1
தமிழ்நாட்டில் கடந்த ஆறேழு ஆண்டுகளில் தலித் அரசியல் மற்றும் தலித் இலக்கியத் தளங்களில் நிகழ்ந்த முக்கியமாற்றங்களில் ஒன்றாக தலித் மக்களும், தலித் இலக்கியக்காரர்களும் தத்தம் உட்சாதி ரீதியாக வெளிப் படையாக திரளத்தொடங்கியதை குறிப்பிடலாம். அத்திரட்சி ஏறக்குறைய முழுமை பெற்றுவிட்ட சூழ்நிலையே இன்று நிலவுகிறது எனலாம்.
இலக்கிய வெளியை பொறுத்த மட்டிலாவது இத்தகைய திரட்சியைத் துரிதப்படுத்திய காரணிகளில் ஒன்றாக அயோத்திதாசர் திகழ்ந்தார் என்று உறுதியாகச் சொல்ல முடியும். இந்த உண்மையை கருத்தில் கொண்டு அயோத்திதாசர் குறித்த விவாதத்தைத் தொடர்வது பயனுள்ள ஒன்றாக இருக்கும்.
கவிதாசரண் ஜுலை 2005 இதழில் பொ. வேல்சாமி அயோத்திதாசர் குறித்த கட்டுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். “இன்று சிலர் அயோத்தி தாசரை அருந்ததியர்களுக்கு தேவேந்திர குலவேளாளருக்கு மற்றும் பல சிதறிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விரோதியைப் போல காட்ட முயல்கின்றனர். இம்முயற்சி அவரை உள்வாங்கிக் கொள்ளும் திராணியற்று தலித் ஒருங்கிணைவை பின்னப்படுத்திக்கொள்ளவே வழிவகுக்கும். “அயோத்திதாசர், பெரியார், அம்பேத்கர் போன்றவர்களை அவர்களுடைய விரிவான சிந்தனைத் தளத்திற்குள் வைத்துப்பார்ப்பது தான் ஆக்கப்பூர்வ மானதாகும். அதை விடுத்து இன்றைய அரசியல் சார்பில் நின்று தங்களுடைய விருப்பு வெறுப்புகளுக்குச் சாதகமாகப் பலிகடா ஆக்குவது ஒடுக்கப்பட்டவர்களின் நலனுக்கு உகந்ததாகமா?’’
இக்கட்டுரை விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசியதின் கட்டுரை வடிவம் என்பது குறிப்பிடத்தக்கது.
அயோத்திதாசரை அருந்ததியர்களின் விரோதி போல காட்ட சிலர் முயல்கிறார்கள் என்ற வேல்சாமியின் குற்றச்சாட்டைப் பொறுத்தமட்டில் அயோத்திதாசர் மீதான விமர்சனங்களை முன்வைப்பது என்பதே அருந்ததியரின் விரோதியாக அவரை காட்ட வலிந்து செய்யும் முயற்சி எனப்புரிந்து கொள்வது தேவையற்ற ஒன்று.
ஏகப்பட்ட முரண்பாடுகளுடனும், இடைவெளிகளுடன் கூடிய அயோத்திதாசர் போன்றோரை உள்வாங்கிக் கொள்வதென்பது இத்தகைய விமர்சனங்களூடாகவும் அதைத்தொடர்ந்த உரையாடல்களினூடாகவும் தான் சாத்தியம். அத்தகைய உரையாடலுக்கு அயோத்திதாசர் மீதான விமர்சனங்களை வைத்தவர்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறார்கள். சொல்லப்போனால் அத்தகைய முயற்சிகளிலொன்றாய் கூட இக்கட்டுரையைப் பார்க்க முடியும்.
2
அயோத்திதாசர் தமிழ்ச்சூழலில் மீண்டும் வெளிப்பட துவங்கியது 1997 வாக்கில் என்று சொல்லலாம். இன்று அயோத்திதாசர் குறித்து குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் புத்தகங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இவற்றுள் முனவைர் டி. தர்மராஜன் எழுதிய நான் பூர்வபௌத்தன், ராஜ்கௌதமன் எழுதிய க. அயோத்திதாசர் ஆய்வுகள் ஆகிய நூல்களை மட்டும் இங்கு எடுத்துக் கொள்கிறேன். கூடுதல் துணையாக பேராசிரியர் அம்பேத்கர் பிரியன் எழுதிய பகுத்தறிவுப்பாட்டன் பண்டிதமணி, க. அயோத்திதாசர் வாழ்க்கை வரலாறு நூலையும் பயன்படுத்திக் கொள்கிறேன்.
புதிய தடம் இதழில் வெளியான எனது அயோத்திதாசர் குறித்த கட்டுரையில் நான் முன்வைத்த விமர்சனங்களை கீழ்க்கண்டவாறு தொகுத்துக் கொள்ளலாம்.
1. அயோத்திதாசர் அம்பேத்கரைப்போலின்றி தான் பிறந்த சாதி சார்ந்த சிந்தனையாளராகவே இருந்தார்.
2. பறையர் சாதி தவிர்த்த பிற தலித்சாதிகளில் பள்ளர் சாதியைக் குறித்து எதுவும் பேசாமல் மவுனம் காத்த அயோத்திதாசர் அருந்ததியர் உள்ளிட்ட இதர தலித்சாதிகளை இயல்பாகவே தாழ்ந்த சாதிகள் என்று கேவலப்படுத்தினார்.
3. பறையர்கள் தான் யதார்த்த பிராமணர்கள் என்று சொல்வதன் மூலம் ஒரு புதுவித பார்ப்பனீயச் சொல்லாடலை கட்டமைத்தார்.
அயோத்திதாசரை பறையர் தவிர்த்த இதர தலித் சாதிகள் உள்வாங்குவதற்கு இடைஞ்சலாய் இருக்கும் பகுதிகள் இவையே என்பதால், இப்பகுதி குறித்து மேற்கண்ட நூற்களில் வெளிப்பட்ட அல்லது வெளிப்படாமல் போன கருத்துக்களை தொகுத்து காண்பது தேவையான ஒன்றாகும்.
முதலாவதாக டி. தர்மராஜன் எழுதிய நான் பூர்வபௌத்தன் நூலை எடுத்துக் கொள்ளலாம். இந்நூல் அயோத்திதாசர் குறித்த எனது கட்டுரை வருவதற்கு முன்பே வெளிவந்து விட்டதால் என் கட்டுரை கவனப்படுத்தும் விஷயங்கள் குறித்த பதில்களை இந்நூலில் எதிர்பார்க்க முடியாதுதான் எனினும் சாதியம் குறித்த ஆய்வுகளிலும், விவாதங்களிலும் அதிக அக்கறை காட்டுபவராக அறியப்படும் இவர் இயல்பாகவே அயோத்திதாசரின் இத்தகைய பக்கங்கள் குறித்த விமர்சனங்களோடு வெளிப்பட்டிருக்க முடியும் என்றே தோன்றுகிறது. ஏனோ அத்தகைய நோக்கு நிலையிலிருந்து அயோத்திதாசரை அவர் ஆய்வுக்கு உள்ளாக்கவில்லை.
தலித் ஓர்மை மற்றும் அடித்தட்டு நோக்கிலிருந்து தமிழ்ச்சமூக வரலாற்றையும், தமிழ்த்தேசியத்தின் பின்னே ஒளிந்திருந்த உயர்சாதி அரசியலையும் கேள்விக்குள்ளாக்கும் இந்நூலில் அத்தகைய ஆய்வு இடம் பெறாதது ஒரு பெரிய குறையாகவே நோக்க வேண்டியிருக்கிறது.
ஏனைய தலித் சாதிகள் மீதான வன்முறையாய் வெளிப்படும் அயோத்தி தாசரின் சிந்தனைகளின் பலவீனமான பகுதியை மௌனமாய் கடந்து வரும் இவர் இன்னும் சில குழப்பமான பகுதிகளின் மீது வண்ணங்கலந்த ஒரு புனைவைக் கட்டமைக்கிறார்.
உதாரணத்துக்கு, அயோத்திதாசரின் சமணம் - பௌத்தம் குறித்த பார்வையை மதிப்பிடும் பகுதியைச் சொல்லாம்.
“நாம் பரவலாக நம்புவது போல் பௌத்தத் தையும், சமணத்தையும் வெவ்வேறு சமயங்கள் என்று எண்ணாது இரண்டையும் இணைத்து “தமிழ் பௌத்தம்’’ என்ற பெயரில் யோசிக்கும் அயோத்திதாசர் இதன்மூலம் பௌத்தம் என்ற ஒற்றை அடையாளத்தின் கீழ் விரிக்கக்கூடிய பரந்த பண்பாட்டு சிந்தனை உலகம் வியப்பூட்டுவதாக அமைகின்றது. சமணத்தையும் பௌத்தத்தையும் இணைத்து யோசிப்பதன் வாயிலாக உருவாகும் தமிழ் பௌத்தம் பிரம்மாண்டமாய் விரிகிறது.’’
“அதே போல் சமணம் பௌத்தம் என இரண்டும் வெவ்வேறு சமயங்கள்; தமிழகத்தில் விடாப்பிடியான வாதப்போர் நடத்திய மதங்கள் என்ற பொதுவான சிந்தனையை மறுத்து பௌத்தத்தின் துறவு நிலையே சமணம் - என்று சொல்லி பௌத்தத்தின் எல்லையை விரித்து வைதீக, பிராமணிய வேத சமயங்களுக்கு எதிரான ஆற்றல்களையெல்லாம் ஒன்றாய் திரட்டுகின்ற அயோத்திதாசரின் திட்டம் பிரமிப்பையே ஏற்படுத்துகிறது. (பக். 62, 63 நான் பூர்வ பௌத்தன்)
அவ்வளவு சிரமப்பட்டு பௌத்தத்துக்கும், சமணத்துக்கும் ஒட்டுப்போட மெனக்கிடும் பண்டிதருக்கு அருந்ததியர், பள்ளர் உள்ளிட்ட பூர்வ பௌத்தர்களை ஓரணியில் திரட்டும் ஒப்பீட்டளவில் எளிதான, நடைமுறை சாத்தியம் கூடிய உத்தியை ஏன் நினைத்து பார்க்க முடியவில்லை?
இது ஒரு புறமிருக்க அயோத்திதாசரின் தலைப்பாகையைச் சுற்றி ஒளிவட்டம் வரைந்து அபய முத்திரையுடன் நிற்க வைக்கும் முயற்சியிலும் தர்மராஜன் இறங்குகிறாரோ என்று ஐயுறும் அளவுக்கு சிலவற்றை மிகைபட கூறுவதும் இந்நூலில் இருக்கிறது. சாதிபேதமற்ற தமிழர்கள் என்ற விளிப்பில் பறையறைத் தவிர யாருக்கும் இடந்தராதவர் அயோத்திதாசர் என்பதை நெடுக காணமுடியும் நாம். ஆனால் தர்மராஜன் வரையும் சொற்சித்திரமோ அப்படியே தலைகீழாய் இருக்கிறது. உதாரணத்துக்கு இந்தப்பகுதியைக் காணலாம். “சாதியின் பெயரால் புறந்தள்ளப்பட்ட தமிழர்கள், சுத்தத்தின் பெயரால் விரட்டப்பட்ட தமிழர்கள்; விலங்கிலும் கேவலமாக நடத்தப்படுகின்ற தமிழர்கள்; அடிப்படை உரிமைகள் கூட வழங்கப் படாத தமிழர்கள்; தொழிலின் அடிப்படையில் தீண்டத்தகாதவர் என அடையாளப்படுத்தப்பட்ட தமிழர்கள் என்று ஒடுக்கப்பட்ட அனைத்து தமிழர்களும் பௌத்தர்கள் என்று அறிவிக்கும் அயோத்திதாசர், சமய காழ்ப்புணர்வினாலேயே இம்மக்கள் அனைவரும் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்றும் பேசத்துவங்குகிறார்.’’
கேட்கப் புல்லரிக்க வைப்பதாய் தான் இருக்கிறது. ஆனால் உண்மை என்று ஒன்று இருக்கிறதே! வேண்டுமானால் இப்படிச்சொல்லாம் அயோத்திதாசர் விரும்பிய விதத்தில் ஒரு வரலாற்றை அயோத்திதாசர் கட்டமைத்தார். தர்மராஜன் தாம் விரும்புகிற விதத்தில் ஒரு அயோத்திதாசரை கட்டமைக்க முயலுகிறார் என்று சொல்லாம்.
புதியகாற்று இதழ் அயோத்திதாசரையும் பெரியாரையும் முன்வைத்து நடத்திய விவாதத்தில் தர்மராஜனின் கருத்துக்கள் ஏப்ரல் 2005 இதழில் இடம் பெற்றுள்ளன. அதில் அவர் எழுப்பும் சில கேள்விகளை இங்கு பதிவு செய்வது பொருத்தம் என்று நினைக்கிறேன்.
அயோத்திதாசர் அல்லது பெரியாருக்கு வக்காலத்து வாங்கிப்பேசுகின்ற அத்தனை பேரும் தத்தமது சாதிக்குத்தானே வக்காலத்து வாங்கினார்கள்?
பெரியாரை வழிபாட்டுத்தலமாக மாற்றியது போலவே, அயோத்திதாசரையும் வழிபாட்டுக்குரியவராக மாற்றத்தானே முயற்சிகள் நடை பெறுகின்றன?
அயோத்திதாசர் - பெரியார் சச்சரவின் நிஜமுகம் அ. மார்க்ஸ், ரவிக்குமார், அரசியல் தான் என்பதை ஏன் எல்லாருமே தெரியாதது போல் நடிக்கிறோம்?
இந்த கேள்விகளை நினைவில் வைத்துக் கொண்டு பெரியார் மீது தர்மராஜன் முன்வைத்த குற்றச்சாட்டை பரிசீலிப்பது அவசியம் என்று தோன்றுகிறது.
“அயோத்திதாசர் என்ற பெயரை தவறியும் உச்சரித்தல் கூடாது என்ற எச்சரிக்கையுடனேயே தமிழ் அறிவுலகம் இயங்கி வந்ததாய் குற்றம் சாட்டக் கூடியவர்கள் அயோத்திதாசரை மறைத்ததில் பெரியாருக்கு கணிசமான பங்கிருப்பதாய் சந்தேகப்படுகிறார்கள். தங்களது சந்தேகத்தை பெரியார் மீது பெரும் குற்றச்சாட்டாகவே முன்வைக்கிறார்கள்.’’
“அயோத்திதாசர் பற்றி பெரியார் அறிந்திருந்தார் என்றால் அயோத்திதாசரின் சிந்தனைகளை அவர் உள்வாங்கியிருந்தார் என்றால் தனது எழுத்திலும் பேச்சிலும் ஒரு முறையேனும் குறிப்பிடாமல் விட்டது ஏன்? ஒரு சிறு மேற்கோள் அளவில் கூட குறிப்பிடப்படும் தகுதியை அயோத்திதாசர் பெற்றிருக்க வில்லையா.’’(பக்கம் 85 நான் பூர்வபௌத்தன்)
இப்படி குற்றஞ்சாட்டுவதோடு நின்றுவிடாமல் இத்தகைய குற்றச்சாட்டை முன்வைக்காத அலாய்சியஸ் மீது விமர்சனமும் வைக்கிறார்.
“திராவிட இயக்கம் மீதும் அதை விடவும் ஈ.வே.ரா. பெரியார் மீது அவருக்கு இருக்கக் கூடிய பற்று அயோத்திதாசர் மறைக்கப்பட்ட வழக்கிலிருந்து இவர்களை (பெரியாரையும், திராவிட இயக்கத்தவரையும்) விடுவித்து விடுகிறது’’(பக்கம் 89 நான் பூர்வ பௌத்தன்)
அ. மார்க்ஸ் இந்நூல் குறித்து கவிதாசரண் இதழில் எழுதிய மதிப்புரையில் “பெரியாரின் அரசியல் என்பது கடவுள் மறுப்பு, புராண/இதிகாச ஒழிப்பு ஆகியவற்றோடு சாதி ஒழிப்பை இணைப்பதாக உள்ளது. ஆனால் அயோத்தி தாசரின் பவுத்தமோ, புத்தரைக் கடவுளாக ஏற்றல், இந்து புராணங்களுக்கும், இதிகாசங்களுக்கும் பதிலாக புதிய புராணங்களையும் தொல்கதைகளையும் மாற்று மரபுகளிலிருந்து தேடிப்பிடிப்பது என்பதாக உள்ளது. இருவரின் நோக்கங்களும் ஒன்றான போதிலும் பாதைகள் முற்றிலும் வேறானதாக, இறுதி இலக்கு வரை வழியில் எந்தப் புள்ளியிலும் சந்திக்க இயலாதவையாகவும் உள்ளன. எனவே பெரியாரால் எந்த வகையிலும் அயோத்திதாசரை முன் மாதிரியாகக் கொள்ளவே இயலாத நிலை இருந்தது’’ என்று எழுதியிருப்பார்.
இது ஒருபுறமிருக்க பெரியார் தன்னுடைய உரையில் அயோத்திதாசரை குறிப்பிட்டிருக்கவே செய்கிறார் என்ற உண்மையையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். பேராசிரியர் அம்பேத்கர்பிரியன் எழுதிய பகுத்தறிவுபாட்டன் பண்டிதமணி அயோத்திதாசர் என்ற தமது நூலில் குறிப்பிடும் செய்தி இது.
(பகுத்தறிவு தந்தை பெரியார் அவர்களே பெங்களூரில் நடைபெற்ற தமது 68 வது பிறந்தநாள் விழாவில்,)
“என் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும், சீர்திருத்தக் கருத்துக்களுக்கும் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் பண்டிதமணி அயோத்திதாசரும், தங்கவயல் ஜி. அப்பாத்துரையார் அவர்களும் ஆவார்கள்.
என்று இப்படி வெளிப்படையாகப் பேசி ஆதிதிராவிட இனத்தலைவர்களை பெருமைப்படுத்தி நன்றிக்கடனைச் செலுத்தி பெரியார் பெருமிதம் அடைந்தார்’’ (பக் 12 பகுத்தறிவு பாட்டன் பண்டிதமணி அயாத்திதாசர்)
அந்நூலுக்கு முன்னுரை எழுதியவர்கள் ஆ. பத்மநாபன் ஐ.ஏ.எஸ். அவர்களும், வே. ஆனைமுத்து அவர்களும் தங்கள் உரைகளில் இச்செய்தியை குறிப்பிடுகிறார்கள். இந்நூல் வெளிவந்து ஆறாண்டுகள் கழித்து தர்மராஜன் பெரியார் அயோத்திதாசரை மறைத்துவிட்டார் என்று குற்றஞ்சாட்டுகிறார். எனக்கென்னவோ புதியகாற்று இதழில் அவர் எழுப்பிய கேள்விகளை திரும்ப ஒருமுறை படிக்க வேண்டுமெனத் தோன்றியது.
3
“எல்லா வரலாறுகளையும் போலவே தாசர் தந்த வரலாறும் கற்பிதமே; அவரது கருத்துக்களையும், ஆர்வங்களையும், விருப்ப வேட்கைகளையும் வேகத்தையும் அவர் காலத்தின் கருத்தியல் சூழலையும் இணைத்து உருவான கற்பிதமே. வரலாறு அற்றவர்களுக்கான வரலாறு அது.’’ (க. அயோத்திதாசர் ஆய்வுகள் ப.139)
2004 நவம்பரில் வெளிவந்துள்ள ராஜ்கவுதமனின் க.அயோத்திதாசர் ஆய்வுகள் என்ற நூல் பிற தலித் சாதிகள் குறித்த அயோத்திதாசரின் பார்வையை எப்படி கணிக்கிறது என்று காணலாம். அயோத்திதாசர் குறித்த இந்த வகையிலான விமர்சனங்கள் எழுந்த பிறகான ஒரு சூழலில் வெளியான நூல் என்பதால் இப்பிரச்சனைகளை ஆங்காங்கு கவனத்தில் கொள்ளவே செய்கிறது நூல்.
கவனத்தில் கொண்ட பிறகு அயோத்திதாசரின் அத்தகைய பார்வைக்கான காரணங்களாக சில நியாயங்களைக் கண்டறிந்து சொல்கிறது நூல்.
நியாயம் 1: “இவ்விடத்தில் தலித்துகளிடையே தாசர் இரண்டு பிரிவுகளைச் செய்வதைச்சுட்ட வேண்டும். தாழ்ந்த சாதி - தாழ்த்தப்பட்ட சாதி என ஒரு பாகுபாட்டைச் செய்தார். குறவர், தோட்டி, வில்லியர், சக்கிலியர் ஆகியோர் தாங்களாகவே தாழ்ந்த சாதிகள் என்றும் பறையர் முதலானோர் கனம், தனம் ஆகியவற்றில் பிறரால் வஞ்சகமாகத் தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் எழுதினார்.
பறையர் என்ற சாதியைச் சேர்ந்தவராக தாசர் சாதியத்தால் பிராமணரால் தாழ்த்தப்பட்டதாலும், பூர்வ பௌத்தர் என்ற தமது வரலாற்று உத்தேசத்தை கருதியதாலும் பறையரைத் தாழ்த்தப்பட்ட சாதியர் என்றார். (தாசரே பள்ளராகப் பிறந்திருக்கும் பட்சத்தில் தேவேந்திர குல வேளாளர்கள், இந்திரன் என்ற நாமம் பெற்ற புத்தரை வழிபட்ட குலத்தைச் சேர்ந்த வேளாளர் தொழில் புரிந்த பள்ளர்கள் என்றும், இவர்களே புத்த பள்ளிகளில் அறஹத்துக்களாக இருந்து அறம் போதித்தார்கள் என்றும் புனைந்திருக்க ஏகதேசம் வாய்ப் பிருக்கிறது. ராஜ் கவுதமன் (நூல் பக். 87)
நியாயம் 2: இன்று போல தலித் சாதிகள் தனித்தனித் தலைமையில் குறிப்பிட்ட பிரச்சனைகளைக் கையாண்டு பொது அரசியலில் கூட்டு நிலைப் பாட்டை எடுப்பது போல 19ஆம் நூற்றாண்டு இறுதியில் 20-இன் தொடக்கத்தில் சூழல் இல்லை. நாடார், தீயர் எனத் தனித்த சாதியாக மத ரீதியாகப் போராடிய நிலைதான் அன்றைய நிலை. அந்த சூழ்நிலைக்கேற்பவே தாசரும் பௌத்த மத ரீதியாக பறையருக்கான ஒரு மாற்று மதத்தை பிராமணியத்துக்கு எதிராகக் கட்டியமைக்கப் பாடுபட்டார். எனவே, இன்றைய தலித் விடுதலை அணுகு முறைகளை அக்காலத்துக்கு விரித்து யாரும் விசனப்பட வேண்டியதில்லை. குறிப்பாக தலித் அல்லாத அன்பர்கள். (ப.87)
நியாயம் 3: “பறையர்கள் தொடக்க காலந்தொட்டே பௌத்தர்கள், பூர்வ பௌத்தர்கள் என்பதை தாசர் அடிக்கடி நினைவூட்டினார். இவ்விதத்தில் பௌத்தரல்லாத தாழ்ந்த சாதிகளான குறவர், வில்லியர், தோட்டிகள், சக்கிலியர் முதலான சாதிகள், வேஷப்பிராமணர்களால் தாழ்த்தப்பட்ட பறையர், சாம்பவர், வலங்கையர் (மூணும் ஒண்ணு தானுங்கண்ணா) சாதியிலிருந்து வேறானவர்கள் என்பது தாசர் கருத்து. பராயர் எனப்பட்ட பறையர், பிராமணியத்தால் வஞ்சிக்கப்பட்ட பூர்வ பௌத்தர் என்ற கருதுகோளின் அடிப்படையிலேயே தாசரின் பறையர் பிராமணர் பகை வரலாறு கட்டப்பட்டுள்ளது. எனவே தான் இவ்வரலாற்றில் குறவர், வில்லியர், முதலான சாதிகளுக்கு இடமில்லை. அம்பட்டர், வண்ணாருக்கு இடம் தந்துள்ளார்’’ (Thanks-ங்கண்ணா) பக். (123)
நியாயம் 4: “தாசருக்கு பறையர் மட்டுமல்லாது, தாழ்த்தப்பட்ட மற்ற சாதிகளையும் மலைவாழ் மக்களையும் பற்றியும் தெரிந்திருந்தது. (தாசரின் முதல் முதல் மனைவியே தோடர் இனத்தை சேர்ந்தவர் தான் என்று அம்பேத்கர் பிரியன் தெரிவிக்கிறார். மதி) அச்சாதிகளை எவ்வாறு தமது பூர்வ பௌத்த வரலாற்றுக்குள் அடக்குவது என்ற தெளிவு அவருக்கு இல்லை. பக். (124)
நியாயம் 5: “நாடார், தீயர் என்ற அன்றைய சாதிக்கிரமமான சாதி எதிர்ப்புப்போராட்டத்தின் தமக்குத் தெரிந்த பறையர் சாதியை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அன்றைய வடதமிழ்நாட்டு சூழலில் இது தவிர்க்க முடியாததே.’’ (ப. 124)
(மேற்கு பகுதியான கோவையில் பிறந்து நீலகிரியில் வளர்ந்தவராகவும், அறியப்படுபவர் அயோத்திதாசர். சென்னை மகாஜன சபைக்கு நீலகிரியின் பிரதிநிதியாகத் தான் அவர் வந்தாரென்பதும் துளசிமடம், அத்வைதானந்த சபை என்பன போன்ற அமைப்புகளுடன் நீலகிரியிலேயே செயல்பட்டிருக்கிறார் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய செய்திகள். எனவே வடதமிழ்நாட்டில் மட்டுமே இயங்கியவராயிருந்ததால் இதர தலித் சாதியினரை தவிர்த்து செயல் பட வேண்டியிருந்தது என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய வாதமல்ல)
நியாயம் 6: இன்று பள்ளர்கள் தங்களை தேவேந்திர குலவேளாளர் என்றும் சக்கிலியர் தம்மை அருந்ததியர் என்றும் வைதீக நாமமிட்டும் பெருமையாக அழைப்பதை வலியுறுத்துவதைப் போல அன்று தாசர் பறையரை சாம்பவ மூர்த்தியான புத்தபிரானின் வம்சவரிசையோரான சாம்பான்கள் என்று பௌத்த பெருமையோடு அழைப்பதை வலியுறுத்தினார் என்று சொல்லலாம் (பக். 176)
இந்த நியாயங்களை எல்லாம் தரிசித்ததன் பின்னால் உங்களுக்கு
“இனம் இனத்தோடு வெள்ளாடு தன்னோடு’’
“ஊராளக் கண்டா ஒசந்து ஓராப்பை
தன்னாளக் கண்டா தாந்து ஓராப்பை’’
“வனத்தில திரிஞ்சி இனத்திலே அடை’’
என்பன போன்ற கிராமத்துப் பழமொழிகள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பில்லை.
4
இனி அயோத்திதாசர் சிந்தனைகளைத் தொகுத்தளித்து தமிழ் சூழலுக்கு முழுமையாக அவரை அறிமுகப்படுத்திய அலாய்சியஸ் இவ்விஷயத்தை எப்படிப் பார்க்கிறார் என்பதை பார்க்கலாம். தலித் முரசு செப் 2005 இதழில் வெளிவந்த அவரின் நேர்காணலில் அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் நம்பிக்கையளிக்கும் விதத்தில் இருப்பதை இங்கு பதிவு செய்தேயாக வேண்டும்.
“சக்கிலியர் சமுதாயத்தைப் பொறுத்தமட்டிலாவது, இந்த பிரிவினை (இயல்பாய் தாழ்ந்தவர் - தாழ்த்தப்பட்டவர் பிரிவினை) தவறானது என்பது எனது அனுபவம். கோயம்புத்தூர் பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டிருந்த காலங்களில் நான் கண்ட உண்மை. தமிழுக்கும் தமிழ்ப்பண்பாட்டிற்கும் மற்ற சமுதாயங்களுக்கு எவ்வளவு உரிமை உண்டோ அத்தனையும் சக்கிலியர் சமுதாயத்திற்கும் உண்டு. அவர்களும் வரலாற்றில் தாழ்த்தப்பட்டோரே, விவசாயம் தவிர்த்த ஏனைய பணிக்களங்களில் சிறப்பாக வாழ்ந்த இந்த சமுதாயம், காலனி யாதிக்கத்தின் கீழேயே தன் நிலை இழந்து பெரு வாரியாகத் தாழ்த்தப்பட்டது. இந்தத் தாழ்த்தப்பட்ட நிலையை அவர்களது தமிழ் இலக்கிய அறிவு மூலம் கதைகள், கவிதைகள், விடுகதைகள் மூலம் கண்டறிய முடிந்தது.’’
“மேலும் நவீன காலகட்டத்தில், சமுதாயக் குழுக்களைப் பின்தங்கியோர், தாழ்த்தப்பட்டோர் என்று பிரிப்பதிலான சிக்கல்களை சமூகவியலாளர் பெரிதும் விவரித்துள்ளனர். ஆகவே அயோத்தி தாசரின் இந்த வரலாற்றுக் கணிப்பு தவறானது. இதை மூடிமறைக்கவோ, மறுக்கவோ தேவையில்லை. மேலும் அயோத்திதாசரின் முழுமையான வரலாற்று விளக்கங்களில் ஏற்பட்டுள்ள தவறு இது மட்டுமல்ல. (தலித் முரசு செப். 2005)
அயோத்திதாசரை ஆய்ந்தவர்களில் முதன்மையானவரான அலாய்சியஸின் இக்கருத்துக்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆக்கப் பூர்வமான உரையாடலை நாம் இங்கிருந்தே தொடங்க முடியும். அத்தகைய உரையாடலே தலித் அரசியலின் எதிர்கால திசை வழியை இடர் பாடற்றதாக செப்பனிட்டு கொள்ள உதவுவதாக அமையும்.
இருக்கிற பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான முதல்படி பிரச்சனைகள் இருப்பதை ஒத்துக் கொள்வது தான். அதன் பின்னரே அதைத் தீர்க்கும் வழிகளை ஆராய முடியும். பிரச்சனைகளை ஒத்துக் கொள்ளாமல் மூடி மறைப்பதும் சாக்கு போக்குகளை உற்பத்தி செய்வதும் பிரச்சனைகளின் தீர்வுக்கு எந்த விதத்திலும் உதவப்போவதில்லை.
அயோத்திதாசர் தலித் சமூகம் பிறப்பித்த வரலாற்று நாயகர்களில் ஒருவர் என்பதும் கொள்கையளவில் கொஞ்சமும், குறியீட்டளவில் அதிகமும், தலித்துகளுக்கு பயன்படப் போகிறவர் என்பதும் தலித்துகளும் தலித் ஆதரவாளர்கள் அனைவரும் ஒத்துக்கொள்ளக்கூடிய உண்மையாகவே இருக்கும். இப்போதிருக்கும் குறை நிறைகளோடு கூடிய அயோத்திதாசரை அப்படியே ஏற்றுக்கொள்வதில் பறையர் அல்லாத பிற தலித் சாதிகளுக்கு பிரச்சனைகள் இருக்கலாம். எல்லாரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய செறிவூட்டப்பட்ட ஒரு அயோத்திதாசரை நாம் கட்டமைப்பது ஆகாத ஒரு காரியமல்ல. அதற்கு அயோத்திதாசரிடம் உள்ள போதாமைகளையும், முரண்பாடுகளையும் ஒத்துக் கொண்டு அவற்றை இட்டு நிரப்பவல்ல கூறுகளை கண்டறிவதுமே மிக்க அவசியமான முதன்மைப் பணியாக இருக்க முடியும்.
- ம.மதிவண்ணன்