விளையாட்டுப்  பிள்ளைகளின் விவசாயம் வீடு வந்து சேராது என்பது பழமொழி. அதுபோல தலித் மக்களின் போராட்டங்களும் ஏடுகளில் ஏறாது என்பது புதுமொழி போல.

dalit_fasting_620

ஆம்! நாமக்கல் அருகே உள்ள மொஞ்சனூர் கிராம அருந்ததிய மக்களின் சுடுகாட்டுப் பாதையை மீட்டுத் தரக் கோரி விடுதலை சிறுத்தைகளின் பட்டினிப் போராட்டம்  இன்றோடு ஏழாம் நாளைத் தொடுகிறது. பட்டினிப் போராட்டம் எதற்கு என்றால் எங்கள் வெள்ளாமையை பெருக்கிக் கொள்ள அல்ல, நாங்கள் வீடு வாசலை கட்டிக் கொண்டு குளிர்சாதன அறையில் ஓய்வு எடுக்க அல்ல, நாங்கள் இறந்துவிட்டால் எங்களை நல்லடக்கம் செய்ய சுடுகாட்டுக்கு செல்ல ஒரு பாதை வேண்டும். அதுவும் உங்கள் சொந்த இடத்தைத் தரவேண்டாம். அம்மக்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தை  சுடுகாடாக பயன்படுத்தி, சுடுகாட்டிற்குச் செல்ல மூன்று அடி பொதுப்பாதையை பயன்படுத்தி வந்தனர். ஆனால் திடீரென்று நான்கு தலைமுறைக்குப் பிறகு ராமசாமி கவுண்டர் என்பவர் அந்த பாதைக்கு போலி பட்டா வாங்கி வேலியும் அமைத்துவிட்டார். இதனால் சுடுகாட்டிற்குச் செல்ல இரண்டு கிலோமீட்டர் சுற்றிச் செல்லும் அவலம் அங்கே உள்ளது.

கடந்த பனிரெண்டு ஆண்டுகளாக பாதையை மீட்டுத்தரக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தியும் மாவட்ட நிர்வாகம் செவி சாய்க்கவில்லை. மேலும் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி விடுதலை சிறுத்தைகளின் கட்சித்தலைவர் தொல் திருமாவளவன் ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதையும் பொருட்படுத்தாத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும், ராமசாமி கவுண்டரின் பட்டாவை ரத்து செய்து சுடுகாட்டுப் பாதையை மீட்டுத் தரக் கோரியும் 25க்கும் மேற்ப்பட்ட பெண்கள் உட்பட 100க்கும் மேற்ப்பட்ட மக்கள் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அதில்  22 பேர் தொடர் பட்டினிப்போர் இருந்துவருகின்றனர். இதில் அருள், கனகராஜ், ரமேஷ் ஆகியோர் ஆபத்தான நிலையில் சேலம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாநகர், புறநகர் விடுதலைச் சிறுத்தைகள் செயலாளர் பார்வேந்தன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நாமக்கல் மறியல் போராட்டத்தில் 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தப் போராட்டம் இதுவரை எந்த ஏடுகளிலும் வரவில்லை; எந்த தொலைகாட்சிச் செய்திகளிலும் வரவில்லை.

கார்ப்பரேட் நிறுவனங்களின் கைப்பாவையாக, ஆர்.எஸ்.எஸ்ஸின் அடிமையாக செயல்பட்ட அன்ன‌ அசாரேவுக்கு வெளிச்சம் கொடுத்த ஊடகங்கள், அவரை ஹீரோ போல் சித்தரித்த பத்திரிக்கைகள் ஏன் இதை ஒரு செய்தியாகக் கூட பதிவு செய்யவில்லை? தனுஷுக்கும், கமலஹாசன் பொண்ணுக்கும் கள்ளக்காதல் என்று எழுதியவர்கள், ஐஸ்வர்யாராய்க்கு பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று கருத்துக் கணிப்பு போட்டவர்கள், பிரபுதேவா, நயன்தாரா கள்ளக்காதலை நல்ல காதலாக மாற்ற பாடுபட்டவர்கள், நமீதாவுக்கு எப்போது கல்யாணம் என்று கவலைப்பட்டவர்கள் ஏன் இந்த போராட்டத்தைப் பற்றி பேசவில்லை, எழுதவில்லை. சச்சின் நூறாவது சதம் அடிப்பாரா? அடிப்பாரா? என்று தினம் தினம் எழுதியவர்கள் ஏன் இதைப்பற்றி எழுதவில்லை. ஆக! எங்கே இருக்கிறது நடுநிலை. அம்பேத்கர் கார்ட்டூன் விவகாரத்தில் கருத்துரிமையின் குரல்வளை நெரிக்கப்படுகிறது என்று கண்ணீர் விட்டவர்கள் எல்லாம் இன்று டாப்சி பின்னால் டிக்கெட் கேட்டு நிற்கிறார்கள். ஒன்னும் இல்லாத நடிகர்களை ஒசத்தியாகப் பேசும் ஊடகங்கள் எல்லாம் உண்மையைக் கண்டு ஊமையாக கிடப்பதால் தான் நாட்டில் இன்னமும் கடைக்கோடி தமிழன் கூட தன்னை புதைக்க ஆறடி இடம் வேண்டும் என்று போராடிக் கொண்டு இருக்கிறான்.

ஊடகங்கள் தான் மவுனித்துக் கிடக்கின்றன என்றால், தாழ்த்தப்பட்டவர்களின் ஓட்டை பங்கு போடத் துடிக்கும் அரசியல்வாதிகளின் கண்களுக்கும், தமிழ்த் தேசிய சிந்தனையாளர்களின் கண்களுக்கும், திண்ணியத்தில் நடந்த தலித் ஒருவரின் வாயில் மலம் திணித்த கொடுமை எப்படி தெரியாமல் போனதோ, கோயம்புத்தூர் கவுண்டம்பட்டியில் சங்கர் என்ற தலித் வாலிபரின் வாயில் சிறுநீர் கழித்த கொடுமை எப்படி தெரியாமல் போனதோ, பரமக்குடியில் நடந்த அரச பயங்கரவாதம்  எப்படி தெரியாமல் போனதோ, விழுப்புரம் வானூரில் கல்குவாரியில் தொழிலாளியை மலம் தின்ன வைத்து அதை அவரது மனைவியைப் பார்க்க வைத்து செல் போனில் படம் பிடித்த அவலமும் எப்படி தெரியாமல் போனதோ, விழுப்புரத்தில் பழங்குடியினப் பெண்களை அரசு அதிகாரிகள் கற்பழித்த கொடுமை எப்படி தெரியாமல் போனதோ, அப்படியே இந்தப் பிரச்சனையும் தெரியாமலே போனது. திண்ணியத்தில் நடந்த கொடுமையை கண்டித்திருந்தால் வானூரில் நடந்திருக்குமா? வாச்சாத்திக் கொடுமையை கண்டித்திருந்தால் விழுப்புரத்தில் நடந்திருக்குமா? திருவள்ளூரில் ஆற்றைக் கடந்து பிணத்தை எரிக்கும் கொடுமையைக் கண்டித்திருந்தால் இது நடந்திருக்குமா?

தன்னை தமிழ்த் தேசியப் போராளி என்றும், தமிழ்த் தேசிய சிந்தனையாளர் என்றும் கூறிக்கொள்ளும் தலைவ‌ர்கள் முதலில் ஒன்றை விளக்க வேண்டும். தமிழர் என்றால் யார் என்பதை விளக்க வேண்டும். இலங்கையில் தமிழனுக்குப் பிரச்சனை என்றால் தமிழகத் தலைவர்கள் கொந்தளிக்கிறார்கள்!!! அப்போ தமிழ்நாட்டில் சாகும், கொடுமைக்கு ஆளாகும் தலித்துகள் யார் என்பதை விளக்க வேண்டும். ஆதிக்க சாதி வெறியர்களினால் தலித்துகள் செத்தால் துடிக்காத உங்கள் உணர்வு இலங்கையில் செத்தால்  மட்டும் துடிப்பது ஏன் என்பதை விளக்க வேண்டும். அப்படியானால் உங்கள் உணர்வு உண்மைதானா? தமிழ்நாட்டில் நடக்கும் கொடுமைகளை தட்டிக் கேட்க துணிவில்லாத, மனமில்லாத ஆதிக்க சாதிவெறியர்கள் தான் சாதியத்துக்கு எதிராகவும், தமிழர் விடுதலைக்கு ஆதரவாகவும் களமாடிவரும் விடுதலை சிறுத்தைகளைப் பற்றி அவதூறு பரப்புகிறார்கள்.

பால்விலை உயர்ந்தாலும், பேருந்து கட்டணம் உயர்ந்தாலும், ஈழத்தமிழர் பிரச்சனையானாலும், மூன்று தமிழர்களின் உயிரைக் காக்க வேண்டுமானாலும் முல்லைப் பெரியார் பிரச்சனையானாலும் வீதியில் இறங்கி உயிரைத் துச்சமென மதித்து போராடி உயிர்துறப்பவர்கள் தலித்துகள். ஆனால், அவர்கள் வீடுகள் கொளுத்தப்பட்டாலும், அவர்களை அரசே சுட்டுக்கொன்றாலும், அந்தப் பெண்களை அரசு அதிகாரிகள் பாலியல் பலாத்காரம் செய்தாலும், அதிகார வர்க்கம் அவர்கள் வாயில் மலத்தை திணித்தாலும், சாதி வெறியர்கள் அவர்கள் வாயில் சிறுநீர் கழித்தாலும் தட்டிக் கேட்க மனமில்லாதவர்கள், அந்த மக்களுக்காக ஒரு துண்டு காகிதத்தையோ, ஒரு துளி பேனா மையையோ, ஒரு மணித்துளியையோ செலவழிக்காதவர்கள் தான் தன்னை தமிழ் ஆர்வலர்கள் என்றும் தமிழ்த் தேசிய சிந்தனையாளர்கள் என்றும் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். ஒவ்வொரு முறை தலித்துகளுக்கு எதிராக வன்கொடுமை நடக்கும் போதெல்லாம் வேறு ஒரு பிரச்சனையைப் பேசி திசை திருப்புவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

இப்போது கூட மொஞ்சனூர் கிராம அருந்ததிய மக்களின் சுடுகாட்டுப் பாதையை மீட்டுத் தரக்கோரி விடுதலை சிறுத்தைகளின் பட்டினிப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. ஆனால் இவர்கள் எதைப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். கருணாநிதியால் டெசோ மாநாடு நடத்த முடியாது என்கிறார்கள்! நாடகம் ஆடுவதாக சொல்கிறார்கள்!! இப்போது தனி ஈழம் தீர்மானம் ஏன் இல்லை என்று கேட்கிறார்கள்!! அட என்னையா! நாடகம் ஆடுவதாக சொன்ன ஒருவரிடம் ஏன் நியாயத்தை எதிர்பார்க்கிறீர்கள்? தேவையில்லாத ஒன்றைப் பேசி பூர்வீகத் தமிழர்களின், ஆதித் தமிழர்களின் போராட்டங்களை மழுங்கடிக்கின்றனர். மொஞ்சனூர் கிராம அருந்ததிய மக்களின் சுடுகாட்டுப் பாதை பிரச்சனையைப் பற்றி பேச வக்கில்லாதவர்கள் தான் டெசோ பற்றி பேசிக்கொண்டு காலத்தை வீணடித்துக் கொண்டு இருக்கின்றனர்.

மொஞ்சனூர் கிராம அருந்ததிய மக்களின் சுடுகாட்டுப் பாதை பிரச்சனையைப் பற்றி பேசினால் ஜெயலலிதா உங்கள் சொத்துக்களை எல்லாம் பிடுங்கிக் கொள்வாரா? இல்லை உங்களை அரசியலில் இருந்து விரட்டி அடித்து விடுவாரா? ஏன் வாய் திறந்தால் என்ன? வந்து ஒரு ஆதரவை சொன்னால் என்ன? இலங்கைத் தமிழன், அமெரிக்கத் தமிழன் என்று பேசிப் பேசியே ஆதித்தமிழர்களை அழித்து விடாதீர்கள். மானமுள்ள, உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனும் இனி ஒரு முள்ளிவாய்க்கால் சம்பவம் நிகழக்கூடாது என்று விரும்புவான். ஆனால் தன்னை தமிழ்த் தேசிய சிந்தனையாளர்கள் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் இவர்கள் தமிழ்நாட்டில் தினம் அரங்கேறும் முள்ளிவாய்க்கால் கொடுமைகளைப் பற்றி வாய் திறப்பதில்லையே ஏன்? தலித்துகளை தமிழர்களாக அல்ல, மனிதர்களாகக் கூட பாவிக்காத இவர்களிடம் மனிதநேயம் தான் இருக்கிறதா? நாமக்கல், தமிழர் பூமியில் ஒன்று தானே? அங்கு வாழும் அருந்ததிய மக்களும் தமிழர்கள் தானே? அவர்களுக்காக நீங்கள் குரல் கொடுத்தால் கூடவா தீட்டு ஒட்டிக் கொள்ளும்??

தமிழினத் தலைவர்களாகவும், தமிழ்த் தேசியவாதிகளாகவும் தங்களை கூறிக்கொள்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். சேரித் தமிழனுக்கு விடுதலை இல்லாமல், ஊர்த் தமிழனுக்கு விடுதலை கிடைக்காது. பறையன் பட்டத்தை ஒழிக்காமல் சூத்திரப் பட்டத்தை ஒழிக்க முடியாது.

Comments

10 comments

10
பெரியார் குயில்
பாயும் புலி அங்கானுார் அவர்களுக்கு, ஈழத்தின் இனவிடுதலைப் போராட்டத்தையும், தமிழகத்தின் சாதி பிரச்சனையும் முடிச்சுப்போடுவதை முதலில் நிறுத்துங்கள்! தமிழ் தேசிய வாதிகளை வாங்கு வாங்கு என்று வாங்குவது ஏன் என்று புரிகிறது! ஆனால், திராவிட ஆட்சியில் தமிழ் நாட்டில் நடந்த அனைத்து சாதி கலவரங்களின் மூலகாரணமாகவும், மூலமாகவும், 23-ஆம் புலிகேசி போல் சண்டை போட ஸ்டேடியம் கட்டித்தரவும் தயாராக உள்ள திராவிடத்தின் சாதி அரசியலைப் பற்றி ஏன் வாய் திறக்கவில்லை!

”தமிழரிடையே உள்ள சாதிகளை கூர் தீட்டி, ஒன்றோடு ஒன்றை மோதவிட்டு, பதவிக்குளிர் காயும் திராவிடத்தின் இரகசியத்திட்டத்தை ஏன் பேச மறுக்கிறீர்கள்”

தமிழ்தேசியவாதிகள் அப்படிதான்! அவர்கள் எண்ணம் சாதியத்தை பற்றி ஒரு சாப்ட் அணுகுமுறை மட்டுமே இருக்கும்.

ஆனால், சாதியை அழிக்கப்பிறந்த கொள்கை அரசியல்வாதிகளின் நிலையையே விமர்சிக்க வேண்டும். திண்ணியக்கொடுமை யாருடைய ஆட்சிகாலத்தில் நடந்தது??

கோவை கவுண்டம்பட்டி பிரச்சனை யார் ஆட்சியில் நடந்தது?

உடந்தையாக இருந்த, நடவடிக்கை எடுக்காத திராவிடம் சரி! கண்டன அறிக்கை (மட்டுமே)விடும் தமிழ்தேசியம் தவறு!

மேலும், ஆதித்தமிழர்கள் யாருடைய தலைமையில் இணைகிறார்கள்! எத்தனை எத்தனை அமைப்பு! உங்கள் தலைவர் திருமாவளவன் மதுரையில் இருக்க, அருந்ததியர் மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் புகுந்து அடித்த சம்பவத்தை என்ன சொல்ல!!

அங்கனுார் மறுபடியும் சொல்கிறோம் தயவுசெய்து ஈழப்பிரச்சனையை, தமிழக சாதிப்பிரச்சனையோடு சம்பந்தப்படுத்தாதீர்!

விவாதம் வேறு களத்திற்கு அழைத்துச் செல்லும் அது யாரும் பயனும் தராது.

(குறிப்பு- கீற்று வழக்கம்போல் வெட்டவேண்டிய பகுதியை வெட்டி வெளியிடலாம்!)
பெரியார் குயில் அவர்களே ! எல்லா இடத்திலும் எல்லோரைப்பற்ற்யும் பேசிக்கொண்டு இருக்க முடியாது. திராவிட கட்சிகளைப் பற்றி நான் வாய் திறக்கவில்லை என்ற உங்கள் குற்றசாட்டு ஆற்றாமையின் வெளிப்பாடு. இதே வலைப்பகுதியில் சமகால திராவிடம் இந்துமயமாகிவிட்டதா? என்ற தலைப்பில் வெளிவந்த என் கட்டுரையை படியுங்கள். ஈழப் பிரச்சனையில் சாதிப் பிரச்சனையை முடிச்சிப் போடாதீர்கள் என்ற உங்கள் கருத்து அறியாமையின் வெளிப்பாடு. சாதிகளற்ற சமுதாயமாக ஈழம் அமைய வேண்டும் என்பதே தமிழீழ தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் நோக்கம். மேலும் தமிழ்தேசியம் என்பது வெளிநாடுகளில் வாழும் தமிழர்களை மட்டும் உள்ளடக்கியது இல்லை. தமிழ்நாடும், தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களையும் உள்ளடங்கிய ஒன்றுதான் தமிழ்தேசியம் என்பதை நினைவுபடுத்துகிறேன்.
ஷாலி
தமிழ்நாட்டுத்தமிழனுக்கு ஆயிரம் பிரச்சினைகள்.அதயெல்லாம் விட்டுவிட்டு “ கிடக்கிரதெல்லாம் கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனையில் வை!” என்பதுபோல் செத்த பிணத்தை சிதையில் வைக்க வழியில்லை என்ற அங்கநூராரின் ஆவேசம் புரிகிறது.
திராவிடக்காரர்கள் ஆட்சியில் இதற்க்கு விடிவில்லை என்பதால்தான் அண்ணன் களம் இறங்கி உள்ளார்.
மொஞ்சநூர் கிராம ராமசாமி கவுண்டர் தமிழரா? அல்லது திராவிடரா? தெரியவில்லை.தமிழர் என்றால் உடனே செந்தமிழ் சீமானுக்கு சொல்லி அனுப்பி ராமசாமி கவுண்டருக்கு “நாம் தமிழர்” உறுப்பினர் கார்டு போட்டுவிட்டால் சாதிப்பிரட்சினை சட்டென்று ஓடிவிடாதா!சகல தமிழ் பிணமும் தாராளமாக போய்வருமே! தமிழர்கள் அனைவரும் செந்தமிழ் சீமான் கையால் “நாம் தமிழர்” ஞானஸ்நானம் வாங்கி விட்டால் அண்ணனுக்குப் பயந்து சாதிப்பேய்கள் சட்டென்று ஓடிடாதா!
அங்கநூறார் அவர்களே! தமிழர்கள் முதலில் மனிதர்களாக,மாறாதவரை மனிதனை, மனிதனாக பார்க்காததுவரை சாதியிலிருந்து தப்புவது சாத்தியமில்லை.
Deva Sundara Dhas
சிர்சும்லொசுடிஒன் என்றொரு ஆங்கில வார்த்தை உண்டு. நேரடியாய் சொல்லாமல் சுற்றி வளைப்பது எண்டு பொருள். அதில் இப்போதைய திடீர் தமிழ் தேசிய பாசிஸ்டுகள் கைதேர்ந்து விட்டார்கள் . எதற்கும் நேரடியாக பதில் சொல்லாமல் சுற்றி வளைத்து திசை திருப்புகிறார்கள். ஈழ தமிழர்களின் உரிமைக்குறித்து கவலைகொள்வோர் தலித் தமிழர்களின் பிரச்சனைகளில் பாராமுகம் காட்டுவது ஏன் என்ற கேள்விக்கு நேரடி பதில் இல்லை. இந்த கேள்வி மிகவும் தர்க்கபூர்வமானதே. திராவிட அரசியல் சாதிகளுக்கு இடையேயான முரண்களை கூர்தீட்டி பதவிக்குளிர் காய்கிரதாம். அருந்ததியர்களின் பிரச்சனைக்காக வி.சி க்களின் போராட்டம் பற்றி பேசும்போது அருந்ததியர் இயக்கங்கள் - சிறுத்தைகள் இடையில் முன்னர் நடந்ததாக ஒரு மோதலை நினைவூட்டுவது தாழ்த்தப்பட்ட மக்களை பிரித்தாளும் நோக்கோடு செய்யப்படுவது ஆகாதா ? ஈழம் என்றால் 'ஹர்ட்' ஆகவும் தாழ்தப்பட்டவர் என்றால் 'சொஃப்ட்' ஆகவும் அணுகுவதற்கு ஏதேனும் நியாயம் உண்டா ? இந்த பிரச்சனையில் தமிழ் தேசியர்கள் உண்ணாவிரதம் எல்லாம் இருந்து ஆதரவு அளிக்க வேண்டியது இல்லை. 'சொஃப்ட்' ஆக ஒரு அறிக்கை 'சொஃப்ட்' ஆக நேரில் சந்தித்து ஆதரவு என்றாவது செய்யவில்லை என்பது கண்டனத்துக்கு உரியது.
viyasan
திருமாவளவன் இன்று திராவிடர் பாசறையில் தானிருக்கிறார். ஏன் எந்த திராவிடத் தலைவரும் இதைத் தட்டிக் கேட்கவில்லை, தமது ஆதரவைத் திருமாவளவனுக்குத் தெரிவிக்கவில்லை. பெரியாரின் பிரதமசீடராவது இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கலாமல்லவா? தமிழ்நாட்டில் பிழைக்க வந்து, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை தமது கையில் வைத்திருக்கும் திராவிடர்களான மலையாளிகளும், தெலுங்கர்களும், கன்னடர்களும் அவர்களின் வாரிசுகளுமாவது இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கலாமல்லவா? ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்படுவதை வரவேற்றுக் கொண்டு, பலத்தீனர்களுக்குப் பல்லு விழுந்தால் கூட ஆர்ப்பாட்டம் செய்து கொண்டே, தமிழ்நாட்டில் மட்டும், தாமும் தமிழர்கள் என்று அடம்பிடிக்கும் முஸ்லீம்களாவது இவர்களுக்காக மூச்சு விட்டார்களா? தமிழர்கள் எல்லோரும், நாம் தமிழர்களாக இணைய முனைந்தால் குய்யோ, முறையோ, நாங்களெல்லோரும் திராவிடர்கள், எங்களைப் பிரிப்பது பாசிசம். தலித்துக்கள் கொடுமைப் படுத்தப்படும் அநியாயத்தைப் பார்த்தீர்களா என்றெல்லாம் பசப்பு வார்த்தை பேசித் தலித்துக்களுக்கு ஆதரவளிக்கும் தமிழரல்லாதவர்கள், தமிழன் சாதி வெறியினால் ஆளுக்காள் அடிபட்டுக் கொள்ளும் போது மட்டும், வாய்மூடி மெளனம் சாதிப்பதேன். அவர்களும் தலித்துக்களின் நியாயமான போராட்டங்களில் பங்குபற்றித் தமது ஆதரவை தெரிவிக்கவில்லையே, அப்படியென்றால், இதிலிருந்து என்ன தெரிகிறது, தமிழ்நாட்டில் வாழும் தமிழரல்லாதவர்களும், திராவிட வீரர்களும் தமிழர்கள் ஒன்றுபடுவதைத் தடுப்பதற்கு ஒரு ஆயுதமாகத் தான் தலித்துகளைப் பாவிப்பார்களே தவிர, தலித்துக்களின் உரிமைப் போராட்டத்தில் அவர்களுக்கு அக்கறையுள்ளது போல் காட்டிக் கொள்வதெல்லாம் வெறும் பம்மாத்து தான்.

தமிழர்களைச் சாதிப்பிளவுகளை மறந்து விட்டு, முதலில் தமிழர்களாவோம் என சீமான் அழைத்தற்கு, சாதிக் கொடுமைகளுக்கெல்லாம் சீமான் தான் காரணம் என்பது போல், பத்தி பத்தியா எழுதிக் கொட்டிய திராவிடத் திலகங்களெல்லாம் இந்தக் கொடுமையைப் பற்றி ஒரு வரி கூட கீற்றில் எழுதவில்லையே. ஏனென்றால் இவையெல்லாம் திராவிட ஆட்சியின் கீழ் நடப்பதாலா?
பெரியார் குயில்
அங்கனுார் மற்றும் தேவ சுந்தர தாஸ் ஆகியோருக்கு அன்பு வேண்டுகோள்! நேரத்தை வீணடிக்க விரும்புகிறீர்கள்! ஆகவே, தமிழ் தேசியத்தில் சாதி பிரச்சனை-ஈழமும், தமிழகமும் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வரையுங்கள்!

அப்போது பல உண்மைகளை தாங்களே எழுதி விடுவீர்கள்!
T.Sumathi
தமிழ் தேசியவாதிகள் சாதியை கண்டுகொள்ளவில்லை என்றால் அதை நேரடியாக விமர்சிக்க வேண்டும். அதை ஈழப்பிரச்சனையோடு தொடர்பு படுத்துவது முட்டாள்தனம். தமிழ் சமூகத்துக்கு எதிரியான சோனியாவின் காலில் கிடக்கும் நீங்கள் மற்றவர்களை விமர்சிக்கும் தகுதி இல்லை.
க.குப்புசாமி
அங்கநூர் வேலு அவர்களே இதே நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம் வடகரையத்தூர் கிராமம் ஜேடர்பாளையத்தில் உங்கள் கட்சிக்கு நாயாக உழைத்த ஆசீர்வாதம் என்பவரது வீட்டில் ஆதிக்க சக்திகள் தங்களக்கு அடிமையாய் வேலை செய்ய மறுத்த ஒரே காரணத்திற்காக ஆசீர்வாதம் குடியிருக்கும் வீட்டை காலி செய்ய முயற்ச்சிகள் நடந்தபோது உங்கள் கட்சி இடம் முறையிட்டபோது என்ன செய்தீர்கள் ? உங்களக்கு செலவு செய்ய வைத்ததுதான் மிச்சம் இப்போது அவர்களின் வீட்டையே இடித்து தரைமட்டம் ஆகிவிட்டது உங்களுக்கு தெரியாதா ? எங்கே சென்றது உங்கள் தலித் பாசம் ? சாதி சகதியில் இருந்து கொண்டு ஒருவன் எப்படி சாதியை ஒழிக்க முடியும் ஒருவனுக்கு ஒரு பிரச்சனை என்றால் அந்த பிரச்சனையை மட்டும் பேசி போராடுங்கள் நம்மை நாமே ஏன்? தாழ்திக்கொள்ளவேண்டும் சலுகைககவும் பதவிக்காகவும் சாதியை பயன்படுத்தாதீர்கள் உரிமை கேட்டு போராடுங்கள் தமிழ்தேசியவாதிகளை கொச்சைப்படுத்ததிர்கள் வாழ்த்துக்கள்
padmanaban
பாலு போன்ற அன்பர்கள் ஒன்றை புரிந்துகொள்ளவும்,தமிழ் தேசியத்தை பற்றி பேசுபவர்கள் சாதி மத பிரச்சனைகளை பெரிதாக எடுத்துகொள்ள மாட்டார்கள். சில சாதி தலைவர்கள் தாங்கள் நடத்தும் கட்சிக்கோ சங்கத்திற்கோ தமிழர் என்ற அடையாளத்தில் தமிழர்கள் ஒன்று கூடுவதால் தங்கள் கட்சியை சார்ந்த நபர்கள் வெளியில் சென்றுவிடுவார்கள் என்ற அச்சத்தில் தமிழகத்தில் வேகமாக இப்பொழுது சாதிய முரண்பாடுகளை தூண்டிவிடுகிறார்கள் .ஈழம் பிரச்னை ஒட்டுமொத்த தமிழர்களுக்கான பிரச்னை .அதை யாரும் கொச்சை படுத்தவேண்டாம்.மக்கள் பிரச்சனைகளில் நாம் உளமார ஈடுபட்டால் மக்கள் நம்மை பாராட்டுவார்கள் .உண்மையான உணர்வோடு தமிழர்கள் எல்லோருக்கும் போராடுவோம் கை கொடுபோம்
விசிக செந்தமிழ்பாண்டியன்
தற்போது நடக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு என்னவோ அதை யாரும் இங்கு பேசுவதில்லை, மாறாக விசிக வை மட்டம் தட்டிபேசுவதை சிலர் தங்களது சமூக தொண்டை போல் செய்கிறார்கள்

"காய்ச்ச மரம் தான் கல்லடி படும் என்பார்கள்"

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.