2000 ஆம் ஆண்டு நவம்பர் 2

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மலோம் என்னும் சிற்றூரில், காரணமின்றியும், கண்மூடித்தனமாகவும் பொது மக்களின் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிலர் இறந்து போனார்கள். அந்த மாநிலத்தையே அந்த நிகழ்வு உலுக்கியது. எனினும் சில நாள்களில் பலரும் அதனை மறந்து போனார்கள். ஆனால் ஒரு 28 வயதுப் பெண்ணால் அதனை மறக்க முடியவில்லை. அங்கு நடைமுறையில் இருந்த, இன்றும் இருக்கின்ற ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் 1958 தான் காரணம் என்பதை உணர்ந்து, அதனை மத்திய அரசு திரும்பப்பெறும் வரை பட்டினிப்போர் நடத்துவேன் என்று சொல்லி, அவர் உண்ணாநிலைப் போராட்டத்தில் இறங்கினார். அந்த தியாகப் பெண்மணிதான் இரோம் ஷர்மிளா.

ஓராண்டு, ஈராண்டு அல்ல, மக்களுக்கான அந்த வீர மங்கையின் போராட்டம் 16 ஆண்டுகள் தொடர்ந்தது . மூக்கு வழியாகச் செலுத்தப்பட்ட திரவ உணவில் மட்டுமே உயிர் வாழ்ந்தார். போராட்டத்திற்கு அரசுகள் அசைந்து கொடுக்காததால், மக்களைச் சந்திக்க முடிவெடுத்தார். நடந்து முடிந்த மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்.

தங்களுக்காக 16 ஆண்டுகளாய்த் தன் இளமை, சுகம் எல்லாவற்றையும் துறந்து போராடும் அவருக்குப் பேரளவில் மக்கள் செல்வாக்கு இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் வாக்குகள் எண்ணப்பட்டபோது, அவர் 90 -- வெறும் 90 -- வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார்.

இது ஷர்மிளாவின் தோல்வியன்று, மணிப்பூர் மக்களின் தோல்வி.

சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில், தனி மனிதர்களைப் பார்க்காமல், கட்சி சார்ந்தே வாக்குகள் அளிக்கப்பட வேண்டும் என்பது சரியானதுதான். ஆனாலும், இரோம் ஷர்மிளா போன்றவர்களைத் தனித் தட்டில் வைத்தே எடை போட்டிருக்க வேண்டும்.

இது ஒருபுறமிருக்க, குற்றவியல் பின்னணி கொண்ட பலரை மக்கள் தங்களின் தொகுதிகளில் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதும் வேதனைக்குரியதாகவே உள்ளது. அண்மையில் வெளிவந்த புள்ளிவிவரம் ஒன்று, 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள 186 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன என்று கூறுகின்றது. கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், பாலியல் வன்முறை போன்ற வழக்குகள் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் 63 பேர் பா.ஜ.க. கட்சியையையும், 8 பேர் சிவசேனாவையும் சேர்ந்தவர்கள் என்கிறது அந்தக் குறிப்பு.

தமிழ்நாட்டில், பொதுவுடமைக் கட்சி வேட்பாளர்களில் கூட, குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள தளி ராமச்சந்திரன் வெற்றி பெற முடிகிறது. மக்களால் பாராட்டப்படும் அய்யா நல்லகண்ணு வெற்றிபெற முடியவில்லை.

Pin It