சிங்கள இனவெறிப் பாசிசம் தனது வெறியாட்டத்தை தொடங்கிய நாள் முதல் இதுவரை இரண்டு லட்சம் ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இலங்கை என்னும் பருந்தின் கால்களில் அகப்பட்ட சின்னஞ்சிறு கோழிக்குஞ்சை தீர்த்து ஒழிப்பதற்கு, விரிந்து பரந்த சனநாயக நாடான இந்தியா முதல் சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா வரை அனைத்துப் பயங்கரவாதிகளும் அணிவகுத்தார்கள். விளைவு - இன்று மூன்று லட்சம் தமிழர்கள் முள்வேலி முகாம்களுக்குள் வதைபட்டுக் கொண்டிருக்கிறார்கள். மனிதம் மறுக்கப்பட்ட ஈழத் தமிழர்களை மீட்க இந்திய நடுவணரசும் எதுவும் செய்யவில்லை. தமிழக அரசும் நேர்மையாய் நடக்கவில்லை.

காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாற்று நீர் உரிமை பறிக்கப்பட்ட தமிழக விவசாயிகள் வறுமைப் பள்ளத்துக்குள் தள்ளப்படுகிறார்கள். இலங்கைக் கடற்படையால் ஒவ்வொரு நாளும் தாக்கப்பட்டு, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பறிபோவது அன்றாடக் காட்சியாகி விட்டது. தமிழக மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு அடக்குமுறை உச்சத்தி நிற்கிறது. தமிழகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் தமிழர்கள் தோல்வியுற்று, சிதைந்து சின்னாபின்னமாக்கப்படும் நேரத்தில், தமிழர்களின் கவனத்தை திசைதிருப்பிட முதல்வர் கருணாநிதி கோவையில் ஒன்பதாவது உலகத்தமிழர் மாநாட்டை நடத்துவதாக அறிவித்திருப்பது, அரசியல் ஆதாயம் தேடும் தன்னல நோக்கம் கொண்டதாகும்.

ஒரு இனத்தை அழிக்கும் செயலுக்குத் துணை செய்து விட்டு, அந்த இனம் பேசும் மொழி வளர்ச்சிக்கு உலகத் தமிழ்மாநாடு என்பது, இழிவும் இனத்துரோகமும் ஆகும். உள்ளுர்த் தமிழர்களும் உலகத் தமிழர்களும் இந்த ஏமாற்று நாடகத்தை புரிந்திருப்பார்கள். “மாநாட்டில் சமர்ப்பிக்க வேண்டிய ஆய்வுக்கட்டுரைகளைத் தயாரிக்கவும், பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளவும் கால அவகாசம் வேண்டுமென வெளிநாடுகளைச் சேர்ந்த தமிழிஞர்கள் கேட்டுக் கொண்டதால்” உலகத் தமிழ் மாநாட்டை ஜுன் இறுதி அல்லது ஜுலை முதல் வாரத்திற்கு தள்ளி வைத்திருப்பதாக அறிவித்திருப்பது - இந்த ஏமாற்று நாடகத்தின் மற்றுமொரு காட்சியாகும். தற்காலிகத் தள்ளிவைப்பு அல்ல, உலகத்தமிழ் மாநாட்டை நடத்தும் தகுதி கருணாநிதிக்கு இல்லை. எனவே நிரந்தரத் தள்ளிவைப்பே நமது லட்சியம்.

உலகத் தமிழ்மாநாட்டை எதிர்த்து பணியாற்றும் நோக்குக்காக - ‘தமிழ்ப் படைப்பாளிகள் உணர்வாளர்கள் கூட்டமைப்பு’ - என்ற பொது அமைப்பு 27.09.2009 அன்று புதிதாய் உருவாக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர்கள், தமிழ் உணர்வாளர்கள் எனப் பலரும் உள்ளிணையும் வகையில் அமைப்பு விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கவிஞர்கள் இன்குலாப், சுகிர்தராணி, ஜெயபாஸ்கரன், கவிபாஸ்கரன், மதியரசன், எழுத்தாளர்கள் பேராசிரியர் சரசுவதி, சூரியதீபன், இராசேந்திர சோழன், வழக்கறிஞர் பாண்டிமாதேவி, ஜகாங்கீர், ஏழுமலை, சுகுமார் போன்ற பலர் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில், எழுத்தாளர் சூரியதீபன், பொறியாளர் பொன். ஏழுமலை ஒருங்கிணைப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். வரும் அக்டோபர் 10-ந் தேதி சென்னை மெமோரியல் ஹால் எதிரில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்த கலந்தாய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தொடர்முழக்க ஆர்ப்பாட்டத்தில் தவறாது பங்கேற்குமாறு படைப்பாளிகள், தமிழ் உணர்வாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

உலகெங்குமுள்ள தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள், இலக்கியவாதிகள், உணர்வாளர்கள் இம்மாநாட்டில் பங்கேற்காது புறக்கணித்து, ஈழத்தமிழருக்கு ஆதரவாய் நிற்குமாறு கேட்டுக்கொள்கிறோம். புலம் பெயர்ந்த தமிழர்கள், வெளிநாடுவாழ் தமிழர்கள் அவரவர் வாழும் இடங்களில் உள்ள தமிழறிஞர்களை மாநாட்டில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்குமாறு வேண்டி ஆவண செய்யக் கேட்டுக்கொள்கிறோம்.

- சூரியதீபன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

6 comments

6
Dr. V. Pandian
கருணாநிதியின் உலகத் தமிழ் மாநாட்டு அறிவிப்பு, அவரது உச்சக்கட்ட வக்கிரத்தின் அடையாளம். இப்போது மட்டுமல்ல முள்வேலியில் அடைக்கப்பட்டுள்ள மக்கள் விடுதலை செய்யப்படும்வரை, அவர்களுக்குறிய ஞாயம் கிடைக்கும் வரை அவரை இந்த உலகத் தமிழ் மாநாடு நடத்த விடக்கூடாது.

13,000 கோடிக்கு சாராயம் விற்று ஆட்சி நடத்தும் கருணாநிதியினால் தமிழும், தமிழரும் ஒழிக்கப்பட்டது தான் மிச்சம்.

சமீபத்தில் தென்கச்சி சுவாமிநாதன் 75 அகைவையிலேயே இறந்ததை, தமிழினத்தின் ஒரு இழப்பாகவே கருதுகிறோம். ஆனால், தள்ளாத 85 வயது கருணாநிதி இன்றும் "தமிழுக்கும், தமிழனுக்கும்" அயராது "பாடுபட்டுக் கொண்டுள்ளது" நமக்கு விசனத்தைக் கொடுக்கிறது.
தமிழவன்
ஆமாம் தோழர்களே ! வக்கிரத்தை விடவும் மிகக் கொடிய வக்கிரம். கருணாநிதி தனது சகாக்களை அனுப்பி ராசபக்சேவுடன் விருந்துண்டு, கொஞ்சிமகிந்து குலாவி அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, முகாம்களெல்லாம் ஆகா எத்தனை அழகு என்று பல்லிளித்த கோரம் யாவற்றை விடவும் கொடியது.

அதைவிடவும் கோரம் நான்கு நாட்களில் முள்வேலி முகாம் தமிழர்களை விடுவித்த தலைவர் கலைஞர் வாழ்க சுவரொட்டி! தென் சென்னை திமுக இது சரத்பொன்சேகவின் கோமாளி வார்த்தையைவிடவும் மிக மிக பெரிய கோமாளித்தனம்.

எங்கே தனது கோமாளித் தனம் சாமானியருக்கும் புரிந்துவிடப் போகிறது என்று மீண்டும் முயற்சிக்கும் மற்றொரு கோமாளி வேலைதான் உலகத் தமிழ் மாநாடு. இவயெல்லாவற்றையும் பொருத்துக்கொள்ள இருக்கவே இருக்கிறது. ஓட்டுக்கு நோட்டு பெறும் சாமானிய சனநாயக சரித்திர வாக்காள பெருமக்கள்.

அதுதான் இலவச தொ(ல்)லைக்காட்சியும், டாஸ்மாக் மதுவும், கரைபுரண்டோடும் கண்கொள்ளா காட்சியல்லவா நம் தமிழின தலைவரின் ஆட்சி. இது போதுமே எம் சனத்துக்கு...!
tsumani
ஆட்சியில் இருப்பவர். ஆட்சியை எதிர்ப்பவர். எதிர்ப்பவரில் மிதவாதி., தீவிரவாதி. தீவிரவாதிகளை உலகம் ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை. இப்படிப்பேசினால், தமிழ்மக்களுக்காகப் பேசுகிறோம் என்பார்கள். தமிழகத்தில் உள்ள தமிழர்களோடு எந்த கடல்தாண்டியும் தொப்புள்கொடி உறவோடு இருந்ததில்லை. பெண் கொடுத்து பெண் எடுக்கும் பழக்கமுமில்லை. தமிழகத்துத் தமிழர்களைத் தன் சகோதரன் என்று கடல்தாண்டி வாழும் தமிழன் நினைத்ததில்லை. ஏதோ பிரச்சனை வரும்போது தமிழகத்தை நோக்கி கூக்குரல் வரும். கூக்குரல் தற்காலிகமாயது என்பதால், அது உள்ளூர் அரசியல்வாதிகள் நாற்காலி கனவின் சூத்திரமாகப் போய்விட்டது. எல்லாவற்றிற்கும் காரணம் சுயநலமே. மனிதநேயம் பெருகும் நாளே உலகம் மகிழ்ச்சியில் திளைக்கும். அதுவரை தனக்குப் பிடிக்காதவர்களை ஏளனம் செய்வது இன்று நேற்று தொடங்கிணகு அல்ல
ஏகாந்தன்
"தமிழகத்தில் உள்ள தமிழர்களோடு எந்த கடல்தாண்டியும் தொப்புள்கொடி உறவோடு இருந்ததில்லை. பெண் கொடுத்து பெண் எடுக்கும் பழக்கமுமில்லை. தமிழகத்துத் தமிழர்களைத் தன் சகோதரன் என்று கடல்தாண்டி வாழும் தமிழன் நினைத்ததில்லை. ஏதோ பிரச்சனை வரும்போது தமிழகத்தை நோக்கி கூக்குரல் வரும். கூக்குரல் தற்காலிகமாயது என்பதால், அது உள்ளூர் அரசியல்வாதிகள் நாற்காலி கனவின் சூத்திரமாகப் போய்விட்டது. ".......
மனிதநேயரே,லட்சக்கணக்கான ஈழதமிழர்களின் மரணஓலம் உங்களுக்கு ஏதோ பிரச்சினை வரும் போது வருகின்ற கூக்குரலாகத் தெரிகிறது. இதில் இருந்து நீங்கள் செக்கும் தெரியாத, சிவலிங்கமும் தெரியாது என்பதும் எங்களுக்கு புரிகிறது.
தொப்புள் கொடி உறவு எதுவும் இல்லை என்று சொல்பவரே உங்கள் உள்ளுர் தலைவரின் உலகதமிழினத் தலைவர் என்ற பட்டத்தை உடனடியாக தூக்கி எறியச் சொல்லுங்கள்.
Dr. V. Pandian
தமிழகத்திலே கூட உண்மையான தொப்புள்கொடி உறவென்பது ஒவ்வொரு சாதிக்குள்ளே மட்டும் தான் உள்ளது. அதனால், ஒரு தமிழ் சாதிக்காரனுக்கு ஒன்று என்றால் மற்ற தமிழர்கள் கேட்கக் கூடாதா? அல்லது அவன் தான் "ஐயோ, அடிக்கிறார்களே, உதவுங்களேன்" என்று சக தமிழனைக் கேட்கக் கூடாதா?

சாதி என்பதே இங்கு வந்தேறிகள் வளர்த்துவிட்டு கூர் தீட்டியது தானே! அதே போல, உலகத் தமிழினம் ஒன்றிணையாமல் பார்த்துக் கொண்டது யார்? ஈழ இறுதிப்போர் நடந்த காலத்தில் ஈழமக்களுக்காக போராடிய தலைவர்களை, தினமலர், LTTE யிடம் காசு வாங்கிக் கொண்டு செயல்படுவதாக செய்தி பரப்பியது. அதை அப்படியே பச்சைத் தமிழன் நம்பினான். 4000 ஆண்டுகளாய் நம்பிக் கெட்டவன் தானே தமிழன்?

இங்கே மனித நேயத்தைப் பற்றி தத்துவ ஞாணத்தை எழுதும் ஞாண சூழ்ச்சியங்கள் போன்ற "வௌியாரை" உள்ளே நுழையவிட்ட தமிழன், உட்பகையால் அல்லலுறுகிறான். இவர்களுக்கு கஷ்டம் என்றால் மட்டும் மனித நேயம் பீற்றிக் கொண்டு வரும்
Dr. V. Pandian
தொப்புள்கொடி உறவு பற்றி பிதற்றியவர்க்கு.....

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னதை இங்கே குறிப்பிடுகிறேன்:

"யூதர்கள் என்ற சமூகம் ரத்தத்தலும் பாண்பாட்டாலும் பிணைக்கப்பட்ட ஒன்று. அவர்களைப் பற்றிய உலகக் கண்ணோட்டமே அதற்குச் சான்று. 15 வருடங்களுக்கு முன்பு நான் ஜெர்மனிக்கு வந்தபோது தான், நான் ஒரு யூதன் என்று கண்டுபிடித்தேன். இந்த எனது கண்டுபிடிப்புக்கு யூதர்கள் காரணமல்ல, ஜெர்மானியர்கள் தாம்"

அதை அப்படியே தமிழனுக்கும் மாற்றி எழுதலாம்.

"உலகின் மூத்தக் குடியான தமிழர்கள் ரத்தத்தாலும், தங்களது உன்னத பண்பாட்டாலும் பிணைக்கப்பட்ட இனம். ஈழத்தில் தம்மை அழிக்கும் சிங்களனுக்கெதிராக போராடிய மாவீரர்களை, இந்த உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து கொண்டு அழித்த பிறகு தான், தமிழனுக்கு யாருமே இல்லை என்ற உணர்வும், இனி உலகத் தமிழரெல்லாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய கட்டாயத்தையும் உணர்ந்துள்ளோம். நாங்கள் தமிழர் என்று நினைவுறுத்திய இந்தியாவிற்கும், உலக நாடுகளுக்கும் எங்களது நன்றிகள்"

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.