மாறிவரும் காலத்திற்குத் தகுந்த மாறுதல்களை கல்வியில் கொண்டு வருகிறோம் என்ற பெயரில் பல கருத்துக்கள் , பல கொள்கைகள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. கல்வி அறிவைப் பெறுவதற்காகவே; கல்விக்கும் வேலைக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்ற முழக்கம் ஒரு சமயம் முன் வைக்கப்பட்டது. அந்தக் கருத்து முன் வைக்கப்பட்ட போது பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவராக இருந்தவர் கூறினார் : படித்துவிட்டு வேலையில்லாதிருப்பவர்கள் வெடிகுண்டுக்கு சமமானவர்கள் என்று. 

கல்வி அறிவிற்காகவே வேலைக்காக அல்ல என்ற முழக்கம் எழுந்ததின் பின்னணி

கல்வி வேலைக்கானதல்ல அறிவுக்கானதே என்ற கருத்தையும் மேலே கூறிய பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் முன்வைத்த கருத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒன்று நமக்குத் தெளிவாகப் புரியும் அதாவது கல்வி நல்ல வேலையைப் பெறுவதற்காகவே என்ற கண்ணோட்டத்துடன் தான் அனைத்து மாணவர்களுமே மேற்படிப்பிற்கு செல்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு வேலை எதுவும் கிடைக்காத நிலையில் அவர்கள் வெடிகுண்டுக்குச் சமமானவர்களாக மாறிவிடுகிறார்கள். எனவேதான் கல்விக்கும் வேலைக்கும் ஒரு தொடர்பும் இல்லை அது அறிவைப் பெறுவதற்கானது மட்டுமே என்ற கருத்தை வலிந்து கூறி நம்ப வைக்க அரசு முயன்றது என்ற விசயம் தெளிவாகப் புரியும். அந்தப் பின்னணியில் அரசு உதவியுடன் புதிய கல்லூரிகள் திறப்பதும் அவற்றிற்கு அனுமதி வழங்குவதும் ஏறக்குறைய அறவே நிறுத்தப்பட்டு விட்டன. அப்படி செய்வதன் மூலம்தானே வெடிகுண்டுக்குச் சமமானவர்களின் எண்ணிக்கை பெருகுவதைத் தடுக்க முடியும் என்ற முடிவிற்கு அரசு வந்ததில் ஆச்சரியப் படுவதற்கு ஏதுமில்லை. 

புதிய கல்விக் கொள்கையும்  நவோதயா பள்ளிகளும் 

அதன்பின் அரசு புதிய கல்விக் கொள்கை என்ற கொள்கையை அறிவித்தது. அந்த புதிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்யும் போது நவோதயா பள்ளிகள் என்ற பெயரில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு அனைத்து வசதிகளுடனும் கூடிய ஆங்கிலத்தையும் ஹிந்தியையும் போதனா மொழியாகக் கொண்ட பள்ளியினை இந்தியா முழுவதும் கொண்டுவரும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அப்பள்ளிகளுக்கான செலவு முழுவதையும் அரசு ஏற்கும் புதிதாக மாவட்டத்திற்கு ஒன்றாக அறிவிக்கப்பட்ட நவோதயா பள்ளிகளில் அந்த மாவட்டத்திற்குள் சிறந்த மாணவர்களாக இருக்கக் கூடியவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு இடம் கொடுக்கப்படும்; அங்கு பாடம் கற்பிக்கும் விதம் மாதிரித்தன்மை வாய்ந்த ஒன்றாக இருக்கும் என்றெல்லாம் கூறப்பட்டது. அதே வேளையில் பிற அரசு மற்றும் அதன் உதவி பெறும் பள்ளிகளில் அவற்றை நடத்தும் செலவு முழுவதையும் அரசே ஏற்க முடியாததால் புரவலர் திட்டத்தை செயல்படுத்துவது என்பதும் அக்கொள்கையில் வலியுறுத்தப்பட்டது. 

புரவலர் திட்டம் 

அதாவது தற்போதுள்ள பள்ளிக்கூடக் கட்டிடங்கள் மற்றும் அதற்கான ஆதார வசதிகள் ஆகியவற்றிற்கு மேல் புதிதாக உருவாகும் தேவைகள் அனைத்தையும் வள்ளல் தன்மை பொருந்திய பிரமுகர்களிடம் இருந்து நிதி உதவி பெற்றே பள்ளி நிர்வாகங்கள் செய்துகொள்ள வேண்டும் என்பது இத்திட்டத்தின் ஒரு முக்கிய அம்சமாகும். உயர்கல்வியைப் பொறுத்தவரை பொதுவான கலை மற்றும் விஞ்ஞான பாடப் பிரிவுகளுக்குத் தரும் முக்கியத்துவத்தைக் காட்டிலும் தொழில் நுட்பப் பிரிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும் என்பது வற்புறுத்தப்பட்டது. 

ஓரங்கட்டப்பட்ட கலை , இலக்கியப் பாடப்பிரிவுகள் 

மேலோட்டமாகப் பார்த்தால் கலை , இலக்கிய , பொது விஞ்ஞானப் பாடப் பிரிவுகளுக்கு முக்கியத்துவம் தரப்போவதில்லை என்பது ஒரு நல்ல நோக்கத்துடன் கொண்டுவரப் பட்டுள்ளதைப் போலவே அப்போது தோன்றியது. அதாவது வரலாறு , பொருளாதாரம் , சமூகவியல் போன்ற கலைப் பிரிவுகளைக் கற்பதால் என்ன பயன் என்ற எண்ணம் சராசரிப் பெற்றோர்களுக்கு இருந்த ஒரு எண்ணமே. எனவேதான் அவை இல்லாமல் செய்யப்பட்டால் கூட அதனால் ஒன்றும் பாதிப்பில்லை என்ற எண்ணம் பலரிடம் மேலோங்கியிருந்தது.

மேலும் நவோதயா பள்ளிகள் என்ற பெயரில் மாவட்டத்திற்கு ஒரு பள்ளி என்று நல்ல கல்வி வழங்கும் மாதிரிப் பள்ளிகளை உருவாக்குவதும் மேலோட்டமாகப் பார்க்கும் போது சரியானதாகவே பலருக்கும் பட்டது. அதேபோல் வேலை வாய்ப்பை உத்திரவாதப் படுத்துவதற்கான வாய்ப்புள்ள தொழில்நுட்ப கல்விக்கே முன்னுரிமை என்பதும் பலருக்கும் உகந்ததாகவே இருந்தது. 

கல்விக் கொள்கையின் உள்நோக்கம் 

ஆனால் வெளிப்படையாக நல்லதாகக் காட்சியளிக்கும் இந்தக் கொள்கையினுள்ளே பல உள்நோக்கங்கள் இருந்தன. அதாவது வரலாறு , சமூகவியல் , பொருளாதாரம் போன்ற பாடங்கள் ஓரளவு சமூக உணர்வினை மாணவர்களிடம் உருவாக்க வல்லவை.

வரலாற்றைப் படிப்பதன் மூலம் அதர்மத்தை அடிப்படையாகக் கொண்ட எத்தனை அமைப்புகள் மக்கள் எழுச்சிகளால் தூக்கியயறியப் பட்டுள்ளன என்பதை அதனைப் படிப்பவர்கள் தெரிந்து கொள்ளலாம். பொருளாதாரம் எத்தனைதான் மூடிமறைத்துக் கற்பிக்கப் பட்டாலும் அதைப் படிப்பவர் மனதில் பணவீக்கம் , உற்பத்தித் தேக்கம் போன்றவை எதனால் ஏற்படுகின்றன என்ற எண்ணத்தைத் தோன்றவிக்காமல் போகாது. 

அதைப்போல் சமூகவியலும் வரலாற்றில் இதற்கு முன்பு மனித இனத்தின் வளர்ச்சிப் போக்கில் நிலவிய எத்தனையோ அமைப்புகள் மறைந்து போயுள்ளதைக் கற்பிப்பதன் மூலம் இந்த அமைப்பும் நிரந்தரமானதல்ல, இதுவும் மாற்றப்படுவதற்கான வாய்ப்புகளைக் கொண்டதே என்ற எண்ணத்தை படிப்பவர் மனதில் ஓரளவேனும் ஏற்படுத்தவே செய்யும்.

எனவே இந்தப் பாடப்பிரிவுகளைக் கற்பிக்கும் கல்வியை படித்த ஒருவருக்கு வேலை கிடைக்காவிடில் அதற்கான காரணத்தை அவர் கற்ற கல்வியின் தொடர்ச்சியாக அறிய முற்பட்டால் சமுதாய மாற்ற சிந்தனை அவர் மனதில் ஏற்படுவதற்கு வாய்ப்புகளுண்டு. ஆம் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் கூறியதைப் போல அதனைப் படிப்பவர் வெடிகுண்டாக மாறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. 

தொழில்நுட்பக் கல்வி வலியுறுத்தப் பட்டதற்கான காரணம் 

ஆனால் அதே சமயத்தில் தொழில்நுட்பக் கல்வி கற்றவர் தனக்கு வேலை கிடைக்காவிட்டால் அதற்குக் காரணம் தான் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூக அமைப்பே என்ற முடிவிற்கு உடனடியாக வர முடியாதவராக இருப்பார். அவருக்கும் வேலை கிடைக்காமல் போவதற்கு வாய்ப்புகள் உண்டு. இருந்தாலும் தான் படித்த படிப்பை அடிமாட்டு விலைக்கேனும் விற்று பிழைப்பை ஓட்ட வேண்டும் என்ற எண்ணமே அவரிடம் பெரிதும் உருவாகும்.

மேலும் ஆளும் முதலாளி வர்க்கத்திற்கு தொழில்நுட்பம் கற்றவர் எண்ணிக்கை பெருகினால் அதன் மூலம் பெருகும் உழைப்புத்திறன் பெற்றவர்கள் வேலைச் சந்தைக்குக் கூடுதலாக வருவர். அவ்வாறு வரவர அவர்களது உழைப்புத் திறனை குறைந்த விலை கொடுத்து வாங்கி அதிக லாபம் ஈட்டுவதற்கும் வழியுண்டு. 

மேல்மட்ட நிர்வாகத்தை நடத்திய நவோதயா 

ஆனால் இத்தனை உள்நோக்கம் கொண்ட நவோதயா பள்ளிகள் என்ற பெயரில் மாதிரிப் பள்ளிகளை உருவாக்குவது எதற்கு என்ற கேள்வி எழலாம். எத்தனை நெருக்கடியில் இருந்தாலும் முதலாளித்துவ அரசு நிர்வாகத்தை நடத்தவும் முதலாளித்துவ நிறுவனங்களின் மேல்மட்ட நிர்வாகத்தை நடத்தவும் திறமை பொருந்திய கல்வி கற்றோர் அதற்குத் தேவை , அதனைப் பூர்த்தி செய்யவே இந்த நவோதயா கல்விமுறை.

எனவேதான் அனைத்து சாதாரண மக்களும் கல்வி பயிலும் அரசினால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களை ஆதார வசதிகள் பெறுவதற்குக் கூட ஆங்காங்கே இருக்கும் வள்ளல் தன்மை பொருந்திய புரவலர்களின் தயவை நாடியிருப்பவையாக வைத்துவிட்டு இந்த நவோதயா பள்ளிகளுக்கு மட்டும் அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்து அவற்றை நடத்த முன்வந்தது.

( இந்தக் கல்வி நிலையங்களைப் பற்றி தமிழ் மக்கள் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இந்நிறுவனங்களில் ஆங்கிலமும் , ஹிந்தியும் மட்டுமே போதனா மொழிகளாக இருக்கும் என அறிவிக்கப் பட்டதால் இவற்றைத் தமிழகத்தில் கொண்டுவர தமிழ்ப் பற்றில் ஊறித் திளைத்துப் போன திராவிடக் கட்சிகளின் அரசாங்கங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே அவை இங்கும் மேற்கு வங்கத்திலும் திறக்கப்பட வில்லை.) 

உலகமயமும் தொழில்நுட்பக் கல்வியின் வளர்ச்சியும் 

இவ்வாறு 80களில் கொண்டுவரப்பட்ட புதிய கல்விக் கொள்கை தொழில் நுட்பக் கல்வியின் கதவுகளை அகலத்திறந்து விட்டதோடு மட்டுமின்றி அரசினால் நடத்தப்படும் பள்ளிகள் மற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்படும் போக்கினையும் உருவாக்கி வளர்த்தது. அது கொண்டுவந்த புரவலர் திட்டம் பள்ளிக் கல்வியில் தனியார் மயத்திற்கும் பிள்ளையார் சுழி போட்டது.

இந்த நிலையில் 1991 ம் ஆண்டு வாக்கில் அதாவது டங்கல் திட்டத்தின் அடிப்படையில் கொண்டு வரப்பட்ட உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தத்தில் இந்தியா கையயழுத்திட்ட பின்பு முதலாளித்துவ உலகமயம் ஒரு புது வீச்சுடன் வந்தது. அது உலகின் அனைத்து உற்பத்திப் பொருள்கள் மற்றும் உழைப்புத் திறனை உலகச் சந்தையின் சரக்காக்கியது.

அந்தப் பின்னணி தங்கள் நாட்டுத் தொழிலாளருக்கு வாழ்க்கைச் சம்பளம்  அதாவது ஒருவர் வாழ்க்கை நடத்துவதற்குத் தேவையான சம்பளம்  என்ற அடிப்படையில் கூடுதல் கூலி வழங்கிக் கொண்டிருந்த மேலை நாட்டு முதலாளி வர்க்கத்தின் பார்வையை தேவை அடிப்படையிலான குறைந்தபட்ச ஊதியம் என்ற அளவிற்குக் கூட ஊதியம் கிட்டாது , கிடைத்த கூலிக்கு வேலை செய்து கொண்டிருந்த இந்தியத் தொழிலாளரின் பக்கம் திரும்பியது.

தொழில்நுட்பம் கற்ற அத்தகைய தொழிலாளர்களுக்கு அந்நிய நாடுகளிலும் அத்துடன் வேற்றிட வேலை வாய்ப்பு முறையில் இந்தியாவிலும் வேலை வாய்ப்புகள் ஏற்பட்டதால் அந்தப் பின்னணியில் மழைக்காலக் காளான்களைப் போல் தனியாரால் சுயநிதி நிறுவனங்கள் என்ற பெயரில் பொறியியல் கல்லூரிகள் மிகுந்த எண்ணிக்கையில் தோன்றத் தொடங்கின.

கலைக் கல்லூரிகளைப் போல் 10 ,15 மடங்கு என்ற அளவிற்கு  தமிழ் நாட்டில் மட்டும் இத்தகைய அப்பட்டமான லாப நோக்குடன் நடத்தப்படும் கல்வித் தொழிற்சாலைகள் தற்போது உள்ளன. திடீரென்று முளைத்த இத்தனை கல்லூரிகளிலும் வேலை செய்வதற்கு தகுதியுள்ள பேராசியர்களை எங்கு சென்று இதை நடத்துபவர்கள் பெறமுடியும் எனவே கடந்த ஆண்டு பட்டம் பெற்றவர் கூட பேராசிரியராக நியமிக்கப்படும் அவலநிலை இந்நிறுவனங்களில் ஏற்பட்டது.

இவ்வாறு கல்வித் தொழிற்சாலைகளை நிறுவி சம்பாதிக்கத் தொடங்கியவர்களில் பலர் கல்வியோடு ஒரு தொடர்பும் இல்லாதவர்கள். அவர்களில் பலர் கல்லூரி தொடங்கியதோடு நின்று விடாமல் அவற்றிற்கு நிகர்நிலைப் பல்கலைகழக அந்தஸ்தும் பெற்றுவிட்டனர். 

பள்ளிக் கல்வியில் தனியார்மயம் 

இந்த வேற்றிட வேலை வாய்ப்பிற்கும் அந்நிய நாடுகளில் வேலை பெறுவதற்கும் ஆங்கிலக் கல்வி மிகவும் அவசியமாகி விட்டதால் ஆங்கிலத்தை ஒரு பாடப்பிரிவாகக் கூடச் சரியாகச் சொல்லித் தராத அரசுப் பள்ளிகளில் இருந்து வெளிவரும் மாணவர் வேலை வாய்ப்பைப் பெற்றுத்தரும் உயர் கல்விக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

ஏற்கனவே அரசின் புதியக் கல்விக் கொள்கையின் விளைவாக பள்ளிக் கல்வியில் தலைகாட்டிய தனியார் மயம் இந்தச் சூழ்நிலையில் மெட்ரிக்குலேசன் , ஆங்கிலோ இந்தியன் பாடப்பிரிவு போன்ற பிரிவுகளின் கீழ் பல தனியார் பள்ளிகள் உருவாதற்கு வழிவகுத்தது.

இவ்வாறு பள்ளிக் கல்வியிலும் பொறியியல் , மருத்துவக் கல்லூரிகளிலும் வளரத் தொடங்கிய தனியார் மயம் ஏறக்குறைய அரசிற்கு ஒரு வாய்ப்பினை அதாவது கல்வி வழங்கும் பொறுப்பிலிருந்து அது கைகழுவுவதற்கான நல்ல வாய்ப்பினை வழங்கியது. மேலும் உபரி மூலதனத்தை வைத்திருக்கும் முதலாளிகளுக்கு அதனை முதலீடு செய்யவும் கல்வித் துறையில் தலைகாட்டிய இந்தத் தனியார்மயம் பேருதவி செய்தது. 

நெருக்கடிக் காலத்தை படிக்கும் காலமாக்கு 

ஆனால் தொழில் நுட்பக் கல்லூரிகளின் பெருக்கத்திற்கு வழிவகுத்த வேற்றிட வேலை வாய்ப்பு அந்நிய வேலை வாய்ப்பு ஆகியவற்றில் மிகப்பெரியதொரு தொய்வு தற்போது முதலாளித்துவப் பொருளாதாரத்தையே உலக அளவில் உலுக்கி எடுத்த உற்பத்தித் தேக்க நெருக்கடியினால் ஏற்பட்டுள்ளது. கடுமையான வேலையிழப்புகள் தகவல் தொழில் நுட்பத்துறை உள்பட அனைத்திலும் ஏற்பட்டுள்ளன.

சுரண்டல் முதலாளித்துவ அமைப்பு தான் இந்த நெருக்கடிக்குக் காரணம் என்பது அம்பலமாகிவிடக் கூடாது என்று கருதிய முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் வேலையிழந்த தொழில்நுட்பம் கற்றவருக்கு இந்த வேலையிழப்புக் காலத்தைக் கல்வித் தகுதியை வளர்த்துக் கொள்ள பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்கினர். அதனையயாட்டி வெளி நாடுகளில் கல்வி பயில்வதற்காக வெளிநாடு செல்லும் போக்கு இந்திய மாணவர்களிடமும் மிகப்பெரிய அளவில் தலைகாட்டியது. 

மத்திய கல்வி அமைச்சரின் தற்போதைய கொள்கை முழக்கங்கள் 

இந்தச் சூழ்நிலையில் தான் தற்போது மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் கபில் சிபல் அவர்களின் ஆரவாரமான கல்விச் சீர்திருத்த அறை கூவல்கள் , கொள்கைப் பிரகடனங்கள் மற்றும் கல்வி அடிப்படை உரிமையாக்கப்படுதல் சட்டம் ஆகியவை வெளிவந்து கொண்டிருக்கின்றன.

முதலில் ஐ.ஐ.டி. நிறுவனங்களில் ஆசிரியர் தர மேம்பாட்டினை வலியுறுத்தி அறிக்கைகளை அவர் விடத் தொடங்கினார். அதாவது அவரது உரை வீச்சுகளில் ஐ.ஐ.டியின் தரத்தை மேம்படுத்துவதே தனது முதல் வேலை என்ற பிரகடனம் இருந்தது. பல கோடிக்கணக்கான ரூபாய் அரசின் செலவில் நடத்தப்படும் ஐ.ஐ.டி. நிறுவனங்கள் சமீப காலங்களில் நோபல் பரிசு பெறும் அளவிற்கு விஞ்ஞானிகள் எவரையும் உருவாக்கவில்லை என்பதையும் அது மட்டுமின்றி சர்வதேச அளவில் நடத்தப்படும் பிரபலமான விஞ்ஞானப் பத்திரிக்கைகளில் பிரசுரிக்க தகுதியுள்ள அளவிற்கு கட்டுரைகளும் கூட அவர்களால் எழுதப்படவில்லை என்றும் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் அவர் கூறத் தொடங்கினார். 

நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் மீதான தாக்குதல் 

அதற்கு அடுத்தபடியாக நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மீதான அவரது தாக்குதல் தொடங்கியது. நாட்டின் 44 நிகர்நிலைப் பல்கலைகழகங்கள் அடிப்படைக் கட்டமைப்புகளும் ஆதாரத் தேவைகளும் உள்ளனவாக இல்லை; எனவே அவற்றிற்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்குவது முறையில்லை என்று அவர் அறிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக அவற்றில்  தமிழ் நாட்டைச் சேர்ந்த 16 உட்பட பல நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கான நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என்ற அந்தஸ்து பறிக்கப்பட்டது.

சாதாரண மக்களில் ஒருவரை உறக்கத்தில் எழுப்பி வினவினால் கூட ஒரு சமயத்தில் தமிழ் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் எவை எவை என்பதை அவர் கூறி விடுவார். ஆனால் இப்போது ஐ.ஏ.எஸ். போட்டித் தேர்வு எழுதத் தன்னை முழுமையாகத் தயாரித்துக் கொண்டு செல்லும் ஒருவரிடம் கூட தமிழ் நாட்டின் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் எவை எவை என்ற கேள்வியைக் கேட்டு அதற்கான உரிய பதிலினைப் பெற முடியாது.

அவ்வாறு வரைமுறை இல்லாத அளவிற்கு எந்த வகையான ஆதார வசதிகளும் இன்றி , உரிய ஆசிரியர் நியமனம் இன்றி தன்னிச்சையாக பணம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்டு பல நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் இங்கு உருவாகியிருந்தன. அவற்றின் மீது அவர் கை வைத்தது மேலோட்டமாக பிரச்னையை நடுநிலையாகப் பார்க்கும் அனைவரையும் ஒருவகையில் மகிழ்ச்சி கொள்ளவே வைத்தது. 

கல்வியை அடிப்படை உரிமையாக்கும் சட்டம் 

அடுத்தபடியாக அவர் தற்போது அறிமுகம் செய்து சட்ட மாக்கியுள்ள ஒன்றாவது வகுப்பிலிருந்து 8வது வகுப்புவரை கல்வி கற்பதை அடிப்படை உரிமையாக்கும் சட்டம் பல ஊடகங்களால் இந்தியக் கல்வி வரலாற்றின் மைல்கல் என்று வர்ணிக்கப்படுகிறது.    

ஆனால் இவரது இந்த அறை கூவல்கள் கொள்கைப் பிரகடனங்கள் இவற்றின் பின்னால் உள்ளதும் ஒரு வர்க்கச் சார்பு நிலையே என்பதை இவர் கொண்டுவரும் சீர்திருத்தங்களின் பின்னணியில் உள்ள உள் நோக்கத்தை அலசி ஆராய்ந்தால் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும். பொதுவாக நமது ஆசிரியர் சமூகம் உண்மையிலேயே கல்விக்காக போராடுவதை நிறுத்திப் பலகாலம் ஆகிவிட்டது.

சந்தேகமில்லை அவர்கள் கலை , விஞ்ஞான கல்விகளை புறக்கணிக்கும் புதியக் கல்விக் கொள்கையினை எதிர்த்தார்கள். அவ்வாறு எதிர்த்ததன் உண்மையான பின்னணி அதை எதிர்க்கா விட்டால் அப்பிரிவுகளில் வேலை செய்யும் பல ஆசிரியர்களின் வேலை போய்விடும் என்பதே. அதை விடுத்து அதனால் மனிதனை மனிதனாக வைத்திருக்கப் பயன்படும் தாரளவாதக் கல்விமுறை இல்லாமல் போய்விடும் என்பதற்காக அவர்கள் அதனைப் பெரும்பாலும் எதிர்க்கவில்லை.

தன்னாட்சி அதிகாரங்கள் பல கல்லூரிகளுக்கு வழங்கப்பட்ட போதெல்லாம் அதனை ஆசிரியர் அமைப்புகள் எதிர்க்கவே செய்தன. அதன் காரணம் அரசின் கட்டுப்பாட்டில் வந்து கொண்டிருந்த சம்பளமும் பிற பலன்களும் ஒருவேளை அதனால் வராமல் போய்விடும் என்ற அச்சமே தவிர அது அரசின் கல்வி வழங்கும் பொறுப்பைத் தட்டிக்கழிக்க வழிவகை செய்கிறது என்பதால் அல்ல.

அதைப் போலவே இப்போதும் அவர்களுக்கு ஒரு வகை அச்சமென்பது இருந்து கொண்டே இருக்கிறது. அந்நிய தொழில் நிறுவனங்கள் இங்கு வந்தது போல் அந்நிய பல்கலைக்கழகங்களும் இங்கு வந்துவிட்டால் நமது பல்கலைக்கழகங்களின் நிலை படு மோசமாகிவிடும் என்ற அச்சம் அவர்களை ஆட்டிப் படைத்துக் கொண்டுள்ளது.

ஏனெனில் இந்தியாவில் உள்ள மிக உயர்ந்த கல்வி நிலையம் என்று கருதப்படும் ஐ.ஐ.டி. நிறுவனங்களில் மிகத்தரமானவை என்று கருதப்படும் ஒன்றிரண்டு கூட உலக அளவில் இருக்கும் விஞ்ஞான தொழில்நுட்பக் கல்லூரிகளில் 100 இடங்களுக்குள் வர முடியவில்லை என்பதை இதே கபில் சிபல் அளித்த புள்ளிவிபரங்களில் ஒன்று கூறியது. 

அந்நியப் பல்கலைக் கழகங்களின் வருகைக்கான அடித்தளம் 

எனவே நேரடியாக அந்நிய பல்கலைக்கழகங்கள் இங்கு வருவதற்கு அனுமதி வழங்கப் போகிறேன் என்று கபில் சிபல் அறிவித்தால் அதற்கு இங்குள்ள ஆசிரியர் அமைப்புகளின் எதிர்ப்பு பலமாக வரும் என்பதால் ஐ.ஐ.டியில் தொடங்கி நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் வரை நமது கல்வி நிறுவனங்கள் எத்தனை மோசமாக இருக்கின்றன என்று பட்டியலிட்டுவிட்டு அதற்கு எதிராக மக்களின் ஆதரவைப் பெறும் வகையில் சில நடவடிக்கைகளையும் எடுத்துவிட்டு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை இங்கு வர அனுமதித்து இன்று உலக முதலாளித்துவம் மற்றும் அதன் பங்கும் பகுதியுமாக உள்ள இந்திய முதலாளித்துவத்தின் தேவைகளுக்கு அவர் சேவை செய்ய விரும்புகிறார். அதையயாட்டியே சி.பி.எஸ்.இ. கல்விமுறையில் பாடம் கற்பிக்கப்படும் கல்வி நிலையங்களில் இந்த ஆண்டிலிருந்து உலக அளவில் கடைப்பிடிக்கப்படும் பாடத்திட்டம் அறிமுகப் படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார். தான் எடுத்த நடவடிக்கைகள் கல்விக்கானவையே என்று காட்டுவதற்காக உயர் தொடக்கப்பள்ளி வரை கல்வி பெறும் உரிமையை அடிப்படை உரிமையாகவும் அறிவித்துள்ளார்.

நமது நாட்டில் வேலை பெறுவது அடிப்படை உரிமை ஆனால் அந்த உரிமையை வலியுறுத்தி வேலைக்கு என்று கோரி இன்றுவரை எவரும் நீதிமன்றம் செல்லவில்லை. அதன் பொருள் வேலையற்றோர் எவரும் இல்லை என்பதல்ல. அதைப் போல்தான் இந்த உரிமையையும் , தேசிய அளவில் சிறுவர் மற்றும் மாணவர் உரிமைகளை பராமரிப்பதற்காக என்று பெயரளவில் பெரும்பாலோருக்குத் தெரியாமல் இயங்கும் , பூதக் கண்ணாடி போட்டுப் பார்த்தால் மட்டும் கண்ணுக்குத் தென்படும் அமைப்பே இந்த உரிமை மீறலைக் கண்காணிப்பதற்காக அவரால் அறிவிக்கப் பட்டுள்ளது. இதிலிருந்தே நாம் இந்த அடிப்படை உரிமைச் சட்டம் எத்தகையது என்பதை நன்கறிந்து கொள்ளலாம்.

இதோடு கூட இந்தச் சட்டத்தை வெற்றிகரமாக அமுலாக்குவதற்கு அவர் நிதி அமைச்சகம் , தொழிலாளர் துறை போன்ற துறையினரின் ஒத்துழைப்பை மிகவும் வேண்டுகிறார். நாளை இந்தச் சட்டம் அமலாகாமல் போகும் போது மேற்கூறிய அமைச்சகங்களின் ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை அதானால் தான் இப்படி ஆனது என்று எளிதில் கூறித் தப்பித்துக் கொள்ளவும் இப்போதே வாய்ப்பை உருவாக்கி வைத்துள்ளார். மேலும் இதில் ஒரு விநோதம் என்னவென்றால் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஆரம்பக் கல்வியில் சேருவோரின் விகிதம் 90 சதவீதத்திற்கு மேல் தற்போதே உள்ளது என்பதுதான். பிரச்னையே அவர்களில் பெரும்பாலோர் அதாவது 40 சதவீதத்திற்கு மேற்பட்டோர் உயர்நிலைக் கல்விக்கே செல்வதில்லை என்பதுதான்.

இவ்வாறு நாம் பார்த்தால் இந்திய அரசும் அதன் கல்வித்துறையும் , கல்வி அமைச்சர்களும் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அறிவிக்கும் கருத்துக்கள் , விடுக்கும் அறைகூவல்கள் மற்றும் கொள்கைப் பிரகடனங்கள் இவை அனைத்தும் ஆளும் முதலாளி வர்க்கத்தின் தேவைகளை மையப்படுத்தியே இருந்திருக்கின்றன என்பதே .

புதிய கல்விக் கொள்கையின் மூலம் இவர்கள் கொண்டு வந்த நவோதயா திட்டம் முதலாளித்துவ அரசமைப்பின் மேல்மட்ட நிர்வாகத்தை நடத்தவும் முதலாளித்துவ நிறுவனங்களின் நிர்வாக நாற்காலிகளை நிரப்புவதையுமே நோக்கமாகக் கொண்டிருந்தது. அது பரந்துபட்ட அளவிலான பிற பொது மக்களுக்கான கல்வியை கையயழுத்துப் போடும் அளவிற்கு அதாவது அதன் மொழியில் கூறுவதனால் அறிவைப் பெறுவதற்கு மட்டும் வழங்குவதாகக் குறைத்தது. 

இரண்டு வகைக் கல்வி 

இப்போது கபில் சிபல் அவர்களால் எடுக்கப்படும் நடவடிக்கைகளும் உலக மயத்திற்குப் பின்பு இந்திய உழைப்புத் திறன் உலகச் சந்தையின் சரக்காகிவிட்ட பின்பு அந்த உழைப்புத் திறனை பெரும் வசதியுள்ள , நடுத்தர , உயர் நடுத்தர உடமை வர்க்கத்தினருக்கு ஏற்படுத்தித் தருவதை நோக்கமாகக் கொண்டும் அதே சமயத்தில் பரந்துபட்ட மக்களுக்கான கல்வியினை கையயழுத்துப் போட மட்டும் தகுதியானவர்களாக உருவாகும் தன்மையையுமே கொண்டிருக்கிறது.

இந்நிலையில் முதலாளித்துவம் முற்போக்காக இருந்த காலத்தில் அது அறிமுகம் செய்த தாராளவாத அம்சங்கள் கொண்ட கல்வியைக் காக்கவும் பொதுநல அரசு என தன்னை அறிவித்துக் கொண்ட அரசுகளின் பொறுப்பான அனைவருக்கும் உயர்மட்டம் வரை இலவசக் கல்வி வழங்கும் பொறுப்பிலிருந்து அறவே தன் கைகளைக் கழுவியுள்ள அரசாங்கங்களை எதிர்த்தும் , கல்வியைக் காக்கக் களம் புகுவதே இன்று உழைக்கும் வர்க்கத்தின் தலையாய கடமையாகி விட்டது. அவ்வாறு கல்விக்காக நடத்தப்படும் இயக்கம் அதன் முழு வெற்றியைப் பெற்றதாக எப்போது ஆகும் என்றால் அது இன்று ஆட்சியதிகாரத்தில் இருக்கும் சுரண்டல் முதலாளித்துவத்தை ஆட்சியதிகாரத்தில் இருந்து அகற்றும் போதுதான் என்பதையும் நாம் உணர வேண்டும்.

Pin It