விபசாரம் என்னும் வார்த்தையானது அநேகமாய் ஆண் பெண் சேர்க்கை சம்பந்தப்பட்டதற்கே உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது. அதிலும் முக்கியமாக அதாவது ஒரு பெண் தனக்குக் கணவன் என்றோ, தன்னை வைத்துக் கொண்டிருக்கின்றவன் என்றோ வேசித் தொழிலிலிருப்பவளானாலும் யாராவது ஒரு புருஷனிடம் தற்கால சாந்தியாய் தன்னைக் குத்தகையாய் அனுபவிப்பவன் என்றோ சொல்லப்படும்படியான அந்தக் குறிப்பிட்ட ஆண் மகனைத் தவிர மற்றொருவரிடமோ, பல பேர்களிடமோ சேர்க்கை வைத்துக் கொண்டிருப்பதற்கே, கணவனாலும் வைப்புக்காரனாலும், குத்தகைக்காரனாலும் மற்றும் பொது ஜனங்களாலும் சொல்லப்படுகின்ற, அதாவது ஒரு பெரிய குற்றம் சாட்டுவதற்கும் பழி சுமத்துவதற்கும் உபயோகிக்கும் சொல்லாகும்.
ஆனால், அதே பெண்ணை அந்தக் கணவனோ வைப்புக்காரனோ மற்றொருவருக்குத் தன் சம்மதத்தின் பேரில் கூட்டி விடுவானானால் அதை அவர்கள் விபசாரம் என்று சொல்லுவதில்லை. இந்த சங்கதி பொது ஜனங்களுக்குத் தெரிந்தாலும் கணவனைத்தான் அவர்களும் வசை கூறி குற்றம் சொல்லுவதே தவிர பெண்ணை விசேஷமாக முன் சொல்லப்பட்ட விபசாரியென்கின்ற முறையில் அநேகமாக குற்றம் சொல்லுவதில்லை.
அன்றியும் இம்மாதிரி குற்றம் சாட்டுதலும் வசவுக்கும், பழிப்புக்கும் உபயோகப் படுத்துதலும் ஆண்களுக்குக் கிடையாது. அன்றியும் ஆண்களை விபசாரன் என்று வைக்கின்ற வழக்கமும் கிடையாது. அப்படிச் சொல்லப்படுவதற்காக எந்த ஆணும் கோபித்துக் கொள்ளுவதும் கிடையாது.
ஆகவே விபசாரம் என்னும் வார்த்தையின் அநுபவ தத்துவத்தைக் கூர்ந்து கவனித்துப் பார்த்தால் “விபசாரம்” என்பது பெண்கள் அடிமைகள் என்பதைக் காட்டும் ஒரு குறிப்பு வார்த்தை என்று தான் சொல்ல வேண்டுமே யொழிய வேறல்ல. ஏனெனில் விபசார தோஷம் என்பதும் விபசாரம் செய்வதால் ஏற்படும் ஒழுக்கக் குறைவு என்பதும் இப்பொழுது வழக்கத்தில் பெண்களுக்கே தான் உண்டேயொழிய ஆண்களுக்கு அந்த மாதிரி கிடையவே கிடையாது.
உதாரணம் வேண்டுமானால் ஒன்றைக் குறிப்பிடுவோம். அதாவது நமது நாட்டில் இதுவரை விபசாரம் செய்ததற்காகவென்று பெண்களைத் தான் பழி சுமத்தி குற்றம் சொல்லி ஜாதியை விட்டுத் தள்ளி வைத்திருக்கின்றார்களே யொழிய - வீட்டை விட்டுத் துரத்தியிருக்கின்றார்களே யொழிய - அடித்தும், உதைத்தும், வைதும் துன்பப்படுத்தியிருக்கிறார்களே யொழிய - சில சந்தர்ப்பங்களில் கொலைகளையுங் கூட செய்திருக்கிறார்களே யொழிய, ஆண்களை இம்மாதிரியாகச் செய்திருப்பதாக நாம் கண்டதோ கேட்டதோ இல்லை. .
நிற்க, சில இடங்களில் விபசாரம் ஆண்களுக்குத் தற்பெருமையாகவும் கீர்த்தியாகவும் கூடயிருக்கின்றதைப் பார்க்கின்றோம். சில ஆண்கள் அதைப் பெருமையாய் சொல்லிக் கொள்ளுவதையும் கேழ்க்கின்றோம்.
மக்களும் விபசாரிமகன் என்று சொன்னால் தான் கோபித்துக் கொள்ளுகின்றார்களே தவிர விபசாரனுடைய மகன் என்று சொன்னால் கோபித்துக் கொள்ளுகின்றவர்கள் இல்லை. ஆனால் எந்த சமயத்தில் ஆண்கள் கோபித்துக் கொள்ளுகின்றார்களென்றால் தங்கள் மனைவிகள் வைப்பாட்டிகள், குத்தகை தாசிகள் விபசாரம் செய்தார்கள் என்று சொன்னால் மாத்திரம் உடனே கோபித்துக்கொள்ளுகின்றார்கள். மேலும் மிகவும் அவமானமேற்பட்டு விட்டதாக பதருகிறார்கள்.
மற்றும் தங்கள் பெண்களைத் தங்களுடைய சம்மதத்தின் பேரில் தங்கள் சுய நலத்திற்காக விபசாரத்திற்கு விட இணங்குகிறான் என்றோ பெண்ணை அடக்க முடியாமல் “ஊர்மேல்” விட்டு விட்டான் என்றோ சொல்லுகின்ற போது அதிகமாய்க் கோபித்துக் கொள்ளுகின்றார்கள்.
ஆகவே இந்த அநுபவங்களையும் கொண்டு மேலே காட்டியபடி அதாவது விபசாரம் என்று சொல்லும் வார்த்தையின் தத்துவம் பெண்கள் ஆண்களின் அடிமைகள் என்றும், ஆண்களுடைய போக போக்கியப் பொருள் என்றும், விலைக்கு விற்கவும், வாடகைக்கு விடவும் கூடிய வஸ்து என்றும் கருதியிருக்கின்றார்கள் - என்பது இன்னும் தெளிவாய் விளங்கும்.
நிற்க, அது அதாவது விபசாரம் என்னும் வார்த்தையை வழக்கத்தில் ஏன் பெண்களை மாத்திரம் சொல்லப் பயன்படுத்தப்பட்டது? “ஆண்களைச் சொல்லுவதற்கு ஏன் அது பயன்படுத்தப்படவில்லை? யென்று கவனிப்போமானால் அதிலிருந்து மற்றொரு உண்மையும் புலப்படும். அதென்ன வென்றால் விபசாரம் என்று சொல்லப்படுவது சுபாவத்தில் உண்மைக் குற்றமுள்ள வார்த்தையாக இல்லை என்பதேயாகும்.
எது போலென்றால் எப்படி கற்பு என்னும் வார்த்தையையும் அது பயன்படுத்தும் முறையும் புரட்டானது என்றும், பெண்ணடிமைகொள்ள உத்தேசித்து ஏற்படுத்தியதாகுமென்றும் சொல்லுகின்றோமோ அது போலவே விபசாரம் என்னும் வார்த்தையும் அதன் பிரயோகமும் புரட்டானதும், பெண்களை அடிமை கொள்வதற்கென்றே ஏற்படுத்தப்பட்டதென்றும் காணப்படுவதோடு அது முக்கியமாய் இயற்கைக்கு விரோதமான தென்றும் கூட விளங்கும்.
சாதாரணமாகவே இன்றைய கற்பு, விபசாரம் என்னும் வார்த்தைகள் சுதந்திரமும், சமத்துவமும் கொண்ட வாழ்க்கைக்குச் சிறிதும் தேவையில்லாததேயாகும்.. ஜீவசுபாவங்களுக்கு இவ்விரண்டு வார்த்தையும் சிறிதும் பொருத்தமற்றதேயாகும். வாழ்க்கை ஒப்பந்த நிபந்தனைக்கு மாத்திரம் தேவையுடையதாகயிருக்கலாம்.
ஆனபோதிலுங் கூட அவையும் இயற்கைக்கு முரணானது என்பதை யாவரும் ஒப்புக் கொண்டுதானாக வேண்டும். அதற்கு ஆதாரம் என்ன வென்றால் மேலே சொல்லப்பட்டது போலவே அவ்விரண்டு வார்த்தையின் தத்துவங்களையும் பெண்கள் மீது மாத்திரம் சுமத்தப்பட்டு ஆண்கள் மீது சுமத்தப்படாமலும் ஆண்கள் அவற்றை ஏற்றுக் கொண்டு கட்டுப் படாமையும் அதைப் பற்றி லஷியம் செய்யாமையுமேயாகும்.
மற்றும் வேறொரு அத்தாட்சியும் என்ன வென்றால் மக்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கற்புத் தவறுதலும் விபசாரத்தனமும் கூடாது என்று பொதுவாக இருபாலர்களுக்குத் தானாகத் தோன்றாமலிருப்பதோடு பலர் கற்பித்தும் அதற்காகப் பல நிபந்தனைகளைக் கூட ஏற்படுத்தியும் மற்றும் எவ்வளவோ பயங்களைக் காட்டியும் அதனால் சிலராவது அடிதடி விரோதம், கொலை, உடல் நலிவு முதலியவைகளால் கஷ்டப்படுவதை நேரில் காணக்கூடிய சந்தர்ப்பங்களிருந்தும் இவ்வளவையும் மீறி மக்களுக்குக் கற்புக்கு விரோதமாகவும் விபசாரத்திற்கு அனுகூலமாகவும் உணர்ச்சியும் ஆசையும் ஏன் உண்டாக வேண்டுமென்பதைக் கவனித்தால் அது தானாக விளங்கும்.
இயற்கையோடு இயைந்த வாழ்வு எது என்பதையும் இயற்கைக்கு மாறுபட்ட வாழ்வு எது வென்பதையும் எவ்வித நாட்டுப்பற்று, நடப்புப் பற்று, பிறப்புப் பற்று என்பதில்லாமல் நடுநிலையிலிருந்து தன் அநுபவத்தையும் தன் மனதில் தோன்றிய, தோன் றும் உணர்ச்சிகளையும், ஆசைகளையும் ஒரு உதாரணமாகவும் வைத்துக் கொண்டு பரிசுத்தமான உண்மையைக் காணுவானேயானால் அப்போதும் கற்பு, விபசாரம் என்னும் வார்த்தைகள் வெறும் புரட்டு என்பதும், மற்றவர்களை அடிமையாகக் கட்டுப்படுத்த உண்டாக்கப்பட்ட சுயநல சூட்சி நிறைந்தது என்பதும் தானாகவே விளங்கிவிடும்.
மற்றும் விபசாரம் என்பது ஒருவனுடைய “பாத்தியதைக்கும்” ஏற்படுத்திக் கொள்ளும் கட்டுப்பாட்டிற்கும் மாத்திரம் விரோதமே தவிர உண்மையான ஒழுக்கத்திற்கு விரோதமல்ல என்பதற்கு மற்றொரு உதாரணம் கூறுவோம்.
மலையாள நாட்டில் இரண்டு மூன்று ஆண்கள் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்படுத்திக் கொள்ளுகின்ற வழக்கம் உண்டு.
ஆனால் அந்தப் பெண் மேற்கண்ட இரண்டு மூன்று புருஷர்களைத் தவிர மற்ற ஆண்களிடம் அதுவும் தங்களுக்கு மனைவியாயிருக்கும் காலத்தில் பிற ஆண்களிடம் சம்பந்தம் வைத்துக் கொண்டால் மாத்திரம் தான் அதை விபசாரமாகக் கருதி சில சம்பவங்களில் கொலைகள் கூட நடக்கின்றன. மற்றும் சில வகுப்புகளில் தங்கள் இனத்தார் தவிர மற்ற இனத்தாரிடம் சாவகாசம் செய்தால் மாத்திரம் விபசாரமாய்க் கருதப்படுகின்றன.
நமது நாட்டிலும் சில வகுப்புகளில் குடும்பத்தைச் சேர்ந்த மச்சாண்டார், கொழுந்தனார் (அதாவது புருஷன் சகோதரர்கள்) மாமனார் ஆகியவர்கள் சம்பந்தமானது விபசாரத்தனமாய் கொள்ளப்படுவதில்லை. இக் கொள்கைகள் நம் நாட்டுப் பழங்குடி மக்கள் மிகுதியும் கொண்ட சில சமூகங்களின் பழக்க வழக்கங்களுடன் கலந்து செல்வாக்குப் பெற்றிருப்பதை இன்றும் தாராளமாய்ப் பார்க்கலாம்.
இதுபோல் இன்னும் பல விஷயங்களும் உண்டு, ஆகவே இவைகளையெல்லாம் கவனித்துப் பார்த்தால் விபசாரம் என்பது ஒரு குறிப்பிட்ட கொள்கை மீது பொதுவான ஒழுக்கக் குறைவு என்கிற தத்துவத்தில் எப்போதும் பழக்கத்தில் அமுலில் இல்லையென்பது விளங்கும். நிற்க,
மனித சமூகத்திற்கென்று பொதுவாக சில கட்டுப்பாடுகளும் ஒழுங்கும் வாழ்க்கைக்கு ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதை நாம் அடியோடு ஆnக்ஷபிக்க வரவில்லை. ஆனால் அவை தனிப்பட்டவர்கள் அதாவது ஆண்டான் அடிமை முறை, எஜமான் கூலி முறை, முதலாளி காரியஸ்தர் முறை, சிநேகிதர்கள் முறை, கூட்டாளிகள் முறை, வாழ்க்கைத் துணைகள் முறை போன்ற தன்மைகள் கொண்ட அதாவது தனிப்பட்ட சம்மந்தங்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருப்பது போன்றதான ஒழுங்கு கட்டுப்பாடுகள் போல பொது வாழ்விற்கு பொதுக் கொள்கைகளாகியிருக்கக் கூடாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பொது வாழ்க்கைக்கு ஏற்படுத்தப்படும் கொள்கைகள் என்பன பொது ஜனங்களில் யாருடைய தனி சுதந்திரத்துக்கும் பாதக மேற்பட்டதாகவும் அதுவும் பிரயோகத்தில் சிறிதும் பாரபக்ஷம் உயர்வு தாழ்வு தத்துவம் கொண்டதல்லாததாகவும் இருக்க வேண்டுமென்பதோடு எல்லாவற்றையும் விட அவை முக்கியமாக இயற்கையோடியைந்ததாகவுமிருக்க வேண்டும். அப்படிப்பட்டவைகளும் மற்றவர்களுடைய நியாயமான உரிமைக்கும், சுதந்திரத்திற்கும் சிறிதும் பாதக முண்டுபண்ணாததாகவுமிருக்க வேண்டும்.
(நியாயமான என்றதினாலேயே எது நியாயம்? என்பதற்காக “தர்மசாஸ்திரங்களை”த் தேட வேண்டும் என்பது கருத்தல்ல. மற்றெப்படி கண்டுபிடிப்பதென்றால் ஒருவன் தனக்கு நியாயம் என்று சொல்லப்படுவதானது பிறத்தியானும் அதையே தனக்கும் நியாயமென்று சொன்னால் அவன் முதலில் சொன்னவன் ஒப்புக் கொள்ளுகின்றானா என்று பார்த்து நிர்ணயிப்பதேயாகும். அதாவது இருவருக்கும் ஒன்று போன்றது)
அன்றியும் அறிவுக்கும் சாத்தியத்திற்கும், அநுபவத்திற்கும் ஏற்றதாகவும் அவசியம் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
இப்படிக்கெல்லாம் இல்லாமல் வெறும் நிர்ப்பந்தத்திற்கு நாணயமற்றதும் அறிவுக்கும் அநுபவத்திற்கும் ஒவ்வாததானதுமான விஷயங்களுக்காக வலுத்தவர்கள் தந்திரக்காரர்கள் தங்களுக்குத் தோன்றின படிக்கெல்லாம் கட்டுப்பாடுகள் செய்து கொண்டு போவதானது எவ்விதப் பயனையும் தராததோடு மனித சமூகத்திற்கு வீண் கஷ்டத்தை உண்டாக்கி வருவதோடு, அது வெறும் அடிமைத் தனத்தையும், அறிவுத் தடையையும் தான் உண்டாக்கும்.
சாதாரணமாக பொது வாழ்க்கையில் ஒருவன் செய்யக் கூடாதென்பதாக ஏற்பாடு செய்திருக்கும் திருட்டு என்பதான ஒரு குணத்தை எடுத்துக் கொள்ளுவோம். அது இன்றைய வழக்கில் ஒரு மனிதனுக்கு அதாவது திருட்டு கொடுத்தவனுக்கு கஷ்டத்தையும் மனவருத்தத்தையும் கொடுக்கக் கூடியதாயிருக்கின்றது என்பதை நாம் ஒப்புக் கொள்ளுகின்றோம். ஏனெனில் நம்ம சொத்தை ஒருவன் திருடினால் நமக்கும் அப்படித்தான் இருக்கும்.
ஆனால் எதனால் அந்த நஷ்டமும், சங்கடமும் ஏற்படுகின்றதென்று பார்ப்போமானால் திருட்டுக் கொடுத்தவன் திருட்டுப் போன சொத்தை தன்னுடையது என்றும் அது தனக்கே சொந்தம் என்றும் எண்ணியிருப்பதால்தான். உலகில் பொருளியல் சமத்துவம் ஏற்படுகின்றவரை திருட்டு என்னும் குணமானது குற்றமாகத்தான் பாவிக்கப்படும்.
உலகத்திலுள்ள எல்லாச் சொத்தும் உலகத்திலுள்ள எல்லோருக்கும் சொந்தம். ஒவ்வொருவனும் பாடுபட்டுத் தான் சாப்பிட வேண்டும். தேவைக்கு மேல் எவனும் வைத்துக் கொள்ளக் கூடாது என்பன முதலிய கொள்கைகள் ஏற்பட்டு விட்டால் திருட்டுப் போவதும் திருட்டுப் போனதைப் பற்றிக் கவலைப்படுவதும் தானாகவே மறைந்துவிடும். ஆனால் இப்போதும் “நான் திருடுவது குற்றமல்ல.
நீ திருடுவது தான் குற்றம். நான் பொய் சொல்வது குற்றமல்ல. நீ சொல்வது தான் குற்றம். நான் விபசாரம் செய்வது குற்றமல்ல. நீ செய்வதுதான் குற்றம்” என்பது போன்றதான பொது ஒழுக்கங்கள் என்பவைகளும் பொதுக் கட்டுப்பாடுகள் என்பவைகளும் ஒரு நாளும் பொது வாழ்வுக்கும், சமத்துவத்திற்கும், சுதந்திரத்திற்கும் சிறிதும் பயன்படாது.
இன்று உலகத்தில் சிறப்பாக நமது நாட்டில் இருந்து வரும் ஒழுக்கம், கட்டுப்பாடு, தர்மம் முதலியவைகள் எல்லாம் பெரிதும் இயற்கைக்கு எதிராகவும் அடிமைத்தனத்திற்கு ஆதரவாகவும், தனிப்பட்டவர்கள் சுயநலத்திற்கேற்ற சூட்சியாகவும் செய்யப்பட்டவைகளாகவேயிருக்கின்றன.
கடைசியாக மனிதனின் ஜீவசுபாவம் என்னவென்றால் உணர்ச்சியும் இந்திரிய செயலும் ஆசையுமேயாகும். உணர்ச்சியின் காரணமாய் பசி, நித்திரை புணர்ச்சி மூன்றும் முக்கியமான இன்றியமையாத இயற்கை அனுபவமாய்க் காண்கின்றோம்.
இந்திரியங்களின் காரணமாய்ப் பஞ்சேந்திரியங்களும் அதாவது சரீரம், வாய், கண், மூக்கு, காது ஆகியவைகளின் செயல்களையும் முக்கியமான இன்றியமையாத இயற்கை அனுபவமாய்க் காண்கின்றோம்.
ஆகவே பொது உணர்ச்சியும் இந்திரிய செயலும் மனிதனுக்கு ஆசையை உண்டாக்கிக் கொண்டேயிருக்கின்றது. ஆசையின் காரணமாய் எதையும் ஆசைப்படுவதும் அதுவும் அனேகமாய் அளவுக்கடங்காமல் மேலும் மேலும் போய்க் கொண்டிருப்பதும் சுபாவமாகவே இருக்கின்றதைப் பார்க்கின்றோம்.
ஆகவே உணர்ச்சியும் இந்திரிய செயலும் ஆசையும் மனிதனால் சாமான்யத்தில் கட்டுப்படுத்தக் கூடியதல்ல. யாராலாவது கட்டுப்படுத்தப் பட்டு விட்டது என்றால் அப்படிப்பட்டவரைப் பற்றி நாம் இங்கு பேச வரவில்லை. நாம் சொல்லுவதும் அவருக்குச் சம்பந்தப்பட்டதல்ல. ( அவர்கள் பல லட்சத்திற்கு ஒருவர் இருப்பார்களோ என்னமோ) அந்தப் படிக்கில்லாத சாதாரண மனித ஜீவனின் உணர்ச்சியையும் இந்திரிய செயலையும் ஆசையையும் கட்டுப்படுத்தும் படியானதாகக் கொள்கைகளை ஒழுக்கங்களை கட்டுப்பாடுகளை ஏற்படுத்தினால் அது செலாவாணியாகுமா? செலாவாணியாவதாயிருந்தாலும் அதற்கு என்ன அவசியம் என்பன போன்றவைகளைக் கவனிக்க வேண்டாமா வென்று தான் கேட்கின்றோம்.
பொய் சொல்லக் கூடாது என்று வாயால் சொல்லி விடுகின்றோம். பொய் சொல்லுவதையும் ஒழுக்கக்குறை வென்று சொல்லி விடுகின்றோம். ஆனால் தொழில் முறைமைக்காகப் பொய்யை அவசியமாக வைத்து அதனால் பிறருக்குக் கஷ்டத்தையும், நஷ்டத்தையும் கொடுத்து வரும் வக்கீல்களையும் வியாபாரிகளையும் மனித சமூகத்தில் எவ்வித இழிவின்றி ஏற்றுக் கொண்டிருக்கின்றோம்.
அத்தொழிலில் சம்பாதித்த செல்வத்தைக் கொண்டு பெருமையைக் கொண்டு அம் மக்களை கௌரவமாகவும் மதிக்கின்றோம். ஆனால் அது போலவே நடக்கும் மற்றொரு தொழில்காரரை உதாரணமாக தேவதாசிகள் போன்றார்களை இழிவாகக் கருதுகின்றோம்.
பொதுவாக இம் 3 பேர்களாலும் மனித சமூகங்களுக்குக் கெடுதியும் நஷ்டமும் இருந்தும் இருவரை ஏற்றுக் கொண்டு ஒருவரைத் தள்ளுவதானது கேவலமும் சூட்சியும் சுயநலமுமேயல்லாமல் இதில் நியாயமிருப்பதாகச் சொல்ல முடியுமாவென்று கேட்கின்றோம்.
எந்தத் தொழிலானாலும் மற்றவர்களுக்குக் கெடுதியைக் கொடுக்கும் தொழில் எதுவானாலும் அது இல்லாமலே உலகம் நடக்கும் படியாகத்தான் பார்க்க வேண்டும். இப்படிப் பட்ட விஷயத்தில் மாத்திரம் வேண்டுமானால் இயற்கையை மாற்றி கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவது அவசியமாகலாம். அப்படிக்கில்லாமல் ஒருவருக்கு ஒருவிதம் என்பதாக மாற்றுவது பயன்படாததாகவே முடியும்.
எனவே இப்போது நடைமுறையிலிருக்கும் விபசாரமென்பதும் அதன் தத்துவமும் பெண்களை அடிமைப் படுத்துவதற்காக பெண்கள் அடிமைகள் என்னும் கருத்தின் மீது ஏற்படுத்தப் பட்டவைகள் ஆதலாலும் அது ஆண்களுக்குச் சிறிதும் சம்பந்தமில்லாமலிருப்பதாலும் அது ஒப்புக் கொள்ள முடியாததாய் காணப்படுவதோடு பெண்கள் சுதந்திரம் பெண்கள் விடுதலை என்பவைகளுக்காக நடைபெறும் காரியங்களில் விபசாரம் என்னும் காரியம் வந்து முட்டுக்கட்டை போடுமானால் அதைத் தைரியமாய் எடுத்தெரிந்து விட்டு முன்னோக்கிச் செல்ல வேண்டியது உண்மையான உழைப்பாளிகளின் கடமையாகுமென்பதையும் குறிப்பிட்டு விட்டு இப் போதைக்கு ஒருவாறு முடிக்கின்றோம்.
(குடி அரசு - தலையங்கம் - 26.10.1930)