2011 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் என்பதால், மரபுப்படி ஆளுநரின் உரையுடன் 13 ஆம் சட்டப்பேரவையின் 15ஆம் கூட்டத்தொடர் சனவரி 7 ஆம் தேதி தொடங்கியது.

ஆளுநர் தன் உரையைப் படித்து முடித்தபின் எதிர்க்கட்சிகள், அவ்வுரையில் காணும் குறைகளைச் சுட்டிக்காட்டுவது அல்லது எதிர்ப்பு தெரிவிப்பது என்பது சனநாயகக் கடமையின் மரபு.

ஆனால் ஆளுநர் உரையயைப் படிக்கத் தொடங்கிய உடனே, எதிர்க்கட்சித் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், ஒரு தாளை எடுத்து ஏதோ படிக்கத் தொடங்கினார். உடனே அதிமுக உறுப்பினர்கள் கூச்சல் போட்டுக்கொண்டு குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். ம.தி.மு.க., இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இதில் சேர்ந்து கொண்டன.

இக்கூச்சல் குழப்பங்களால் ஆளுநர் தன் உரையைப் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் பேரவைத் தலைவர்,  பேரவை விதி 286 இன் கீழ், குழப்பம் ஏற்படுத்திய உறுப்பினர்களை வெளியேற்ற ஆணையிடுகிறார்.

பேரவைத் தலைவரின் ஆணையை நிறைவேற்றப் பேரவைக் காவலர்கள் தம் பணியைச் செய்ய முயன்ற போது, வெளியேற மறுத்த உறுப்பினர்கள் காவலர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் காவலர்களைத் தாக்கியும் இருக்கிறார்கள். இது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு இருக்கிறது.

1989 ஆம் ஆண்டு முதல்வரும், நிதிஅமைச்சருமான கலைஞர், நிதிநிலை அறிக்கையைப் படிக்கும் போது, அதைப் பிடுங்கி, கிழித்து குழப்பம் ஏற்படுத்திய அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவின் முன் உதாரணம், இப்போது உரையைக் கிழிக்காமல் காவலர்களைத் தாக்கும் வகையில் திரும்பி இருப்பது தமிழக அரசின் பேரவைக் கண்ணியத்திற்கு இழுக்கு என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

“ஆளுநர் உரைக்கு எதிராக மாத்திரமல்ல, ஆளுநருக்கே எதிர்ப்பாக இங்கே தங்களின் அட்டகாசங்களை அவர்கள் செய்திருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது ” என்று முதல்வர்  பேரவையில் சொல்லியிருப்பதில் இருந்து, எதிர்க்கட்சிகளின் சனநாயக மரபு அல்லது சனநாயகப் பணியை நாம் புரிந்து கொள்ளலாம்!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு, அந்த மக்களே முகம் சுளிக்கும் வகையில் இவர்களின் சனநாயகக் கடமை இப்படித் தொடருமானால், மக்களும் தங்கள் சனநாயகக் கடமையைத் தேர்தலில் காட்டுவார்கள் என்பதைக் கூட இவர்கள் புரிந்து கொள்ளாவிட்டாலும் நமக்குக் கவலையில்லை...

குறைந்த பட்சம் அவையின் மாண்பைக் கூட இவர்கள் காப்பாற்ற வேண்டாமா?

Pin It