அதிமுகவின் இரட்டைத் தலைமையின் ஒருங்கிணைப்பாளர்  ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் இணைந்து கூட்டாக ஓர் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள்.

அந்த அறிக்கையில் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்றும் பெட்ரோல், டீசல்  விலையைக் குறைக்க வேண்டும் என்றும், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் தரவேண்டும் என்றும் கோரிக்கையை வைத்து அதற்காக 28ஆம் தேதி காலை 10 மணிக்கு கவன ஈர்ப்பு முழக்கங்களை முழங்கப் போவதாகவும் கூறியிருக்கிறார்கள்.

கடந்த 10 ஆண்டுகள் தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த முன்னாள் முதல்வர்களான ஓபிஎஸ், இபிஎஸ் இருவருக்கும் எங்கே என்ன கேட்கவேண்டும் என்பது கூடத் தெரியாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது.

கடந்த ஆட்சியில் நீட் தேர்வைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்ததே எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசுதான். இன்று நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும்  என்று அவர்கள் சொல்வது ஒரு ஏமாற்று நாடகமாகத் தெரிகிறது.

பெட்ரோல், டீசல் விலைகளை நாளொரு மேனி, பொழுதொரு வண்ணமாக ஏற்றிக்கொண்டே போவது மத்திய அரசு, எண்ணெய் நிறுவனங்கள்.

ஆகவே, மத்திய அரசைப் பார்த்து வைக்க வேண்டிய கோரிக்கையை மாநில அரசிடம் வைப்பது கேலிக்குரியதாக இருக்கிறது.

அது போலவே  சமையல் எரிவாயு விலையும் மாதந்தோறும் ஏறிக்கொண்டே இருக்கிறது, மத்திய அரசின் ‘தயவால்’ .

இன்று இவர்கள் வைக்கும் கோரிக்கை முழக்கங்களை கடந்த காலங்களில் இவர்கள் செய்யவும் இல்லை, மத்திய அரசை வற்புறுத்தவும் இல்லை.

ஆட்சிக்கு வந்த திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களும் அதுகுறித்தச் செயல்பாடுகளும் மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்று வருகின்றன என்பது உலகறிந்த செய்தி.

இரட்டைத் தலைமையான அதிமுகவின் முழக்கங்கள் மக்களிடம் எடுபடாது.

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It