குஜராத் சட்டப் பேரவையில் பஞ்சாயத்துத் தேர்தல்களில் வாக்களிப்பதைக் கட்டாயமாக்கும் வகையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறுபட்ட கருத்துகள் வந்து கொண்டு இருக்கிறது. குஜராத் முதல்வரின் இந்தச் சட்டம் ஜனநாயகத்திற்கு எதிரானது. ஜனநாயகம் என்பது மக்களின் உரிமை. கட்டாயம் என்பது அதிகாரம். மக்களின் உரிமைக்கு எதிராக மோடியின் அதிகாரம் இங்கே பிரதிபலிக்கிறது. 

இந்தியத் தேர்தலில் சராசரியாக 60 சதவீதம் மக்கள் வாக்களிக்கிறார்கள். 40 சதவீதம் பேர் வாக்குப்பதிவில் பங்கு கொள்ளாமல் ஒதுங்கிக் கொள்கிறார்கள். ராஷ்ட்டிரிய ஜனதாதளத் தலைவர் லாலுபிரசாத் யாதவ் பொதுத் தேர்தல்களிலும் கட்டாய வாக்குப்பதிவு முறையைக் கொண்டுவர வேண்டும் என்கிறார்.

இதுகுறித்துக் கருத்துச் சொன்ன தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரோசி, தேர்தலில் வாக்களிப்பதைக் கட்டாயமாக்குவது குறித்துப் பலமுறை தேர்தல் ஆணையம் விவாதித்ததாகவும், இந்தியாவில் இதை நடைமுறைப்படுத்துவது கடினம் என்றும் கூறியிருக்கிறார். இந்தக் கருத்து நிர்வாகம் தொடர்பானது. ஆனால் அவரே தொடர்ந்து சொல்லும்போது, ஜனநாயகத்தில் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. ஜனநாயகமும் கட்டாயமும் கைகோர்த்துச் செல்ல முடியாது என்றும் கருத்து கூறியிருக்கிறார். இது சிந்தனைக்குரிய கருத்து. 

இந்திய அரசியல் சாசனம், மக்களுக்கோ அரசுக்கோ எதிராக அல்லாத, அனைத்து உரிமைகளும் குடிமக்களுக்கு உள்ளது என்று கூறுகிறது. வாக்களிப்பது என்பது மக்களின் உரிமை. வாக்களிப்பதும் வாக்களிக்காமல் இருப்பதும் அவரவர் விருப்பம். அதில் காரணங்கள் இருக்கலாம். நிகழும் அரசியலில் அதிருப்தி. தொகுதி வேட்பாளர்கள் மீது அதிருப்தி, மக்கள் பிரச்சினையில் இருந்து வேட்பாளர்கள் விலகிப் போவதில் அதிருப்தி இப்படிப் பல காரணங்களால் மக்கள் வாக்களிக்காமல் விலகிச் செல்லலாம். இதுவும் அவர்களுக்கான உரிமையாகத்தான் கருத வேண்டியிருக்கிறது. 

ஒருவேளை வாக்களிப்புச் சட்டம் கட்டாயமாகி, மக்களில் 40 சதவீதம் பேர்கள் வாக்களிக்காமல் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த 40 சதவீதம் பேர்களையும் என்ன செய்வார்கள்? தண்டிப்பார்களா? என்ன தண்டனை கொடுப்பார்கள். தமிழகத்தில் 6 கோடி மக்களில் 40 சதவீதம் என்பது சராசரியாக 2 கோடியே 40 லட்சம் பேர்கள். இவ்வளவு மக்களையும் தண்டிக்கமுடியுமா, அது சாத்தியமா? 

இதற்கு முன்னர் இளையாங்குடி, கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர் ஆகிய இடைத்தேர்தல்களை அதிமுக, பாமக, மதிமுக போன்ற கட்சிகள் புறக்கணித்தன. வாக்களிப்பில் கலந்து கொள்ள வேண்டாம் எனப் பிரச்சாரம் செய்ததாகக் கூடப் பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. ஆனாலும் மக்கள் இவர்களைப் புறக்கணித்து வாக்களித்து இருக்கிறார்கள் என்பதையும் மனத்தில் இருத்த வேண்டும். அவ்வளவு ஏன்? வாக்களிப்பைக் கட்டாயமாக்க வேண்டும் என்ற மோடியின் செயலை வலியுறுத்தும் பாமக நிறுவனத்தலைவர் மருத்துவர் ராமதாஸ் நடந்து முடிந்த திருச்செந்தூர், வந்தவாசித் தேர்தல்களில் “49ஓ” போடச் சொன்னாரே. இதுவும் ஒருவகையில் வாக்களிக்காமல் தட்டிக் கழிப்பதாகத் தான் இருக்கிறது. 

மக்களின் உரிமையைச் சட்டத்தால் முடக்கக் கூடாது. மாறாக வாக்காளர்கள் ஏன் வாக்களிப்பதைப் புறக்கணிக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதைச் சரி செய்ய வேண்டும். மக்களிடையே வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் முடிவு செய்தால் கட்டாயம் வாக்களித்தே தீருவார்கள். மனமாற்றத்தை உருவாக்குவதை விட்டுவிட்டு, சட்டத்தைக் காட்டுவது தவறான பாதைக்கு வழிவகுத்துவிடும். 

மக்கள் உரிமைக்கு எதிரான சட்டம், மக்களால் நிராகரிக்கப்படும் என்பதே வரலாறு! நாளை மோடியின் நிலையும் அதுதான்! 

- வழுதி

Pin It