நிகழ்ந்து வரும் மாற்றம்

தற்காலத்தில் தமிழ் நாவல் இலக்கியம் பெரும்மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருச்கிறது. அதன் கதைக் களம், அதன் உள்ளடக்கம், உருவமைப்பு, சொல்முறை ஆகியவற்றின் அடிப்படையில் பலவித மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் பார்க்கமுடிகிறது. ,

Yeng kathaஏறக்குறைய இன்றைய நாட்களில் வாசிப்பு என்று பொது வெளியில் பேசுகிறபோது வாசகர்கள் இடையே நடைபெறுகிற முதல் விவாதமாக நடப்பது நாவலைப் பற்றிய பேச்சாகவே உள்ளது. இது வரவேற்கத்தக்கது. ஏனெனில், வாசகன் என்பவன் வெறும் புத்தகத்தின் அட்டைப் பக்கத்தின் எழுத்துக்கள் முதல் கடைசி அட்டை வரையிலும் படித்துவிட்டு மனப்பாடம் செய்து தேர்விற்கு செல்கிற மாணவனாக இல்லை.

வாசகன் யார்? என்ற கேள்விக்கு தெளிவான ஒரு பதிலை நிச்சயம் ஒரு வாசகனாக மட்டுமே தான் பதிலை சொல்ல முடியும். அவனுடைய தேவை எது என்பதில் தான் பிரச்சனை. தேவை எது என்பதை கண்டறியாமல் எந்தவொரு திட்டத்தையும் அதற்கான தீர்வையும் நாம் செயல்படுத்த முடியாது. அதற்கான அளவுகோல் எது என்பதையும் வரையறுத்து விடமுடியுமா?. இலக்கியச் சூழ்நிலையில் நிச்சயம் அதற்கான அளவுகோல் இது என்பதை வரையறுக்க முடியாது. என்றாலும், நாவல் இலக்கியத்தில் தீர்வு எதை நோக்கி இருக்கவேண்டும் என்று எடுத்துக் காட்டமுடியும்.

மாற்றம் எப்பொழுது நிகழும்?. ஒரு மனிதன் தான் சார்ந்திருக்கும் சமுதாயம் எதிர்கொள்கிற பிரச்சனைகள், அவைகள் ஏற்படுத்துகின்ற பாதிப்புகள், தனிப்பட்ட ஒருவனை எவ்விதத்தில் பாதிக்கிறது என்பதை அவன் உணர்கிற போது 'மாற்றம் தேவை' என்ற உண்மை மனநிலையானது உருவாகிறது. மாற்றம் பற்றிய புரிதல் எல்லோருக்கும் நிகழுமா என்றால் நிச்சம் அதைப் பற்றிய புரிதல் வாய்க்காது என்பது தான் நிதர்சனம்.

நாவல் இலக்கியத்தைப் பற்றிய மாற்றம் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது.? என்ற கேள்விக்கு நிச்சயம் மாற்றங்கள் நடந்துள்ளன. முதல் காலகட்டத்தில் படைக்கப்பட்ட நாவல்கள் மணிப்பிரவாள நடை என்று சொல்கிற மொழிக்கலப்பு நிலையிலிருந்து மெல்ல மெல்ல (இன்னமும் அதன் பிடி இருந்து கொண்டுதான் இருக்கிறது.) நகர வாழ்வு நோக்கிப் பயணித்து தற்போதுதான் வட்டார மொழியை நோக்கி நகர்வதற்கு உரிய சூழல் உருவாகியுள்ளது. இதில் முதன்மையாக கி.ரா.வை எடுத்துக் கொள்ளலாம். இதில் பிற வட்டார மொழிகள் இலக்கியமாக அங்கீகாரம் பெறுமா என்ற கேள்வி இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து இருந்து வந்துள்ளது. அத்தகைய நிலையை மாற்றிப் போடுகிற ஒரு நாவல் ''எங் கதெ''.

எங் கதெ - நாவலை ஏன் ஒரு முறையாவது வாசிக்க வேண்டும்?

நாவல் இலக்கியம் இந்தியாவில் வளர்ந்து கொண்டிருந்த சமயத்தில் பெரும்பாலும் எழுத்துலகில் இருந்தவர்கள் மேல்தட்டு வகுப்பினரையும் அவர்களது வாழ்க்கை முறையையும் அடிப்படையாகக் கொண்டதாகவே அமைந்திருந்தன. பிறகு அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றம் எழுத்துலகிலும் அதி தீவிரமான தேவையான ஒன்றாக மாறியது. அதன் விளைவு வலதுசாரி எழுத்து, இடது சாரி எழுத்து என்று அடையாளம் காணப்பட வேண்டிய நிலையில் சில மோதல்கள் எழுத்தின் வழியே நாளது வரையில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

இதன் அடிப்படை சாரம்சம் ''எழுத்து செவ்வியல் தன்மையாக இருக்க வேண்டும்''. என்று சிலர் சிலரது படைப்புகள் புறக்கணிப்பு செய்யப்பட்ட வரலாறு இங்கு இருப்பதன் காரணம் ஒன்று. கவனிப்புச் செய்ய வேண்டியது ''செவ்வியல் தன்மையாக'' இருக்க வேண்டும் என்று சொல்லப்படும் மொழி யாருடையது என்பதுதான்?. நேரடியாகவே சொல்வதற்கென்ன. வடமொழியின் ஆதிக்கம் மணிப்பிரவாள நடையைத்தான் செவ்வியல் என்று சொல்லப்பட்டது. கற்பிக்கவும் செய்தனர். அதற்கு லா.ச.ரா, மௌனியின் படைப்புகள் இன்றைக்கும் சாட்சியாக விளங்கிக் கொண்டுதான் இருக்கின்றன.

கி.ரா.வின் பெரும்பாலான கதைகள் கரிசல் நிலப்பகுதியையும் அவர்களின் வாழ்வியல் முறையையுமே கொண்டிருக்கிறது. பெருமாள் முருகனின் கதைகள் கொங்குப் பகுதியின் வாழ்வை பதிவுசெய்கிறது. இன்னும் சிலரின் கதைகள் வெவ்வேறு சமுதாய அடுக்குகளில் மேம்பட்டவர்களது வாழ்வைத்தான் பேசுகின்றன. அவற்றை நாம் கூடாது என்றோ, தவறு என்றோ சொல்ல வேண்டியதில்லை. அது, தாங்கள் பழக்கப்பட்ட நிலம் சார்ந்த வாழ்வில் நாள்தோறும் நடமாடுகிற அடித்தட்டு மக்களின் வாழ்வை, அவர்களது மொழியை, பண்பாட்டு விழுமியங்களைப் பதிவு செய்கிறதா? பிரதிபலிக்கிறதா? என்பதை தற்போதைய சிறுகதை நாவல் ஆய்வாளர்கள் தொடங்கியுள்ளனர். அது ஒரு துறையாக மாறியிருப்பது மகிழ்ச்சியையே அளிக்கிறது.

எனினும், ஆய்வாளர்கள் எத்தணை பேர்கள் வட்டார மொழிகள் குறித்து நடுநிலையான ஆய்வை சமர்ப்பித்திருக்கின்றனர்.? நாவல் இலக்கியத்தில் ஒரு சாரர் வட்டார மொழியை எதிர்த்தனர். பின் அவர்களது வாதங்கள் எல்லாம் பொதுத் தளத்தில் விவாதிக்கப்பட்டு புறந்தள்ளப்பட்டு விட்ட ஒன்று என்பது நாம் அறிந்ததே. இதில் அவர்கள் அன்றாடம் பயன்படுத்துகிற கொச்சை மொழியை பயன்படுத்துவது சரியா என்று கேட்கின்றனர். உதாரணத்திற்கு இன்று வழக்கில் பயன்படுத்தப்படுகிற கொச்சைச் சொல்லான தேவிடியா என்ற சொல் யாரால் அல்லது எத்தகைய அமைப்பு நிறுவனத்தாரால் இந்தச் சமூகத்தில் நிலைநிறுத்தப்பட்டது என்பது எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். தற்போது அது எத்தகைய பொருளில் பிறர் மீது வசவுகளாக வீசப் படுகிறது என்பதும் தெரியும்.

இன்றைய நாவல் இலக்கிய உலகில் பல நாடுகளில் வட்டார சொல்லில் கொச்சை மொழிகள் பயன்படுத்தப்படுகிறது. அச்சொல்லின் பின் இருக்கின்ற வரலாறுகளும் பதிவு செய்யப்படுவதாகவே கருதப்படுகிறது. அது எப்பொழுது பயன்படுத்தப் படுகிறது என்பதும் தேவைதான். அதனை கதையும் அதன் ஓட்டமும் சூழ்நிலையுமே முடிவு செய்கின்றன. இவ் வட்டாரச் சொற்கள் பெருமளவில் வீடுகளில் தங்களது வீதிகளில் தான் பழகி வருகிற மனிதர்களிடமும் தான் பயன்படுத்தப்படுகின்றன. அவை, அதன் தன்மையை பதிவு செய்வதில் பெரும் பங்குகொள்கின்றன. அத்தகைய பங்களிப்பு வட்டாரச் சொற்களுக்கு உண்டு என்பதை எங் கதெ நாவலின்; மூலம் எடுத்துக் காட்டியிருக்கிறார் இமையம்.

கதெ-

எங் கதெ நாவலின் மையம் மிக எளிதான ஒன்று. ஆண்-பெண் உறவைச் சுற்றி நடக்கிறது. சமூகம் அங்கீகரிக்கத் தயங்குகின்ற வாழ்க்கை முறையானது. பெரு நகரத்திலிருந்து சிறு நகரத்திற்கு செல்கிற போது உறவில் ஈடுபடுகிற ஆணுக்கும் பெண்ணுக்கும் தங்களது தனிப்பட்ட வாழ்விலும் சமுதாயத்திலும் எத்தகைய மனோ ரீதியிலான சமூகச் சிக்கல்களை உருவாக்குகின்றன என்பது இந்நாவலில் படைக்கப்பட்டிருக்கிறது.

'நேர்த்தி' என்று சொல்கிற செயல் முறையானது தான் சொல்ல வேண்டிய கதை யாருடையது அதனை அவர்களது மொழியில் பதிவு செய்வதே சரி என்ற நேர்மையான உளத்தோடு இந்நாவல் செய்யப்பட்டிருப்பதை வரவேற்கத்தான் வேண்டும். இதனை இன்று கூட சிலர் எதிர்த்து விவாதம் நடத்திக் கொண்டு இருக்கத்தான் செய்கின்றனர். இந்நாவல் பற்றி விவாதிக்க வேண்டிய தேவையும் உள்ளதாகவே தோன்றுகிறது.

இரண்டு காரணங்கள்:

1. சமூகத்த்தில் ஆண்-பெண் உறவில் ஏற்படுகிற பொதுவான விவாதம். அவற்றில் திருமணத்திற்கு அப்பாற்பட்டு வேறொரு ஆணுடன் ஏற்படுகிற உறவை சமூகம் என்று சொல்கிற அமைப்பு ஏன் ஏற்கவில்லை. இதில் இன்னொன்றையும் சொல்வதெனில் ஆங்கிலத்தில் சொல்லப்படுகிற 'லிவிங் டூ கெதர்' வாழ்க்கை முறையில் மணம் விருப்பப்பட்டு ஏற்படுத்திக் கொள்கிற உரிமை பெண்களுக்கு உண்டா? இல்லையா?.

2. மொழி நடை என்று சொல்லப்படுவது என்பது என்ன? நாவல் இலக்கியத்தில் வட்டார மொழியின் தேவை இருப்பது ஏன்?. அதன் தன்மையை எதன் அடிப்படையில் ஒரு எழுத்தாளன் தன் மொழியை வாழ்வியல் அடிப்படையில் மாற்றிக் கொள்ள வேண்டும்? என்பது போன்ற கேள்விகளும் அதன் விவாதத்தில் ஏற்படுகிற கிளைக் கேள்விகளும் அவசியமே.

பெண்ணியம் சார்ந்த உளவியல்?

தற்காலத்தில் பெண்ணியம் சார்ந்த உளவியல் என்ற ஒன்று திரும்பத்திரும்ப கட்டமைக்கப்படுகிறது. உண்மையில் பெண்ணியம் சார்ந்த உளவியல் படைப்பின் வழியே வெளிப்படுத்தப் படுகிறதா?. அதனை, ஓரளவிற்கு என்ற அளவில் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். பிறகு இதில் ஏன் திரும்பத்திரும்ப கட்டமைக்கப் படுகிறது என்ற சொல் ஏன் பயன்படுத்தப் படுகிறது.

21-ம் நூற்றாண்டு என்று சொல்லப்படுகிற தொழில் நுட்ப காலத்தில் பெண்களுக்கான சுதந்திரம் பற்றிப் பேசியாக வேண்டிய சூழல் இருக்கிற பொழுது பெண்ணியம் சார்ந்த உளவியல் என்ற கோட்பாடு ஒவ்வொரு காலகட்டத்திற்கும் பேசப்பட்டும் அவை மாற்றம் பெற்றே தீரும் என்பதைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. எங் கதெ -யில் படைக்கப்பட்டுள்ள கமலாவின் உரையாடல் மிக கவனத்தில் கொளள வேண்டும்.

கமலா திருணம் நடைபெற்று இரு குழந்தைகளுக்குத் தாய். பள்ளியில் கிளார்க் ஆக பணி செய்பவள் என்ற நிலையை அடைந்தவள். அவள் கல்வி பயின்று இருக்கிறாள். அக்கல்வி அவளுக்குக் கொடுத்திருக்கிற தைரியமும் சமூகத்தை எப்படி எதிர்கொள்வது என்பதை அதன் பின்னனியில் பார்த்தால் தான் கமலாவின் உரையாடல்கள் குற்றமற்றதாகத் தெரியும். பொதுச் சமூகம் ஏற்படுத்தி வைத்திருக்கிற பழமை முறையை எதிர்த்து தனக்கொரு துணையைத் தானே தேர்வு செய்து கொள்ள முடியும் என்பதை வெளிப்படையாக பேச்சின் வழியே காட்டிவிடுகிறாள். இதை புரட்சிகரம் என்று கூற முடியாது. ஏனெனில் அவள் கற்ற கல்வி அவளது எதிர்காலத்திற்கு துணையாக ஒரு ஆண் தேவை என்ற சுயமாக சிந்திக்கிறவளாக இருக்கிறாள்.

வேலை தேடி அலைகிற பட்டதாரி இளைஞனான விநாயகம். அவனது மனநிலை மிக பரிதாபகர நிலையில் படைக்கப்பட்டிருக்கிறது. இளம் பருவம் கடந்த, பருவத்தில் திருமணம் தவறிப் பின் தனக்கான ஒரு துணையைத் தேர்ந்து கொள்கிறான். ஆணுக்கும் -பெண்ணுக்கும் இடையில் ஏற்படுகிற உறவு ஆனது புரிந்துணர்தல் அடிப்படையிலேயே நடைபெற முடியும். அதனை அமைப்பு ரீதியாக ஏற்படுத்திவிட முடியாது. விநாயகம் தன் ஊருக்கு பள்ளி கிளார்க் ஆக நியமனம் பெற்று வருவதும் அவளது பின்னனி குடும்ப நிலை போன்ற பிற ஆதாரத் தகவல்களை கமலா மூலமாகவே தெரிந்து கொள்கிறான்.

கமலா-விநாயகம் இருவருக்கும் இடையே நடைபெறுகிற உரையாடல்கள் மிக கொச்சை மொழியில் கையாளப்படவில்லை என்பதை வாசிக்கிற பொழுது இதனை ஏற்க மறுக்கலாம் அல்லது அதன் போக்கை உணர்ந்து ஏற்றுக் கொள்ளலாம். எத்தகைய நிலையிலும் கமலாவின் -விநாயகம் உரையாடலில் தொனிக்கிற அதிகாரம் மீண்டும் மீண்டும் அலசி ஆராயப்பட வேண்டிய ஒன்றே. அது விநாயகத்தால் கமலாவின் நேர்மையான குணமாக சிறப்பிக்கப்படுகிறது.

மொழி நடை

'இது எங் கதெ. பத்து வருசத்துக் கதெ. என் ரத்தம். என் கண்ணீர். கதெ ஆரம்பிக்கிறப்போ எனக்கு முப்பத்தி மூணு வயசு. கதெ முடியறப்போ நாபத்தி மூணு. இது என்னோடது மட்டுமில்ல. கமலாவோட கதெயும் தான். தூங்கி எழுந்திரிச்ச மாரி இருக்கு. கனவு கலஞ்சி போச்சி".

நாவலின் தொடக்கத்திலேயே கதை எத்தனைக் காலத்திற்கு நடக்கிறது. யாருக்கும் யாருக்கும் இடையில் நடக்கிறது என்பதை நாவலாசிரியர் தெளிவாக சுட்டிக் காட்டிவிடுகிறார். அதனுடைய சிறப்பு எந்த நடையில் இருக்கும் என்பதையும் வழக்கமான உரைநடை முறையில் கதையை கொண்டு போய் இடையில் உரையாடலை அமைக்கின்ற உத்தியை நாவலாசிரியர் மேற்கொள்ளவில்லை. இது அதன் கதையோட்டதை வசீகரம் செய்கிறது.

ஒரு நாவல் முழுவதும் பேச்சு நடை மொழியை பயன்படுத்துவது சாத்திமில்லை என்று இனி யாரும் கூற இயலாது. மேலும், இதன் அடிப்படையே ஆண்-பெண் உறவு குறித்து இருவரது வாழ்வைவின் போக்கையும் அவர்களுக்குள் ஏற்படுகிற சந்தேகம், கோபமும், ஆவேசமான பெண்ணின் குரலும் அதன் தொனியிலேயே 'எங் கதெ'-யைப் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மொழிநடை என்ற சொல்லை உடைத்துக் கொண்டு மொழியை அந்நியப் படுத்தாமல் நீ நான் என்பதோடு இல்லாமல் வெகு இயல்பான பேச்சு நடையில் விளிம்பு நிலை வட்டாரத்தன்மையோடு 'எங் கதெ' நாவலில் கையாண்ட உத்தி வரவேற்கத்தக்கது.

- இல.பிரகாசம்

Pin It