தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு வட சென்னை மாவட்டக் கழகம் சார்பில் 20.12.2023 புதன்கிழமை புரசைவாக்கம் தாணா தெருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விசிக துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் பங்கேற்று சிறப்புரையாற்றினார். உரை பின்வருமாறு :-

நினைவுநாள் என்பது வருடத்தில் ஒருநாள், ஆனால் நினைவுநாளில் மட்டும் நினைவுகூறப்பட வேண்டிய தலைவரல்ல பெரியார். எந்நாளும் நமக்கு அவருடைய நினைவுநாள்தான். பெரியாரை நீக்கிவிட்டு அல்லது பெரியாரை மறந்துவிட்டு அல்லது பெரியாரை நினைக்காமல் இருந்துவிட்டு நம்மால் இந்த சமூகத்தில் நடமாடவே முடியாது. அந்தளவுக்கு இங்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு மகத்தான தலைவர் பெரியார். அவரைப் பற்றிய எதிர்மறையான கருத்துக்கள், அவதூறுகள், போலியான சித்தரிப்புகள் என இவற்றின் ஊடாக நாளுக்கு நாள் பெரியார் அதிகம் வாசிக்கப்படுகிறார். நினைவுகூறப்படுகிறார், இந்த தலைமுறையின் மத்தியில் அவர் உயர்ந்து கொண்டே செல்கிறார். அப்படிப்பட்ட ஈர்ப்பு சக்தி கொண்ட ஒரு தலைவர் பெரியார்.

காந்தியை எதிர்த்தார், ஆனால் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, இந்த நாட்டிற்கு “காந்தி தேசம்” என்று பெயர் சூட்டுங்கள் என்றார். காங்கிரசில் இருந்து வெளியேறினார், பின்னாளில் காமராசர் ஆட்சிக்கு வர வேண்டுமென்று காங்கிரஸை ஆதரித்தார். அரசியலமைப்பை இயற்றிய அம்பேத்கரை போற்றினார், அதேநேரம் அரசியலமைப்புச் சட்டத்தை கொளுத்தும் போராட்டம் நடத்தினார். முதலில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தார், பின்னர் விடுதலை நாளை “துக்க நாள்” என்று அறிவித்தார். தமிழை காட்டுமிராண்டி மொழி என்றும் விமர்சித்திருக்கிறார், எழுத்துச் சீர்திருத்தத்தையும் அவர்தான் செய்தார். திருக்குறள் மாநாடு நடத்தி இருக்கிறார், திருக்குறளில் சில கூறுகளை விமர்சித்தும் இருக்கிறார். இதையெல்லாம் மேலோட்டமாகப் பார்க்கிறவர்களுக்கு பெரியார் முரண்பாடுகளின் மொத்த உருவமாகத் தோன்றலாம்.periyar 452ஆனால் பெரியார் ஏன் காங்கிரசை எதிர்த்தார், சுயநலத்தின் காரணமாகவா? பின்னர் காங்கிரசை ஏன் ஆதரித்தார் சுயநலத்தின் காரணமாகவா? ஏன் தமிழ்மொழியின் மீது விமர்சனத்தை முன் வைத்தார்? தமிழ் மீதான வெறுப்பிலா? ஏன் திருக்குறளில் மாற்றுக் கருத்தை முன் வைத்தார்? திருவள்ளுவரை பிடிக்காமலா? இவை அனைத்திலும் பெரியாரிடம் அடிப்படையாக அமைந்தது மானுட நேயம், மனிதநேயம், சமத்துவம், சமூகநீதி. சமத்துவத்துக்கும், சமூகநீதிக்கும் எந்தக் கோட்பாடு சிக்கலாக அமைந்தாலும் அவற்றுக்கு எதிராக இருந்தார் பெரியார். இதுதான் பெரியாரின் அடிப்படை. அவர் மிகச்சிறந்த ஜனநாயகவாதியாக, மனிதநேயவாதியாக, மிகச்சிறந்த ஆதிக்க எதிர்ப்பாளராக விளங்கினார். அதனுடைய வெளிப்பாடுகள் தான் இவை.

பெரியார் பேசிய கருத்துகள் வெளிப்படையானவை, எந்த கருத்தையும் பேச அவர் அஞ்சியதில்லை. இதைத்தான் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு சொன்னார். அந்தளவுக்கு வெளிப்படைத்தன்மை, கொள்கையில் உறுதித் தன்மை கொண்டவர் பெரியார். அந்த கொள்கை உறுதிதான் தமிழ்நாட்டை மட்டுமல்ல, வட இந்தியாவையும் இன்றைக்கு பெரியாரைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இறை நம்பிக்கைக் கொண்டவர்கள் கூட, சமயங்களைக் கடந்து பெரியாரைத் தலைவராக ஏற்றுக்கொண்டு களத்திற்கு வருகிறார்கள். சங்கிகள் பெரியார் சிலையை அவமதித்தால் அய்யப்பனுக்கு மாலை போட்ட பக்தர், அந்த சங்கியின் சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்கிறார். அந்தளவுக்கு எல்லா இடத்திலும் பெரியாரின் தாக்கம் இருக்கிறது.

1971-இல் சேலத்தில் நடந்த திராவிடர் கழக ஊர்வலத்தில் இராமனுக்கு பெரியார் செருப்பு மாலை போட்டார் என்ற ஒரு சர்ச்சை 2 ஆண்டுகளுக்கு முன்பு கிளப்பப்பட்டது. அதுகுறித்து ரஜினிகாந்த் ஒரு கருத்தைக் கூறி பிரச்னை வெடித்தது. அதுகுறித்து சபரிமலைக்கு சென்றுவந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் கேட்டபோது “பெரியார் இல்லையென்றால் நாங்கள் குப்பையில்தான் கிடந்திருப்போம். நாங்கள் இப்போது கோபுரத்தில் இருக்கிறோம் என்றால் அதற்குக் காரணம் பெரியார்.” என்று பதிலளித்தார். மதுரையில் பேட்டி அளித்த செல்லூர் ராஜு “ரஜினிகாந்தின் மகளுக்கு மறுமணம் நடந்ததே, அது பெரியார் கொள்கையின் வெளிப்பாடு” என்று பதிலளித்தார். தீவிர கடவுள் நம்பிக்கையாளர்களான ஓ.பன்னீர்செல்வமும், செல்லூர் ராஜுவும் பெரியார் குறித்து பேசுகிறார்கள் என்றால் அதுதான் பெரியாருக்கு கிடைத்த வெற்றி.

ஒருகாலத்தில் முன்னேறிய சமூகத்தினர் மட்டுமே கோலோச்சிய உணவகத் துறையில் இன்று எல்லா சமூகத்தினரும் இருக்கிறார்கள் என்றால் அதற்குப் பெரியார்தான் காரணம் என அடையாறு ஆனந்தபவன் உரிமையாளர் கூறியதை வைத்து சங்கிகள் சர்ச்சையைக் கிளப்பினார்கள். சேலம் ஆர்.ஆர். பிரியாணி உரிமையாளரும் பெரியாரைப் பற்றி பேசுகிறார். “நான் கடவுளை வணங்குபவன், ஆனால் பெரியாரையும் மதிப்பவன்” என்று இரண்டையும் சேர்த்தே சொல்லக்கூடிய பண்பு இங்கு மட்டும்தான் இருக்கிறது. ஆக, பெரியார் தனி மனிதரல்ல, தத்துவம். வாழ்ந்த காலத்தில் தேவைப்பட்டதை விட இன்றைக்கு அதிகம் தேவைப்படுகிறார்.

மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நாடாளுமன்றம் இருக்காது. எதிர்க்கட்சிகள் இருக்காது. தேர்தலே நடக்காது என்று நாம் பேசிவருகிறோம். அது உண்மை என்பதை கடந்த ஒருவார நிகழ்வுகள் நிரூபித்துவருகிறது. நாடாளுமன்றம் கட்டடமாக உள்ளது. ஆனால் நாடாளுமன்றத்துக்குள்ளே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லை, வெளியேற்றப்படுகிறார்கள். இப்படி இந்திய ஜனநாயக வரலாற்றில் கொத்துக் கொத்தாக, காரணமே இல்லாமல் உறுப்பினர்களை இடைநீக்கம் செய்த வரலாறே கிடையாது. அவைக்கே வராத எம்.பி.க்களை கூட சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். இதுவே ராகுல் காந்தி பிரதமராக இருந்து, மோடி எதிர்க்கட்சி தலைவராக இருந்து, 180 பா.ஜ.க எம்.பி.க்களை காங்கிரஸ் சஸ்பெண்ட் செய்திருந்தால் இந்தியாவில் விவாதம் எப்படி நடந்திருக்கும். ஆனால் இப்போதோ பேரமைதி!

மோடி அரசின் அராஜகப் போக்குகளை கட்டுப்படுத்த வேண்டிய நீதிமன்றங்களோ, ராமர் கோயில் கட்ட அனுமதி, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் என ஒன்றிய அரசின் சர்வாதிகாரப் போக்கை அங்கீகரிக்கிறது.. இவையெல்லாம் புதிதாக நடப்பதல்ல, இதை சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்து சென்ற தலைவர்தான் பெரியார். சமீபத்தில் நடந்துமுடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் பாஜக 3 மாநிலங்களில் வென்றது. வழக்கமாக ஆட்சிக்கு வந்த கட்சியினர், அந்த மாநிலத்தில் யார் அவர்களுக்கு வலிமையான செல்வாக்குப் பெற்ற முகமாக அல்லது யாருடைய தலைமையின் கீழ் அவர்கள் தேர்தலை சந்திக்கின்றனரோ, அவர்களைத்தான் முதலமைச்சராக்குவார்கள். ஆனால் பாஜக மத்தியப்பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகானை ஓரம்கட்டிவிட்டு புதிதாக ஒருவரை (மோகன் யாதவ்) முதலமைச்சராக்கி விட்டது. சட்டிஸ்கர், ராஜஸ்தானிலும் அதே நிலைமை தான்.

ஏற்கனவே குடியரசுத் தலைவராக பழங்குடியினத்தவர், அதற்கு முன்னதாக பட்டியலினத்தவர், பிரதமராக இருக்கும் மோடி பிற்படுத்தப்பட்டவர், தமிழ்நாட்டில் இருந்து அருந்ததிய சமூகத்தவர் ஒன்றிய இணை அமைச்சர் என இதையெல்லாம் செய்துவிட்டு நாங்கள் தான் சமூகநீதி வழங்கியுள்ளோம் என்கின்றனர். இது வேறு எந்த கட்சியிலாவது சாத்தியமா என்று தோண்றலாம். பாஜக முன்வைக்கும் அரசியல் என்பது Social Justice Politics (சமூகநீதி அரசியல்) அல்ல, Social Engineering Politics (ஜாதி அடிப்படையிலான கட்டுமானம்) ஆகும்.

காங்கிரஸ் ஆட்சியின் முதல் அமைச்சரவையில் அம்பேத்கருக்கு சட்ட அமைச்சர் பொறுப்பை வழங்கியதுடன், சட்ட வரைவுக் குழு தலைவர் பொறுப்பும் வழங்கப்பட்டது. தனிப்பட்ட முறையில் பார்த்தால் அம்பேத்கருக்கு ஒரு கண்ணியத்தை காங்கிரஸ் வழங்கிவிட்டது. பெரியாரும் கூட காங்கிரஸில் தலைவராக இருந்தார். அதுதான் பாஜக சொல்கிற சோசியல் எஞ்சினியரிங். ஆனால் தனக்குப் பதவி கிடைக்கவில்லை என்பதற்காக பெரியார் காங்கிரஸில் இருந்து வெளியேறினாரா? தனக்கு உரிய அங்கீகாரம் இல்லை என்று அம்பேத்கர் சட்ட அமைச்சர் பொறுப்பை துறந்து வெளியே வந்தாரா? இந்த சமூகத்திற்கு அதிகாரம் கிடைக்கவில்லை என்பதற்காக வெளியே வந்தார்கள். அப்படியானால் பாஜக முன்வைக்கிற சோசியல் எஞ்சினியரிங்கிற்கு எதிரானவர்கள் புரட்சியாளர் அம்பேத்கரும் தந்தை பெரியாரும். பாஜக இன்றைக்கு ஒரு சோசியல் இஞ்சினியரிங்கை செய்துவிட்டு இதுதான் சோசியல் எஞ்சினியரிங் என்று சொல்கிறதே, அந்த இடத்தில்தான் இது மோசடி என்று பெரியார் நினைவுகூறப்படுகிறார்.

இந்த சமூகங்களை அதிகாரப்படுத்துவதற்கு என்ன வைத்திருக்கிறாய் என்று பாஜகவிடம் கேட்கிறோம். பட்டியலினத்து மக்களை அதிகாரப்படுத்துவதற்கு பாஜக என்ன உத்தி வைத்திருக்கிறது? அதற்காக வரையறுக்கப்பட்டிருக்கிற திட்டங்களை பாஜக ஆதரிக்கிறதா? குரல் கொடுத்திருக்கிறதா? தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் 69% இடஒதுக்கீட்டில் பாஜகவின் பங்கு என்ன? இந்த இடஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும் என்று நாம் சொல்கிறோம், பாஜக சொல்லுமா? அருந்ததியரில் இருந்து ஒருவரைப் பிடித்து வந்து பாஜகவில் பொறுப்பு கொடுத்துவிட்டு, திமுகவில் ஒரு அருந்ததியர் தலைவராக முடியுமா என்று கேட்கிறார்களே! ஒட்டுமொத்த அருந்ததிய மக்களுக்கு 3% இடஒதுக்கீடு கொடுத்தது யார்? திமுகதானே?? இதுதானே முக்கியம். ஆனால் அவர்கள் அரசியலை எப்படி மடைமாற்றுகிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

பெரியார் ஏன் நினைவுகூறப்பட வேண்டும்? பெரியார் ஏன் திரும்பத் திரும்ப பேசுபொருளாக வேண்டுமென்றால், அவரின் வாழ்க்கையே சாட்சியாக இருக்கிறது. தனிமனிதர்களுக்கு அதிகாரம் கொடுப்பது அல்ல, சமூகங்களை அதிகாரப்படுத்த வேண்டும். பெரியாரும் அம்பேத்கரும் அதற்கு சாட்சியாக இருக்கிறார்கள். அந்த அடிப்படையில்தான் பாஜகவின் இந்த சதித் திட்டங்களை அம்பலப்படுத்துவதற்கு பெரியாரை நாம் மீண்டும் மீண்டும் நினைவுகூற வேண்டும். இதெல்லாம் ஏமாற்று வேலை, அவர்கள் சமூகத்தை அதிகாரப்படுத்துவதற்கு போராடவில்லை. ஆனால் இந்த மக்களை திருப்திப் படுத்தினால்தான் அரசியல் செய்ய முடியும் என்ற இடத்துக்கு பாஜக வந்திருக்கிறது, ஒடுக்கப்பட்ட சமூகங்களில் இருந்தும் அடையாளங்களை காட்டினால்தான் வாக்கு வாங்க முடியும் என்ற இடத்துக்கு பாஜக வந்திருப்பது நமக்கு வெற்றிதான் என்றாலும், அது ஏமாற்று வேலை. வெறும் தனிநபருக்கு அதிகாரம் கொடுப்பது அல்லது நமது போராட்டம், சமூகத்தை அதிகாரப்படுத்துவதுதான் நமது போராட்டம். அதில் பாஜக எங்குமே வராது.

- ஆளூர் ஷாநவாஸ்

Pin It