"கீழ்ச் சாதிக்காரங்க சமைக்கிற சோத்தச் சாப்பிட்டா சாமிக் குத்தம் ஆயிடும். எங்க ஜக்கம்மாவுக்குக் கோவம் வந்து எங்களல்லாம் அழிச்சிடும்... அதனாலதான் இந்தச் சாப்பாட்டை எங்க பிள்ளைங்கள விடல"

- இப்படி ஒரு நவீன சாதிய வன்கொடுமை ஜக்கம்மாவின் பேரால் நடந்துகொண்டிருக்கிறது.

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரிலிருந்து சிவகாசி செல்லும் சாலையிலிருக்கிறது கொத்தமங்கலம் கம்மப்பட்டி. கே.கம்மப்பட்டி என்று அழைக்கப்படும் அந்த ஊரில் இராஜகம்மளத்து நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த 200 குடும்பங்களுக்கும் மேற்பட்ட மக்கள் நிலைகொண்டுள்ளனர். வானம் பார்த்த பூமியான அந்தக் கரிசல் பூமியில் விவசாயம்தான் அப்பகுதி மக்களுக்குத் தொழிலாய் இருந்தது. ஆனால் அப்பகுதியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிலில்தான் நல்ல வருமானம். இருந்தாலும் இந்த ராஜகம்மளத்து நாயக்கர்களுக்கோ வீடு வீடாய்ச் சென்று குறி சொல்வதுதான் குலத் தொழிலாம்.

வருடத்தில் ஆறு மாதம் ஊர் ஊராய், வீடு வீடாய்ச் சென்று என்ன நடக்கப் போகிறது என்று குறி சொல்வார்கள். 'யார் வாயிலும் விழலாம்; ஆனால் கம்மளத்து நாயுடுகளின் வாயில் மட்டும் விழக்கூடாது' என்று பயந்துகொண்டு ஊர் மக்கள் அரிசி, பருப்பு போன்ற தானியங்களும் பணமும் கொடுப்பார்கள். 'வீட்டில் கருப்பு இருக்கிறது, தோஷம் இருக்கிறது; அதை விரட்ட வேண்டுமானால் ஜக்கம்மாவுக்குப் படையல் செய்ய வேண்டும்' என்று கூறி கூடுதலான பணமும் பெற்றுக்கொள்வார்கள். இதுதான் இம்மக்களின் ஓராண்டு வருமானம். அரசு வேலை பெறுவதில் அதிகக் கவனம் செலுத்துவதில்லை. குழந்தைகளை ஆரம்பக் கல்வி வரை மட்டுமே படிக்க வைப்பார்கள். மேற்கொண்டு படிப்பது ஜக்கம்மாவுக்குப் பிடிக்காதாம்.

ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இம்மக்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இம்மக்கள் அதிகம் குடியேற ஆரம்பித்தார்கள். வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய வீரபாண்டிய கட்டபொம்மன் இச்சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் செய்தி. வீட்டில் தெலுங்கு மொழியிலும், வெளியில் தமிழ் மொழியிலும் பேசிவரும் கம்பளத்தார்கள், சாதி வெறியில் தமிழகத்தின் எந்தவொரு ஆதிக்க சாதிக்கும் சளைத்தவர்கள் அல்லர்.

இப்படியான மக்கள் வசிக்கும் அந்த கம்மபட்டியில், அம்மக்களின் வளர்ச்சிக்காகவே தொடக்கப்பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது. தொடக்கப்பள்ளிக்கான இடத்தை கம்மப்பட்டி ஜக்கம்மா வாரிசுகளே அளித்துள்ளனர். இப்பள்ளியில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் சத்துணவு அமைப்பாளராக கம்மப்பட்டியிலிருந்து 21 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள மானகசேரியைச் சேர்ந்த மரகதவல்லி பணி நியமனம் செய்யப்படுகிறார். மரகதவல்லிக்கு சமையல் உதவியாளராக சரவணக்குமாரி நியமிக்கப்பட்டுள்ளார். தாழ்த்தப்பட்ட பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் கம்மப்பட்டி தொடக்கப்பள்ளிக்குச் சென்று அடுப்பு பற்ற வைத்ததிலிருந்து தீண்டாமையும் பற்றிக்கொண்டது. திடீரென்று பள்ளிக் குழந்தைகள் மதிய உணவு நேரத்தில் சத்துணவு சாப்பிடாமல் வீட்டுக்கு வர ஆரம்பித்தார்கள். சமைத்த உணவு வீணாததுதான் மிச்சம். அப்புறம்தான் தெரிந்தது, "எஸ்.சி. ஆளுங்க சமைச்ச சாப்பாடு ஜக்கம்மாவுக்கு ஆகாது" என்று சத்துணவு ஊழியர்களிடம் அவ்வூர் மக்கள் சொன்ன செய்தி.

இது குறித்து மரகதவல்லி கல்வித்துறை அதிகாரியிடம் புகார் செய்துள்ளார். அதிகாரிகளோ, "அவுங்க உங்ககிட்ட பிரச்சனை பண்ணாதது வரை அந்த ஊருக்குப் போங்க. கொஞ்சமா சமையல் பண்ணுங்க. பசங்க வந்தால் சாப்பாடு கொடுங்க. இல்லேன்னா சாப்பாட்டை கீழே கொட்டிட்டு வாங்க" என்று, திணிக்கப்படும் நவீன சாதியத் தீண்டாமைக்கு ஆதரவாகவே பேசி அனுப்பியுள்ளனர்.

மரகதவல்லியும் சரவணகுமாரியும் தினமும் பள்ளிக்குச் சென்று ஒரு படி அரிசியை சமைத்துக் கீழே கொட்டுவதுதான் வேலை. அரசுக்குத் தெரிந்தே இதனைச் செய்கிறார்கள். கீழே கொட்டுவதற்காகவே வேலைக்குச் செல்கிறார்கள். ஜக்கம்மா என்கிற தெய்வத்தின் பெயரால் இப்படிச் சாதியப் பார்வையுடன் தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் அந்தக் கம்மளத்து நாயக்கர்களிடம் இதுவரை அரசு அதிகாரிகளோ மற்ற யாருமோ பேசக்கூட முயற்சிக்காததுதான் வேதனையாக உள்ளது. தொடர்புடைய சத்துணவு ஊழியர்களோ, தங்களை வேறு ஊருக்குப் பணியிட மாற்றம் செய்ய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

தாழ்த்தப்பட்டோரல்லாத சத்துணவு ஊழியர்களை வரவேற்பதற்காக கே.கம்மப்பட்டி ஊருக்கு வெளியே ஜக்கம்மா காத்துக்கொண்டிருக்கிறாள். அரசோ பின்னால் நின்றுகொண்டு ஜக்கம்மாவுக்கு விசிறிக்கொண்டிருக்கிறது.

ஜக்கம்மாவின் பெயரால், சாமி குத்தம் என்ற பெயரால் புதுவிதமாக சாதியக் வன்கொடுமை நடந்து வருகிறது. இதற்கு அரசே துணை போகிறது. 'தீண்டாமை ஒரு பாவச் செயல். தீண்டாமை ஒரு பெருங்குற்றம்' என  பாடப் புத்தகத்தில் பாடம் சொல்லித் தருகிற இடத்திலேயே தீண்டாமை தலைவிரித்தாடுகிறது. அரசுதான் இப்படி என்றால் தமிழர்களுக்காகப் பாடுபடுவதாகவும் தமிழ்த் தேசியத்தை நிலைநாட்டுவதாகவும் தமிழர்களுக்கு விடுதலை வாங்கித் தருவதாகவும் தமிழகத்தில் பீற்றித் திரியும் தலைவர்கள் இச்சாதி வெறி குறித்து கண்டன அறிக்கை கொடுக்கக்கூடத் தயங்குகிறார்கள். விடுதலைச் சிறுத்தைகள்தான் அந்த ஊருக்குச் சென்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். சாதியத்தை ஒழிக்காமல் தமிழர்களுக்கான விடுதலையை எப்படிப் படைக்கப் போகிறார்களோ தெரியவில்லை.

கம்மளத்து மக்களுக்கு ஜக்கம்மாவே பக்கபலமாக இருக்கிறாள்... ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு...? ஜக்கம்மா இது உனக்கே ஞாயமா?

--
வன்னிஅரசு
மாநிலச் செய்திதொடர்பாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

Comments

6 comments

6
நிரந்தர தீர்வு
ஆதிக்கத்தை தீண்டாமையாக பார்ப்பது தலித்துகளின்(பறையர்) தாழ்வு மனப்பாண்மையையே காட்டுகிறது. எவன் ஒருவன் வலிமை உடையவனோ அவன் வலிமை குன்றியவனை ஆதிக்கம் செய்கிறான்.. இதுவே ஈழத்திலும் நடந்தது... ஆனால் அதை சிங்களவரின் தீண்டாமை என்று அங்கே யாரும் சொல்லவில்லை... ஏனெனில் அங்கே விடுதலை சிறுத்தைகள்(தலித்) இல்லை. இக்கட்டுரையில் கூறப்பட்ட ஊரில் உள்ளவர்கள் காட்டு நாயக்கர்கள் ஆவார். அவர்களின் ஊரைச்சுற்றியும் பள்ளர்களின் ஆதிக்கமே ஓங்கி இருக்கும்போது இச்சிறு தெலுங்கு சாதியினர் பள்ளர்களை எதிர்த்து ஒன்றும் செய்ய இயலாது.இதுவே அவ்வூரின் இன்றைய நிலை.அப்படியிருக்கையில் இச்சம்பவத்தை தீண்டாமை என்று கூறியிருப்பது வேடிக்கை. தம் சாதி தவிர அடுத்தவர் வீட்டில் சாப்பிடும் பழக்கத்தை இவர்கள் பாண்டியர்களின் வீழ்ச்சியைத் தொடர்ந்து தமிழகத்தில் குடியேரியதிளிருந்து தங்களின் பாதுகாப்புக்காய் கடைப்பிடித்தி வருகிறார்கள்.அக்காலத்தில் பாண்டியர்களுக்கும் தெலுங்கு வடுகர்களுக்கும் இருந்த பகை அவ்வாறானது. தெலுங்கு வடுகர்களோடு தொடர்புடைய இச்சம்பவமானது அதன் தொடர்ச்சியே அதன் எச்சமே ஆகும். ஆக இதுபோன்ற செய்கைகளே இந்திய விடுதலைக்குப்பின் தீண்டாமை என திராவிட அரசுகளாலும் தற்கால தலித் வியாபாரிகளாலும்(விடுதலை சிறுத்தைகள் போன்ற ) நிலை நிறுத்தப்பட தொடர்ந்து முயலப்பட்டு வருகிறது. பிரச்சனை உள்ள அந்த பணியாளரை வேறு ஊருக்கு மாற்றுவதே தற்போதைய தீர்வு... இந்த தெலுங்கு வடுகர்களை தமிழர் மண்ணைவிட்டே அகற்றுவதுதான் நிரந்தர தீர்வு.
அங்கனூர் தமிழன் வேலு
தமிழர்களுக்காகப் பாடுபடுவதாகவும் தமிழ்த் தேசியத்தை நிலைநாட்டுவதாகவும் தமிழர்களுக்கு விடுதலை வாங்கித் தருவதாகவும் தமிழகத்தில் பீற்றித் திரியும் தலைவர்கள் இச்சாதி வெறி குறித்து கண்டன அறிக்கை கொடுக்கக்கூடத் தயங்குகிறார்கள்.

கம்மளத்து மக்களுக்கு ஜக்கம்மாவே பக்கபலமாக இருக்கிறாள்... ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு...? ஜக்கம்மா இது உனக்கே ஞாயமா?
மருத்துவர் இனியன் இளங்கோ
தீண்டாமையை கடைப் பிடிப்பதாலும் - சாதி ஆதிக்கம் செலுத்துவதாலும் தெலுங்கை மரபு மொழியாகக் கொண்ட ஒரு குறிப்பிட்ட சாதி மக்களை தமிழ் நாடு மாநிலத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று எழுதும் தன் பெயரைக் கூட வெளிப்படுத்த தைரியமில்லாத ஒரு பின்னூட்டாளர் - அதே போல தீண்டாமை கடைப்பிடிக்கும் மற்றும் சாதி ஆதிக்கம் செலுத்தும் தமிழ் மரபு மொழி மக்களையும் அவ்வாறே தமிழ் நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று சொல்வாரா? மாட்டார். இதில் இருந்தே இவரைப் போன்ற தமிழ்த் தேசியவாதிகள் சாதி ஆதிக்கம் செலுத்தும் - தீண்டாமையை கடைப்பிடிக்கும் தமிழ் மரபு மொழி மக்களை எதிர்ப்பதில்லை என்பதும், தமிழ் நாட்டில் வாழும் மாற்று மொழி மரபின மக்கள் மீது கண் மூடித்தனமான வெறுப்பைக் கொண்ட பாசிச இன வெறியாளர்கள் என்பதும் புலனாகின்றது.
மருத்துவர் இனியன் இளங்கோ
தங்களது தாழ்வு மனப்பான்மையினால் சாதி ஆதிக்கத்தை தீண்டாமையாக தலித் மக்கள் பார்க்கிறார்கள் என்று தன் பெயர் சொல்ல விரும்பாத பின்னூட்டாளர் கூறி இருப்பது அவரது அறியாமையினையும் சாதி ஆதிக்க மனப்பான்மையையும் காட்டுகிறது. தீண்டாமை என்பது வெறும் சாதி ஆதிக்கம் மட்டுமல்ல. தாழ்த்தப்பட்ட மக்களை பல்வேறு வழிகளில் ஒதுக்கும் - புறக்கணிக்கும் - தனிமைப் படுத்தும் - கீழ்மைப்படுத்தும் செயல்பாடுகள் தீண்டாமை எனப்படுகிறது. தலித் மக்களை ஊருக்கு வெளியே ஒதுக்கி சேரிகளில் வற்புறுத்தி வாழ வைக்கும் அவலம் ஒழிக்கப்படும் வரை தீண்டாமை ஒழிந்ததாக கருத முடியாது !தலித் மக்களுக்கு மற்ற மக்களுடன் ஊருக்குள் வாழ குடியிருப்புகள் - வீடுகள் - நிலங்கள் - அரசால் தரப்பட வேண்டும்.
அரவிந்தன் - திருவில்லிபுத்தூர
வன்னிஅரசு அவர்களின் கட்டுரை பத்திரிக்கை செய்தி அடிப்படையில் எழுதப்பட்டது.

கம்மாபட்டி: அவசர ஊடகவியல் கட்டுரை திரு.அ.முத்துகிருஷ்ணன் அவர்கள் தீர்க்கமாக ஆய்வு செய்து வெளியிடப்பட்டுள்ளது. நான் அவ்வூர் அருகே வசிக்கின்ற அடிப்படையில் திரு.அ.முத்துகிருஷ்ணன் உழைப்பை பாரட்டுகிறேன்.
http://www.amuthukrishnan.com/index.php?option=com_content&view=article&id=172
தமிழரசன்
கட்டுரையாளர் களஆய்வு செய்யாமல் கேள்விபட்டதை வைத்து எழுதியுள்ளார். இக்கிராமம் இராசபாளையம் ஒட்டி அமைந்துள்ளது. இம்மக்ககள் முழுக்க முழுக்கு விவசாயம் சார்ந்த தொழிலை செய்து வருகிறார்கள். பத்தாம் வகுப்பை தாண்டியவர்கள் கூட இல்லாத வைராக்கியத்தோடு பழமையை விடாபிடியாக பிடித்துக்கொண்டிருக்கும் கிராமம் இது. இன்னும் வேப்பங்குச்சி செங்காம்பட்டி வைத்து பல்துலக்குவதும். பெண்கள் மேலாடை அணிவது தங்கள் கடவுளுக்கு விரோகமானது என நம்பும் மக்கள் இவர்கள். நான் அவ்வூர் அருகே வசிக்கின்றேன். திரு.அ.முத்துகி ருஷ்ணன் கட்டுரையே சாியானது. இம்மக்கள் பிராமணர் சமைத்தாலும் சாப்பிடுவதில்லை என்ற வினோத பழக்கம் வைத்துள்ளனர். இது அப்பட்டமான சாதியம் . ஆனால் தலித்களுக்கு எதிரானது அல்ல. நமது மதம் சார்ந்த சடங்குகள் அனைத்தும் சாதியம் சார்ந்தே உள்ளது.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.