உலக நாத்திகர்கள் மாநாடு 2011 சனவரி 7,8,9 ஆகிய தேதிகளில் திருச்சியில் சிறப்பாக நடைபெற்றது. திராவிடர் கழகமும், விசயவாடா நாத்திக மையமும் இணைந்து நடத்திய இம்மாநாட்டில், இங்கிலாந்து, நார்வே, ஸ்வீடன், பின்லாந்து, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா என உலகின் பல்வேறு நாட்டுப் பேராளர்கள் 19 பேர்களும், ஆந்திரம், பஞ்சாப், நேப்பாளம், அரியானா, கர்நாடகம், மேற்கு வங்கம், உத்திரப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், பீகார், டில்லி, புதுவை, கேரளா, குஜராத் என் இந்தியாவின் 144 பேராளர்களும் கலந்து கொண்டார்கள். மாநாட்டிற்குத் திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி தலைமை தாங்கினார்.

அவர் தன் தலைமை உரையின் போது, “ இங்குப் பல மொழிகளைப் பேசுபவர்கள் கலந்த கொண்டுள்ளார்கள். மொழிகள் வேறுபட்டு இருக்கலாம். ஆனால் நமக்கெல்லாம் உள்ள ஒரே மொழி ‡ இணைக்கும் மொழி, பகுத்தறிவே ! இந்தப் பகுத்தறிவும், மனிதநேயமும்தான் சகோதரத்துவத்தை உருவாக்கக் கூடியதாகும். கடவுளும் மதமும் மனிதகுலத்தைப் பிரிக்கின்றன. தந்தை பெரியார் கூறும் பகுத்தறிவும், மனிதநேயமும் மக்களை இணைக்கின்றன. நம்மைப் பிணைத்திருக்கும் எல்லா விலங்குகளும் உடைக்கும் ” என்று கூறினார்.

இம்மாநாட்டில் உரையாற்றிய திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி தன் உரையின் போது, “ மதம் நம்மை ஒன்றாக இணைக்கிறது என்று சொல்வதெல்லாம் உண்மையல்ல. அது ஒரு மாயை. மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் சிந்தப்பட்ட இரத்தம்தான் அதிகம். மனிதன் சுயமரியாதையுடன் வாழ அன்பும், அறிவும் தேவை. இதைத்தான் தந்தை பெரியார் வலியுறுத்தி வந்தார் ” என்று குறிப்பிட்டுப் பேசினார்.

திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் உரையாற்றும்போது, “ இன்று ஒரு மகிழ்ச்சியான நாள். உதட்டில் இருந்து இதை நான் சொல்லவில்லை. உள்ளத்தில் இருந்தே சொல்கிறேன். இத்தனை ஆயிரம் மக்கள் தமிழ்நாட்டில் நாத்திகர்களாக இருக்கிறார்கள். அவர்கள் மத்தியில் நாமும் இருக்கிறோம். அஷ்டமி, நவமி என்று மாதத்தில் 12 நாள்களையும், செவ்வாய், சனி ஆகியவை ஆகாத நாள்கள் என்று மாதத்தில் 8 நாள்களையும், நாள் ஒன்றுக்கு இராகு காலம், எமகண்டம், குளிகை என்று நான்கரை மணி நேரத்தையும் வீணாக்குவதன் மூலம் 2 நாட்களும் ஆக மாதத்தில் அதிகமான நாள்களை வீணடித்துக் கொண்டிருக்கிறோம். நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் தன்னை ஒரு நாத்திகன் என்று பிரகடனப்படுத்தினார். பகத்சிங் தூக்குக் கயிறை முத்தமிட நேர்ந்த நிலையிலும் கூட நாத்திக நிலையில் உறுதியாக இருந்தார் ” என்று குறிப்பிட்டு தன் உரையை நிகழ்த்தினார்.

மாநாட்டின் நிறைவு நாளில் பொங்கல் விழாக் கொண்டாட்டங்கள் இடம்பெற்று நாத்திக மாநாடு நிறைவு பெற்றது.

...........

Pin It