“ஓய் அய்யரே நீர் ஏறக்கூடாது. ஆயிரம் பவுண்ட் வாகனத்தையும் தூக்கி, உன்னையும் ஏன் தூக்கித் தொலைக்க வேண்டும்? நீர் ஏறினால் கட்டாயம் தூக்க மாட்டோம்,” என்று கூறினார்கள், சாமி தூக்குபவர்கள்.

அய்யர் கோயில் டிரஸ்டியிடம் சரண் புகுந்தார்; டிரஸ்டி ஆட்களை மிரட்டினார். "பட்டைச் சோற்றில் மண் விழுந்துவிடும், ஜாக்கிரதை!” என்று கூறினார்.

kuthoosi gurusamyபட்டைச் சோற்றைவிடப் பருமனான காய்ப்புக்களையுடைய தோள்கள் படைத்த தோழர்கள் தூக்கினார்கள், முணு முணுத்துக் கொண்டே! ஒரு பர்லாங் இரண்டு பர்லாங்கா? ஊரை வீட்டே ஊர்போக வேண்டிய உற்சவம். வாய்க்கால் பாலம் வந்தது. இராத்திரி வேளை! 4 தீப்பந்தங்களைத் தவிர வேறு வெளிச்சமில்லை. பாலத்தில் போயிக் கொண்டிருக்கும் போது எதிரில் ஒரு எருமை! மதங்கொண்ட யானையைப் போல் ஓடி வந்தது. சாமி தூக்கியவர்கள் வாகனத்தைக் கீழே போட்டுவிட்டார்கள். அர்ச்சகர் வாய்க்காலுக்குள் வீழ்ந்தார், அய்யோ என்று அலறியபடியே! “சாமி விழுந்துட்டாரே!” என்று சத்தம் போட்டுக் கொண்டே பக்தர்கள் ஓடினார்கள். அதாவது அர்ச்சகரைத்தான் ‘சாமி’ என்றார்கள், அறிவற்ற அவர்களுக்கு இரண்டும் ஒன்றாகையால். ‘சாமி’க்கு (அர்ச்சகருக்கு) வலது கை முறிந்துவிட்டது! பாவம்! விபூதி கொடுத்து அருளிய கை அல்லவா அது!

சாமி தூக்கியவர்கள் வேணுமென்றே போட்டுவிட்டார்கள் என்பது அர்ச்சகர் தொடுத்திருக்கும் வழக்கு. முடிவென்னவாகுமோ தெரியவில்லை. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இந்த பகிஷ்கார வேலை பல ஊர்களில் நடந்து வருவதாகத் தெரிகிறது.

"அர்ச்சகன் உயர ஏறினால் தூக்கமாட்டோம்,” என்று இதுவரையில் 4 ஊர்களில் கிளர்ச்சி செய்து வெற்றி பெற்று விட்டார்களாம். ஓரே ஒரு ஊரில் மட்டும் அர்ச்சகரோடு வாகனத்தையும் அதன்மேலுள்ள மூர்த்தியையும் கீழே போட்டிருக்கிறார்கள்! இந்த உணர்ச்சி முற்றிவிட்டால் என்ன ஆவது என்று அர்ச்சகர்கள் ஆலோசித்து வருகிறார்களாம்!

அர்ச்சகர்கள் கிடக்கட்டும்! சாமியேகூட ஆலோசிக்க வேண்டிய காலம் நெருங்கிவிட்டது.

“ஏ! சாமியே! அவன் உன் பக்கத்தில் அமரவும் நான் உன்னைத் தூக்கவுந்தானா இந்த உலகத்தில் பிறந்தோம்? உன்னைத் தூக்கி உடம்பொடியப் பாடுபடும் எனக்குத் தினம் 2 உப்பில்லாச் சோற்றுப்பட்டை! உன்னோடு அமர்ந்திருக்கும் அவனுக்கு மட்டும் சர்க்கரைப் பொங்கல், தேங்காய், பழம், மாலை, பணம், இத்தனையும், இதற்கு மேலும்! இந்த அக்கிரமம் ஏன்? உனக்குக் கண்ணில்லையா? அல்லது உறங்கி விட்டாயா? அவனும் கொஞ்ச நாளைக்கு தூக்கிப் பார்க்கட்டுமே! நான் நாலு வருஷத்துக்கு உன் பக்கத்தில் நின்று பார்க்கிறேனே!” என்று கேட்பார்கள், தூக்கும் தொழிலாளிகள்.

“அர்ச்சகன் மேலே ஏறினால் தூக்க மாட்டோம்; கட்டாயப்படுத்தினால் கீழே போட்டு விடுவோம்,” என்பது சாதாரண உணர்ச்சியல்ல. வயிற்றுப் பிழைப்பையே பாதிக்கக்கூடிய பிரச்னை. இது தெரிந்தும் பல ஊர்களில் துணிந்து இறங்கியிருக்கிறார்களே! வீரர்கள்தான், சந்தேகமில்லை.

“நீ விபூதி கொடுத்தால் நான் வாங்க மாட்டேன்.

“நீ சடகோபம் சாத்தினால் நான் தலையைக் குனிய மாட்டேன்”

“நீ சமஸ்கிருதத்தில் சொன்னால் நான் ஒப்ப மாட்டேன்”

“நீ தேங்காய் உடைப்பதை நான் ஏற்க மாட்டேன்.”

“நீ அபிஷேகம் செய்வதை நான் அநுமதிக்க மாட்டேன்.”

“நீ மட்டும் மடப்பள்ளிக்குள் செல்வதைப் பொறுக்க மாட்டேன்.”

இந்த மாதிரி யெல்லாம் சொல்ல, படிக்க பக்தர்களுக்கும், பணக்கார ஆஸ்திகர்களுக்குமே துணிவில்லையே!

அப்படியிருக்கும்போது சாமி தூக்குகிறவர்கள் இவ்வளவு துணிச்சலுடன் இருப்பதை நினைத்தால் இவர்களே சரியான வீரர்கள் என்றுதானே உங்களுக்குக் கூறத் தோன்றுகிறது? எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. மற்றவர்களெல்லாம் வெறும் தப்பட்டைகள்! அதுவும் கிழிந்த தப்பட்டைகள்!

“கடவுளாரே! உலகமே மாறிப் போய்க்கூட நீங்கள் ஏன் இன்னும் பழைய மடிசஞ்சியாகவே இருக்கிறீர்கள்? வாகனம் தேர் முதலியவைகளையே கட்டிக் கொண்டு அழுகிறீர்கள்? ஷோக்காக மோட்டார் காரிலே போகலாம். ரயிலில் போகலாம். (ஒரு தனி வண்டி வேண்டுமானாலும் ரிசர்வ் செய்து தருகிறேன்.) அவசரமாகப் போக வேண்டுமானால் ஆகாய விமானத்தில்கூடப் போகலாமே! ஏழைக் கடவுளாயிருந்தால் என் சைக்கிளில் வேண்டுமானாலும் வைத்து அழைத்துப் போகிறேன்,” என்று நம் சாமிகளையும் ஒரு வார்த்தை கேட்டு வையுங்கள்!

மேல் நாட்டு பாண்டுக்கும், மின்சாரத்துக்கும் ஒப்புக் கொண்ட நம் சாமிகள் மேல் நாட்டு வாகனங்களுக்கு மட்டுமா ஒப்புக் கொள்ள மறுத்து விடும்? பக்தர்கள் கேட்டுப் பார்த்தால்தானே! வாயை மூடிக் கொண்டு கோயிலுக்குப் போவதும் வருவதுமாயிருந்தால் போதுமா? சாமி கூச்சப்பட மாட்டாரா, தானாக எதையும் கேட்பதற்கு? சூடமும் சோறும் அவரா கேட்கிறார்? நாமாகத்தானே கொடுக்கிறோம்! அதுபோல வாகனங்களைப் பற்றியும் கேட்டுப் பார்க்காமலேகூட நாமாகவே மாற்றி விடலாமே! குதிரை வாகனத்தை விற்று ஒரு மோட்டார் சைகிள் வாங்கிக் கொடுத்தால் என்ன? நீங்கள் மட்டும் வாங்கிக் கொள்கிறீர்களே! இருந்தாலும் உங்களைப் போன்ற சுய நலமிகளை நான் கண்டதே யில்லை.

(குறிப்பு: குத்தூசி குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார். அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It