தமிழீழத் தேசியத் தலைவரின் ஒப்பற்ற தளபதி மாவீரன் கிட்டுவின் நினைவு நாள் சனவரி 16.  1993 ஆம் ஆண்டு மேற்குலக நாடுகள் பங்களித்த சமாதனத் திட்டத்துடன் தன்னுடைய தலைவரைக் காணச் சென்றுகொண்டிருந்த போதுதான், இந்தியக் கடல் எல்லைக்கு அப்பால், சர்வதேசக் கடல் எல்லையில் கிட்டு தாக்கப்பட்டார். இந்தியக் கடற்படையின் கொடுஞ்செயலால் இந்துமாக் கடலில் வீரமரணத்தைத் தழுவி 18 ஆண்டுகள் ஆகின்றன.

kittuதன்னுடைய 17 ஆவது வயதில் தலைவர் பிரபாகரனோடு கைகோர்த்துக் களம்புகுந்த அந்த மாவீரனுக்குள்தான் எத்தனை பரிமாணங்கள் ! எத்தனை எத்தனை திறமைகள் ! அத்தனையும் தாயக விடுதலைக்காகவே என்பதுதான் அவரின் மூச்சாக இருந்தது. கிட்டுவின் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், மாசற்ற தலைவன் மீதான கட்டற்ற பாசமும், மரத்தமிழ் வீரமும், மக்கள் மீதும் மண்ணின் மீதும் அவருக்கிருந்த எல்லையற்ற பற்றும் நிரம்பிக் கிடக்கின்றன. குறும்புத் தனமும், கசிந்துருகும் காதலும் அவருடைய வாழ்க்கையை மேலும் அழகானதாக ஆக்கியிருக்கின்றன.

யாழ்க் கோட்டையை முற்றுகையிட்டு, சிங்கள இராணுவத்தை மாதக்கணக்கில் மண்டியிட வைத்த புலிப்படையின் தளபதி, ஒரு குரங்குக் குட்டியை வீட்டிற்குள் கொண்டுவந்து வைத்துக்கொண்டு, வெளியே விட மாட்டேன் என்று அடம்பிடித்த செய்தி தெரியுமா?

ஒரு முறை தலைவரோடு தமிழ்நாட்டில் தங்கியிருந்தபோது நடந்த ஒரு நிகழ்வினால், காவல்துறை கிட்டு உள்ளிட்ட தோழர்களைக் கைது செய்யத் தேடியது. அதனால் அவர்கள் அனைவரும் பாபநாசத்தில் பழ.நெடுமாறன் அவர்களுக்குச் சொந்தமான வீட்டில் மறைவாகத் தங்க வைக்கப்பட்டனர். ஒரு நாள் குரங்குக் குட்டியைத் தூக்கிக் கொண்டு வந்தார் கிட்டு. குட்டியைத் தேடிவந்த தாய்க்குரங்கு கத்திய கத்தலில் ஒரு குரங்குக் கூட்டமே வீட்டை முற்றுகையிட்டுக் கொண்டது. தோழர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரின் நீண்ட நேர வற்புறுத்தலுக்குப் பிறகு, விட மனமின்றி அக்குரங்குக் குட்டியை வெளியில் விட்டிருக்கிறார். பிறகு யாழ் தளபதியாக இருந்த காலத்தில் ஒரு குரங்குக் குட்டியை வளர்த்துத் தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொண்டார்.

சென்னையில் அவர் தங்கியிருந்த வீட்டு வாசலில் நோய்வாய்ப் பட்டுக் கிடந்த நாயைக் குளிப்பாட்டி, மருந்திட்டு, வேளாவேளைக்கு நல்ல உணவு கொடுத்து அதை மரணத்தின்பிடியில் இருந்து மீட்டார். அவர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சென்னை மத்திய சிறையில் இருந்தபோது, அவருடைய பிரிவைத் தாங்க மாட்டாமல் உணவுண்ணாமல் அந்த நாய் இறந்துபோனது.

எவ்வுயிரும் துன்புறுவதைப் பார்க்கச் சகியாதவன்தானே போராளியாக இருக்க முடியும். பகைவனுக்கும் அருளிய நன்னெஞ்சத்தையும் பார்ப்போம்.

யாழ் கோட்டை முற்றுகையின் போது, சிங்கள இராணுவத்தின் கையிருப்பில் இருந்த குடிதண்ணீர், விறகு தீர்ந்துபோனது. அவர்களின் கோரிக்கையை ஏற்று, குடிதண்ணீரையும், இரண்டு லாரிகளில் விறகையும் அனுப்பி வைத்தார் கிட்டு. அதோடு தன் அன்பினை வெளிப்படுத்த ஒரு கூடை மாம்பழங்களையும் அனுப்பி வைத்தார்.

என்ன செய்தும் அவர்களுக்குப் புரிய வைக்க முடியாது என்பது அவருக்கும் தெரிந்திருந்தது. ஆயுத மொழி மட்டுமே அறிந்தவர்களுக்கு, அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் என்ற குறள் மொழி எப்படிப் புரியும்.

தமிழீழக் குழந்தைகள் அவரை எப்படி அழைப்பார்கள் தெரியுமா ‡ கிட்டு மாமா என்றுதான் அழைப்பார்கள். தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அவர் வரும்போது மாமா மாமா என்று அன்போடு ஓடிவரும் பிள்ளைகளை வாரியணைத்து ஆசைதீரக் கொஞ்சாமல் அவர் போவதில்லை. நிற்காத குண்டுமழைக்கும், ஓயாத ய­ல் அடிகளுக்கும் நடுவில் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கும் குழந்தைகளின் மனநிலையைக் கருத்தில் கொண்டு குழந்தைகள் சரணாலயம் அமைத்தார்.

போராடிக்கொண்டே கற்றுக் கொண்டும் இருந்தார் கிட்டு. ஐரோப்பிய நாடுகளில் தலைமறைவு வாழ்க்கையின்போது, மெக்சிகோ ஓவியர் ஒருவரிடம் தூரிகை வித்தையையும் கற்றுக்கொண்டார். பிகாசோ ஓவியங்களின் தீவிரமான ரசிகர். சிறந்த புகைப்பட நிபுணராகவும் விளங்கினார்.

சென்னை மத்திய சிறையில் இருந்த படியே அவர் எழுதிய ஈழப்போர் நிலவரம் பற்றிய தொடர், கிட்டுவின் டைரி என்னும் பெயரில் தேவி இதழில் வெளிவந்தது. பெண்கள் பங்கேற்காத எந்த போராட்டமும் முழுமையான வெற்றியைப் பெற முடியாது என்று சொல்வார் தந்தை பெரியார். அதனால்தான் பெண்கள் அதிகம் பேர் படிக்கக் கூடிய பத்திரிகையான தேவியில் தங்களுடைய விடுதலைப் போர் குறித்தப் பதிவுகளை எழுதினார். விடுதலைப் புலிகளின் பன்னாட்டுச் செயலகப் பொறுப்பாளராக இருந்த காலத்தில், எரிமலை, உலகத்தமிழர், சுதந்திர தாகம் போன்ற செய்தி இதழ்களை நடத்தியிருக்கிறார். அந்நாட்டவருக்கு தன் நாட்டின் நிலையை உணர்த்திட, ஆங்கிலமும் கற்றுத் தேர்ந்தார்.  இருக்கும் இடம் எதுவாக இருந்தாலும்,  அதைத் தமது விடுதலைப் போராட்டத்திற்கான களமாக மாற்றிய பன்முகக் கலைஞன் கிட்டு.

வீரமும் காதலும் இரண்டறக் கலந்தது தமிழர் வாழ்வு. அகமும் புறமும் கொண்டவை சங்கத் தமிழ் இலக்கியங்கள். இரண்டும் சங்கமித்த இடம் ஈழப்போராட்டக் களம் என்றால் மிகையாகாது.

தம்பி ஜெயத்தின் கல்லறை மீது வைக்கப்பட்ட புல்லாங்குழல் உயிர்சுரக்கும் காதலின் சாட்சி. களம் பல கண்ட கிட்டுவின் காதலும் ஆழமான காவியம்தான்.

ஒரு முறை மாத்தையாவுடன் தன் அன்பிற்கினிய சிந்தியாவின் வீட்டிற்குச் சென்றபோது,

“தங்கச்சி! உன்னைப் பார்க்காமல் இவனால் இருக்க முடியவில்லை. தினமும் உன்னைத் தேடி வந்து விடுகிறான்”

“இவளையா நான் தேடி வருகிறேன். தேநீர் குடிக்கக் காசிருப்பதில்லை. இங்கே வந்தால் காசில்லாமல் தேநீர் குடிக்கலாம் என்றுதான் வருகிறேன்”

காதலர்களுக்கே உரிய சீண்டல்கள் இருந்தாலும் கடமையோடு கட்டுண்ட காதல் அது.

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் திரைப்படப் பாடல்களில் காதல் பாடல்களில் கூடப் பொதுவுடைமைச் சிந்தனை இருக்கும். அப்படித்தான் சிந்தியாவிற்குக் கிட்டு எழுதிய கடிதங்களும். காதலிக்கு எழுதும் கடிதமே ஆனாலும் தாயகக் கடமையே முன்னிற்கும்.

“நானும் நீயும் திருமணம் செய்து பிள்ளைகள் பெற்று, வளர்ப்பது மட்டும் வாழ்க்கையாக முடியாது. எமது வாழ்க்கைக்கு நாமேதான் அர்த்தத்தைத் தேடவேண்டும். நான் தேடிக் கொண்டிருக்கின்றேன். நீயும் தேட வேண்டும்”

அவர்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொண்டார்கள்.

அக்னிக் குஞ்சுகளாய் அவர்களின் நினைவுகளை அடைகாத்து அடுத்த தலைமுறைகளுக்குக் கொடுப்போம். வெந்து தணியட்டும் காடு.விடியலைப் பார்க்கட்டும் நாடு!

Pin It