சமச்சீர்க் கல்வி குறித்து இன்று எழுந்துள்ள சிக்கலைப் புரிந்த கொள்ள நுழையுமுன் சமச்சீர்க் கல்வி என்றால் என்ன எனப் புரிந்து கொள்வோம். கருணாநிதி தலைமையிலான சென்ற திமுக ஆட்சி சட்டமன்றத்தில் கல்வி குறித்து நிறைவேற்றிய சட்டத்தையே சமச்சீர்க் கல்வி என அனைவரும் கூறி வருகின்றனர். இது உணர்வு அடிப்படையில் பேசுவதற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாமே தவிர கோட்பாடு அல்லது கொள்கை அடிப்படையிலான புரிதலுக்குப் பொருத்தமானது அன்று.
சமச்சீர்க் கல்வி என்பது மாணவர்களுக்கு அனைத்து நிலைகளிலும் சமச்சீரான கல்வியை வழங்குவது ஆகும். அதாவது தாய்மொழியில் கல்வி, பாடத் திட்டம், 20 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்னும் விகிதம், திறந்த விளையாட்டுத் திடல் வசதி, கழிப்பறை வசதி, அகக்கட்டமைப்பு வசதி என அனைத்து நிலைகளிலும் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை அனைத்துப் பள்ளிகளிலும் சம தரத்தைக் கடைப்பிடிப்பது ஆகும். இதில் சமச்சீர்ப் பாடத் திட்டம் தொடர்பானது மட்டுமே தமிழக அரசு நிறைவேற்றிய சட்டம் ஆகும். இது சமச்சீர்க் கல்வியை அடைவதற்கான ஒரு கூறு மட்டுமே, முதல் படிக்கட்டு மட்டுமே. இந்தப் படிக்கட்டை நாம் வந்தடைந்ததன் வரலாற்றைச் சுருக்கமாகக் காண்போம்.
தமிழகத்தில் 1970களுக்கு முன் இரு வகைப் பாடத் திட்டங்கள் நிலவின. ஒன்று மாநில அரசுப் பள்ளிகளுக்கான மாநில வாரிய (State Board) பாடத் திட்டம், மற்றொன்று மத்திய அரசுப் பள்ளிகளுக்கான மத்திய வாரிய (Central Board) பாடத் திட்டம், இதைத்தான் சுருக்கமாக சிபிஎஸ்இ (Central Board of School Education) என்கின்றனர். 1970களுக்குப் பிறகு வந்த அரசுகள் மக்களுக்குக் கல்வி கொடுக்க வேண்டிய தமது பொறுப்புகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொள்ளத் தொடங்கின. அவை இயல்பாகவே தனியார் வசம் சென்றன. அந்தப் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேஷன் எனப் பெயர் கிடைத்தது, அதற்கெனத் தனிப் பாடத் திட்டம் உருவானது. அங்கிருந்துதான் பாடத் திட்டத்திலான ஏற்றத் தாழ்வும் தொடங்குகிறது.
எப்போதுமே அயல்மொழிச் சொல்லாடல்கள் மக்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. அவ்வகைப்பட்டதே இந்த மெட்ரிகுலேஷன் என்ற சொல்லும். மெட்ரிக் என்றால் பத்து என்று பொருள், அவ்வளவுதான். பத்தாம் வகுப்பு வரைக்குமான பள்ளி என்பதைக் குறிக்கவே இந்தச் சொல் உருவானது. ஆனால் இது தரமான உயர்தரக் கல்வி என்பதற்குரிய சொல்லாக மக்களிடையே உருவாயிற்று. அந்தப் பள்ளிகளில் ஆங்கிலேயனின் ஆங்கிலத்தில் மட்டுந்தான் பாடங்கள் நடக்கும்; ஷூ, சாக்ஸ், டை உள்ளிட்ட ஆங்கிலேயனின் நடை உடை பாவனைகள் கடைப்பிடிக்கப்படும் என்ற நிலை ஏற்கெனவே ஆங்கில மயக்கத்தில் இருந்த மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதில் வியப்பில்லை. இது நேரடியாக மக்களிடையேயான சாதிய, வர்க்கப் பிளவுகளைக் கூர்மைப்படுத்தியது; கல்வியை ஒரு வணிகச் சரக்காக்கிற்று.
கல்வி வணிகம் மிகவும் முற்றிப் போன நிலையில்தான் கல்வியாளர்களும் சமூகநீதியில் அக்கறை கொண்டோரும் சமச்சீர்க் கல்வி கோரி மக்களிடையே கருத்துப் பரப்புரை செய்தனர்; இது குறித்து அரசுகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதன் எதிர்வினையாகத்தான் கடந்த திமுக அரசு, சமச்சீர்க் கல்வியைச் செயல்படுத்தும் நோக்கில் முன்னாள் துணைவேந்தர் திரு.முத்துக்குமரன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இதில் பல கல்வியாளர்களும் இடம்பெற்றிருந்தனர்; மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகிகளும் இருந்தனர். இவர்கள் தமிழ்நாடு முழுதும் சென்று பல பள்ளிகளிலும் ஆய்வு நடத்தினர்; மக்களிடம் கருத்து கேட்டனர். மேலும் திரு விஜயகுமார் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டு அது இந்தியா முழுதும் பல மாநிலங்களுக்குச் சென்று அங்குள்ள பாடத் திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வுகளை எல்லாம் ஒன்றிணைத்துதான் சமச்சீர்க் கல்வி என்னும் திட்டம் உருவாக்கப்பட்டது.
இந்தக் குழு தாய்மொழிக் கல்வி, அயல்மொழிப் பயில்வு முறை, பள்ளி வசதி, ஆசிரியர்-மாணவர் விகிதம், பாடத் திட்டம் என அனைத்திலும் சம நிலையை வலியுறுத்தியது. இதில் பாடத் திட்டத்தில் மட்டும் சம நிலையைக் கொண்டு வர திமுக அரசு முடிவு செய்தது. அதன்படி முதல் கட்டமாக 2009-10 கல்வியாண்டில் ஒன்றாம், ஆறாம் வகுப்புகளுக்கு மட்டும் சமச்சீர்க் கல்வி செயலுக்கு வரும் என்றும், அடுத்த 2011-12 கல்வியாண்டு முதல் மற்ற வகுப்புகளுக்கும், அதாவது 2 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கும், 7 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கும் சமச்சீர்க் கல்வித் திட்டம் நீட்டிக்கப்படும் என்றும் அறிவித்தது. மேலும் 1-10 வரையிலான மொத்தப் பாடத் திட்டத்தையும் இணைய தளத்தில் மக்கள் பார்வைக்காக வெளியிட்டது.
எனவே இன்று தமிழகத்தில் இயங்கி வரும் மாநில வாரியப் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், ஓ.எஸ்.எல்.சி. பள்ளிகள் அனைத்துக்கும் ஒரே பாடத் திட்டம் என்னும் நிலை உருவானது. இவற்றில் ஆங்கிலோ இந்தியன், ஓஎஸ்எல்சி பள்ளிகளின் எண்ணிக்கை 100க்கும் குறைவே என்பதால் அவற்றை நாம் பெரிதாகக் கணக்கில் கொள்ளத் தேவையில்லை.
எனவே திமுக அரசின் பொதுப் பாடத் திட்டத்துக்கான முயற்சி என்பது மாநில வாரியப் பள்ளிகளுக்கும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்குமான ஒரு பொதுப் பாடத் திட்டத்தை உருவாக்குவதற்கான முயற்சி எனக் கொள்ளலாம். ஆனால் இந்தத் திட்டத்தில் மேலே குறிப்பிட்ட சிபிஎஸ்இ பள்ளிகள் சேராது என்பதால் இந்தப் பொதுப் பாடத்திட்ட முயற்சியுங்கூட முழுமையானதன்று. மெட்ரிகுலேஷன் பள்ளி முதலாளிகள் "இதுதான் நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய கல்வித் திட்டம் என்றால் நாங்கள் சிபிஎஸ்இ பள்ளித் திட்டத்துக்கு மாறி விடுவோம்" என மிரட்டுவதிலிருந்து இதனைப் புரிந்து கொள்ளலாம். மேலும் இந்தப் பொதுப் பாடத்திட்டம் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் பயிற்றுவிக்கப்படும் என்பதால் இது மாணவர்களிடையே சமமற்ற நிலையையே தோற்றுவிக்கும்.
சமச்சீர்க் கல்வியின் ஒரு கூறாக, அதுவும் அரைகுறையாக மட்டுமே வெளிவந்துள்ள இந்தப் பொதுப் பாடத் திட்டத்தைக் கூட பொறுத்துக் கொள்ள மாட்டாமல்தான் பார்ப்பனிய ஆதிக்கச் சாதிகளிடமிருந்தும், கல்வி முதலாளிகளிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. அவர்கள் இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்துக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் சென்றனர். ஆனால் அந்த நீதிமன்றங்கள் தமிழக அரசின் சமச்சீர்க் கல்விச் சட்டத்துக்குத் தடை விதிக்க மறுத்தன. கல்வி வணிகர்களின் கோரிக்கையை நிராகரித்தன.
இருந்தாலும் கல்வி முதலாளிகள் தங்கள் வணிகத்துக்கு வந்துள்ள நெருக்கடி கண்டு புழுங்கிக் கொண்டிருந்தனர். அந்தச் சரக்கை விட என் சரக்கு உயர்ந்தது என்பதுதான் எந்த வணிகப் போட்டிக்குமான அடிப்படை மந்திரம் ஆகும். இந்த வணிக மந்திரந்தான் கல்வி வணிகர்களின் வயிற்றையும் கலக்கியது. அவர்கள் யோசித்துப் பார்த்தார்கள். இத்தனை நாளும் மெட்ரிகுலேஷன் என்னும் மந்திரச் சொல்லைப் பயன்படுத்தித் தரம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி வந்தோம், இந்த ஸ்டேட் போர்டு பள்ளிகளை விட நாங்கள் தரும் கல்விச் சரக்கு எவ்வளவு உயர்ந்தது பாருங்கள் என மக்களிடம் கதை அளந்து வந்தோம், இப்போது திடீரென எல்லாப் பாடத் திட்டமும் ஒன்றுதான் என்ற நிலை வந்து விட்டால் பிறகு எதைச் சொல்லி நம் பொழப்பை ஓட்டுவது எனப் புழுங்கத் தொடங்கினர். இந்த நிலையில்தான் அவர்களுக்கு வாராது வந்த மாமணி போன்று ஆட்சிக்கு வந்து சேர்ந்தார் செயலலிதா.
செயலலிதா கடந்த மே மாதம் ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக அவசர அவசரமாய் அமைச்சரவையைக் கூட்டி கருணாநிதி கொண்டு வந்த சமச்சீர்க் கல்வித் திட்டத்தைக் கைவிடுவது என முடிவெடுத்தார். அது வெறும் கருணாநிதி திட்டமன்று, அது தரமானதுதான் என உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்ட திட்டமே என்பதை அவர் உணர்ந்தாரில்லை. சமச்சீர்க் கல்வி தமக்கு உடன்பாடுதான் என்றும், இந்தக் கல்வித் திட்டம் தரமற்றது என்பதால்தான் கருணாநிதியின் சமச்சீர்க் கல்வித் திட்டத்தைக் கைவிடுவதாகக் கூறினார் செயலலிதா. இதற்காகச் சட்டமன்றத்தில் பழைய அரசின் சட்டத்தை அழித்து சட்டம் இயற்றினார். 200 கோடி ரூபாய் செலவில் முந்தைய ஆட்சி ஏற்கெனவே அச்சடித்து வைத்திருக்கும் புத்தகங்களைப் புறந்தள்ளி மெட்ரிகுலேஷனுக்குத் தனி, மாநில வாரியப் பள்ளிகளுக்குத் தனி என்று ஏற்றத் தாழ்வோடு இருந்த பழைய பாடத் திட்டப் புத்தகங்களையே மாணவர்களுக்கு அச்சடித்துத் தருவதென அரசு முடிவெடுத்தது. இதற்காக சூன் 1 தொடங்க வேண்டிய பள்ளிகளை சூன் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
கருணாநிதி தனது சொந்தப் புகழ் பாடுவதற்கும், திமுக அரசியலை கலப்பதற்கும் இந்தப் பாடத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டார் என்ற ஒரு குற்றச்சாட்டை கல்வி வணிகர்களும் சில நாளேடுகளும் கிளப்பி விட்டனர். உடனே கலைஞர் ஒரு வேண்டுகோள் விடுத்தார். வேண்டுமானால் பாடப் புத்தகங்களை அவற்றில் இடம் பெற்றுள்ள தமது கவிதைகளை அகற்றி விட்டு மாணவர்களிடம் ஒப்படைக்கலாம் என்றும், இதற்காக ஒரு நல்ல திட்டம் தடைப்பட வேண்டியதில்லை என்றும் அறிக்கை வெளியிட்டார். இதற்குப் பதிலளித்த செயலலிதா கருணாநிதி கூறுவது சிறுபிள்ளைத்தனமானது என்றும், இந்தப் பாடத்திட்டத்தைக் கைவிடுவதற்கான காரணம் அதன் தரக்குறைவுதானே தவிர அதில் அவருடைய கவிதைகள் இடம்பெற்றது காரணமில்லை என்றும் அறிவித்தார்.
கல்வியாளர்களின் நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பிறகு, முத்துக்குமரன் குழுவின் மூன்றாண்டு முயற்சிக்குப் பிறகு தமிழக மாணவர்களுக்கு ஒரு பெருங்கொடையாக வந்து சேர்ந்த இந்தப் பாடத் திட்டத்துக்கு செயலலிதாவால் வந்த ஆபத்து கண்டு நடுநிலையாளர்களும் சமூகநீதிப் பற்றாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தை அணுகினர்.
தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் சமச்சீர்க் கல்வி தரமற்றது என வாதாடியது. கருணாநிதியின் கவிதைகள் இடம்பெற்றதே சமச்சீர்க் கல்வியைக் கைவிடுவதற்குக் காரணம் எனச் சொல்வது சிறுபிள்ளைத்தனம் எனக் கருத்து சொன்ன செயலலிதா அரசு இப்போது நீதிமன்றத்தில் பாடத்திட்டத்தில் கருணாநிதி தன் கருத்துகளை உள்ளே புகுத்தி விட்டார் எனப் புலம்பியது. நல்வாய்ப்பாக உயர் நீதிமன்றம் தமிழக அரசின் கெடு முயற்சிக்குத் தடை போட்டது. பல மனிதர்களின் பெரும் உழைப்பால் உருவான ஒரு கல்வித் திட்டத்தை ஓர் அமைச்சரவைக் கூட்டம் எப்படி நிறுத்தி வைக்கலாம் என அரசைக் கேட்டது.
செயலலிதாவும் கல்வி வணிகர்களும் விடவில்லை. சமூகநீதிக்கு உலை வைக்க உச்ச நீதிமன்றத்துக்குப் படையெடுத்தனர். எந்த முகாந்திரமும் இல்லாமல் ஒரு நல்ல கல்வித் திட்டத்தை நிறுத்தி வைத்திருக்கும் தமிழக அரசைக் கண்டித்திருக்க வேண்டும் உச்ச நீதிமன்றம். ஆனால் அது ஒன்றாம், ஆறாம் வகுப்புகளுக்கு முன்பு போன்றே சமச்சீர்ப் பாடத் திட்டம் தொடரும் என்றும், ஏனைய வகுப்புகளுக்குரிய, அதாவது 2 முதல் 5 வரையிலான, 7 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்குரிய சமச்சீர்ப் பாடத் திட்டத்தின் நிறை குறைகள் குறித்து முடிவு செய்ய அரசு தலைமைச் செயலரின் தலைமையில் ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்றும், இந்தக் குழு 3 வாரத்துக்குள் அரசிடம் தமது திறனாய்வுகளை ஒப்படைக்க வேண்டும் என்றும், அரசு இந்த நிபுணர்களின் கருத்துகளை உயர் நீதிமன்றத்திடம் ஒப்படைத்து அங்கு கிடைக்கும் தீர்ப்பின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்றும் குழப்பமான ஒரு தீர்ப்பை அளித்த்து. அது தான் முன்பு கூறிய தீர்ப்புக்கே முரண்பட்டு இப்போது ஒரு கட்டப் பஞ்சாயத்துத் தீர்ப்பை அளித்தது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படியே தமிழக அரசும் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. தமிழக அரச தான் அமைத்த நிபுணர் குழுவில் முன்னாள் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.பி.தியாகராஜன், பொருளியல் பேராசிரியர் முனைவர் பி. பொன்னுசாமி, டிஏவி பள்ளிகளின் நிறுவனரும் செயலாளருமாகிய சி. ஜெயதேவ், பத்மா சேசாத்ரி பள்ளிகளின் தலைவரும் இயக்குனருமாகிய திருமதி ஒய்.ஜி.பி., புதுதில்லி என்சிஆர்இடி அமைப்பின் அறிவியல் மற்றும் கணிதத் துறைப் பேராசிரியராகிய பி.கே.திரிபாதி ஆகியோரை அமர்த்தியது. இவர்களில் தியாகராஜனும் பொன்னுசாமியும் மட்டுமே தமிழகக் கல்வித் துறை தொடர்பானவர்கள், பின்னர் இவர்கள் இருவரையுங்கூட தமிழக அரசு விட்டு வைக்கவில்லை. அவர்களுக்குப் பதிலாக சிபிஎஸ்இ பள்ளிகளின் முன்னாள் இயக்குனர் ஜி.பாலசுப்பிரமணியன், லேடி ஆண்டாள் பள்ளியின் முன்னாள் முதல்வராகிய விஜயலட்சுமி சீனிவாசன் ஆகியோரை அமர்த்தியது.
ஆக, இந்த நிபுணர் குழு முழுக்க முழுக்கத் தமிழகக் கல்வித் துறைக்குத் துளியும் தொடர்பில்லாத மனிதர்களைக் கொண்டு நிரப்பப்பட்டிருந்தது. அதிலும் திருமதி ஒய்ஜிபி, ஜெயதேவ், விஜயலட்சுமி சீனிவாசன் ஆகியோர் பள்ளி முதலாளிகள் ஆவர். இவர்கள் எப்படி கல்வியாளர்கள் ஆக முடியும். இது எந்தளவுக்கு அபத்தமானது என்றால், காசு போட்டு ஒரு மருத்துவமனையை நடத்தும் முதலாளி ஒருவரே அங்கு நான்தான் நோயாளிகளுக்கு அறுவைச் சிகிச்சை செய்வேன் என்பது போன்றதே. அதுவும் இந்தக் கல்வியாளர்கள் தங்கள் பள்ளிகளில் இந்துத்துவத்தைப் போதிப்பவர்கள், இடஒதுக்கீடு போன்ற சமூகநீதிக் கருத்துகளுக்கு எதிரானவர்கள். சமூக சமத்துவத்துக்கு எதிரான இந்த சிறு கூட்டம் ஒன்றேகால் கோடி மாணவர்களின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் சமச்சீர்க் கல்வியைத் திறனாயப் புறப்பட்டது வேடிக்கைதான்.
உச்ச நீதிமன்றம் இவர்களுக்குக் கொடுத்திருந்த கால அவகாசம் 21 நாள், பத்தாம் வகுப்பு வரையிலான பாடத் திட்டங்களை ஆய்வதற்கு இது போதுமான காலமன்று என்பது வெள்ளிடை மலை. ஆனால் இந்தக் கால அளவைக் கூட இந்த நிபுணர் குழு முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. 2011 சூன் மாதம் 17, 22, 23, 29 ஆகிய நான்கு தேதிகளில் மட்டுமே இவர்கள் சந்தித்துக் கொண்டனர், அந்த 4 நாளிலும் இவர்கள் சந்திக்க எடுத்துக் கொண்ட நேரம் எவ்வளவு தெரியுமா? வெறும் 15 மணி நேரந்தான்! நல்ல கல்வித் திட்டத்தை ஆக்கிப் படைக்கத்தான் ஆண்டுக் கணக்கில் காலம் தேவை. அதனை அழித்தொழிக்கப் புறப்பட்ட கூட்டத்துக்கு 15 மணி நேரம் என்ன, 15 நிமிடங்கூட அதிகந்தான்.
இந்த நிபுணர் குழு அறிக்கைகளைக் காரணம் காட்டி தமிழக அரசு சமச்சீர்க் கல்வித் திட்டத்தைக் கைவிட முடிவெடுத்தது. இதனை உயர் நீதிமன்றத்திலும் தெரிவித்தது. அரசுடன் மெட்ரிகுலேஷன் கல்வி வணிகர்களும் சேர்ந்து கொண்டனர், சமச்சீர்க் கல்வி தொடர்பாக உயர் நீதிமன்றப் படிக்கட்டு ஏறுவது செயலலிதா அரசுக்கு இது 2ஆவது முறை; கல்வி வணிகர்களுக்கோ இது 3ஆவது முறை.
கல்வித் தரத்தைக் காக்கப் புறப்பட்ட இந்த வீரர்களின் நீதிமன்ற விளையாட்டில் ஒன்றேகால் கோடி மாணவர்களின் கல்வி ஒரு மாதம் வீணானது. லட்சக்கணக்கான மாணவர்களின், ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் உழைப்பு நேர விரயம் குறித்து கிஞ்சிற்றும் கவலை கொள்ளாத தமிழக அரசு சமச்சீர்க் கல்விக்கு எதிராக இன்னுந்தீவிரமாக உயர் நீதிமன்றத்தில் வழக்காடியது. தாங்கள் அமைத்த நிபுணர் குழு அதனைத் தரமற்றது என நிராகரித்து விட்டதாகக் கூறியது. இதற்கு எதிராகக் கல்வியாளர்களும், பெற்றோர்களும் வாதாடினர்.
அரசின் இந்த முயற்சிக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. உச்ச நீதிமன்றம் தமிழக அரசிடம் நிபுணர் குழு ஒன்றை அமர்த்தச் சொன்னது சமச்சீர்க் கல்வியின் குறைகளைக் கண்டறிந்து களைவதற்குத்தானே தவிர அந்தக் கல்வித் திட்டத்தையே கைவிடுவதற்கு அன்று எனக் கூறியது. முந்தைய திமுக அரசின் சமச்சீர்க் கல்வியைக் கிடப்பில் போடும் வகையில் புதிய அதிமுக அரசு நிறைவேற்றிய சட்டத் திருத்தம் செல்லாது எனத் தீர்ப்பளித்தது. இது அரசின் கொள்கையில் தலையிடுவது ஆகாது என்று கூறியது. அரசின் எந்தப் புதிய சட்ட முயற்சியும் முந்தைய சட்டங்களுக்கும், நீதிமன்ற ஆணைகளுக்கும் இசைவாக இருக்க வேண்டுமே தவிர அவற்றை மீறுவதாக இருக்கக் கூடாது எனத் தெளிவுபடுத்தியது.
ஆனால் இவை எல்லாவற்றையும் விட இந்த உயர் நீதிமன்றத் தீர்ப்பில் நமது தமிழக மக்கள் ஆழ்ந்து படிக்க வேண்டிய ஒரு முக்கிய செய்தி ஒன்று உள்ளது. அந்த செய்தி தமிழக அரசு அமர்த்திய நிபுணர் குழு தொடர்பானது என்றால் நம்ப முடியுமா? உயர் நீதிமன்றம் தமிழக அரசிடம் அந்த நிபுணர் குழு தங்களுக்குள் பரிமாறிக் கொண்ட கருத்துகளைக் கேட்டுப் பெற்றது. அந்தக் கருத்துகளை அப்படியே நீதிபதிகள் தங்கள் தீர்ப்புரையில் வெளிப்படுத்தியுள்ளனர். சமச்சீர்ப் பாடப் புத்தகங்கள் தொடர்பான அந்த நிபுணர் குழுவின் கருத்துகள் நம்மை உள்ளபடியே வியப்பில் ஆழ்த்துகின்றன. அந்தக் கருத்துகளைப் பாருங்கள்.
சமச்சீர்க் கல்வி குறித்து ஆய்வதற்கு அமர்த்தப்பட்ட நிபுணர் குழுவிடம் தமிழகத் தலைமைச் செயலர் சமச்சீர்க் கல்விப் பாடப் புத்தகங்கள் தவிர்த்து, இந்தியக் கல்விச் சூழல் குறித்து ஆய்வு நடத்திய புகழார்ந்த யஷ்பால் குழு அறிக்கை, என்சிஎஃப் 2005 (National Curriculum Frame work 2005) எனப்படும் தேசியக் கலைத்திட்டச் சட்டகம் 2005 போன்ற பல ஆவணங்களை ஒப்படைத்தார். இவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்தக் குழு தங்கள் ஆய்வை மேற்கொண்டது.
இந்தக் குழுவைச் சேர்ந்த பேராசிரியர் அனில் சேத்தியின் கீழ் பணியாற்றிய மீனாட்சி கர், முனைவர் மல்லா வி. எஸ். வி. பிரசாத் ஆகியோர் அவருக்குச் சமச்சீர்க் கல்விப் பாடத் திட்டம் குறித்து மின்னஞ்சல்கள் அனுப்பினர். மெட்ரிக் கல்விக்காரர்கள் பெரிதும் கவலைப்படும் ஆங்கிலப் பாடம் குறித்து இந்த மின்னஞ்சல்கள் என்ன கூறுகின்றன தெரியுமா? அவற்றின் கூற்றுப்படி, சமச்சீர்க் கல்வித் திட்டத்தின் கீழுள்ள ஆங்கிலப் பாடங்கள் மெட்ரிக் பள்ளிகளின் ஆங்கிலப் பாடங்களை விட பொருள் பொதிந்த வகையில் நன்றாகக் கையாளப்பட்டுள்ளன, சொல்லப் போனால் சமச்சீர் ஆங்கிலப் பாடங்கள் அனைத்தும் தேசியக் கலைத்திட்டச் சட்டகம் 2005 (என்சிஎஃப் 2005) முன்வைக்கும் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம் பயிற்றுவிப்பதில் நாங்களே வல்லவர்கள் என மார்தட்டும் மெட்ரிக்காரர்களின் பீற்றல் எவ்வளவு மோசடித்தனமானது என்பதை அப்பாவித் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
சமூக அறிவியல் பாடம் குறித்து முனைவர் மல்லா கூறுவதைப் பார்ப்போம். சமூக அறிவியலில் சில குறைகள் இருந்தாலும் அவை திருத்திக் கொள்ளக் கூடியவையே என்கிறார் அவர். சமூக அறிவியல் பாடத் திட்டத்தைத் திமுக தனது அரசின் விளம்பரப் பொருளாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளதா? சமூக அறிவியல் பாடத் திட்டம் இளம் சிறுவர்களின் மூளைகளை அரசியல்மயமாக்குகிறதா? என்ற கேள்விகளுக்கு அவர் கிட்டத்தட்ட இல்லை என விடையளிக்கிறார். ஏதோ திமுக அரசு தனக்கு வேண்டிய அரசியல் செய்திகளைப் புகுத்தி மாணவர்களின் வாழ்க்கையைக் கெடுத்து விட்டதாகப் புலம்பும் தினமணி, தினமலர், துக்ளக் கூட்டத்தாரின் குற்றச்சாட்டுகள் எந்தளவுக்கு நச்சுத்தனமானவை எனப் புரிந்து கொள்ளலாம். சமூக அறிவியல் பாடத் திட்டம் இந்தியத் தரத்துக்கு இல்லையா என்ற வினாவுக்கு அப்படி மெய்ப்பிப்பது கடினம் என விடையளிக்கிறார் மல்லா.
ஆங்கிலத்துக்கு அடுத்து மக்கள் பெரிதும் கவலைப்படுவது அறிவியல் பாடம் பற்றித்தான். இது பற்றி அரசு அமைத்த குழுவைச் சேர்ந்த இன்னொரு நிபுணராகிய பேராசிரியர் திரிபாதி பதிவு செய்துள்ள கருத்துகளைப் பார்ப்போம். அவர் கூறுகிறார்: "இந்த அனைத்து அறிவியல் பாடப் புத்தகங்களின் ஒட்டுமொத்தத் தோற்றம் அருமையாகவும், கண்களுக்கு விருந்தாகவும் அமைந்துள்ளது. வண்ணமயமான சித்திரங்களையும் வரைபடங்களையும் ஒளிப்படங்களையும் பொருத்தமான இடங்களில் பயன்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. இந்த அனைத்துப் புத்தகங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ள மொழியானது அது சென்றடைய வேண்டிய வயதினரை வைத்துப் பார்க்கும்போது மிக எளிமையாகவும் இரத்தினச் சுருக்கமாகவும் இருப்பது பாராட்டுக்குரியது. இன்னும் விவரங்கள் தெரிந்து கொள்வதற்குரிய பெட்டிச் செய்தியும், அறிவியலர்கள் குறித்த வரலாற்றுக் குறிப்புகளும் பாராட்டுக்குரியன, இவை பாடப் புத்தகத்தையும் தாண்டி மாணவர்கள் சிந்திப்பதற்கு உதவும்." இதை விட என்ன புகழுரையை அறிவியல் பாடத்துக்கு நாம் எதிர்பார்க்க முடியும்.
கணிதப் பாடத்துக்கு வருவோம். 9ஆம், 10ஆம் வகுப்புக் கணிதப் பாடங்கள் பற்றிக் குறிப்பிடும் பேராசிரியர் திரிபாதி அவை தேசியக் கலைத்திட்டச் சட்டகம் 2005 (என்சிஎஃப் 2005) தரத்தில் இருப்பதாகச் சான்றளிக்கிறார்.
தமிழக அரசு அமைத்த குழுவின் இன்னோர் உறுப்பினராகிய விஜயலட்சுமி சீனிவாசன் மெட்ரிகுலேஷன் பள்ளிப் பாடத்திட்டம் பற்றிக் குறிப்பிடும்போது, அது தேசியக் கலைத்திட்டச் சட்டகம் (என்சிஎஃப்) முன்வைக்கும் தரத்திலிருந்து பெரிதும் பின்தங்கியிருப்பதாகக் கூறி மெட்ரிக் கல்வி வணிகர்களின் வண்டவாளத்தைத் தோலுரித்துக் காட்டுகிறார். 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான சமச்சீர்ப் பாடங்கள் மெட்ரிகுலேஷன் பாடங்களை விடப் பின்தங்கியிருப்பது உண்மையே என்றாலும், இந்த சுமைக் குறைப்பு சரியானதே என்கிறார். இவருங்கூட புத்தகத் தோற்றமும் பக்க வடிவமைப்பும் மிக அருமை எனப் பாராட்டுகிறார். பாடப் புத்தகங்கள் மாணவர்களுக்கு மிக உவப்பான வகையில் இருப்பதாகப் பாராட்டுகிறார். பாடத் திட்டம் ஒவ்வொன்றும் ஒரு வகுப்பிலிருந்து அடுத்த வகுப்புக்குப் போகும் போதும் சரி, பாடம் ஒவ்வொன்றும் ஓர் அலகிலிருந்து மற்றோர் அலகுக்குப் போகும் போதும் சரி, இந்த வரிசைமுறை தருக்க அடிப்படையில் படிப்படியாக முன்னேறிச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார். எந்தப் புத்தகத்திலும் பாலியல் சார்போ, மதச் சார்போ இல்லை எனக் குறிப்பிடுகிறார். எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான ஒரு சில செய்திகள் தொடக்கக் கல்விப் பாடங்களில் உள்ளனவே தவிர அப்படிப்பட்ட செய்திகளேதும் உயர் கல்விப் பாடப் புத்தகங்களில் இல்லை என்கிறார் அவர்.
ஜெயதேவ், திருமதி ஒய்ஜிபி ஆகிய இருவரும் சமச்சீர்க் கல்வி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். இவர்கள் இருவருமே கல்வி முதலாளிகள் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய செய்தி. ஆனால் இவர்களுங்கூட இந்தத் திட்டத்தில் பல திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது என்றுதான் சொல்கிறார்களே தவிர, இந்தத் திட்டத்தையே கைவிட வேண்டும் எனச் சொல்லவில்லை.
இப்படித் தமிழக அரசு தான் அமர்த்திய நிபுணர் குழுவின் கருத்தை ஏற்க மறுக்கிறது என்பது மட்டுமன்று, அது மாற்றாக இன்னுந்தரமான கல்வித் திட்டம் ஒன்றை அல்லவா முன் வைத்திருக்க வேண்டும். அப்படி எதுவும் இவர்கள் கையில் இருந்தால்தானே இதனை ஒப்பீடாகக் கொண்டு பழைய கல்வித் திட்டத்தைத் தரங்குன்றியது எனக் குறை சொல்ல முடியும். ஆனால் தமிழக அரசு செய்ய முயன்றிருப்பது என்ன? இந்தச் சமச்சீர்க் கல்விப் பாடப் புத்தகங்களுக்குப் பதிலாகச் சமச்சீரற்ற பழைய பாடப் புத்தகங்களையே தரப் போகிறார்களாம். இதில் வேடிக்கை என்னவென்றால், பழைய மாநில வாரியப் பாடப் புத்தகங்களும் சரி, மெட்ரிக் பள்ளிப் பாடப் புத்தகங்களும் சரி, 2004ஆம் ஆண்டுக்குப் பிறகு திருத்தப்படவே இல்லை. அப்படியானால் இன்றைய இந்தப் புதிய பாடத் திட்டம் ஆறாண்டுகளுக்கு முந்தைய பாடத் திட்டத்தை விடத் தரம் வாய்ந்தது என அரசு சொல்ல வருவதாகத்தானே பொருள். இப்படி ஒரு செப்படி வித்தையை அரசே செய்ய முனைந்திருப்பது மானக்கேடு.
சமச்சீர்க் கல்வி தரமற்றது என மெய்ப்பிக்கும் நோக்கில் தமிழக அரசால் அமர்த்தப்பட்ட நிபுணர் குழுவினராலேயே இந்தக் கல்வி தரமற்றது எனச் சொல்ல முடியவில்லை என்பதுடன் தவிர்க்கவியலாது அவர்கள் அதனைப் போற்றிப் புகழ வேண்டிய நிலைமை ஏற்பட்டதைப் பார்க்கும் போது இந்தப் பாடத்திட்டத்தை முத்துக்குமரன் குழு எந்தளவுக்கு அறிவியல் நோக்குடன் தயாரித்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இதையும் மீறி சமச்சீர்க் கல்விக்குத் தடை என்னும் முடிவை உயர் நீதிமன்றத்திடம் கொண்டு செல்லக் காரணம் யார் என்ற வினாவுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகளே விடையளிக்கின்றனர். என்னதான் இந்த நிபுணர்கள் கருத்துகள் கூறினாலும், வரைவு அறிக்கையைத் தயாரிப்பதிலிருந்து இறுதி அறிக்கையை நிறைவுப்படுத்துவது வரையிலான இந்த முழு செயல் திட்டத்தையும் நடத்தி முடித்தது கல்விச் செயலராகிய திருமதி பிரேமாதான் என நீதிபதிகள் குற்றம் சாட்டியுள்ளனர். உள்ளபடியே இதற்குக் காரணம் இந்தப் பெண்தானா, அல்லது வேறொரு பெண்ணா? எந்தப் பெண் என்று நீதிபதிகளால் குறிப்பிட முடியாதுதான், ஆனால் விடாப்பிடியான அந்த ‘இரும்புப் பெண்மணி’ யாரென கடைக்கோடித் தமிழனுக்கும் தெரியும்.
எனவே இந்தக் குழப்பங்களுக்கு எல்லாம் ஊற்றுக்கண்ணாக விளங்கும் செயலலிதா முனைவர் முத்துக்குமரன் குழுவின் அறிவார்ந்த கல்வித் திட்டத்தை ஏற்க மறுக்கிறார்; அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறிய சமச்சீர்க் கல்விச் சட்டத்தைத் திருத்தி, கிடப்பில் போடுகிறார்; இவர் கட்சியும் இந்துத்துவ பாரதிய சனதா பார்ட்டியும் தவிர்த்து ஏனைய அனைத்துக் கட்சிகளின் அறிவுரையையும் காதில் போட்டுக் கொள்ள மறுக்கிறார்; வசந்திதேவி, ச.சீ.ராசகோபாலன் போன்ற பெரும் கல்வியாளர்களின் ஆழ்ந்த கருத்துகளைப் புறந்தள்ளுகிறார்; உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்க மறுக்கிறார்; கடந்த இரண்டு மாத காலமாக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஏற்பட்டுள்ள மன உளைச்சலை உணர மறுக்கிறார். இவை எல்லாம் சரி, கடைசியாக தாம் அமைத்த நிபுணர் குழுவின் கருத்துகளையே கூட இந்தப் பெண்மணி ஏற்க மறுக்கிறார் என்றால் அவரது இந்தச் செயல் எந்த மனித நாகரிகத்துக்கும் சனநாயகத்துக்கும் பொருந்தாத அப்பட்டமான சர்வாதிகாரம் என்றே சொல்ல வேண்டியுள்ளது.
இந்தச் சிக்கலின் அடிப்படைக் காரணம் யார் என்ற உண்மையைத் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டிய பத்திரிகைகள் இந்தச் சிக்கலை எப்போதும் போல் கருணாநிதி, செயலலிதாவுக்கு இடையிலான இன்னுமொரு மோதலாகச் சித்திரிக்கப் பார்ப்பது பெரும் மோசடியாகும். ஆனந்த விகடன் கூட கருணாநிதிக்கும் செயலலிதாவுக்கும் இடையிலான போட்டியில் தமிழக மாணவர்கள் மாட்டிக் கொண்டு முழிப்பதாகத் தலையங்கம் தீட்டியிருப்பது வருந்தத்தக்கது.
கருணாநிதி கட்டிய சட்டமன்றத்துக்குள் போக மாட்டேன் என செயலலிதா அடம் பிடிப்பது போல்தான் இந்தச் சமச்சீர்க் கல்விச் சிக்கலிலும் நடந்து கொள்கிறார் என நினைத்தால் அது தவறான முடிவாகவே இருக்கும். இந்தச் சமச்சீர்க் கல்வித் தடைக்குக் கருணாநிதிக்கு எதிரான அவரது அரசியல் காழ்ப்புணர்வும் ஒரு காரணம் என்றாலும் இது மட்டுமே காரணமன்று.
சாதிக்கொரு கல்வி என நிலைநாட்டப்பட்டு விட்ட இந்த நாட்டில் சமம் என்ற சொல்லே செயலலிதா போன்றவர்களுக்குக் கசப்பாய்க் கசக்கிறது. சமச்சீர்க் கல்வியைச் சமத்தாழ்வுக் கல்வி என சோ போன்ற பார்ப்பன வெறியர்கள் இழிவுபடுத்துவது, இந்தச் சாதி வெறியர்கள் செயலலிதாவின் இந்தச் சமூகஅநீதி முடிவுக்கு உறுதியாகத் துணை நிற்பது ஆகியவற்றைப் பார்க்கும்போது செயலலிதாவின் உள்நோக்கத்தை நம்மால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
இராம.கோபாலன், இல. கணேசன் போன்ற இந்துத்துவ வெறியர்கள் சமச்சீர்க் கல்வித் திட்டத்துக்குக் காட்டி வரும் கடும் எதிர்ப்பையும் இங்கு கணக்கில் கொள்ள வேண்டும். இந்தக் கல்வித் திட்டம் திராவிட அரசியலை மாணவர்களின் உள்ளங்களில் விதைப்பதாக அவர்கள் கூப்பாடு போடுகின்றனர். சமூக அறிவியல் பாடங்கள் டி.எம்.நாயர், தியாகராய செட்டியார், தந்தை பெரியார், மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி, மருத்துவர் எஸ்.தருமாம்பாள், ராமாமிர்தம் அம்மையார் ஆகிய சமூநீதி காத்த சான்றோர்களின் வாழ்க்கை வரலாறுகளைக் கூறுகின்றன. பார்ப்பனர் அல்லோதோர் இயக்கம், நீதிக் கட்சி, திராவிடர் கழகம் ஆகிய முற்போக்கு இயக்கங்களின் சாதனைகள் குறித்துப் பேசுகின்றன. பிராமணர் என்ற சொல்லுக்குப் பதிலாகப் பார்ப்பனர் என்னும் சொல்லைப் பயன்படுத்துகின்றன. இவற்றைப் படித்துப் பார்க்கும் போதுதான் இந்துத்துவச் சக்திகளின் ஆதங்கத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்துத்துவத்தில் ஊறித் திளைத்த செயலலிதா இந்தப் பாடத்திட்டத்துக்கு எதிராக ஏன் குதிக்கிறார் என்பது தெளிவாகவே விளங்குகிறது.
இன்று கழகக் கண்மணிகளே கல்வி வணிகர்களாக இருப்பது அரசின் இந்த முடிவுக்கு ஒரு முக்கியக் காரணமாகிறது. இந்தக் கல்வி வணிகத்தின் அடிப்படை முரண்பாட்டைப் புரிந்து கொள்வது செயலலிதா செய்து வரும் குழப்பங்களைப் புரிந்து கொள்ள உதவி செய்யும்.
சமச்சீர்க் கல்வி குறித்துப் பெற்றோர்களிடம் நச்சுக் கருத்துகளை விதைத்து வரும் இந்தக் கல்வி வணிகர்களும், நம் பிள்ளைகள் மட்டும் எப்படியாவது முன்னேறி விட வேண்டும் என்ற தன்னல வெறியுடன் இந்தக் கல்வி வணிகக் கூடங்களில் தம் பிள்ளைகளைச் சேர்த்து விடத் துடிக்கும் பெற்றோர்களும் சமச்சீர்க் கல்வி எதிர்ப்புக்கு ஆணிவேராகத் திகழ்கிறார்கள். இவர்களிடம் காணப்படும் தன் முரண்பாடுகளைப் புரிந்து கொண்டாலே நமக்குத் தெளிவு பிறக்கும். மெட்ரிக் முதலாளிகள் பேசும் தரம் என்பதெல்லாம் வெறும் பத்தாம் வகுப்பு வரைதானோ? 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் அறுபதாண்டுக்கு மேலாகச் சமச்சீர்ப் பாடத் திட்டத்தில்தானே படித்து வருகிறார்கள், அவர்கள் தரம் கெட்டு விடுமே என்று இந்த முதலாளிகள் கவலைப்படுவது இல்லையே, ஏன்? சமச்சீர்ப் பாடத் திட்டம் மேனிலை வகுப்புக்கு சாத்தியம், ஆனால் உயர் நிலை வகுப்புக்கு சாத்தியம் இல்லை என்பது அப்பட்டமான தன் முரண்பாடு இல்லையா?
தமது பிள்ளைகளைப் 10ஆம் வகுப்பு வரை மெட்ரிக் பள்ளிகளில் படிக்க வைக்கும் பெற்றோர்களுக்கும் 11ஆம் வகுப்பு வந்ததும் இந்தத் தரம் பற்றிய நினைப்பே மறைந்து விடுவது எப்படி? இது போதாதென்று தம் பிள்ளைகளை இன்னும் அதிமேதாவி ஆக்க வேண்டும் என்ற ஆசையில் மத்திய அரசின் சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்க வைக்கும் பெற்றோர்கள் அவர்கள் 10ஆவது முடித்த அடுத்த கணம் அவர்களை மாநில வாரியப் பள்ளிகளில் கொண்டு போய் சேர்க்கிறார்கள். கேட்டால் அங்குதான் சிபிஎஸ்இ பள்ளிகளை விட கூடுதல் மதிப்பெண் வாங்க வாய்ப்புள்ளதாம். மதிப்பெண் வந்தால் தரம் தேவையில்லை என்பது எந்த வகையில் நேர்மை? இத்தகைய பெற்றோர்களின் பேராசையைத்தான் அறிவுஜீவிகள் பலரும் இது அவர்களின் கருத்துரிமை என அவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள்.
இந்த அறிவுஜீவிகள் பேசும் கருத்துரிமை இன்னும் மோசமான வடிவம் எடுக்கிறது. வசதிக்கேற்ப உணவகங்களும், போக்குவரத்தும், மருத்துவமனைகளும் இருக்கும்போது கல்வியில் மட்டும் சமத்துவம் எதற்கு? எதை நுகர்வது என்ற உரிமை பெற்றோர்களுக்கு உண்டு என்கின்றனர். ஒரு பக்கம் கல்வியைக் கலைமகளின் மறுவடிவமாகப் போற்றும் இவர்கள் மறுபக்கம் அதனை ஒரு நுகர்வுப் பண்டமாகச் சித்திரிக்கிறார்கள். காசுக்கேற்ற பணியாரம் என்பது போல் காசுக்கேற்ற கல்வி என்கிறார்கள். முன்பு இன்ன சாதியில் பிறந்தால் உனக்குக் கல்வி என்றவர்கள் இன்று இவ்வளவு காசு இருந்தால் உனக்குக் கல்வி என்கின்றனர்.
இந்த அறிவுஜீவிகள் இத்துடன் நிறுத்திக் கொள்வதில்லை. சமச்சீர்க் கல்விக் குழு பொதுப் பாடத் திட்டத்தை மட்டுமா வலியுறுத்தியது? அது பள்ளிக்கூட வசதிகளையும், ஆசிரியர்-மாணவர் விகிதத்தையும் அல்லவா முன்னேற்றச் சொன்னது! அவற்றை நிறைவேற்ற உங்களிடம் வசதியில்லை, ஆனால் நேராகப் பாடத் திட்டத்தில் கைவைக்க வந்து விட்டீர்களாக்கும் எனக் கேலி பேசுகின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டால் இவர்கள் உடனே அம்மக்களின் கல்வியை முதலில் முன்னேற்றுங்களேன் என அறிவுரை கூறுவார்கள்; இல்லாததைப் பேசி இருப்பதையும் கெடுக்கும் இவர்களது முற்போக்கு வேடம் அன்றும் இன்றும் தொடர்கிறது என்பதே உண்மை.
இத்தகைய கல்வி முதலாளிகளின், பெற்றோர்களின், அறிவுஜீவிகளின் பின்னணியில்தான் செயலலிதா இயங்குகிறார். சமச்சீர்க் கல்வியின் அடித்தளத்தைத் தகர்த்து வருகிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதை எப்படியாவது சாதித்து விட வேண்டும் என்ற முயற்சியில்தான் செயலலிதா மீண்டும் உச்ச நீதிமன்றத்துக்கே படையெடுத்துள்ளார். மெட்ரிக் முதலாளிகள் 3ஆவது முறையாகப் படையெடுத்துள்ளனர். இவர்கள் நடத்தும் இந்த நீதிமன்றக் கூத்தில் மாணவர்களின், ஆசிரியர்களின் 2 மாத உழைப்பு இப்போது விரயமாகி விட்டது. இத்தகைய பிற்போக்குத்தனமான சமூக முடக்கத்தை உலகின் எந்த நாடும் அனுமதிக்காது – வருணாசிரம இந்தியாவைத் தவிர.
இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வரும் இத்தகைய நீண்ட முடக்கங்களுக்கு ராம் மனோகர் லோகியா விடை தருகிறார். வர்க்கம் என்பது இயங்கிக் கொண்டிருக்கும் சாதி; சாதி என்பது இயக்கமற்ற வர்க்கம் என்றார் அவர். வருணதர்ம அடிப்படையிலான இந்தச் சாதியச் சமுதாயத்தில் முற்போக்கான சிறுசிறு சீர்திருத்த நடவடிக்கைகள் கூட பெரும் போராட்டங்களுக்கு இடையே நத்தை வேகத்தில்தான் நடைமுறைக்கு வருகின்றன. அதனால் சமூக சீர்திருத்த நடவடிக்கையான இடஒதுக்கீட்டைக் கூட நாம் ஒரு புரட்சிகர நடவடிக்கையாகப் பார்க்க வேண்டியுள்ளது. அந்த அடிப்படையில் இன்று பொதுப் பாடத்திட்டம் என்னும் இந்தச் சிறு சீர்திருத்த நடவடிக்கைக்கே எழுந்துள்ள பெரும் எதிர்ப்பைப் பார்க்கும்போது நமது சமுதாயத்தில் இரு விதப் பயிற்றுமொழிகளைக் கொண்ட இந்தப் பொதுப் பாடத்திட்டங்கூட ஒரு புரட்சிகர நடவடிக்கைதானோ என்றுதான் எண்ண வேண்டியுள்ளது.
இன்று நமக்குக் கிடைத்துள்ள இந்தப் பொதுப் பாடத் திட்டத்தையேனும் நாம் விடாது போராடி காப்பாற்றிக் கொள்ள வேண்டும், இந்தப் பொதுப் பாடத்திட்டம் முழுமையடைய சிபிஎஸ்இ பள்ளிகளை இழுத்து மூட வேண்டும். அதற்கு கல்வியை மத்திய அரசிடமிருந்து மாநில அதிகார வரம்புக்குள் கொண்டு வர உழைக்க வேண்டும். இதற்கான போராட்டங்களே நம்மை சமச்சீர்க் கல்வி என்ற அந்த உயர்ந்த குறிக்கோளை நோக்கி, உண்மையான அந்த சமுதாயப் புரட்சியை நோக்கி அழைத்துச் செல்லும்.
- நலங்கிள்ளி