25. 10. 09 அன்று சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் சங்கக் கூட்டத்திலும், 31. 10. 09 அன்று தில்லித் தமிழ்ச் சங்கக் கூட்டத்திலும், 08. 11. 09 அன்று சேலம் தமிழ்ச் சங்கக் கூட்டத்திலும் கலந்து கொண்டு, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலளர் சுப. வீரபாண்டியன் உரையாற்றினார்.

‘கண்ணதாசனும் தமிழும்’ என்னும் தலைப்பில் சிங்கப்பூரில் உரையாற்றும்போது, கவிஞர் கண்ணதாசன் தமிழை எப்படிப் பார்த்தார், எப்படிக் கையாண்டார், தமிழால் எப்படிப் பெருமை பெற்றார் என்னும் செய்திகளை விளக்கிப் பேசினார். தொடக்க நிலையில் தனித் தமிழின் மீது மாறாபற்றுடையவராகக் கவிஞர் விளங்கினார். பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்யவர்களின் மீது கடும் தாக்குதல் தொடுத்தார். ‘பட்சிகளும், ரட்சகரும் தமிழா? பாரதமும், சமிதிகளும் தமிழன் சொத்தா? பலர் வீட்டுப் பிச்சையைத் தான் தமிழ் என்பாயா?’ என்று கேட்ட கவிஞர், பின்னாளில் மாறிப் போனார். ‘புஷ்பமாலிகா’ என்னும் தன் நூலின் முன்னுரையில் ‘தனித்தமிழில் எனக்குப் பற்றுதல் இல்லை ’என்று எழுதினார்.

அவர் மறைந்த பின்பு வெளிவந்துள்ள சத்திய முத்திரை என்னும் நூலில் ‘தனித்தமிழ்’ என்றே ஒரு கட்டுரை உள்ளது. அதில் பலமொழிக் கலப்பை ஆதரித்து எழுதியுள்ளார் என்பன போன்ற பல சான்றுகளோடு பேசிய அவர், தன் பேச்சை வெறும் பாராட்டுரையாக அல்லாமல், திறனாய்வு உரையாக வழங்கினார். அவ்விழாவில், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் நா. ஆண்டி யப்பன்,செயலாளர் சுப. அருணாசலம், மலேசியப் பத்திரிகையாளர் சந்திரகாந்தம், சிங்கப்பூரைச் சேர்ந்த கல்வியாளர் சந்துரு, தமிழகப் பேராசிரியர் கவிஞர் மா. கண்ணப்பன் ஆகியோர் உரையாற்றினர். சிங்கப்பூர் பல்கலைக் கழக மேனாள் பேராசிரியர் சுப. திண்ணப்பன், சிங்கப்பூர் பெரியார் சமூகநீதிப் பேரவைத் தலைவர் கலைச் செல்வன், தமிழ் முரசு பத்திரிகை நண்பர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் தந்தை பெரியார் குறித்தும், சேலம் தமிழ்ச் சங்கத்தில் அறிஞர் அண்ணா குறித்தும் சுப. வீ உரையாற்றினார்.

Pin It