குகளைப் பெற்று விட முயற்சி செய்யும் பரிதாபம்)
2026 தேர்தலில் த.வெ.க.விற்கும், திமுகவிற்கும் தான் நேரடிப் போட்டி என்று அறிவித்தார்! மாநாட்டில் கலந்து கொண்ட தொண்டர்கள் பலருக்கும் தமிழ் தெரியாதோ என்னவோ, இடையிடையே ஆங்கிலத்தில் பேசி விளக்கினார்.
தான் பேசத் தொடங்கும் போதே, ஒரு பெரிய உண்மையை மாநாட்டில் போட்டு உடைத்தார்! வேட்டையாடுவதற்கு மட்டும்தான் சிங்கம் வெளியில் வருமாம்...... வேடிக்கை பார்ப்பதற்கு எல்லாம் வராதாம்!எதிரில் அமர்ந்திருந்த சிங்கக் குட்டிகளையும், சிங்கப் பெண்களையும் வேட்டையாடச் சிங்கம் இப்போது வெளியில் வந்திருக்கிறது போலிருக்கிறது!
ஊழலைப் பற்றி எல்லாம் உரத்துப் பேசிய நடிகர் விஜய், ஒரு முறை கூட, மறந்தும் கருப்புப் பணம் பற்றி எதுவும் பேசவில்லை!
கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஒலிபெருக்கியில் திரும்பத் திரும்பச் சில முழக்கங்களை எழுப்பிக் கொண்டே இருந்தார்! அந்த முழக்கங்கள் இவைதான் -
"ஏறாதீர், ஏறாதீர், மின்கம்பங்களில் ஏறாதீர்!
"கிழிக்காதீர், கிழிக்காதீர், தரை விரிப்புகளைக் கிழிக்காதீர்"
நல்ல மாநாடு! நல்ல முழக்கங்கள்!!
- சுப.வீரபாண்டியன்