கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

பிரச்சினையின் தொடக்கம் எது?

ஆதி திராவிட சமூக மக்கள் மீதான தாக்குதல் வடகாடு முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி நடந்துள்ளது என்றாலும் அதன் தொடக்கம் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கியது. வடகாடு தெற்கு கடை வீதி பேருந்து நிறுத்தத்திலிருந்து ஏறக்குறைய ஒரு கிலோமீட்டர் தொலைவில் அடைக்கலம் காத்த அய்யனார் என்ற கோயில் இருக்கிறது.ஒரு ஏக்கருக்கு சற்று குறைவான அளவுடைய நிலத்திலுள்ள இக்கோவிலில் பல தலைமுறைகளாக ஆதி திராவிட மக்கள் வழிப்பட்டு வருகிறார்கள். திருவிழா,பொங்கல் கொண்டாடி வந்திருக்கிறார்கள். இருபது வருடங்களுக்கு முன்பு முத்தரையர் சமுதாய மக்கள் பிரதிநிதிகள் மற்றும் இளைஞர்கள் அய்யனார் கோயில் இடத்தில் கைப்பந்து விளையாடிக்கொள்வதற்கு கேட்டுக்கொண்டனர்.

ஆதி திராவிட சமூக மக்கள் சார்பாக அன்று கோவில் பொறுப்பில் இருந்தவர்கள் நல்லெண்ணத்தின் அடிப்படையில் இதனை அனுமதித்தனர்.இந்த அனுமதி வாய் வார்த்தைகள் மூலமே வழங்கப்பட்டது. ஆவணங்களாக எழுதி கொடுக்கப்படவில்லை. சில வருடங்களுக்கு பிறகு கோயில் சீரமைப்பு மற்றும் விரிவாக்க பணி ஆதி திராவிட மக்களால் தொடங்கப்பட்டது. இதன் காரணமாக ஆதிதிராவிட சமூக மக்கள் கோயில் நிலத்தில் கைப்பந்து விளையாட்டை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்கள். முடியாது என்று மறுத்து பிரச்சனை செய்ய தொடங்கினர் முத்தரையர் இளைஞர்கள் சிலர்.

தற்காலிகமாக விளையாட கேட்டுக் கொண்டவர்கள் கால ஓட்டத்தில் அந்த இடத்தை விட்டு வெளியேற மறுத்தனர்.சாதி வெறி பிடித்த சிலர், அப்பாவி முத்தரையர் இளைஞர்களிடம் உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பி, சாதி வெறியூட்டி அந்த இளைஞர்களுக்கு எந்த விதத்திலும் அதாவது கல்விக்கும்,பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பிற்கும் பயன்படாத சாதி பெருமை பேசி ஆதி திராவிட சமூக மக்களை பகைவர்களாக சித்தரித்து அதில் வெற்றியும் கண்டனர். இதுவே தற்போது நடந்த தாக்குதலுக்கு தொடக்கம்.

அதைத் தொடர்ந்து, ஆதி திராவிட சமூக மக்கள் சார்பாக அவர்களது இல்ல விழாக்களுக்கு வடகாடு கடைத்தெருவில் வைக்கப்படும் பதாகைகள் கிழித்தெறிப்படுவது தொடர் நிகழ்வாக மாறியது. இந்த சாதிய வன்மம் கொண்டு பிரச்சினைகள் செய்தவர்கள் அந்த சமூகத்தில் உள்ள சில சாதியவாதிகள் மட்டுமே. ஒட்டுமொத்த முத்தரையர் சமூக மக்களும் இப்படியான சாதிவெறி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் அல்ல.

நீதிமன்றம் சென்று கோயில் வழிப்பாட்டு இடத்தை மீட்ட சம்பவம்:

இதற்கிடையே 2005 ஆம் ஆண்டு காவல் நிலையம் கட்டுவதற்காக குறிப்பிட்ட அய்யனார் கோயில் நிலத்தை கையப்படுத்துவதற்கு அரசும்,காவல்துறையும் முயற்சிகள் மேற்கொண்டது. அதை எதிர்த்து ஆதி திராவிட சமூக மக்கள் நீதி மன்றம் சென்று, இது பல தலைமுறைகளாக நாங்க வழிபடும் கோயில் வழிப்பாட்டு இடம். எனவே காவல் நிலையம் கட்ட அனுமதிக்க கூடாது என்று வாதாடி தடை உத்தரவும் பெற்றனர் என்பது இங்கே குறிப்பிடதக்கது.

வழக்கு விபரம்-

 1.அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் கோயில் பிரதிநிதிகள்

2.ஆதி திராவிடர்கள் (பறையர்கள்)

 Vs

 1.State Of Tamilnadu

2.The District Superintendent of Police.

இவ்வழக்கு பற்றி இங்கே ஏன் குறிப்பிட்டு கூறுகிறோம் என்றால், கோயிலை மீட்கும் இந்த வழக்கில் கைப்பந்து விளையாட்டு தரப்பினர் ஈடுபடவே இல்லை. ஏனெனில் அவர்களுக்கு அந்த கோவில் நிலம் உரிமையுடையது என்பதற்கான எந்த சான்றும் அவர்களிடம் இல்லை. இந்த கோவில் நிலம் ஆதி திராவிட சமூக மக்களுக்கே உரிமையுடையது என்று கைப்பந்து விளையாடும் தரப்பிற்கும் நன்றாகவே தெரியும். தெரிந்தே உண்மைகளை மறைத்து அவர்கள் தரப்பு இளைஞர்களுக்கு பொய்யான தகவலை கூறி வன்முறையை தூண்டுகின்றனர்.

அடைக்கலம் காத்த அய்யனார் கோயிலும்,மாரியம்மன் கோவிலும்:

வடகாடு பதினெட்டு பட்டி கிராம மக்களுக்கு சொந்தமான கோவில் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில். இதில் முத்தரையர் சமுதாய மக்கள் பெரும்பான்மை சமூகம். ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் திருவிழா வெகு சிறப்பாக அக்கிராம மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. காப்பு கட்டு தொடங்கி தேரோட்டம், மஞ்சள் நீர் தெளிப்பு வரை ஒருவாரத்திற்கு மேலாக நடைபெறும் இந்த திருவிழா பதினெட்டு பட்டி கிராம மக்கள் சேர்ந்த நான்கு காரைக்காரர்களால் 2,3 நாட்கள் மண்டகப்படி நடத்தப்பட்டு சாமி ஊர்வலம், இரவு ஆடல்- பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

கூடுதலாக வல்லநாட்டு நகரத்தார்கள் என்ற கரையின் பெயரில் செட்டியார் சமூகத்தினர் ஒரு நாள் மண்டகப்படி நடத்தி இரவு ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். இந்த ஒட்டுமொத்த திருவிழா நாட்களில் ஒரு நாள் கூட ஆதி திராவிட சமூக மக்களுக்கு மண்டகப்படி உரிமை கிடையாது. அவர்களிடம் இருந்து கோவிலுக்காக வரியும் வசூல் செய்ய மாட்டார்கள். அந்த மக்களே நிதி சேகரித்து கோவிலுக்கு கொடுத்தாலும் வாங்க மறுத்து விடுவார்கள். வரியாக அல்லாமல் நன்கொடையாக மட்டுமே பெற்றுக் கொள்வார்கள் அல்லது உண்டியலில் வேண்டுமானால் போட்டு வரலாம்.

இந்த வருடம் சில நிகழ்வுகளை தவிர்த்து அதற்கு முன்னர் ஆதி திராவிட சமூக மக்கள் வழிபடும் உரிமையை முத்தரையர் சமூக்கத்தினரோ, பிற சமூகத்தினரோ தடுத்ததில்லை. ஆனால் மண்டகப்படி போன்ற உரிமை சார்ந்த விடயங்களில் அனுமதிக்கவில்லை.

ஒரு மாதத்திற்கு முன் ஒரு திருமணம் நடத்துவதற்காக மாரியம்மன் கோவிலுக்கு ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்த குடும்பத்தினர் சென்ற போது, அவர்களை வெளியில் போகச்சொல்லி கோவில் கதவை மூடியிருக்கிறார்கள் . அப்படி செய்த அந்த நபரை ஊர் பெரியவர்கள் கண்டித்திருக்க வேண்டுமல்லவா? ஆனால் கண்டிக்கப்படவில்லை. குறைந்தபட்சம் இது போல இனிமேல் நடக்காது தாராளமாக கோவிலுக்கு வந்து திருமணம் போன்ற நிகழ்வுகளை நடத்திக்கொள்ளலாம் என்று ஆதி திராவிட மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டதா என்றால், அதுவும் இல்லை.

தேர் இழுக்க தொடங்கியபோது தேர் வடத்தை தொட்டதற்காக ஆதிதிராவிட சமூக இளைஞர் சிலரை சாதி பெயரை சொல்லி இழிவு படுத்தியிருக்கிறார்கள் சிலர்.

ஒட்டுமொத்த வடகாடு கிராமத்திற்கு சொந்தமான மாரியம்மன் கோவிலில் ஆதி திராவிட சமூக மக்களுக்கு மட்டும் இப்படியான ஒரு நிலை இருக்க, அவர்களுக்கு முழு உரிமையுடைய அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் இடம் கைப்பந்து ஆட எங்களுக்கும் உரிமை உண்டு என்று எந்த வித ஆவணங்களும் ஆதாரங்களும் இல்லாமல் பொய் வழக்கு தொடுத்து அம்மக்களை 10 ஆண்டுகளுக்கு மேலாக அந்த கோயிலை வழிபாடு,பொங்கல்,திருவிழாக்கள் நடத்த விடாமல் முடக்கி வைத்துள்ளனர்.

ஏற்கனவே காவல் நிலையம் கட்ட கையப்படுத்துவதற்கு எதிராக நீதிமன்றம் சென்று தங்களுக்கு சாதகமான ஆணை பெற்ற பிறகும் ஆதி திராவிட சமூக மக்கள் தங்களது கோவில் மீதான உரிமையை இழந்து நிற்கிறார்கள். சனநாயக சிந்தனை கொண்ட தமிழ் சமூக ஒற்றுமையில் அக்கறை கொண்ட முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவர்கள் இருப்பீர்களானால் அவர்களின் மனசாட்சிக்கே இதனை சீர்தூக்கி பார்க்க விட்டுவிடுகிறோம்.

அரசு ஆவணங்கள் என்ன சொல்கிறது?

1.அ பதிவேடு- புல எண் 424/1- அரசு புறம்போக்கு கோவில் 424/2 -அரசு புறம்போக்கு ஆதி திராவிடர் நலத்துறை சமுதாய கூடம்.

2.கிராம நிர்வாக அலுவலர் சான்றளித்த புல எண் 424 வரைபடம்- கோயில்,குதிரை வைக்கும் இடம்,உண்டியல்.

3.2005 ஆம் ஆண்டு வடகாடு ஊராட்சி மன்ற தலைவர் அவர்களால் ஆதி திராவிட(பறையர்) மக்களுக்கு சொந்தமான இடம் என்று வழங்கப்பட்ட சான்று.

4.வில்லங்க சான்றில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரம் - அடைக்கலம் காத்த அய்யனார் கோவில்.

5.15.01.2025 தேதி வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது இரு தரப்பினரிடமும் கையொப்பம் பெறப்பட்ட கடிதத்தில் கூட "அரசு புறம்போக்கு கோவில்" என வகைப்பாடுடைய நிலம் தொடர்பாக என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இப்படி எந்த ஆதாரமும் கோவில் நிலத்தை விளையாட்டு மைதானமாக பொய் பரப்புவோரிடம் இல்லை.

விளையாட நில உரிமை கோரும் தரப்பு வைக்கும் வாதம் என்ன?

புறம்போக்கு இடம் தானே நாங்களும் உரிமை கோருவோம் என்கிறார்கள்- வடகாட்டில் மற்ற கோவில்களும் கூட பெரும்பாலும் புறம்போக்கு இடத்தில் தான் உள்ளது. அதற்காக அங்கெல்லாம் சென்று கைப்பந்து விளையாடலாம் என்று சொன்னால் எப்படி தவறோ அதுதானே அடைக்கலம் காத்த ஐயனார் கோவிலுக்கும் பொருந்தும். அரசு ஆவணங்களில் கூட வெறும் அரசு புறம்போக்கு நிலம் என்று இல்லை, அரசு புறம்போக்கு "கோவில்" என்று தான் உள்ளது. மேலும் ஆதி திராவிட சமூக நலக்கூடம் ஒன்று அந்த இடத்தில் உள்ளது. ஆதி திராவிட மக்களுக்கு உரிமையான கோவில் என்றாலும் கூட அனைத்து சமூக மக்கள் வழிபடுவதற்கான அனைத்து உரிமைகளும் உண்டு. ஆதி திராவிட சமூக மக்கள் அனைத்து சமூக மக்களை அன்போடு கோவில் நிகழ்வில் வரவேற்க தயாராகவே இருக்கிறார்கள்.

வழிபடும் இடத்தில விளையாட்டு திடல் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு செய்யாதீர்கள் என்று தான் கூறுகிறார்கள்.

வடகாடு - அதிமுக, திமுக, காங்கிரசு:

வடகாடு கிராம முத்தரையர் சமூக மக்கள் பெரும்பான்மையினர் இந்த மூன்று கட்சிக்குள்ளாகவே இருந்தனர். அதற்கடுத்து இயக்கமாக, தோழர் சுப.முத்துக்குமார் அவர்களோடு ஈழ ஆதரவு போராட்ட களத்தில் இருந்த சில இளைஞர்கள் நாம் தமிழர் கட்சியிலும் இருந்தனர். இந்த கட்சிகளின் பொறுப்பளர்கள் கள செயல்பாட்டில் இருந்தவரை (குறிப்பாக மரியாதைக்குரிய காங்கிரசு கட்சியை சேர்ந்த ஐயா புஸ்பராஜ், மறைந்த மரியாதைக்குரிய முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஐயா அ.வெங்கடாசலம், தமிழ்த் தேசிய போராளி தோழர் சுப.முத்துக்குமார்) ஆதி திராவிட சமூக மக்களை முத்தரையர்களின் பகைமை சக்திகளாக பார்த்ததில்லை.

தற்போது நடைபெற்றது போன்று ஆதி திராவிட சமூக மக்கள் மீதான தாக்குதல் நடைபெற்றதில்லை. சமீபத்திய சில ஆண்டுகளாக இந்துத்துவ சக்திகளோடு கைகோர்த்து நிற்கக்கூடிய சாதி சங்கங்கள் ஊடுருவ தொடங்கிய பிறகே ஒன்றுக்கும் உதவாத சாதி பெருமை பேசி இளைஞர்களை தவறாக வழி நடத்தத் தொடங்கினர்.

ஈழ ஆதரவு, தமிழுணர்வு போராட்ட களத்தில் நின்ற முக்கியமான சில நபர்களே தற்போது இந்த கோயில் நிலம் தொடர்பான பிரச்சினையில் நியாயத்தை புறந்தள்ளி தன் சாதி தான் முதன்மை என்று நிற்பது வேதனையளிக்கிறது. பெரும் எண்ணிக்கையிலான முத்தரையர் இளைஞர்களை சனநாயகப்படுத்திருக்க வேண்டிய வடகாட்டை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் மாநில பொறுப்பில் இருப்பவர்கள் கோவில் நிலப்பிரச்சினையையே முதன்மைப்படுத்தி அந்த இளைஞர்களுக்கு பொய்யான தகவல்களை கூறி அவர்களை சாதி சங்கங்களை நோக்கி தள்ளியிருக்கிறார்கள்.

இரு சமூக மக்களின் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பில் இருக்கும் நாம் தமிழர் கட்சியின் மாநில பொறுப்பில் இருப்பவர்களே,கோவில் நிலத்தை ஆக்கிரமித்து விளையாடும் தரப்பினரின் பிரதிநிதியாக அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு அந்த நிலம் எங்களுக்கு வேண்டும் என்று வாதிடுகிறார்கள். இவர்களின் இச்செயலை நாம் தமிழர் கட்சி தலைமை அங்கீகரிக்கிறதா?

இது மே மாதம். தமிழீழ இனப்படுகொலையை உலகத்தமிழர்கள் நினைவிலேந்தி தமிழீழ விடுதலை கோரிக்கையை உயர்த்தி பிடிக்க வேண்டிய நேரம். ஆனால் இந்த மண்ணின் பூர்வகுடி தமிழர்கள் சொந்த ஊரிலேயே சக தமிழர்களால் தாக்கப்பட்டு தங்களுக்கான நீதி வேண்டி நிற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

சாதியவாதிகள் தொடரும் பொய் பரப்புரைகள்:

கோவில் நிலம் தொடர்பான பொய் பரப்புரைகள் மட்டுமல்ல நடந்த சாதிய வன்கொடுமை தாக்குதலை மூடி மறைக்கும் வகையில் தாக்குதலுக்கு உள்ளான மக்களையே குற்றவாளிகளாக சித்தரிக்கும் கேவலமான பரப்புரைகளை மேற்கொள்கின்றனர். நூற்றுக்கணக்கானோர் தாக்குதல் நடத்த பெரிய மரம், கட்டைகள் என ஆயுதங்களோடு சென்ற காணொளிகளை அவர்களே வடகாடு சம்பவம் என தலைப்பிட்டு ரீல்ஸ் போட்டு சாதி பெருமைக்காக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருக்கிறார்கள்.

வீட்டிற்கு தீ வைத்து மேலும் கம்பு கட்டைகளை தூக்கி எரியும் காணொளிகள் காட்சி ஊடகங்களில் வெளியாகியிருக்கிறது. இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும் அவர்களே தங்கள் வீட்டிற்கு தீ வைத்துக்கொண்டார்கள் என்று அருவருக்கத்தக்க வகையில் பச்சை பொய்யை கட்டவிழ்த்து விடுகிறார்கள். இப்படி பொய் தகவலை பரப்பி இரு சமூக மக்களுக்கும் இடையிலான முரணை நிரந்தரமாக்க வேலை செய்கின்றனர்.

தீர்வு என்ன?

-> அரசே கைப்பந்து விளையாட விரும்புவோருக்கான தகுந்த இடத்தை ஒதுக்கி கொடுக்க வேண்டும். ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஏற்கனவே புதுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் "உங்களுக்கு விளையாட தானே இடம் தேவை அதை வேறு ஒரு இடத்தில் ஒதுக்கி தருகிறோம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் எங்களுக்கு அந்த கோவில் நிலம்தான் வேண்டும் என்று பிரச்சினை செய்யும் நோக்கத்திலேயே இருந்தார்கள் நாம் தமிழர் பொறுப்பாளர் உள்ளிட்ட 'கைப்பந்து விளையாட்டு' தரப்பினர். எனவே அவர்கள் தங்களை மீளாய்வுக்கு உட்படுத்தி வேறு இடத்தை தேர்ந்தெடுக்கும் முடிவை பரிசீலிக்க வேண்டும்.

-> பள்ளி கல்லூரி படிக்கும் அப்பாவி முத்தரையர் சமூக இளைஞர்களை தவறாக வழிநடத்தி, வன்முறையை செய்யத் தூண்டிய சமூக விரோதிகளை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

->இரு சமூக மக்களும் நல்லிணக்கத்தோடு வாழ்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

->தாக்குதலில் காயம்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஆதிதிராவிடர் சமூக இளைஞர்களை காவல்துறை கைது செய்திருக்கிறது. கல்வி மறுக்கப்பட்ட சமூகத்திலிருந்து தற்போது தான் பெரும்பாலான குடும்பங்களில் முதல் தலைமுறை பள்ளி கல்வி, கல்லூரி செல்கின்றனர். சிலர் கல்லூரி முடித்து வேலை தேடுபவர்களாக இருக்கின்றனர். இச்சூழலில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வது, சிறையில் அடைப்பது அவர்களது சமூக முன்னேற்றத்தை பின்னுக்கு இழுப்பதாக அமையும். ஒவ்வொரு இளைஞர்களுக்கும் பின்னால் ஒரு குடும்பம் இருக்கிறது. அடுத்த தலைமுறைகள் இருக்கிறது. வழக்குகள் போட்டு அவர்களை முடக்குவது ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட சமூகத்தையும் முடக்குவது போன்றதாகும். எனவே அரசியல் அழுத்தங்களுக்காக பாதிக்கப்பட்ட தரப்பான ஆதிதிராவிட சமூகத்தினர் மீது போடப்பட்ட வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

-> சாதிய முரண்களை கூர் தீட்டி வன்முறைகளை கட்டவிழ்த்துவிடும் பிற்போக்கு சக்திகளை அடையாளம் கண்டு அவர்களின் சதிச்செயலை பற்றி அம்மக்களிடம் புரிதலை ஏற்படுத்த வேண்டும். இதை அந்த சமூகத்தில் இருக்கும் சனநாயக முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞர்கள் செய்தால் மட்டுமே சாத்தியம்.

-> இருதரப்பு பெரியவர்கள் மற்றும் இளைஞர்களை கூட்டி நல்லிணக்கத்தை உறுதி செய்யும் வகையில் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

உழைக்கும் மக்களைச் சாதி ஒழிப்பின் அடிப்படையில் ஒன்றுபடுத்துவோம் - தமிழ்த்தேசிய போராளி தோழர் தமிழரசன்

- சுசிந்திரன் ப