பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது. வழக்கைத் தொடர்ந்தவர் சூரிய பிரகாஷ் என்ற இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணி பொதுச் செயலாளர். பக்ரீத் பண்டிகையை ஒட்டி மாடுகள் வெட்டப்படுவதைத் தடுக்கும் நோக்கத்தோடு தொடரப்பட்ட வழக்கு இது. பொது இடங்களில் ஆடுகளை வெட்டலாம்; கோழிகளை வெட்டலாம்; ஆனால் மாடுகளை மட்டும் வெட்டக்கூடாது என்பதற்கு என்ன காரணம்? மதம் சார்ந்த பார்வைதான்! உலகம் முழுதும் மக்கள் விரும்பி சாப்பிடும் உணவு மாட்டுக்கறி. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மாடு வெட்டுவதற்கோ; மாட்டுக்கறி உண்பதற்கோ இதுவரை எந்தத் தடையும் இல்லை.

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் மாடு வெட்டத் தடைச் சட்டங்களை கொண்டு வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில் இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார். ஆனால் அப்போது நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில் சட்டத்தைத் திரும்பப் பெற்றார். 1976-ஆம் ஆண்டு பசுவதைத் தடை அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகவும், 2020-ல் உயர்நீதிமன்றம் பொதுஇடங்களில் மாடுகளை வெட்ட தடை செய்ததாகவும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் நடைமுறையில் தமிழ்நாட்டில் எந்தத் தடையும் இல்லாமல் மாடுகள் வெட்டப்பட்டே வருகின்றன.

உணவு உரிமையில் மதத்தை திணிப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலே ஆகும். பசுவின் புனித கோட்பாடு மிக பிற்காலத்தில் உருவானது. வேதத்தில் குறிப்பாக "ரிக்’ வேதத்தில் பார்ப்பனர்கள் மாட்டுக்கறி மட்டுமல்ல; குதிரைக்கறியையும் சுவைத்து உண்டது குறிப்பிடப்பட்டுள்ளது. யாகத்தில் பொசுக்கி கொல்லப்பட்ட பசுவின் ஒவ்வொரு உறுப்பையும் யார் யாருக்கு பங்கிட வேண்டும் என்று “ஐநரேய ப்ராஹ்த்மணம்” உபநிஷத்து (வேதங்களுக்கு தந்த விளக்க உரைகள்). கூறுகிறது. வேதங்களுக்கான நீதி நூல்கள் என்று கூறப்படும் மனுஸ்மிருதி பசு மாமிசம் சாப்பிடுவதை ஆதரிக்கிறது. ( 27-லிருந்து 31வது ஸ்லோகம் வரை). வால்மீகி ராமாயணம் ராமனும் முனிவர்களும் பசுமாமிசம் சாப்பிட்டதை விளக்குகிறது. பார்ப்பனர்களின் அரசியல் தலைவரான ராஜகோபாலாச்சாரி என்னும் ராஜாஜி எழுதிய ராமாயணத்திலும் ராமன் பசுமாட்டுக் கறியை சாப்பிட்டதை சுட்டிக் காட்டுகின்றார். இறந்து போன காஞ்சி மடத்தின் மூத்த சங்கராச்சாரியான சந்திரசேகரேந்திர சரஸ்வதி யாகத்தில் பசுக்கள் எரிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டு அதில் தவறு இல்லை என்று கூறி இருக்கிறார்.

"தர்மத்துக்காகச் செய்ய வேண்டியது, எப்படி யிருந்தாலும் பண்ண வேண்டும்; ஹிம்ஸையென்றும் பார்க்கக் கூடாது. யுத்தத்தில் சத்ருவதம் பண்ணுவதை ஸகல ராஜ நீதிப் புஸ்தகங்களும் ஒப்புக் கொள்ள வில்லையா? கொலைகாரனுக்குத் தூக்கு தண்ட னையைச் சட்ட புஸ்தகமே விதிக்கிறதல்லவா? அப்ப லோகத்தில் பல பேருக்குப் புரிய ஷேமத்தைத் தேவர்கள் செய்ய வேண்டுமென்ற உசந்த நோக்கத்தில் அவர்களுக்குப் பசு ஹோமம் பண்ணுவதிலும் தப்பேயில்லை." - (தெய்வத்தின் குரல் இரண்டாம் பாகம்).

மாட்டுக்கறி உணவை புனிதமாகவும் யாகத்திற்கு உரியதாகவும் கருதிய பார்ப்பனர்கள் பிறகு தங்கள் கருத்தை இப்படி மாற்றிக் கொண்டதற்கு என்ன காரணம்?

புத்த மார்க்கத்தின் பேரெழுச்சிதான் அதற்கு முக்கிய காரணம். யாகங்களில் கால்நடைகளைப் பலியிட்டு விவசாயத்திற்கு நெருக்கடியை உருவாக்குவதை புத்தர் கடுமையாக எதிர்த்தார். புத்த மார்க்கத்திற்கு மக்களின் பேராதவு கிடைத்தது. பிறகு புத்த மார்க்கத்தில் ஊடுருவி அதை சிதைத்த பார்ப்பனர்கள் மாடுகளுக்கு புனித அடையாளம் தந்தனர். மாட்டுக்கறி சாப்பிடும் பழக்கத்திலிருந்து மீள முடியாத நிலையில் அதன் சிறுநீரை கோமியம் என்றும் பாலை சிறந்த உணவாகவும் ஏற்றி போற்றத் தொடங்கினர் என்கிறார் அம்பேத்கர். பார்ப்பனரல்லாத உழைக்கும் இந்து மக்களின் உணவாக மாட்டுக்கறி இருக்கிறது. ஆனால் வேத, பார்ப்பனியத்திற்கு கட்டுப்பட்டு கிடக்க வேண்டியதே ‘சூத்திர,பஞ்சமர்’ என்ற பார்வையோடு தான் மாட்டுக்கறி உணவை பார்ப்பனர்கள் எதிர்த்து கொண்டு இருக்கிறார்கள்.

மதுரை உயர்நீதிமன்ற கிளையின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். மேல்முறையீடு செய்யும் என்று சிறுபான்மைத்துறை அமைச்சர் ஷாஜகான் கூறியிருப்பதை வரவேற்கிறோம். அது வெறும் பேச்சோடு நின்று விடக்கூடாது; செயல்படுத்த வேண்டும்.

- விடுதலை இராசேந்திரன்