கீற்றில் தேட...

மத்திய மனித வளத் துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி தலைமையிலான கல்வி ஆலோசனைக் குழு, மத்திய அரசு பள்ளிகளில் சமஸ்கிருதத்தைத் திணிக்க முடிவு செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது.

“ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகள் மாணவர்களுக்கு தேவையாக இருப்பினும் நமது பரந்துபட்ட கலாச்சாரத்தைக் கற்பிக்கும் வகையில் சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அதற்காக 3ஆவது மொழிப் பாடமாக சமஸ்கிருதத்தைக் கட்டாயமாக்க முடிவு செய்துள்ளோம். வரும் கல்வி ஆண்டு முதல் மத்திய அரசின் கீழ்வரும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் சமஸ்கிருதம் 8ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை கட்டாயமாக்கப்படும். இதற்காக விரைவில் சமஸ்கிருத மொழி நூல்கள் அச்சிடப்பட இருக்கின்றன” என்று  ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

சமஸ்கிருதத் திணிப்பு என்பது பார்ப்பனியத் திணிப்பேயாகும். இந்தியாவில் சில ஆயிரம் பேர் மட்டுமே பேசும் மொழி சமஸ்கிருதம். அதுகூட பேசும் மொழி அல்ல; கோயில்கள், சடங்குகள், யாகங்களுக்காக பார்ப்பனர்கள் மட்டுமே பயன்படுத்தும் மொழி. பல்வேறு இனங்களைக் கொண்ட இந்தியாவில், ஒற்றைக் கலாச்சாரம் எதுவும் கிடையாது. இதில் “பரந்துபட்ட கலாச்சாரத்தைக்” கற்பிக்கும் மொழி என்று சமஸ்கிருதத்தை மத்திய மனித வளத் துறை அமைச்சகமும் அதன் உயர்மட்டக் குழு மட்டுமே முடிவு செய்து கொண்டு விட்டது போலும்.

சமஸ்கிருதமே இந்தியாவின் ஆட்சி மொழியாக வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன அமைப்பின் கொள்கை. ஆர்.எஸ்.எஸ். ‘வேதப் புத்தகமாக’ மதிக்கும் ‘க்ஷரnஉh டிக வாடிரபாவள’ நூலில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வாக்கர் இதை பதிவு செய்திருக்கிறார்.

‘நான்கு வர்ணங்களை’ சமூகத்தில் திணிக்கும் மனுஸ்மிருதி, சமஸ்கிருதத்தில்தான் இருக்கிறது. இந்திய கலாச்சாரம் பார்ப்பன கலாச்சாரமே என்பதை நிலைநாட்டுவதற்கான முயற்சிகள், இந்தத் திணிப்புகள் வழியாக  மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் கொண்டு வரவேண்டும். தமிழ்நாட்டில் செயல் படும் பள்ளிகளின் கல்விக் கொள்கையை தமிழக அரசே தீர்மானிக்க வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும். இந்தியா என்றாலே அது பார்ப்பனியம்தான் என்பதை மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.