சில நாள்களுக்கு முன்பு மனநலம் குன்றியவர் போல் காணப்பட்ட ஒருவர் ஶ்ரீரங்கத்தில் உள்ள அய்யா பெரியாரின் சிலையை உடைக்கும் நாள்தான் இந்து எழுச்சி நாள் என்று ஒரு கூட்டத்தில் பேசினார். ஒரு பெரியார் சிலை, இந்து எழுச்சியையே தடுத்து விட்டது என்பது அப்போதுதான் நமக்கும் புரிந்தது. சிலையை உடைக்க வேண்டும் என்று அவர் பேசியதில் நமக்கு ஒன்றும் பெரிய வருத்தமில்லை. பல ஆண்டுகளாகப் பலர் இப்படிப் பேசிக் கொண்டேதான் இருக்கின்றனர். சில ஊர்களில் சிலைகளைச் சிதைத்தும் இருக்கின்றனர். ஆனால் எந்த ஒன்றும் இன்றுவரையில் பெரியாரின் புகழைக் குறைக்கவில்லை. மாறாக, பன்மடங்கு அவர் புகழ் கூடி இருக்கிறது.

periyar statue at srirangamசிலையை உடைக்க வேண்டும் என்று சொன்னவரை இப்போது காவல்துறை தேடிக் கொண்டிருக்கிறது. ஒரு நண்பர் எழுதி இருப்பதைப் போல, பெரியாரின் சிலை அதே இடத்தில்தான் இப்போதும் இருக்கிறது. உடைக்க வேண்டும் என்று பேசிய வீராதி வீரரைத்தான் காண முடியவில்லை.

அவர் எங்கோ ஓடி ஒளிந்து விட்டார். போகட்டும், நம்மைப் பொறுத்த அளவு இந்த நிகழ்வு இன்னொரு விதத்தில் மகிழ்வையே தந்து இருக்கிறது. இதன் மூலம் மூன்று நன்மைகள் நடந்திருக்கின்றன.

கடவுள் நம்பிக்கை உடைய, திராவிடர் கழகத்தைச் சேராத பொதுமக்களில் பலரும் இதனை எதிர்த்துக் கோபத்தோடு பேசுவதைப் பார்க்க முடிந்தது.

இன்னொரு பக்கம், காவல்துறை அவரைத் தேடுகிறது என்று சொன்னதற்குப் பயந்து போய்ச் சிலர் காணொலிகளில் கதறும் காட்சியையும் பார்க்க முடிந்தது. இரண்டையும் தாண்டி, சில நடுநிலை முகமூடிகள் இப்போது கிழிந்து தொங்குகின்றன. ஒவ்வொரு பூனைக் குட்டியும் வெளியில் வருகிறது.

இதுபோன்ற வீண் வீராப்புப் பேச்சுகள் மக்களிடத்தில் ஒரு வெறுப்பைத்தான் ஏற்படுத்தும். மேலும் பெரியார் அப்படிச் சொன்னது சரியா, தவறா என்னும் விவாதத்தையும் வளர்த்தெடுக்கும்.

பெரியார் சிலையை ஏன் கோயில் வாசலில் வைக்க வேண்டும் என்று சிலர் கேட்கின்றனர். கோயிலுக்குப் போகாதே என்று சொன்னவரும் பெரியார்தான். கோயிலுக்குப் போக வேண்டும் என்று விரும்புகிறவர்களைத் தடுக்காதே, அது அவர்கள் உரிமை என்று சொன்னவரும் பெரியார்தான். எனவே பெரியார் சிலையை வைப்பதற்குப் பொருத்தமான இடங்களில் ஒன்று கோயில்தான்.

திண்டுக்கல்லில் ஒரு மாதா கோயிலுக்கு எதிராகவும் பெரியார் சிலை, அதே வாசகங்களோடு வைக்கப்பட்டு இருக்கிறது. ஒரு சில பள்ளிவாசல்களுக்கு அருகிலும் பெரியார் சிலை, சில ஊர்களில் அமைந்திருக்கிறது. இவ்வளவு ஏன், காஞ்சி சங்கர மடத்திற்கு எதிரிலேயே பெரியார் சிலை இருக்கிறது.

பெரியார் மக்களுக்கானவர். மக்கள் இருக்கும் இடங்களில் எல்லாம், மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் பெரியார் என்றென்றும் வாழ்வார்!

சுப.வீரபாண்டியன்

Pin It