1999ம் ஆண்டு உலகமயப் பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையில் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்களைத் தனியார்மயமாக்க “New Exploration Licensing Policy” என்னும் புதிய கொள்கை அறிமுகமானது. இயற்கை வளங்களின் பயன்பாடு அனைவருக்கும் கிடைக்கின்ற வகையில் அரசின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று கூறும் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது இந்தப் புதிய கொள்கை. இக்கொள்கையின் மூலம் இயற்கை எரிவாயுக்கள் தொடர்பான வர்த்தகத்தில் அந்நிய முதலீடு 100 சதவீதம் அனுமதிக்கப்பட்டது. அதுவரை லாபகரமாக இயங்கி வந்த அரசு நிறுவனமான ஒ.என்.ஜி.சி, இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்கள் பற்றிய தகவல்களைக் (தனியார் நிறுவனங்களுக்கு) கொடுக்கும் மையமாக மாறிப்போனது.

தனியார் வர்த்தகத்தை மேம்படுத்த, 2006ம் ஆண்டு மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் கீழாக, [Oil Fields (Regulation and Development) Act, 1948 சட்டத்தின்படி] ஹைட்ரோ கார்பன் பொது இயக்குநரகம் (Directorate General of Hydrocarbons) உருவாக்கப்பட்டது.

எல்லா இயற்கை எரிவாயுக்களிலும், கச்சா எண்ணெயிலும் ஹைட்ரோ கார்பன் நிச்சயமாக இருக்கும். கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்களை மரபு ஹைட்ரோ கார்பன்கள் (Conventional Hydrocarbons) என்றும், நிலக்கரி படுகை மீத்தேன் (Coal Bed Methane), நிலக்கரி சுரங்க மீத்தேன் (Coal Mining Methane), ஷேல் எரிவாயு (Shale Gas),), டைட் எரிவாயு (Tight Gas) போன்ற இயற்கை எரிவாயுக்களை மரபுசாரா ஹைட்ரோ கார்பன்கள் (Unconventional Hydrocarbons) என்றும் வகைப்படுத்துகின்றனர்.

மரபு சாரா ஹைட்ரோ கார்பன் வகையிலுள்ள புதிய எரிவாயுக்களின் பயன்பாடுகள் கண்டறியப்பட்ட பின்பு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு விதிகளில் (Petroleum and Natural Gas Rules, 1959 ) பல திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. குறிப்பாக 2003ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் மீத்தேன் எரிவாயு குறித்தான பிரிவுகள் முதன்முதலாக சட்ட விதிகளில் சேர்க்கப்பட்டன. மேலும், இயற்கை எரிவாயுக்கான விளக்கமும் விரிவாக்கப்பட்டன. அதாவது மீத்தேன், ஷேல் போன்ற புதிய வகை எரிவாயுக்களை வர்த்தக ரீதியில் தனியார் நிறுவனங்களும் எடுப்பதற்குத் தேவையான சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் தொடர்ச்சியாகவே, நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயுக்களை எடுப்பதற்கான அனுமதியை தற்போது ஜெம் லேபோர்ட்டிரிஸ் தனியார் நிறுவனத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. இதுவரை மத்திய அரசோ மாநில அரசோ நெடுவாசலில் என்ன விதமான இயற்கை எரிவாயு எடுக்கப்பட இருக்கிறது என்பதை மக்களுக்குத் தெரிவிக்க இல்லை.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தால் (ஜூன் 2013) வெளியிடப்பட்ட அறிக்கையில், நெடுவாசல் உள்ளடங்கிய காவேரி டெல்டா பகுதிகளில் ஷேல் எரிவாயு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

சுமார் 10,000 அடி ஆழ்துளைக் கிணற்றைத் தோண்டி, பக்கவாட்டில் பாறைகளைச் செயற்கையாகப் பிளவுறச் செய்யும் ஹைட்ராலிக் ஃபிராக்சரிங் (Hydraulic Fracturing) தொழில்நுட்பத்தின் மூலமே ஷேல், மீத்தேன் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் எரிவாயுக்களை எடுக்க முடியும். இப்படி ஆழ்துளைக் கிணறு தோண்டும் பொழுது நிலத்தடி நீரை 2,000 அடிவரை இறைத்துவிடுவார்கள். தவிர இத்தொழில்நுட்பத்திற்கு 13,25,000 லிட்டர் நீர் தேவையும் உள்ளது. அதோடு இந்த தொழில்நுட்பத்தில் ரேடியம்- 226, பாதரசம், யுரேனியம், மெத்தனால், ஹைட்ரோ குளோரிக் அமிலம், பார்மால்டிஹைடு போன்ற வேதிப்பொருட்களுடன், பிடெக்ஸ் (Benzene, Toluene, Ethyl Benzene Xylenes - BTEX) உள்ளிட்ட சுமார் 600 வகையான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. (பார்க்க: “மீத்தேன் அகதிகள்” -- த.செயராமன்).

இதன் காரணமாக நீர், நிலம், காற்று என்று சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படும். ரசாயனம் கலந்த காற்றை சுவாசிக்கும் மக்களுக்குப் பல்வேறு உடல்நிலைக் குறைபாடுகள் உண்டாகும். நீலத்தடி நீர் உப்புமயமாகும். இவை எல்லாவற்றையும் விட ஆபத்தானது ஹைட்ராலிக் ஃபிராக்சரிங் காரணமாக சிறிய அளவிலான பூகம்பம் ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது என்பது தான்.

இதில் மற்றொரு கொடுமை என்னவென்றால், இத்திட்டங்களுக்கான மாநில அரசுகள் வழங்க வேண்டிய (நீர், நிலம், காற்று தொடர்பான) அனுமதிகளை மத்திய அரசே வழங்குவதற்கான ஆணை ஒன்றும் 2013-ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.

தாமிரபரணி தீர்ப்பு:

கோக் மற்றும் பெப்சி நிறுவனங்கள் தாமிரபரணியில் நிலத்தடி நீர் எடுப்பதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்கி ஆணை பிறப்பித்துள்ளது உயர் நீதிமன்ற மதுரை கிளை. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு தொடுத்த வழக்கில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு நீதிமன்றம் சொல்லும் காரணம், கோக் மற்றும் பெப்சி நிறுவனங்களைத் தவிர வேறு பல நிறுவனங்களும் தாமிரபரணி நீரைப் பயன் படுத்துகின்றன என்பது தான். உதாரணமாக நாளொன்றுக்கு ஏ.டி.சி. டயர் நிறுவனம் 10 லட்சம் லிட்டர், பெப்ஸியின் பிரதிஷ்டா பிஸினஸ் சொலுசன்ஸ் 15 லட்சம் லிட்டர்கள், கோக்கின் சவுத் இந்தியா பாட்டிலிங் 18 லட்சம் லிட்டரகள், ஸ்டெர்லைட் நிறுவனம் ஒரு கோடியே முப்பத்தியாறு லட்சம், அமுல்யா ஸீ புட்ஸ் 2 லட்சம் லிட்டர்கள் தினமும் எடுக்க தமிழக அரசின் அனுமதி பெற்றுள்ளன. இது தவிர கோக்கும் பெப்ஸியும் தாமிரபரணியின் உபரி நீரான 5049 னீநீயீt நீரில் 80 சதவீதம் மட்டுமே, அதாவது 43 னீநீயீt நீர் மட்டுமே எடுப்பதாகவும், சிப்காட்டின் மொத்த நீரில் 20% மட்டுமே எடுப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

உண்மையில் நிலத்தடி நீரை வர்த்தகப் பயன்பாட்டிற்காக எடுப்பதை முறைப்படுத்தவும், கண்காணிக்கவும் போதிய சட்டங்கள் இல்லை என்பதே இப்பிரச்சனையின் மையப்புள்ளி. 2003ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு நிலத்தடி நீர் மேலாண்மைச் சட்டம் “அம்மா குடிநீர்” வர்த்தகத்திற்காகப் பின்வாங்கப்பட்டது.

இதுபோன்ற மக்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண நீதிமன்றம் செல்லலாமா என்கிற கேள்வியும் தற்போது பரவலாக விவாதிக்கப்படுகிறது. ஜனநாயகத்தில் மக்களே முழு அதிகாரம் பெற்றவர்கள். நீதிமன்றத் தீர்ப்பாக இருந்தாலும் அதனை மக்கள் மன்றத்தால் மாற்ற முடியும். இந்திய அரசமைப்புச் சட்டத் திருத்தம், பெரியார் நடத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான போராட்டத்தின் காரணமாகவே கொண்டு வரப்பட்டது. நீதிமன்றத் தீர்ப்பை வென்ற கோக்கை பிளாச்சிமடா மக்கள் போராட்டம் விரட்டியடித்தது.

மேற்கு நாடுகளில் நீதிமன்றத் தீர்ப்புகள் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. நீதிமன்றம் முன்பாக மக்கள் போராட்டம் நடத்துவதும் அங்கு அனுமதிக்கப்படுகிறது. கருத்து சுதந்திரம் என்பது நீதிமன்ற நடைமுறைகளைக் கேள்வி கேட்கும் சுதந்திரத்தை உள்ளடக்கியதே.

Pin It