அண்மையில் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிற குஷ்பூ, ஒரு நேர்காணலில் அவர் தன்னை பெரியாரிஸ்ட் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

நேர்காணல் கண்டவர் ஒரு கேள்வியை வைக்கிறார் பெண்ணுரிமைவாதி என்று சொல்லிக்கொள்ளுங்களேன் ஏன் பெரியாரிஸ்ட் என்று சொல்லுகிறீர்கள் என்று, அப்போது சொல்கிறார் பெரியாருடைய எல்லா கருத்துக் களையும் கடவுள் மறுப்பை போன்று அனைத்து கருத்துக்களையும் நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது போலச் சொல்கிறார்.

வேண்டாம் கடவுள் மறுப்பை விட்டுவிடுங்கள் பெண்ணுரிமை வாதியாகச் சொல்லுங்கள்.., காஷ்மீர் மாநிலத்தில் ஆசிபா என்கிற ஒரு சிறுமியை இந்து மதத்தை காப்பாற்று வதாகச் சொல்கிற இந்த பாரதிய ஜனதா கட்சிக்காரர்கள் இந்து கோவிலுக்குள் சில நாட்கள் அடைத்து வைத்திருந்து தொடர்ந்து பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிக் கொலை செய்து கொன்று புதைத்தார்கள்.

இப்போது ஹத்ராஸ் மனிஷா வல்லுறவுக்கு ஆளாக்கி சிதைத்த பெண்ணை குடும்பத் தினரிடம்  அனுமதி பெறாமலேயே காவல் துறையே  எரிக்கின்றனர். இந்தக் கட்சியில் இருந்து கொண்டு பெண்ணுரிமை பேசப் போகிறாரா என்று எனக்குத் தெரியவில்லை.

அடுத்து  பெரியாரின் முக்கிய கொள்கையான இந்து மத ஜாதிக் கட்டமைப்பில் சூத்திர, பஞ்சமர் களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு என்ற வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களுக்கான சமூக நீதி, மக்கள் தொகையில் அதிக எண்ணிக்கையிலுள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு தருகிறார்கள். அதுவும் முழுமையாக நிரப்புவதில்லை.

ஆனால் 15 சதவீதம் மட்டுமே உள்ள உயர்ஜாதியினருக்கு உயர்ஜாதி ஏழைகள் என்று 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குகிறார்கள். தமிழக மருத்துவக் கல்லூரிகளில் படித்த மாணவர்களுக்கான அகில இந்திய கோட்டாவில் இடஒதுக்கீடு வழங்க மறுக்கிறார்கள்.

பெரியாரின் முதன்மையான கொள்கை சாதி ஒழிப்பு ஆனால் பாரதிய ஜனதா கட்சி ஆளுகின்ற மாநிலங்களில் தான் பார்க்கிறோம் தெருவில் நடந்ததற்காக, குழாயில் தண்ணீர் எடுத்ததற்காக, செருப்புப் போட்டதற்காக, தொட்டு விட்டதற்காக கொன்றழிக்கப்படுவதும் அவர்களை அவமானப்படுத்துவதும் காணொளிக் காட்சிகளாக வந்து கொண்டிருக்கிறது.

அப்போது, பெரியாரின் பெண்ணுரிமைக்கு எதிரான கட்சியில், பெரியாரின் ஜாதி ஒழிப்பிற்கு எதிரான கட்சியில், பெரியாரின் சமூக நீதியை குழி தோண்டி புதைக்கின்ற கட்சியில் இருந்து கொண்டு பெரியாரிஸ்ட் என்ற பெயரை ஏன் சொல்ல வேண்டும் ? அருள்கூர்ந்து சொல்லாதீர்கள் என்று சொல்வது தான் என் வேண்டுகோள்.

பெண்ணுரிமை என்று பார்த்தால் கூட இவர்களுடைய அமையப் போகிற ராமராஜ்ஜியத்தில் கதாநாயகன் ராமன் என்ன செய்தான் நேரடியாக கடவுளை வழிபட்ட தற்காக சம்பூகன் என்ற சூத்திரனை வெட்டிக் கொன்றான். அது தான் ராமராஜ்ஜியம். நேரடியாய் தாழ்த்தப் பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் கடவுளைக் கூட கும்பிட முடியாது என்கிறான்.

கருவுற்றிருந்த மனைவி மீது சிறு சந்தேகம் வந்ததும் காட்டுக்கு துரத்தினான். அந்த இராமனுக்கு கோயில் கட்டுகிற கட்சியில் போய் இணைந்து கொண்டு பெரியாரிஸ்ட் என்று கூறிக் கொள்ளலாமா? இனிமேலாவது பெரியாரிஸ்ட் என்று சொல்லிக் கொள்ளாதீர்கள் என்ற அன்பு வேண்டுகோளை குஷ்பு முன் வைக்க விரும்புகிறேன்.

- கொளத்தூர் மணி

Pin It