2018ம் ஆண்டு மத்திய அரசு மேற்கொண்ட ஆய்வில் இந்தியாவில் 40,000க்கும் மேற்பட்ட கையால் மலம் அள்ளும் தொழிலாளிகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. மொத்தம் 14 மாநிலங்களில் உள்ள 84 நகரங்களில் நடத்திய ஆய்வில் இது கண்டறியப்பட்டது. இந்த எண்ணிக்கை 2013ஐக் காட்டிலும் மும்மடங்கு அதிகரித்து இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 2013ல் இதே போல் நடத்தப்பட்ட ஆய்வில் 14505 நபர்கள் தான் இந்த தொழிலை செய்வதாகக் கணக்கிடப்பட்டது. ஆனால் தற்போது மும்மடங்கு அதிகரித்திருக்கிறது. துப்புரவுப் பணிகளில் ஈடுபடுவதில் 70% பெண்கள் என்கிறது ஆய்வு அறிக்கை.

manual scavenging 603கையால் மலம் அள்ளும் தொழிலை ஒழிப்பதற்கான தேசிய பிரச்சாரக் குழுவின் உறுப்பினர் ஆசிஃப் ஷெய்க் கூறும் போது, இந்த ஆய்வும் நேர்மையாக நடத்தப்படுவதில்லை. எந்த அரசும் தொழிலாளிகளின் விவரங்களை வெளியிடுவதில்லை. கிடைக்கப் பெற்ற தகவலில் இருந்து தான் தற்போதைய ஆய்வின் முடிவும் வெளியாயிருக்கிறது. இதனை விட எண்ணிக்கை பன்மடங்கு இருப்பதற்குத் தான் வாய்ப்பு அதிகம் எனக் கூறுகிறார்.

இந்தியா சுதந்திரம் பெற்று 1993ம் ஆண்டு தான் கையால் மலம் அள்ளும் தொழில் சட்ட ரீதியாக தடை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 2013ல் இந்தத் தொழிலில் ஈடுபடுவதையும் இந்த வேலையை செய்யச் சொல்லி யாரேனும் நியமித்தால் அவருக்கும் தண்டனை வழங்கவும் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்தியாவில் இன்று வரை இந்த சட்டத்தின் கீழ் எவரும் தண்டிக்கப்பட்டதில்லை.

இதுவரை 2019ம் ஆண்டு ஆரம்பித்து, முதல் ஆறு மாதங்களில் 50 பேர் சாக்கடை சுத்தம் செய்யும் போது உயிரிழந்திருக்கிறார்கள். இந்தக் கணக்கெடுப்பும் வெறும் 8 மாநிலங்களில் எடுக்கப்பட்டது மட்டுமே. ஆனால் 2013ல் ஏற்படுத்தப்பட்ட சட்டம் இப்படி சாக்கடைகளை கையால் சுத்தம் செய்வதற்கு ஆட்களை நியமித்தால் தண்டனை வழங்கச் சொல்கிறது. உயிரிழக்கும் ஒவ்வொருவரும் கூலிகளுக்கு நியமிக்கப்படுவர்கள் தான். ஆனால் ஒருமுறை கூட இச்சட்டம் பயன்படுத்தப்பட்டதில்லை.

தனி மனிதர்கள் மட்டுமல்ல அரசே இதனைத் தான் செய்கிறது. சமீபத்தில் உத்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற கும்பமேளா நிகழ்வில் துப்புரவுப் பணியாளர்களின் பாதங்களை கழுவி விட்டார் பிரதமர் மோடி. கும்பமேளா திருவிழா முடியும் போது தங்களுக்கு அறிவிக்கப்பட்ட சம்பளமும் தரவில்லை, பாதுகாப்பு உபகரணங்களும் தரவில்லை என போராடினார்கள் துப்புரவுப் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள்.

இந்தியாவின் கழிவை ஒரு சமூகத்தின் மேல் தொடர்ந்து போடுகிறோம். அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் கூட நம்மை ஒன்றும் செய்வதில்லை. கடந்த காலத்தின் தவறுகளை நிகழ்காலத்திலாவது சரிப்படுத்த வேண்டும். ஆனால், தொடர்ந்து எதிர்காலத்திற்கும் நகர்த்தும் முனைப்போடு தான் அரசு இயந்திரங்கள் நகர்கிறது. இது தொழில் வர்க்கப் போராட்டம் மட்டுமல்ல, சாதிய ஒடுக்குமுறை.

- அபூ சித்திக்

( தகவல் : wire 24.08.19 and 18.08.19)

Pin It